top of page

Uyiri (Virus 143) Episode 13

காதல் அட்டாக் – 13


தந்தையின் நடவடிக்கைகள் ஒவ்வாமல் போக அவருடைய முகத்தில் விழிப்பதையும் விரும்பாமல் அவனுடைய அம்மாவின் கோழைத்தனத்தை வெறுத்தவனாகத்தான் மன அமைதியை நாடி விஸ்வா சந்நியாசம் என்ற பாதையைத் தேர்ந்தெடுத்ததே.


சொல்லப்போனால், நிர்மல் மற்றும் விஸ்வா இருவருமே அறியாத விஷயம் ஒன்று உண்டென்றால் அது, சந்திரமௌலி இருவருக்குமே ஒரு பொது எதிரி என்பதுதான்.


விஸ்வா காணாமல் போய் மறுபடியம் ஆசிரமத்திற்குத் திரும்பியவுடன், அடிபட்ட பாம்பாக வன்மம் முற்றிப்போன நிலையிலிருந்த நிர்மல், கிட்டத்தட்ட அவனை சிறைப் படுத்திவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.


சந்நியாச பாதையிலிருந்தாலும் ஊர் உலகம் முழுவதும் சுற்றிக்கொண்டு சொகுசாகத் திரிந்தவனுக்கு மாதக்கணக்கிலான இந்த சிறைவாசம் கொஞ்சம் அதிகமாகவே எரிச்சலைக் கிளப்பிவிட்டிருந்தது.


இவ்வளவு நாட்களாக பலம் பொருந்திய ஒரு யானையை சிறு சங்கிலியால் கட்டி வைப்பதைப் போல துறவறம் என்கிற மெல்லிய நூலில் அவனைக் கட்டி வைத்திருந்தார் நிர்மலானந்தா.


அவருக்கு விளங்காத ஒரு விஷயம் உண்டென்றால் அது, அந்த யானை கட்டுப்பட்டிருப்பது அந்த சங்கிலிக்கு அல்ல, அது அந்த யானைக்கு பாகன் மேலுள்ள அன்பினால் என்று.


அந்த யானைக்கு இணை தேடும் பருவம் வந்தால் மதம் பிடிக்கும் என்பதும் அந்த மதத்திற்கு முதல் பலி, எதையெதையோ செய்து அந்த யானையைத் தான் சொல்வதையெல்லாம் கேட்டு அடிபணிய வைத்து தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அந்த யானையின் பிரியத்திற்குரிய பாகன்தான் என்றும்.


ஆம் விஸ்வா என்கிற யானைக்கு மேனகாவின் மேல் ஏற்பட்டிருக்கும் காதலால் மதம்தான் பிடித்திருந்தது.


அன்று அவளை அந்த கடற்கரையில் கண்டதுமுதல், அவன் வசம் இழந்துதான் தவித்தான் அவன்.


உண்மையை சொல்லப்போனால் சந்திரமௌலியின் சென்னை இல்லத்தில் மட்டும் அவளை பார்த்திருந்தான் என்றால் அந்த ஆசிரமத்திற்கு அவன் திரும்ப வந்திருக்கவே மாட்டானோ என்னவோ.


அவன் ஆசிரமத்திற்குத் திரும்பியதும் கூட தேவையில்லாத சலனங்களுக்கு இடங்கொடுக்கக்கூடாது என்கிற அரைகுறை மனநிலையில்தான்.


ஆனால் அங்கே அவன் திரும்ப வந்தபிறகு நடந்ததென்னவோ வேறாக இருந்தது.


அதாவது எந்த குற்றமுமே செய்யாதவனுக்குக் கொடுமையான தண்டனை வழங்கப்பட்டதுபோல் அவனைத் தனிமை சிறைப்படுத்தி ஒரு பெரும் தவறை செய்துவிட்டார் நிர்மலானந்தா.


அந்த தனிமை மேனகாவின் நினைவை அதிகம் தூண்டிவிட்டு, அவனுடைய உள்ளத்தில் கனலாக மூண்டிருந்த காதலை, தண்ணீர் ஊற்றி அணைப்பதற்கு பதிலாக ஊதி ஊதி கொழுந்துவிட்டு எரியவே வைத்தது.


அதுவும் இதுபோன்ற ஒரு விஷயத்தில் அவன் கொஞ்சம் அதிகமாகவே தோற்றுப்போனவன், அதுவும் அவனுடைய தந்தையிடமே. மறுபடியும் ஒருமுறை அப்படி ஒரு படுதோல்வியைச் சகிக்க அவன் விரும்புவானா என்ன?


கொஞ்சம் கொஞ்சமாக மூண்ட அவனுடைய கோபம் மூன்று மாத காலத்தில் சுனாமியாக மாறி, அவனுடைய பாதுகாப்பிற்காக அருகிலிருந்தவர்களைச் சுழன்றடிக்க, அவனைத் தாக்குப்பிடிக்க இயலாமல் நிர்மலானந்தாவை கெஞ்சிக் கூத்தாடி அவன் சிறை வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு வரவழைத்தனர் நம்பிக்கைக்குரிய அந்த ஆசிரம சிஷ்யர்கள்.


அவரை நேரில் பார்த்ததும் முகம் மலர்ந்தவன், 'காயா... மாயா... சிவஸ்ய சாயா" என்றவாறு வழக்கமாகச் செய்வதுபோல் அவர் பாதங்களில் விழுந்து வணங்கினான்.


அதில் அவர் அடைந்த மகிழ்ச்சியை சில நொடிகள் கூட நிலைக்க விடாமல், "இந்த சந்நியாச வாழ்க்கையில் இருந்து எனக்கு விடுதலை வேணும் குருஜி" என்றான் அவன் கொஞ்சமும் சுற்றிவளைக்காமல்.