Uyiri (Virus 143) 14
வைரஸ் அட்டாக் - 14
"என்னங்கடா டபுள் ஆக்ட் கொடுக்குறீங்க? ஹேய்! யாருடா நீ?" என நிம்மி அங்கே இருந்த விஸ்வாவிடம் எகிறி குதிக்க,
"காயா மாயா சிவஸ்ய சாயா! நான்தான் விஸ்வாமித்ரானந்தா குருஜி. இந்த நாமத்தை எனக்குக் கொடுத்ததே நீங்கதானே?" என மிக மிக எதார்த்தமாக அதையே மறுபடியும் சொன்னவன், மிகப் பணிவாக அவர் முன் கரம் குவித்து நின்றான் அவன், அவரை நன்றாக வெறுப்பேற்றுவதுபோல்.
தலையைப் பிய்த்துக்கொண்டார் நிம்மி.
மறுபடியும் சாட்டிலைட் ஃபோன் மூலம் வீடியோ காலில் நிர்மல்யாவில், அதுதான் அவருக்குச் சொந்தமான அந்த தீவின் பெயர். அங்கே விஸ்வாவுக்கு காவலிருந்த அந்த கும்பலின் தலைவனை அழைத்தவர் ஃபோனை விஸ்வாவிடம் கொடுக்கச்சொன்னார் அவர்.
அவன் அழைப்பில் வந்ததும், "ஹேய்... நீ விஸ்வா இல்லதான? உண்மைய சொல்லு? விஸ்வாவுக்கு டூப் போட்டு என்னை குழப்பி விட அந்த சந்திரமௌலி கிட்ட எவ்வளவு பணம் வாங்கின?" என அவர் சரமாரியாக கேள்விக்கணைகளைத் தொடுக்க,
"என்ன குருஜி! புதுசா எதாவது தியான முறையை கத்துக்கிட்டு ட்ரை பண்ணீங்களா? மூளை குழம்பி கிழம்பி போச்சா என்ன?" என அவன் அதீத கடுப்புடன் கேட்க, அவருக்குப் பின்னால் வந்து நின்று, 'ஈ' என பற்களை காட்டி செல்ஃபீ போஸ் கொடுத்தான் நகல் விஸ்வா.
குறுக்கே வந்தவனை பார்த்ததும் ஒரு நொடி தன் கண்களையே நம்ப முடியவில்லை அசல் விஸ்வாவால்.
விஸ்வாவும் சரி நிம்மியும் சரி ஸ்தம்பித்த நிலையிலிருக்க, அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டவன், அவர் கையிலிருந்த கைப்பேசியைப் பறித்துக்கொண்டு இங்கேயும் அங்கேயுமாக ஓடினான் அந்த நகல் விஸ்வா.
உலகளாவிய பல ரகசிய தொடர்புகளுக்கு மட்டுமே அவர் பயன்படுத்தும், செயற்கைக்கோள் மூலமாக இயங்கும் அந்த கைப்பேசி, வேறு யார் கையில் கிடைத்தாலும் அது பெரிய ஆப்பாகப் போய்விடும் நிம்மிக்கு.
காரணம் முறையான அனுமதியின்றி அதைப் பயன்படுத்துவது இந்தியாவைப் பொறுத்தவரை சட்ட விரோதமாகும். அப்படிப்பட்ட அனுமதி எதையும் அவர் பெறவுமில்லை.
ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்றவர், "அடேய்... எவனாவது இவன் கைல இருக்கற ஃபோனை பிடுங்குங்கடா" என கத்தினார் நிம்மி.
அதில் பதறியடித்துக்கொண்டு அங்கே வந்த அவருடைய சிஷ்யர்கள், சில நிமிட போராட்டத்திற்குப் பிறகு, இங்கே அங்கே எனப் போக்கு காட்டி ஓடிக்கொண்டிருந்த நகல் விஸ்வாவிடமிருந்து நிம்மியின் பேசியை ஒரு வழியாகப் பறித்து அவரிடம் ஒப்படைத்தனர்.
நிம்மதி பெருமூச்சு விட்டவர், 'இவனை பார்த்தால் நார்மலா இருக்கற மாதிரியே தெரியலையே! ஆனா… அவ்வளவு தெளிவா பேசறதை வெச்சு பார்த்தால், நம்ம 'நிர்மல்யா'ல இருக்கறவன்தான் உண்மையான விஸ்வான்னு தோணுது. இன்னொரு விஷயம் என்னன்னா, இவன் ஒரிஜினலா இருந்தால், அந்த சந்திரமௌலி இவனை மறுபடியும் இங்க வர விட்டிருக்க மாட்டான். ஸோ... அங்க இருக்கறவன்தான் ஒரிஜினலா இருக்க முடியும்!' என தனக்குள்ளேயே குழம்பி ஒருவாறு தெளிந்து ஒரு முடிவுக்கு வந்தவராக,
‘அப்படின்னா இவன் யார்? இவன் இங்க எப்படி வந்தான்? எதுக்காக வந்திருக்கான்?’ என தொடர் கேள்விகள் அவர் மனதில் வரிசைகட்டிக்கொண்டு நிற்க, "இவன பிடிச்சு அடைச்சு வைங்க... அப்பறமா இவனை விசாரிக்க வேண்டிய விதத்துல விசாரிக்கலாம்" என்று நிம்மி சொல்ல, அவர்கள் அவனை அங்கிருந்து இழுத்துச் சென்றனர்.
அதுவரை ஒரு குதூகலத்துடன் அதைப் பார்த்துக்கொண்டிருந்த மேனகாவின் சிரிப்பு அப்படியே மறைந்து போக, ஒரு பதட்டம் சூழ்ந்துகொண்டது அவளை.
அவளுக்குத் தெரியும் இவன் விஸ்வாவுக்கு பதில் பலியிடுவதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் ப்ராய்லர் கோழி என்று.
அவளுடைய மனது வேதனையில் அடித்துக்கொண்டது. அடுத்த நொடி கொஞ்சமும் யோசிக்காமல் அந்த தியான மண்டபத்தை நோக்கி ஓடினாள் அவள்.
ஆனால் அவள் அங்கே சென்று சேருவதற்கு முன்பாகவே அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருந்தான் நகல் விஸ்வா.
நிர்மலானந்தாவை பார்க்கும் போதெல்லாம் மனதுக்குள் ஒருவித படபடப்பை உணருவதால், அவருடைய முகத்தை நேருக்கு நேர் காண்பதைத் தவிர்க்கும் பொருட்டு தன் பார்வையைத் திசைதிருப்பி, சுற்றிமுற்றிப் பார்த்தாள் மேனகா தவிப்புடன்.
அதற்கு நேரெதிராக, நிம்மியை நேரில் ஒருமுறை பார்க்கக் கிடைத்த வாய்ப்பாகக் கருதி, அவளை பின் தொடர்ந்து ஓடிவந்த நாயகி - அங்கிருந்தவர்களைப் பொறுத்தவரை பல்பீர் சிங், தலை சாய்ந்து ஒரு நெகிழ்ச்சியுடன் அவரை பார்க்க, தன்னையும் அறியாமல் அவள் கையுடன் எடுத்துவந்திருந்த கூண்டுக்குள்ளிருந்த மில்லி வேறு கீச்சு கீச்சென்று கத்திக்கொண்டே இருக்க, ஏற்கனவே கடுப்பிலிருந்தவர், மேலும் கடுப்பாகி,