top of page

Uyirie (Virus 143) 16

வைரஸ் அட்டாக் – 16


நிர்மலானதாவின் விழிகள் சிவந்து நீர் கோர்த்திருந்தன. அவரது உதடுகள் துடித்துக்கொண்டிருந்தது. முற்றிலும் உணர்ச்சிவசப்பட நிலையிலிருந்தார் அவர்.


இரண்டு தினங்களாக இடை விடாத ஜுரத்தில் வேறு துவண்டு போயிருந்தார். அவருக்கென்றிருக்கும் பிரத்தியேக மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருக்க, அவருடைய தனிப்பட்ட அறையில் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார் அவர்.


அவரது எண்ணம் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தாள் அவருடைய நாயகி? ஆம் சாட்சாத் அது தொல்லைநாயகியேதான்!


அப்பொழுது உள்ளே வந்த சத்யானந்தா, "குருஜி... கந்தனும் அவனோட ஆளுங்க மூணு பேரும் வந்திருக்காங்க" எனப் பணிவுடன் சொல்லவும், "ஒரே ஒருத்தன பத்திரமா பார்த்துக்க துப்பில்ல. இவனையெல்லாம் நம்பி... ச்ச" எனப் பற்களைக் கடித்தவர், "அந்த கந்தனை மட்டும் வரச்சொல்லு' என்றார் நிம்மி.


தலையை தொங்கபோட்டுக்கொண்டு அவருக்கு முன்னால் வந்து நின்றவனைப் பார்த்ததும், 'மூணு நாள் ஆச்சு கந்தா! முழுசா மூணு நாள் ஆச்சு! என்ன ஆனா அந்த பொண்ணு? அவளை கண்டு பிடிசீங்களா இல்லையா?" என கரகரப்பான குரலில் கேட்டார் அவர்.


ஜுரம் மட்டும் இல்லையென்றால் தானே களத்தில் இறங்கியிருப்பார். அவருடைய மனதின் வேகத்திற்கு உடல் ஒத்துழைக்கவில்லை பாவம்.


அங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் அவள் அந்த காட்டிற்குள்தான் சென்றாள் என்பதைத் தெரியப்படுத்தி அவளை அடையாளமும் காட்டியிருக்க, நாயகியை கண்டுபிடிக்கும் பொருட்டு அவளைக் கந்தன் பார்த்திருக்கவே, 'அந்த அரை கிழவியை போய் பொண்ணுன்னு சொல்லுது இந்த பெரிசு' என்ற நினைவில் பொங்கிய சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டு, "நம்ம ஆளுங்க மொத்த போரையும் கொண்டு வந்து இறக்கியிருக்கேன் சாமி! கூடவே இந்த காட்டை பத்தி தெரிஞ்ச ஆளுங்களும் இருகாங்க. எப்படியும் இன்னைக்கு கண்டுபிடிச்சுவானுங்க" என்றான் அவன் வெகு ஜாக்ரதையாக.


பேன்டைட் சுற்ற பட்டிருந்த அவரது சுட்டுவிரலால் தாடையை சொறிந்தவாறே, "முட்டாள்" என கர்ஜனையாகத் தொடங்கி, "கொஞ்சம் கூட பொறுப்பே இல்லடா உங்களுக்கெல்லாம். அவ எனக்கு எவ்வளவு முக்கியம்னு தெரியுமாடா?! அவ என்னோட தொல்ஸ்...டா!" என்றவர் எதிரில் நின்றிருந்தவன் ஒரு மாதிரியாக பார்க்கவும், சட்டென தன் தவறை உணர்ந்தவராக,தொண்டையை செருமிக்கொண்டு, "நாயகிடா" என்று முடித்தார்.


"கண்டிப்பா இன்னைக்கு அவங்கள கண்டுபிடிச்சிவோம். கவலை படாதீங்க சாமி" என கந்தன் பவ்யமாகச் சொல்ல, “அந்த பொண்ணு மட்டும் கிடைக்காம போகட்டும் அப்பறம் இருக்கு உனக்கு. நீங்க என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ. இன்னைக்கு அவ என் கைக்கு வந்தே ஆகணும்" என்று அவர் முடிக்கும் பொழுது அவருடைய குரல் தழுதழுத்து பிசிறடித்தது.


'எதாவது காட்டு விலங்கின் வாய்க்கு அவள் தீனியாகியிருந்தால்?!" என்ற பயம் மனதை குடைய, அதில் அவருடைய கண்களில் பொங்கிய உணர்வைப் பார்த்து வாய் பிளந்தார் அவருக்கு அருகில் நின்றிருந்த தர்மானந்தா.


அவதார் சிங்கை பரிந்துரைத்ததே அவர்தான் என்பதனால் இரண்டு தினங்களாக அவரை நன்றாக வைத்து செய்துகொண்டிருந்தார் நிம்மி.


உண்மையில், அவருடைய தேவதை அவரது கண்முன் வந்து காட்சி தர காரணமானவர் என்பதால் அதிக சேதாரம் இல்லாமல் தப்பித்தார் அவர் என்றுதான் சொல்லவேண்டும்.


அதற்குள் மில்லியின் குரல் கீச்சுக்கீச்சென்று அவருடைய செவியைத் தீண்டவும், அடுத்த நொடி தன்னிலையையும் மறந்து வேகமாக அதன் கூண்டை நோக்கி ஓடினார் நிம்மி.


அதன் வயிற்றில் கட்டு போடப்பட்டிருக்க, அங்கே ராஜ வைத்தியம் நடந்துகொண்டிருந்தது மில்லிக்கு.


அதன் கூண்டை திறந்து மென்மையாக அதைத் தூக்கி தன கையில் வைத்துக்கொண்டவர், இதமாக அதை தடவிக்கொடுத்தவாறு, "என்ன கண்ணு வலிக்குதா? இல்ல பசிக்குதா?" எனக் குழைந்தார் அதனிடம்.


அந்த நொடி, தான் யார்? இப்பொழுது, அதுவும் இவ்வளவு வெளிப்படையாக என்னவெல்லாம் செய்துகொண்டிருக்கிறோம் என்பதையே முற்றிலுமாக மறந்துபோயிருந்தார் அவர்.


தன் ஒரே பார்வையில் அந்த அளவுக்கு அவர் மனதைத் தொல்லை செய்து பித்தாக்கி வைத்திருந்தாள் தொல்லை நாயகி என்றால் அது மிகையில்லை.


அப்பொழுது அங்கே வேகமாக நுழைந்த கந்தனின் அடியாள் ஒருவன், "தல! அந்த அம்மா கிடைச்சிடுச்சு போலிருக்கு தல! காட்டுக்குள்ள இருந்து புகை போட்டு சிக்னல் கொடுக்கறாங்க. வா சீக்கிரம் போகலாம்" என்று சொல்ல, வேகமாக மில்லியை கூண்டுக்குள் விட்டவர், 'இவனையாவது பத்திரமா பார்த்துக்கோங்க" என தர்மானந்தா மற்றும் சத்யானந்தா இருவருக்கும் பொதுவாக சொல்லிவிட்டு சற்று தள்ளாடியபடி நிம்மியும் கந்தனுடன் கிளம்ப எத்தனிக்க, "ஸ்வாமிஜி! நீங்க ரொம்ப வீக்கா இருக்கீங்க! இப்ப ஏன் இந்த ரிஸ்க்கை எடுக்கறீங்க" என அவருடைய மருத்துவர் அவரை தடுக்கவும், "இல்லல்ல... நான் ஏற்கனவே ரொம்ப வருஷம் அவளை மிஸ் பண்ணிட்டேன். இனிமேல் ஒரு செகண்ட் கூட அவளை தனியா விட மாட்டேன். நீங்க வேணா கூட வாங்க" எனப் பிடிவாதமாக நிம்மி சொல்ல, மறுக்க இயலாமல் அந்த மருத்துவரும் உடன் கிளம்பினார்.


அவர்கள் அனைவரையும் ஏற்றிக்கொண்டு காட்டின் உட்பகுதியில், செந்நிற புகை வந்த திசையை நோக்கி சீறிக்கொண்டு கிளம்பியது பேட்டரியால் இயங்கும் வாகனம் ஒன்று.