top of page

TIK - 6

இதயம்-6


காஞ்சிபுரம் மாவட்டத்துள் அடங்கிய சிறுவாக்கம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவள் அம்மு. அங்கே அம்முவின் அப்பா, தாத்தா, சித்தப்பா எனக் கூட்டுக் குடும்பம், அவர்களுடையது. அவளுடைய அத்தையை அதே ஊரில் திருமணம் செய்து கொடுத்திருக்க, அருகிலேயே வசித்து வந்தார். அம்முவின் சகோதரன் ஒருவன், அவளது சிற்றப்பாவின் மகன்கள் இருவர் என மூன்று ஆண் பிள்ளைகளுக்குப்பின் அந்தக் குடும்பத்தின் ஒரே பெண் வாரிசு அம்மு. இருவரின் எளிமையான குணமும், ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்துப் பின்னணியிலிருந்து வந்திருந்த காரணமும் சேர்ந்துகொள்ள மல்லியும், அம்முவும் சில நாட்களுக்குள்ளாகவே நன்கு நெருக்கமாகிவிட்டனர். மல்லியும் ஓரளவிற்கு இயல்பாக அங்கே இருக்கத் தொடங்கினாள். அவள் அம்முவை சார்ந்தே இருக்கப் பழகியிருந்தாள். அம்மு எதாவது காரணமாக விடுப்பில் சென்றால் கூட மல்லி தவித்துப்போய் விடுவாள். அம்முவின் குடும்பத்திற்குள் ஏதோ பிரச்சினை என்பதனால் மட்டுமே அவளை அந்த விடுதியில் சேர்த்திருந்தனர் என்பதை மட்டும் அவள் மல்லியிடம் ஒருமுறைச் சொல்லியிருந்தாள். அவளது ராஜா அண்ணாவிற்கு மட்டும் அதில் விருப்பமில்லை என்றும் அவள் அடிக்கடி சொல்லுவாள். தினமும் அவளுடைய அண்ணன் புராணம் பாடிக்கொண்டிருப்பாள் அம்மு. ஒவ்வொரு விடுமுறைக்கு அவள் ஊருக்குச் சென்று திரும்பும் பொழுதும் அவளுடைய அண்ணனின் பரிசு ஒன்று அம்முவிற்குக் கட்டாயம் இருக்கும். ஓரிரு முறை அண்ணனிடம் சொல்லி மல்லிக்கும் அதுபோல் பரிசை வாங்கி வருவாள் அம்மு. அவர்கள் எட்டாம் வகுப்பில் நுழையும் வரை எல்லாம் சுமுகமாகவேச் சென்று கொண்டிருந்தது. அதன் பிறகுதான் அவர்கள் பல பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியதாக ஆகிப் போனது. அவர்களது உணவே அவர்களின் முதல் பிரச்சினையாகிப் போனது. அவர்கள் அங்கே சேர்ந்த பொழுது இருந்ததுபோல் இல்லாமல், விடுதியில் அவர்களுக்கு அளிக்கும் உணவின் தரம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வந்தது. சிறுமியர் சாப்பிட ஏற்றதாக இல்லாமல் சுவையின்றி உணவில் காரம் அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும். ஆனாலும் அதைச் சொல்ல பயந்துகொண்டு, எல்லோருமே ஏதோ சாப்பிட்டு வைப்பார்கள். அந்த உணவு ஒவ்வாமையால், ஒருநாள் மல்லி வயிற்றுவலியில் துடித்துக் கொண்டிருந்தாள். பிறகு அம்மு, அவர்களது வார்டனிடம் சென்று அவளது நிலைமையைச் சொல்ல, அவர்கள் அதைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. நேரம் ஆக ஆக அவள் வலி அதிகரிக்க, அம்முதான் பிடிவாதம் பிடித்து, அவளுக்கு மருத்துவம் செய்ய வைத்தாள். மேலும் அவர்களது விடுதி உணவகத்திலும், சாப்பிடாமல் உணவு நன்றாக இல்லை என அவள் வெளிப்படையாகக் குற்றம்சாட்டி போராடவே, அன்றிலிருந்து அந்த விடுதியின் வார்டன் அவளுக்கு எதிரியாகிப் போனார். அடுத்த பிரச்சினையாக வந்தாள் செல்வி. அங்கே அந்த வருடம் புதிதாகச் சேர்ந்திருந்தாள் அவள். நல்ல நிறமாக, அவர்களுடைய வகுப்பில் படிக்கும் மற்ற பெண்களை விடக் கொஞ்சம் அதிக வளர்ச்சியுடன் இருப்பாள் அவள். ஏனோ அவளும் அம்முவும் எலியும் பூனையுமாக சண்டையிட்டுக்கொண்டே இருந்தனர். மல்லியை வைத்து அம்முவை அடிக்கடி வம்புக்கு இழுப்பாள் அந்தச் செல்வி. வேண்டுமென்றே மல்லியை, “வள்ளி வள்ளி மரவள்ளி” எனக் கிண்டல் செய்ய, மல்லிக்கு அது பிடிக்காவிட்டாலும் அவளுடன் எதிர்த்து சண்டைப் போட்டு பிரச்சனையை வளர்க்க விரும்பாமல், பேசாமல் இருந்து விடுவாள். ஆனால் அம்முதான் அவளுடன் சண்டையிட்டு நிற்பாள். ஒரு முறை இவர்களது சண்டை வார்டன் வரைச் சென்றுவிட, அவர் செல்வியை விட்டுவிட்டார் அம்முவை மட்டும் அதிக நேரம் முட்டிபோட வைத்துத் தண்டித்தார், அவள்மேல் இருந்த காழ்ப்புணர்ச்சியால். அன்றிரவு முட்டியெல்லாம் கன்றிப்போய் வலியோடு படுத்திருந்த அம்முவிடம் மல்லி, “ஏன் அம்மு எனக்காக அவளோட இப்படி சண்டை போடுற? வார்டனிடம் வேற எதிர்த்துப் பேசி வச்சிருக்க பாரு. உன்னை எப்படி தண்டிச்சு வச்சிருக்காங்க. என்னால இப்படி நீ பிரச்சினையில் மாட்டாதே அம்மு” என்று அவள், அம்முவிற்கு மருந்து போட்டுக்கொண்டே வருந்த, “எங்கே தவறு நடந்தாலும், என்னால் உன்னை மாதிரி வேடிக்கை பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது மல்லி. அதுவும் சாப்பாட்டு விஷயத்தில் நீ மட்டுமே பாதிக்கப்படல யாராவது ஒருத்தர் சொல்லித்தான் ஆகணும் இல்லையா? அந்தச் செல்விமேல் தப்பு இருக்குனு தெரிஞ்சும் இந்த வார்டானம்மா எனக்குத் தண்டனை கொடுத்தாங்கன்னா அதுக்கு நான் என்ன செய்ய முடியும்” என்ற அம்மு தொடர்ந்து, “நீயும் உன்னை கொஞ்சம் மாத்திக்கணும் மல்லி. இப்படியே இருந்தால் உன்னை எல்லா நேரமும் யார் பாதுகாப்பது. நான் பையனா இருந்தால் கூட உன்னையே கல்யாணம் செய்துகொண்டு உன்னை பத்திரமாகப் பார்த்துப்பேன்” என்றாள் சிரித்துக்கொண்டே. அதற்கு, “மூஞ்சியைப்பாரு குரங்கே இப்படி பேசற” என்று கூறி விட்டு, “இருந்தாலும் இப்படி நேரடியாகச் சண்டை போடுவதால் நீ எதாவது பிரசினையில் சிக்கிவிடுவாயோ என்று எனக்கு பயமாக இருக்கு நீ கொஞ்சம் பொறுமையாய் இருக்கப் பழகு அம்மு” என்றாள் மல்லி. அவள் குரங்கே என்றதற்கு பதிலாக, “ஓகே பேயே கவலைப் படாதே” என்றாள் அம்மு. ஆற்றாமையில் பெருமூச்சு எழ அவளது படுக்கையை நோக்கி மல்லி செல்லவும் எதோ தோன்றியவளாக, “மல்லி ஒரு நிமிஷம்!” என அவளைத் தடுத்தாள் அம்மு. “என்னடி?” என்றவாறு அவள் மறுபடியும் அம்முவின் அருகில் அமரவும், தனது வலது கையை நீட்டிய அம்மு, “எனக்கு ஒரு சத்தியம் பண்ணிக்கொடு மல்லி!” என்று சொல்ல அவளை ஒரு புரியாத பார்வை பார்த்த மல்லி, “ஏய்! என்னடி சத்தியமெல்லாம் கேக்குற. அதெல்லாம் தப்பு. நாம சொல்லுற வார்த்தையிலே உண்மை இருந்தால் போதும், இந்தச் சத்தியமெல்லாம் தேவை இல்ல” என்று தயங்கினாள். “இல்ல! உண்மையிலேயே நீ என்னை ஃப்ரண்டா நினைத்தால், நான் சொல்ற ஒருத்தரைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்குவேன்னு, நீ எனக்கு ப்ராமிஸ் பண்ணு. அதுவும் வரதராஜ பெருமாள் மேல!” என்று நீட்டிய கையை மடக்காமல் தீவிரமாகச் சொன்னாள் அம்மு. மறுக்க மனமின்றி அவளது கைமேல் தனது கையை வைத்து அழுத்தியவள், “ப்ராமிஸ்டீ! நீ சொல்லுற மாதிரியே செய்யறேன் போதுமா!” என்று முடித்தாள் மல்லி, அதன் பின்விளைவுகளைப் பற்றி முழுதும் அறியாமல்! அவளுக்குச் செய்து கொடுத்த சத்தியத்தை தன்னால் காப்பற்ற முடியாமல் போகப்போகிறது என்பதைச் சற்றும் உணராமல்! *** அதன்பின் ஒருநாள் மல்லி ஒரு நோட்டுப் புத்தகத்தை அம்முவிடம் காண்பித்து, “இது என்னோட தாத்தாவின் நோட் புக் அம்மு! என்னோட புத்தகங்களோட கலந்து தெரியாமல் எடுத்துட்டு வந்துவிட்டேன்” என்றவள். அதிலிருந்த சில டிசையன்களை காண்பித்து, “இதெல்லாம் எங்க தாத்தா வரைந்தது. எவ்வளவு அழகா இருக்கு பாரேன்! நான் பெரியவளா ஆனபின் இதுபோல டிஸைன் செய்து நிறைய பட்டுப்புடவைகளை நெய்ய போறேன்” என்று கூறி விட்டு, “இதை நீ பத்திரமாக வைத்துக்கொள் அம்மு! நான் ஊருக்குப் போகும்போது வாங்கிக்கிறேன்” என்று அந்த நோட்டுப் புத்தகத்தை அம்முவிடம் கொடுத்தாள் மல்லி. அந்த செல்வி அவளுடை புத்தகங்களில் கிறுக்குவது, அதைக் கிழிப்பது என செய்துவைப்பாள். அதற்கு பயந்தே மல்லி அப்படிச் செய்தது. பிறகு, “நான் என் இடத்திற்கு போகிறேன் பை!” எனச் செல்லத் திரும்பியவளை, “மல்லி ஒரு நிமிஷம்” என்று தடுத்த அம்மு. “ஆனால் ஒரு கண்டிஷன்” என்றவளை மல்லி கேள்வியாகப் பார்க்க, அம்மு, “நீ நெசவு செய்யும் முதல் பட்டுப்புடவை எனக்குத்தான்” என்று சொல்ல, “கண்டிப்பா” என்று அவளை அணைத்துக்கொண்டாள் மல்லி. அதன் பிறகு வந்த நாட்கள் ஓரளவிற்கு சுமுகமாய்ச் செல்ல அவர்களுடைய பள்ளியின் ஆண்டுவிழா கொண்டாட்டங்களும் அதைத் தொடர்ந்த அரையாண்டுத் தேர்வு விடுமுறையும் வந்தது. அப்பொழுது எடுக்கப்பட்ட அவர்களுடைய வகுப்பு க்ரூப் போட்டோவைப் பெற்றுக்கொண்டு, எல்லா மாணவிகளும் அவரவர் ஊருக்குச் சென்றனர். மல்லி அந்த நோட்டுப் புத்தகத்தை அம்முவிடமிருந்து வாங்க மறந்துவிட்டு ஊருக்குப் போய்விட்டாள். ஊருக்குச் சென்ற பின் அவளது தாத்தா உடல்நலக்குறைவால் இறந்துவிட, அவரது காரியங்கள் முடிந்து அவள் ஒரு வாரம் தாமதமாகவே பள்ளிக்குத் திரும்பினாள். அவள் அங்கே வந்தபோது அம்மு அங்கே இல்லை. அதேபோல் செல்வியும் அங்கே இல்லை. அவர்கள் இருவருமே பள்ளியிலிருந்து விலகிவிட்டதாகச் சொன்னார்கள். அவளால் விடுதியிலிருந்து அம்முவைத் தொடர்புகொள்ள இயலவில்லை மிகவும் துடித்துத்தான் போனாள் மல்லி. அவளது அந்த நிலைமையையும் சிறிதாக்கிக் காட்டுவதுபோல், சில தினங்களிலேயே மல்லியின் தந்தை ஜெகனின் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவே அவளது ஒன்று விட்டுப் பெரியப்பா முத்துராமன், அவளை அங்கிருந்து அழைத்துச்சென்றார். அதன்பின் அவர்கள் வாழ்க்கையே மாறிப்போனது. *** மல்லி சொல்லிக்கொண்டிருக்க அமைதியாக அதைக் கேட்டவாறு வந்த தேவா, “அதன் பிறகு நீ ஏன் அவளைத் தொடர்புகொள்ள முயலவில்லை?” என்று கேட்க, “எனக்கு அவளோட அப்பாவின் மொபைல் நம்பர்தான் தெரியும். லீவில் இருக்கும்போதெல்லாம் அதுலதான் அவளிடம் பேசியிருக்கேன். ஆனால் அதற்குப் பிறகு வேறு யாரோதான் அந்த நம்பரை யூஸ் பண்ணாங்க. அவங்க அம்முவைத் தெரியாதுன்னு சொல்லிட்டாங்க. அப்பாவின் உடல்நிலை சரியில்லாததால் என்னால நேரில் போய் அவளைப் பார்க்கவும் முடியாமல் போனது” என்று முடித்தாள் மல்லி. “ஆக நீ ஹாஸ்டலில் இருந்தபொழுது அம்மு உனக்கு நிறைய உதவி செஞ்சதுனால அவ உனக்கு ஸ்பெஷல் அப்படித்தானே?” என்று தேவா கேட்க, “அது மட்டும் காரணமில்லை நான் அங்கிருந்து வந்த பிறகு தாழ்வு மனப்பான்மை இன்றி, இந்தச் சமூகத்தை எதிர்கொள்ள எனக்குத் தைரியம் கொடுத்தது நான் அவளுடன் இருந்த அந்த மூன்று வருடங்கள் தான். நான் அறியாமலேயே அவள் பல விஷயங்களை என்னுள் புகுத்தியிருந்தாள். முதலில் யாரைப் பார்த்தும் ஓடி ஒளியாமல் அந்த நேரத்திற்குத் தகுந்த பதில் சொல்ல, கொஞ்சமே கொஞ்சம் நான் கற்றுக்கொண்டதும் அவளிடம்தான்” தொடர்ந்தாள் மல்லி. “அந்த ஹாஸ்டலில் கங்கம்மான்னு ஒரு ஆயாம்மா, அங்கே சுத்தம் செய்யும் வேலையில் இருந்தாங்க. அவங்களும் அங்கேதான் தங்கி இருந்தாங்க. அவங்க எப்பவுமே எல்லாப் பெண்களையும் திட்டிட்டே இருப்பாங்க. யாருக்குமே அவங்களை பிடிக்காது. ஆனால் அம்முவைப் பார்த்தால் மட்டுமே அவங்க சிரித்துப் பேசுவாங்க. ஏனென்றால் அவர்களிடம் கூட அம்மு அன்பாக நடந்துகொள்வாள். ஒரு முறை அவங்க குளிரில் வருந்துவது தெரிந்து அம்முவுடைய அப்பா வரும்பொழுது அவரிடம் சொல்லி ஒரு போர்வை வாங்கிவந்து கொடுத்தாள். மற்ற பெண்களெல்லாம், ‘இந்த ஆயா தான் எல்லோரையும் திட்டிட்டே இருக்குதே; நீ ஏன் அம்மு அவங்களுக்கு இதெல்லாம் செய்யற?’ எனக் கேட்டதற்கு ‘அவங்க திட்டினாலும் யாருக்கும் கெடுதல் செய்வதில்லை அவங்க ஒரு வயசானவங்க நம்மால் முடிந்த உதவியை செய்யணும்’ என்று அவளிடமிருந்து பதில் வந்தது. இதுபோன்ற அவளுடைய நல்ல குணங்களை என்னால் மறக்கவே முடியாது. அவளுடையது நல்ல வசதி பெற்ற குடும்பம். அவளுடைய அப்பா, அம்மா, அவளோட ராஜா அண்ணா எல்லோரும் அவளை நன்றாகப் பார்த்துப்பாங்கதான். அதில் சந்தேகமே இல்லை. அவளுக்கு டாக்டரா ஆகணும்னு ரொம்ப ஆசை. அதனால் இந்த நேரம் அவள் மெடிக்கல் பைனல் படித்துக்கொண்டிருந்தாலும் இருக்கலாம். இருந்தாலும் அவ விஷயத்துல ஏதோ சரியில்லைன்னு என் உள் உணர்வு சொல்லிட்டே இருக்கு. அதனால அவள் நன்றாக இருக்கிறாள் என்று எனக்குத் தெரிந்தால் போதும் எனக்கு வேறு ஒன்றும் வேண்டாம்” என்ற மல்லியின் கண்களில் நீர் கோர்த்திருந்தது. அவள் பேசுவதையே உணர்ச்சி துடைத்த முகத்துடன் அமைதியாகக் கேட்டிருந்த தேவா அவள் கண்களில் கண்ணீரைக் கண்டவுடன் அவள் மனதை திசை திருப்ப எண்ணி. “அப்படியா? அப்ப அவளிடம் கொடுத்த உன்னோட தாத்தாவின் அந்த நோட் புக் உனக்கு வேண்டாமா?” என்று கேட்க, “வேண்டாம்” என்றாள் மல்லி. “வேண்டாமா? பிறகு நீ எப்படி அந்த டிசைன்களில் புடவைகள் வடிவமைக்க முடியும்?” என்று தேவா கேட்க, “அதில் இருக்கும் எல்லா டிசைன்களும் எனக்கு அப்படியே மனசுல பதிஞ்சிருக்கு. அது இல்லாமல், இன்னும் நிறைய டிசைன்கள் கூட செய்து வைத்திருக்கிறேன்” என்று அவள் சொல்ல, “சரி! அப்படியானால், அதிலிருந்து, திருமண வரவேற்பிற்கான புடவை ஒன்றை, அதன் நிறம் மற்ற எல்லாமும் நீயே முடிவுசெய்து வடிவமைத்து என்னிடம் கொடு. நம்ம ஆதி டெக்ஸ்டைல்ஸ் தறியிலேயே அதை நெய்ய ஏற்பாடு செய்யறேன்” என்ற தேவாவை, ஒரு வியந்த பார்வை பார்த்த மல்லி, “நிஜமாவா சொல்றிங்க!” என்று ஆச்சரியக் குரலில் கேட்க “உன்னிடம் உண்மையை மட்டும்தான் சொல்வேன் மல்லி!” என்று தீவிரக்குரலில் சொல்லியவன், “உன் ஆசைப் படி நீ வடிவமைத்தப் புடவை தயாராகும்” என்று முடித்தான். அதே நேரம் அவர்கள் ஜீஹெச்சை அடைந்திருந்தனர். *** அவர்கள் அங்கே வருவது தெரிந்து அவர்களுக்காக வெளியிலேயே காத்திருந்தார் சுகுணா. அவருடன் சென்று, வார்டில் அவரது கணவர் மாணிக்கத்தைப் பார்த்தனர் இருவரும். இதய நோயாளிகள் நிறைந்த அந்த இடத்தைப் பார்ப்பதற்கே துயரமாக இருந்தது. மூச்சுத் திணறல் காரணமாக அங்கே அழைத்துவரப்பட்டிருந்தார் மாணிக்கம். பிறகுதான் அவரது இதயம் மோசமாகச் செயலிழந்து இருப்பதைக் கண்டுபிடித்தனர். மூன்று மாதத்திற்குள் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தாகவேண்டும் என்ற நிலையில் இருந்தார் அவர். அதுவரையில் மருத்துவம் பார்த்தாகவேண்டிய சூழல் வேறு. அவர்களுக்கு இரு குழந்தைகள் இருந்தனர். கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் சென்றால்தான் அவர்களுக்கு வாழ்க்கையே. ஆனால் இருவராலும் வேலைக்குச் செல்ல இயலாத சூழல் ஏற்பட்டிருந்தது. தேவா மாணிக்கத்துடன் பேசிக்கொண்டிருக்க மல்லியிடம், அனைத்தையும் துயரத்துடன் சொல்லிக்கொண்டிருந்தார் சுகுணா. இருவரும் விடை பெற்றுக் கிளம்பும் நேரம் சுகுணாவின் கைகளில் கொஞ்சம் பணத்தை திணித்த மல்லி, “இப்போதைக்கு என்னால முடிஞ்சது. உங்களுக்கு வேறு எதாவது உதவி தேவைப்பட்டால் தயங்காமல் என்னிடம் சொல்லுங்கக்கா. நான் என்னால் முடிந்ததைச் செய்கிறேன்” என்க, அவளைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுதேவிட்டார் சுகுணா. அனைத்தையும் பார்த்தும் பார்க்காததுபோல், கவனித்துக்கொண்டுதான் இருந்தான் தேவா. *** மிகவும் கனத்த மனதுடன் வண்டியில் அவன் அருகில், அமைதியாய் உட்கார்ந்திருந்த மல்லியைக் கண்ட தேவா, “கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு மல்லி எல்லாவற்றிற்கும் உணர்ச்சிவசப்பட்டால் நம்மால தெளிவாக சிந்திக்க முடியாது” என்று சொல்ல, “ப்சு இதே நிலைமையில்தான் கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு முன்பு நாங்கள் இருந்தோம் தேவா. கொஞ்சம் சொத்துகள் இருந்ததால அவற்றை விற்று சமாளித்தோம். இவருடன் கம்பேர் செய்யும்போது என் அப்பாவின் நிலை பரவாயில்லை. இவங்க ரொம்ப பாவம் தேவா” துயரத்துடன் வந்தன அவள் வார்த்தைகள். மணி பத்தைத் தாண்டியிருந்தது சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்றவனிடம் மறுத்துவிட்டாள் மல்லி. வற்புறுத்தி பழச்சாறு மட்டும் வாங்கிக்கொடுத்து அவளது வீடு நோக்கி காரைச் செலுத்தினான் தேவா. சிறுது நேரம் அமைதியாகச் செல்ல அவளை திரும்பிப் பார்த்த தேவாவிற்கு புன்னகை அரும்பியது. அப்படியே உறங்கிப்போயிருந்தாள் அவள். *** அன்று ஞாயிறு விடுமுறை அவசரம் ஏதுமில்லாததால் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாள் மல்லி. அவளது கைப்பேசி இசைத்தது சுகுணாதான் அழைத்திருந்தார். மல்லி, “சொல்லுங்கக்கா” என்று சொல்ல, “மல்லி ஒரு நல்ல சமாச்சாரம் நம்ம கம்பெனி ஒரு டிரஸ்ட் வச்சிருக்காங்களாமே அதுக்கு லெட்டர் கொடுக்கச்சொல்லி நம்ம மணி சார் போன் செஞ்சிருந்தாரு. வைத்திய செலவெல்லாம் அவங்க பாத்துப்பாங்களாம். எனக்கு சம்பளத்தோட லீவு வேற கொடுப்பதாகச் சொன்னாரும்மா. எல்லாம் நீ வந்து பார்த்த ராசிதான் கண்ணு, அவரை பிழைக்க வச்சிடலாம்னு எனக்கு இப்ப கொஞ்சம் நம்பிக்கை வந்துடிச்சுமா” மூச்சுவிடாமல் சொல்லிக்கொண்டே போனார் சுகுணா. அவரது குரலில் அளப்பரிய நிம்மதி தெரிந்தது. “இதுவும் உன் வேலைதானா தேவா!?” நினைத்தாள் மல்லி மகிழ்ச்சியுடன்!

0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page