top of page
Writer's pictureKrishnapriya Narayan

TIK - 24

இதயம்-24

அவளது வியந்த முகத்தைப் பார்த்து ஆதியின் புன்னகை மேலும் விரிய, “என்ன எம்.டி மேடம்! நான் சொல்வது சரிதானே?” என்று அவன் கேட்க, “ஐயோ! எம்...டி...யா… நானா! சான்ஸே இல்ல! என்ன விளையாடறீங்களா?” என மல்லி கொளுத்திப் போட்ட சரவெடி போல் படபடக்கவும், “நிஜமாகத்தான் சொன்னேன் மல்லி; விளையாடணும்னா இப்படியா விளையாடுவேன்?” என கிறக்கமாக அவன் சொன்ன விதத்தில் எகிறிய இதயத்துடிப்பை மறைத்து. “மாம்ஸ்!” என்று அவனை முறைத்தவள், “சீரியஸா பேசும்போது கிண்டல் பண்ணாதீங்க!” என்று கூற, கொஞ்சம் கடுமை ஏறிய குரலில், “நானும் சீரியஸாதான் சொன்னேன், அதிகபட்சம் இன்னும் ஒரு வாரத்தில் எல்லாவற்றிற்கும் ஒரு முடிவுகட்டி விடுவேன் அதுவரை தான் உனக்கு டைம். அதன் பிறகு நீ ஆபீஸ் வந்துதான் ஆகணும் அதுவும் எம்...டி... யாக. அதற்கான எல்லா பேப்பர்சையும் தயார் பண்ணிட்டேன்” என்றவன், “அத்துடன் இனிமேல் நம்ம கம்பெனில டிசைன் செய்யற எல்லாப் பட்டுப்புடவைகளின் காப்புரிமை உன் பெயரில்தான் இருக்கும். புடவைகளை டிசைன் செய்யறதோட, நம்ம பட்டு கைத்தறி, மெஷின் தறி எல்லாமே உன் பொறுப்பில்தான் வரும். முதலில் கொஞ்சம் நானும் சசியும் உனக்கு ஹெல்ப் பண்ணுவோம். போகப்போக நீ தனியாகத்தான் மேனேஜ் பண்ணனும்” எனச் சொல்லி முடித்தான் ஆதி. அவன் அவ்வளவு எடுத்துச் சொன்ன பிறகும், என்னதான் அவன் சொன்ன விஷயங்கள் சரியாக இருந்த பொழுதும், அனைத்துமே அவளது அறிவிற்கு எட்டியிருந்தாலும், மனம் அதை ஏற்க முரண்டு பிடித்தது. அதற்குமேல் எதுவும் பேசாமல் கதவைத் திறந்துகொண்டு வெளியில் சென்று பால்கனி கூடை ஊஞ்சலில் கண்களை மூடி, இரண்டு கால்களையும் குறுக்காகக் கட்டியபடி சாய்ந்து கொண்டு உட்கார்ந்தாள் மல்லி. திருமணம் முடிந்து வெறும் எட்டு நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது. அவளுக்கு என்னவோ எட்டு யுகங்களைக் கடந்த பிரமிப்பு தோன்றியது. ‘எப்பொழுது இவையெல்லாம் சரியாகி ஒரு நிம்மதியான சூழ்நிலை ஏற்படுமோ?!’ என்றிருந்தது மல்லிக்கு. இரவு நேரக் கடல் காற்று சிலுசிலுவென்று முகத்தில் மோத சற்று நேரத்திலேயே அது தந்த புத்துணர்வில், ‘எது நடந்தாலும் கட்டாயம் ஆதி பார்த்துக் கொள்வான்!’ என்ற எண்ணம் தோன்றவே, மனம் கொஞ்சம் தெளிவடையவும், அவள் கண்களைத் திறக்க, அருகே போடப்பட்டிருந்த சோபாவில் கால்களை மடக்கி படுத்தவாறு கைப்பேசியைக் குடைந்து கொண்டிருந்த ஆதி அவளது பார்வையில் படவும், மனம் கரைந்து போனது மல்லிக்கு. “மாம்ஸ்! ஏன் இங்கே வந்து படுத்திருக்கீங்க! கொசு வேறு பிடுங்கி எடுக்கிறது!” என அவள் சொல்ல, “இந்த கொசுவெல்லாம் என்னை அவ்வளவாகக் கடிக்காது?” என்றான் ஆதி. “ஆமாம்! இந்த கொசுவிற்கெல்லாம் நீங்கதான் 'தி கிரேட் தேவாதிராஜன்னு' தெரிஞ்சு பயந்து உங்களைக் கடிக்காமல் பறந்திடும்!” என அவள் கேலி போலச் சொல்லவும், “நிஜம் மல்லி! நான் நெகடிவ் பிளட் க்ரூப். அதுவும் ரொம்ப ஸ்பெஷல் பிளட் க்ரூப். அதனால, என்னை அவ்வளவாக கொசு கடிக்காது” என்றான் ஆதி தீவிரமான குரலில். அதில் எதோ நினைவு வந்தவளாக வியக்கும் குரலில், “மாம்ஸ்! அம்மு கூட ஒரு முறை இதுபோல் சொல்லியிருக்கா! அவளும் நீங்களும் ஒரே பிளட் க்ரூப்பா?” என மல்லி கேட்க, “ஐயோ!” என்றவாறு தலையில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டான் ஆதி. “ஏன் மல்லி! எங்கே போனாலும் திரும்பத் திரும்ப இங்கேயே வந்து நிக்கற” என அவன் ஆயாசமாகக் கூறவும், “சாரி மாம்ஸ்! ஏனோ என்னால இதிலிருந்து சட்டுனு வெளியில் வர முடியல! நானும் இதுபற்றியெல்லாம் பேசக்கூடாதுன்னுதான் நினைக்கிறேன். ஆனால் என்னையும் மீறிப் பேசி உங்களை டென்ஷன் பண்ணிடறேன்” என மல்லி வருந்தவும், “சரி வா! உள்ளே போகலாம்!” என்று அவன் அவளை அழைத்தான். “இல்ல எனக்கு தூக்கம் வரல நீங்க போய் தூங்குங்க” என மல்லி சொல்லவும், “என்னைத்தான் மல்லி கொசு கடிக்காது. ஆனால் உன்னை பிய்த்துத் தின்றுவிடும்” என அவன் கிண்டல் குரலில் சொல்ல, “பரவாயில்லை நான் கொசுவிடம் சொல்லிடறேன் நான் ஆதியின் பாதின்னு. பிறகு என்னையும் கடிக்காது” என்று அவள் பதிலுக்கு பதில் பேசவும், அதில் கொஞ்சம் கடுப்பானவன். “கொசுவின் பாஷை உனக்குத் தெரிந்திருக்கலாம், ஆனால் அன்றைக்கு நடந்ததுபோல் பெரியதாகக் கத்தியை தூக்கிட்டு யாரவது வந்தால் என்ன செய்வ மல்லி? இங்கே தேரைகள் வேறு அதிகம்” என்று சொல்லி அவளை மிரளவைத்து உள்ளே சென்றுவிட்டான் ஆதி. பயத்தில் அவனைப் பின் தொடர்ந்து ஓடி வந்த மல்லியின் பதட்டம் கண்டு வாய் விட்டுச் சிரித்தான் ஆதி. அவனது கேலியில் ஒரு நொடி மௌனித்தவள், ‘எப்படியும் வீட்டைச் சுற்றி பக்காவாக பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறான். அதை மீறி கொசுவையும், தேரையையும் தவிர வேறு ஒருவரும் உள்ளே நுழைய முடியாது!’ என்பது அவள் மனத்திற்குப் புரிய சுறுசுறுவென்ற கோபத்துடன் பேசாமல் போய் படுத்துக்கொண்டாள் மல்லி தலை வரை போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு! சில நிமிடங்களில் அவனது இடத்தில் ஆதி வந்து படுப்பதை உணர்ந்த மல்லியை தூக்கம் சுகமாகத் தழுவிக்கொண்டது. ஆனால் அது சில நிமிடங்கள் கூடத் தொடரவில்லை. அம்மு தொடரவிடவில்லை. க்ளக்… க்ளக்… சளக்… சளக்… என்ற வினோத ஒலிகள் கேட்டுக்கொண்டிருக்க, அம்மு ஸ்ட்ரெக்சரில் மயக்க நிலையில் படுக்கவைக்கப் பட்டிருந்தாள். அவளது வலது கரம் கழுத்தில் அணிந்திருந்த அவளது செயினை இறுக்கப் பற்றியிருந்தது. அவளது கையை பிடித்து, வலியப் பிய்த்து அந்த செயினை விடுவித்த ஒருவன், அதையும் அவளது கைகளில் போட்டிருந்த வளையல், மோதிரம், பின்பு சிறிய ஜிமிக்கி என ஒவொன்றாக கழற்றிக்கொண்டிருக்க, “சீக்கிரம் உள்ளே கொண்டு வா குணா!” என்ற அழைப்பில் அவசரமாக கடைசியாக அவளது கால்களில் போட்டிருந்த கனத்த கொலுசைக் கழற்ற, அது கீறி அவளது காலில் ரத்தம் வருவதையும் பொருட்படுத்தாமல் அந்த ஸ்ட்ரெக்ச்சரை தள்ளிக்கொண்டு, அந்த ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்தான் குணா. முந்தைய நாளது கனவில் அவள் கண்ட அந்த இடத்தையே மறுபடி பார்க்கவும் பயத்தில் பதறிப்போய் எழுந்து உட்கார்ந்தாள் மல்லி. ஆனாலும், அந்த க்ளக் க்ளக் சளக் சளக் ஓசைகள் தொடரவும் குழம்பியவள், கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு அருகில் பார்க்க, ஆதிதான் தன் கைப்பேசியில் எதோ விளையாடிக்கொண்டிருந்தான். அதிலிருந்து வந்த ஒலிதான் அது என்பது புரிந்தது. மணியைப் பார்க்க அது ஒன்று எனக் காட்ட, ஆழ்ந்த மூச்சு ஒன்றை எடுத்துக்கொண்டு, “நீங்க இன்னும் தூங்கலையா?” என தூக்கக் குரலில் கேட்டாள் மல்லி. ஏனோ அன்று அம்முவின் நினைவு அவனை அதிகம் ஆட்கொள்ள, அதைச் சொல்லாமல், “ஏனோ தூக்கம் வரல மல்லி நீ ஏன் முழிச்சிட்ட” என எதிர்க் கேள்வி கேட்டான் ஆதி. அங்கே பாட்டிலில் இருந்த தண்ணீரை பருகியவாறே “ப்சு!” என்று அலுத்துக்கொண்டாள் மல்லி. “ஏன் என்ன ஆச்சு” என்று அவன் கேட்கவும், அவள் கண்ட கனவை விவரித்தவள், “அம்முவைப் பற்றி பேசினால் உங்களுக்கு பிடிக்கலைனு தெரிஞ்சாலும், என்னால இந்த கனவைப் பற்றி உங்களிடம் சொல்லாமல் இருக்க முடியல சாரி!” என முடித்தாள் மல்லி. “அம்முவை பற்றி பேசினால் எனக்குப் பிடிக்காதுன்னு நான் எப்ப சொன்னேன் மல்லி?” என்று அவளிடம் கேட்ட ஆதி, “நானே மறக்க நினைக்கும் கசப்பான நாட்களை நினைவு படுத்தியதால்தான், அவளைப் பற்றி பேசுவதைத் தவிர்த்து வந்தேன்! முதலிலாவது அவள் மேல் எனக்கு கோவம் இருந்தது. அதுகூட இப்ப இல்லை மல்லி! நீ எல்லா நேரமும் இந்தப் பிரச்சினைகளிலேயே மூழ்கி இருப்பதுதான் காரணம்” என ஆதி சொல்லவும், “சரி விடுங்க” என்றவள் எதோ நினைவு வந்தவளாக, “ம்! கேட்கணும்னு நினைச்சேன்!”. “அந்த குணாவைப் பற்றிச் சொன்னேன் இல்ல? அவர் அந்த வனிதாவின் அப்பாதானே?” என மல்லி கேட்க, “ஆமாம்! அந்த நா” என்று வார்த்தையைப் பாதியிலேயே நிறுத்தியவனின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது. “ப்சு மாம்ஸ்! கோவப்படாதீங்க!” என்ற மல்லி, “அவன் கையில் அம்முவின் நகைகள் எப்படிப் போச்சுன்னு புரிஞ்சுதா?” எனக் கேட்கவும், முகம் இறுக, “ஹ்ம்ம்! இப்படி இருக்கும்னு நான் கனவிலும் நினைக்கல!” என்றவன் தொடர்ந்து, “அவன்தான் மல்லி அம்மு இறந்ததும் முதல் முதலாகப் பார்த்ததாகவும், அவள் தற்கொலைதான் பண்ணிக்கிட்டாள்னும், போலீசில் வாக்குமூலம் கொடுத்தது! நான் அப்பதான் அவளுடைய நகைகளைத் திருடினான்னு நினைச்சேன்” என்ற ஆதி, கரகரப்பான குரலில், “உன்னை சொல்லிட்டு ஏனோ எனக்குமே இன்று அம்முவைப் பற்றிய நினைவு கொஞ்சம் அதிகமாகவே வருது மல்லி. தூக்கம் கூட வரல” எனச் சொல்லிக்கொண்டிருக்க அவனுடைய கண்கள் பனித்திருந்தன. அந்த கோபாலை சென்று சந்தித்தது முதலே, அவன் வினோத்திற்கு உடந்தையாக கீழ்த்தனமான செயல்களில் ஈடுபட்டிருப்பது புரியவும், அம்முவை நினைத்து ஆதி குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தான். ஏனோ எல்லாவற்றையும் மல்லியிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றவும், அதே எண்ணத்தில் அவளை நாடி வந்தவனுக்கு அவளது நிலை மனதை உறுத்த சொல்லாமலே விட்டுவிட்டான். ஆனால் மறுபடியும் அம்முவின் மரணத்தைப் பற்றிய பேச்சு எழவும், “மல்லி உன்னிடம் கொஞ்சம் பேசணும் உணர்ச்சி வசப்படாமல் உன்னால் கேட்கமுடியுமானால் நடந்த விஷயங்களை உன்னிடம் சொல்லுவோன்... என்னுடைய செயல்பாடுகள் எதையுமே யாரிடமும் இதுவரை சொன்னதில்லை. எனது எந்தச் செயலுக்கும் விளக்கங்கள் கொடுத்ததில்லை மல்லி! ஏன் என் அம்மா அப்பாவிடம் கூட சொன்னதில்லை” என்றவன் “நான் எனது பதினாறாவது வயதிலிருந்தே அப்பாவுடன் சேர்ந்து தொழிலில் ஈடுபட ஆரம்பிச்சேன் மல்லி! அதுவும் தனியாகத் தொழில் தொடங்கிய பிறகு எனக்குக் கிடைத்த வெற்றிகளில் கொஞ்சம் அதிகமாகவே கர்வத்துடன் இருந்துட்டேன். அம்முவின் மரணம் எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி! எந்த இடத்தில் என் கவனம் சிதறிப் போச்சுன்னுதான் புரியல. மனசு ரொம்ப வலிக்குது மல்லி! உன்னிடம் சொல்லலாம்தானே?” என ஆதி கேட்கவும், “மாம்ஸ்! உங்க மனசுக்கு ஆறுதல் கிடைக்கும்னா எதுவாக இருந்தாலும் சொல்லுங்க. எனக்கும் தூக்கம் வரல. அத்துடன் நிறையக் கேள்விகளும் மனதில் இருக்கு” என்றாள் மல்லி. “அருளாளன் என்ற எங்க தாத்தாவின் பெயரையும், பரமேஸ்வரி என்ற பாட்டியின் பெயரையும் சேர்த்து 'அருள் பரமேஸ்வரி ஸ்டோர்ஸ்' என்ற பெயரில், தாத்தா ஆரம்பித்த கடையை அவருடன் சேர்ந்து அப்பா கவனிக்கத் தொடங்கினார்” என அவர்களது குடும்பத்தைப் பற்றி சொல்லத்தொடங்கினான் ஆதி. ஏற்கனவே விவசாய நிலங்கள், மூன்று வீடுகள், அத்துடன் சின்ன காஞ்சிபுரத்தில் அவர்களுடைய கடை, அது இருக்கும் அவரகளுக்கு சொந்தமான இடம் என வசதி வாய்ப்பிற்குக் குறை ஒன்றும் இல்லை அவர்களுக்கு. மேலும் கடையிலும் வியாபாரம் கொழிக்க, ஊரில் நல்ல மரியாதையை இருந்தது அவர்களுடைய குடும்பத்திற்கு. வரதன், செல்வம் மற்றும் கயல் என மூன்று பிள்ளைகள் அருளாளனுக்கு. செல்வம் நன்றாகப் படிக்கவும் அவரைக் கல்லூரியில் சேர்த்துப் படிக்கவைத்தனர். படிப்பு முடிந்ததும் அவருக்கு அரசாங்க வேலையும் கிடைத்துவிட்டது. வரதனுக்கும் செல்வேந்திரனுக்கும் இரண்டு வயதுதான் வித்தியாசம். செல்வத்தை விட ஐந்து வருடம் சிறியவள் கயல்விழி. அருளுடைய சொந்த தங்கையின் மகள்தான் சுலோச்சனா. பட்டுத் தறிகள், ரைஸ் மில், சா மில், என வசதி படைத்த குடும்பம் அவர்களுடையது. மூன்று மகன்களுக்குப் பிறகு சுலோச்சனா என்பதால் அவர்கள் வீட்டின் இளவரசி அவள். அவளைத் தனது மூத்த மகனுக்குத்தான் முதலில் கேட்டார் அருளாளன். ஆனால் படித்து அரசாங்க வேலையில் இருக்கும் இளைய மகனுக்குத்தான் தன் மகளைக் கொடுப்பேன் என்று சொல்லிவிட்டார் அவரது தங்கை தனது மகளின் மனம் அறிந்து. செல்வ நிலையில் கொஞ்சம் குறைந்திருந்தாலும் தனது ஒன்று விட்ட சகோதரனின் மகளான ஆதிலட்சுமியை வரதனுக்குப் பேச விரும்பினார் பரமேஸ்வரி, அவளது குண இயல்புகளை அறிந்தவராக. அருளாளனுக்கும் மனைவியின் எண்ணம் சரி எனப் படவே, பேசி முடித்து இரண்டு திருமணங்களையும் அடுத்தடுத்த முகூர்த்தத்திலேயே நடத்தி முடித்தனர். கயல்விழியும் சுலோச்சனாவும் சிறு வயது முதலே ஒரே பள்ளியில் படித்து, ஒன்றாக வளரவே கயலுக்கு சுலோச்சனாவை மிகவும் பிடிக்கும். தங்களது நிலையிலிருந்து குறைவான இடத்திலிந்து வந்தவள் என்ற எண்ணம் மட்டுமே லட்சுமியின் மீது இருந்தது அவளுக்கு. அது அவளது வார்த்தைகளிலும் வெளிப்படத் தொடங்கியது. பரமேஸ்வரிக்கு மட்டும், தாய் வீடே கதி என்று இருக்கும் நாத்தனாரின் மகளை விட, கைக்கு உதவியாக இருக்கும் தனது தம்பியின் மகளைத்தான் மிகவும் பிடிக்கும். வீட்டிற்குள்ளேயே உட்கட்சி பூசல்கள் ஆரம்பமானது. திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே ஆதி பிறந்துவிட, இரண்டு வருடம் கழித்தே சுலோச்சனா அவர்களது மகன் கமலக்கண்ணனை பெற்றெடுத்தாள். அதற்குள்ளாகவே அவள் கொண்ட புகைச்சல் கொஞ்சம் நஞ்சமல்ல. அடுத்த வருடமே அவர்களது இரண்டாவது மகன் விமல் பிறந்தான். கயல்விழிக்கு அதே ஊரிலேயே அவர்களுக்கு இணையான குடும்பத்தில், ராமலிங்கம் என்பவருடன் திருமணம் முடித்தனர். மூன்று வருடங்கள் கழித்துத்தான் அவர்களது ஒரே மகளான வேல்விழி பிறந்தாள். அதற்குள் அருள், பரமேஸ்வரி இருவரின் முதுமைக் காரணமாக கடையின் பொறுப்பு முழுதும் வரதனுக்கே வந்தது என்றால், வீட்டின் பொறுப்பு மொத்தமுமே லட்சுமிக்கு வந்து சேர்ந்தது. செல்வத்திற்குக் கடையை கவனிக்க ஆர்வம் இல்லை. அது அவரது வேலைக்கும் பிரச்சினை ஏற்படுத்தும் என்றும் பயந்தார் அவர். சுலோச்சனா மறந்தும் வீட்டு வேலைகளில் ஈடுபாடு காட்டவில்லை. எனவே வரதன் லட்சுமி இருவருமே ஓயாமல் உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். ஆதி வளர வளர சுலோச்சனா தன் அன்னையிடம் காட்டும் அலட்சியமும், அதற்குக் கயல் அத்தை துணைபோவதும் இலைமறைக் காயாக புரியத் தொடங்கியது. அப்பொழுதுதான் ஆதி பிறந்து மிக நீண்ட பத்து வருடத்திற்குப் பிறகு அம்மு பிறந்தாள். மருத்துவமனையில் பாட்டிகள் இருவர், வரதன், லட்சுமியின் தம்பி என அனைவரும் காத்துக்கொண்டிருக்க, பிறந்த குழந்தையான அமிர்தவல்லியை முதன்முதலாகத் தனது கைகளில்தான் ஏந்தினான் தேவாதிராஜன். ஒரு பெண் குழந்தை இல்லையே என ஏங்கிக் கொண்டிருந்த சுலோச்சனாவிற்கு வயிற்றில் அமிலம் சுரந்தது.

0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page