top of page

TIK -2

இதயம் - 2


தூக்கம் தடைப்பட்டதின் எரிச்சல் அவனது குரலில் அப்பட்டமாகத் தெரிந்தது. மல்லியோ அதை உணரும் நிலையிலெல்லாம் இல்லாமல், “அம்மு அங்க இருக்காளா? அவகிட்ட பேசணும்!” என்று சொல்ல, “என்ன அம்முவா!?” எனக் கேட்டவனின் தூக்கமெல்லாம் பறந்திருந்தது.


“ப்ளீஸ்! போனை அம்முகிட்ட குடுங்க!” மறுபடியும் அவள் இதையே சொல்ல,


எதிர் முனையில் பேசியவனோ அடக்கப்பட்ட கோபத்துடன், “ஏய்ய்ய்ய் யார் நீ? இப்பப்போய் அம்முவ கேக்கற?” என்று உறும, மறுபடியும் அவள், “அம்மு எங்க இருக்கா?” என்றே கேட்கவும், கோபத்தின் எல்லைக்கே சென்றவன், “ஏய் நீ எங்கிருந்து பேசற” என்று அடிக்குரலில் சீறினான்.


அதில், அழுகின்ற நிலைக்கே போனவள், “அம்மு எங்கடி இருக்க?” என்றவாறே போனை கட் செய்துவிட்டு, அப்படியே தூங்கியும் போனாள்.


அடுத்த நாள் காலை, தான் செய்துவைத்திருந்த குளறுபடிகள் எதுவுமே நினைவில் இன்றி, வழக்கம் போல் எழுந்தவள் குளித்து, தயாராகி, தனக்கும் தம்பிக்குமான உணவையும் தயாரித்து, லஞ்ச் பாக்சில் அடைத்தவாறே, “டேய் தீபா லஞ்ச் பேக் பண்ணிட்டேன்டா, வா சாப்டுட்டுக் கிளம்பலாம்” என படித்துக் கொண்டிருந்த தீபனை அழைக்க, பேசிக்கொண்டே உண்டு முடித்து அவன் பள்ளிக்கும் அவள் அலுவகத்திற்கும் கிளம்பினார்கள்.


அலுவலக பேருந்தில் அமர்ந்தவள், அம்மாவுக்கு அழைத்துப் பேசலாம் என்று போனை எடுக்க, அப்பொழுதுதான் அவள் டையல்டு லிஸ்டில் ஒரு புதிய எண்ணிற்குக் கால் செய்திருப்பதையே கவனித்தாள்.


அழைத்திருந்த நேரத்தைப் பார்த்து திடுக்கிட்டு, ‘தூங்கும்போது, டச் ஸ்க்ரீன்ல தெரியாம கை பட்டு, கால் போயிருக்கும்!’ என்று நினைத்தவள், கால் டியூரேஷனை பார்த்தால், மூன்று நிமிடங்களுக்கு மேலிருந்தது!


‘மன்னிப்பு கேட்பதுதான் முறை!’ என்று கருதி அந்த எண்ணுக்கு, ‘சாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ், மிஸ்டேக்கன்லி கால்டு!’ என்று மெசேஜ் செய்துவிட்டு, அதற்குமேல் அதைப்பற்றி அதிகம் யோசிக்காமல் பரிமளாவை அழைத்துப் பேசத்தொடங்கினாள் மல்லி.


ஆனால் எதிர்முனையில் அந்த குறுந்தகவலை படித்தவனோ ‘அவள் யார்?’ என்று யோசிக்கத் தொடங்கியிருந்தான்!


***


அன்று மல்லி, சவிதா, மேகலா மூவரையும் அழைத்திருந்தார் காஞ்சனா.


அனுமதி பெற்று அவரது கேபினுக்குள் மூவரும் நுழைந்தனர்.


அங்கே மணிகண்டனும் அமர்ந்திருந்தான். மூவரையும் அமருமாறு பணித்த காஞ்சனா, “இந்த ட்ரைனிங் பீரியட்ல உங்க மூணு பேருக்கும் நல்ல ஒரு வாய்ப்பு வந்திருக்கு. நீங்க மூணுபேரும் தனித்தனியா சில ட்ரெஸ்ஸஸ் டிசைன் பண்ணனும். யாரோடது பெஸ்ட்டாக இருக்கோ அத மேனேஜ்மெண்ட்ல செலக்ட் பண்ணுவாங்க.


அது கிறிஸ்மஸ், நியூ இயர், அண்ட் பொங்கல் டைம்ல சேல்ஸ்க்கு வரும். அத இன்னும் ஒரு வாரத்துக்குள்ள நீங்க தயார் செய்யவேண்டியிருக்கும். தேவையான டீட்டைல்ஸ மணி கிட்ட கேட்டுக்கோங்க. க்ளாத்ஸ், மத்த தேவையான மெடீரியல்ஸ் எல்லாத்தையும் கூட அவர் கிட்டயே சொல்லி வாங்கிக்கோங்க!” என்று விளக்கமாகச் சொல்லிமுடித்தார் காஞ்சனா.


‘உண்மையிலேயே தமது திறமையை நிரூபிக்க நல்ல வாய்ப்பு’ என்று எண்ணி மூன்று பெண்களுமே மகிழ்ச்சியுடன் நன்றி கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர்.


அடுத்து வந்த நாட்களில் மல்லி ஆடை வடிவமைப்பிற்கான வேலைகளில் மூழ்கிவிட, அவளுக்கு வேறு எதைப்பற்றியும் யோசிக்க நேரமில்லாமல் போனது.


அவர்கள் வடிவமைத்த உடைகளின் மாடல்கள் மேலிடத்திற்கு அனுப்பப்பட, மல்லி வடிவமைத்திருந்த அழகிய சிறிய மணிகள் பதித்த மயில்போல் எம்பிராய்டரி செய்யப்பட்ட, பெண் குழந்தைகளுக்கான பாவாடையும், அதற்கேற்ற சட்டையும் தேர்வு செய்யப்பட்டிருந்தது.


அடுத்த சில நாட்களிலேயே ஆதி சில்க்ஸின் மற்ற புதிய ஆடை கலெக்ஷன்களுடன் அதுவும் விற்பனைக்கு வந்துவிட்டது.