top of page

TIK-11

இதயம்-11

ஆதியின் எண்ணிற்கா அழைத்திருந்தாள்? இது எப்படி சாத்தியம்? சரியாக அவனுடைய எண்ணை எப்படி அழைத்திருக்க முடியும்? அதுவும் அவனுடைய தனிப்பட்ட எண் வேறு! குழப்பத்தின் உச்சத்திற்கேச் சென்றாள் மல்லி. பிறகு நிகழ்காலம் அவளுக்கு உறைக்க, இந்தத் திருமணத்தை நிறுத்துமாறு ஆதியிடமே கேட்டுப் பார்க்கலாமா என யோசித்தவள், அதை நிறைவேற்றும் பொருட்டு வாட்ஸாப்பிலிருந்து அவனது எண்ணைத் தேட, அதிலிருந்த முகப்புப் படத்தைப் பார்த்து அதிர்ந்தாள் மல்லி. அது அவளுடைய படம். அன்றைய பார்ட்டியில் நீச்சல் குளம் அருகில் அவள் உட்கார்ந்திருந்த பொழுது அத்தனை அழகாய் ரசனையுடன் எடுக்கப்பட்டிருந்து. இத்தனை தொடர் அதிர்ச்சிகளை அவள் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. தன்னை சமாளித்துக் கொண்டு அவனுக்கு வாய்ஸ் கால் ஒன்றை செய்தாள் மல்லி. எதிரில் ஹலோ என்ற அவனது குரல் மிகவும் பரிச்சயமானதாகத்தான் தெரிந்தது மல்லிக்கு. ஆனால் இருந்த குழப்பத்தில், அவள் அதை ஆராய முற்படவில்லை. “ஹலோ! நீங்க ஆதி சார் தானே?” மல்லி. “ம்” ஆதி. “நான் மல்லி பேசறேன்” மல்லி. “ம்” ஆதி “நான் உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.” மல்லி. “ம்” ஆதி. “எனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லை” மல்லி. “ஏன்” வேகமாக வந்தது ஆதியின் குரல். “காரணமெல்லாம் என்னால் சொல்ல முடியாது. ஆனால் எனக்குக் கல்யாணத்தில் விருப்பமில்லை” என மல்லி சொல்லிக்கொண்டிருக்கும் சமயம் எதிர் முனையில் எதோ அரவம் கேட்க, “ஜஸ்ட் எ மினிட்” என்று கூறி விட்டு மல்லியிடம், “நான் உன்னிடம் பிறகு பேசறேன்” எனக் கட் செய்துவிட்டான் ஆதி. சிறிது நிமிடத்திற்கெல்லாம், “சாரி கொஞ்சம் வேலை வந்துவிட்டது. இப்பொழுது என்ன காரணம் என்று சொல்” என குறுந்தகவலாக அனுப்பியிருந்தான் அவன். “இல்லை காரணமெல்லாம் என்னால சொல்ல முடியாது. தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்” என மல்லி பதில் தகவல் அனுப்ப, “என்னால் திருமணத்தை நிறுத்தவெல்லாம் முடியாது. வேண்டுமானால் உன் பெற்றோரிடம் பேசி நீயே நிறுத்திக் கொள். இனி இது சம்பந்தமாக என்னைத் தொடர்பு கொள்ளாதே!” எனக் கொஞ்சமும் இரக்கமின்றி பதில் அனுப்பியிருந்தான் ஆதி. ஓய்ந்துதான் போனாள் மல்லி. அவனிடம் பேசி எந்தப் பயனும் இல்லை என உணர்ந்தவள் அந்த உரையாடலைத் தொடர விரும்பவில்லை அப்படியே நிறுத்திவிட்டாள். அப்படியே இரண்டு நாட்கள் செல்ல திருமண வேலைகளைத் தொடங்கியிருந்தார் பரிமளா. “மல்லி! அண்ணனும் அண்ணியும் உன்னைப் பார்க்க நாளை வரட்டுமா என்று கேட்டாங்க. நான் வரச் சொல்லிட்டேன். நீ கொஞ்சம் தயாராக இரும்மா” என பரிமளா அவளிடம் சொல்ல, “நான் கல்யாணமே வேண்டாம்னு சொல்றேன், நீங்க என்னம்மா இப்படி செய்யறீங்க” என மல்லியின் வார்த்தைகள் கொஞ்சம் சூடாக வரவும், “என்ன மல்லி இப்படி சொல்ற. அம்மா உன் நல்லதுக்குத்தானே எல்லாமே செய்யறேன்? நீ என்னவோ பயத்தில்தான் இப்படியெல்லாம் பேசறேன்னு நினைச்சா, நீ பேசுவதைப் பார்த்தால் அப்படி இல்லயோன்னு தோணுதே உனக்கு என்னடி பிரச்சினை” என்று அவர் பதறிப் போனார். பின்பு நிதானமாக, “அப்பாவின் உடல்நிலை சரியில்லை மல்லி. தம்பியும் சின்னவன். உன்னை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்துவிட்டால் எங்களாலும் கொஞ்சம் நிம்மதியுடன் அவனைக் கவனிக்க முடியும். நீதான் கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கணும்மா. நாங்களும் உனக்கு இப்பவே கல்யாணம் செய்யணும்னு முயற்சியெல்லம் செய்யலயே. ஆனால் தானாகவே நல்ல இடம் வரும்பொழுது, அதை விட எனக்கு மனசு இல்லை. அதுவும் நல்ல மனிதர்கள் கிடைப்பது மிகவும் கடினம். நீ இதற்கு மேல் ஏதாவது தடங்கல் சொன்னால், நான் உன் முகத்திலேயே விழிக்க மாட்டேன். அப்பாவும் இப்பொழுதுதான் ரொம்ப நாளைக்குப் பிறகு சந்தோஷமா இருக்கார். தயவு செய்து அதைக் கெடுத்துடாத” நீளமாகப் பேசி முடித்தார் பரிமளா. அன்னையின் கூற்றில் இருந்த நியாயம் அவள் மனத்தைச் சுட, மறு வார்த்தை பேசவில்லை மல்லி. திருமண ஏற்பாடுகளையும் தடுக்கவில்லை. தேவாவைப் பற்றி ஆதியிடமே சொல்லத் துணிவும் இல்லை மல்லிக்கு. பிறகு தேவாவிற்கு எதாவது பிரச்சினை ஆகிவிடுமோ எனப் பயந்தாள். திருமணத்திற்கு முன்பாக ஆதியை நேரில் சந்திக்க நேர்ந்தால் கடைசி வாய்ப்பாக அவனிடம் ஒருமுறை பேசிப் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தாள் மல்லி! மறுநாள் வரதனும் லட்சுமியும் அவர்களுடைய வீட்டிற்கு வந்திருந்தனர். மல்லியும் எந்த மறுப்பும் சொல்லாமல் எளிய பட்டுப்புடவையில் தயாராகி அவர்களை வரவேற்று சகஜமாகவே பேசினாள். மருமகளைப் பார்த்து மனம் நிறைந்தார் லட்சுமி. வரதனுக்கும் மகிழ்ச்சியே. மகளது இடத்தை நிரப்ப இப்படி ஒரு மருமகளுக்காகக்தானே காத்திருந்தனர் அந்தத் தம்பதியர். பிறகு இரு வீட்டார் அழைப்பு என சம்பிரதாய முறைப்படி, இவர்கள் சொந்தத்தில் எல்லோர் பெயரையும் கேட்டுத் தெரிந்து கொண்டு எதுவும் விட்டுப்போகாமல் அச்சடிக்கப் பட்டிருந்த எளிமையான மஞ்சள் நிற திருமணப் பத்திரிகைகளையும், மிக ஆடம்பரமாக அச்சடிக்கப் பட்டிருந்த வரவேற்பிற்கானப் பத்திரிகைகளையும் அவர்களிடம் கொடுத்துவிட்டுச் சென்றனர். ஜெகன் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு எந்த ஒரு சிரமத்தையும் அவர்களுக்குக் கொடுக்கவில்லை ஆதியின் குடும்பத்தினர். மேலும் பத்திரிக்கை கொடுக்க, மற்ற திருமண வேலைகளுக்கு என எந்த நேரத்திலும் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக ஓட்டுநருடன் கூடிய கார் ஒன்றை இவர்களின் உபயோகத்திற்கென அனுப்பியிருந்தார் லட்சுமி. எவ்வளவு மறுத்தும், “ஜெகன் அண்ணனுக்கு இந்த நேரத்தில் அதிக அலைச்சல் வேண்டாம் அண்ணி. தயங்காமல் இந்தக் காரை பயன்படுத்திக்கோங்க” என முடித்துவிட்டார் அவர். திருமணத்திற்கு வேறு சில நாட்களே இருந்ததால் அவர்களாலும் மறுக்க முடியவில்லை. வங்கியில் இருந்த மொத்தத் தொகையையும்துடைத்து, மகளுக்கும் மருமகனுக்கும் என நகைகள் வாங்கினார் பரிமளா. மல்லி எவ்வளவு மறுத்தும் அவர் கேட்கவில்லை. “பைக் வாங்கிக் கொடுக்கலாம் என்றால் மாப்பிள்ளை பைக் ஓட்டுவதே இல்லையாம். அதனால் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. மற்ற சீரெல்லாம் அவர்களுக்குத் தகுந்தாற்போல் நம்மால் செய்ய முடியுமாடி மல்லி! முடிந்ததைச் செய்யறோம் தடுக்காதே” என்று சொல்லிவிட்டார் அவர். சீர்வரிசை பாத்திரங்களெல்லாம், முன்பே சிறிது சிறிதாக வாங்கி ஊரிலேயே பத்திரப்படுத்தி வைத்திருந்தார் பரிமளா. அவற்றையெல்லாம் எடுத்து, திருமணத்திற்காகத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். பள்ளி விடுமுறை சமயம் என்பதால் பரிமளாவிற்கும் நிம்மதியாகத் திருமண வேலைகளில் ஈடுபட முடிந்தது. பத்திரிகை கொடுக்க பூவரசந்தாங்கலுக்கும், பரிமளாவின் ஊருக்கும் சென்று வந்தனர். அவர்கள் பயந்ததுபோல் பரிமளாவின் பெரியப்பா குடும்பத்திலிருந்து எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை. மல்லியை தனது மகனுக்கு கொடுக்காத ஆதங்கத்தில், கொஞ்சம் முணுமுணுத்ததோடு நிறுத்திக் கொண்டார் அவர். ஆதியின் குடும்பப் பின்னணிதான் காரணம் என்பது நன்றாகவே புரிந்தது. மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயிருந்தனர் மல்லியின் குடும்பத்தினர். *** அனைத்தையுமே கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள் மல்லி. ஒவ்வொரு செயலிலும் ஆதியின் குடும்பத்தினர் காண்பிக்கும் அக்கறை அவளைக் குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தியது. ஊர் உலகத்தில் பெண்களுக்கா பஞ்சம்? அப்படி என்ன இவள் அவர்களுக்கு, அவ்வளவு முக்கியம்? இது அனைத்திற்கும் காரணமான ஆதியின் மேல் அவ்வளவு கோபம் வந்தது மல்லிக்கு. அவன் தன்னை தேர்ந்தெடுத்தற்கான காரணம் என்னவாக இருக்கும்? அனைவரும் சொல்வது போல் இவள் அழகாகத்தான் இருக்கிறாள் என்று வைத்துக் கொண்டாலும், இவளை விட அழகான பெண்கள் அதுவும் அவர்கள் தகுதிக்கு ஏற்றாற்போல் எத்தனையோ பேர் இருப்பார்களே? தேவாவை சந்திக்காமல் இருந்திருந்தால் கூட அவளால் இந்தத் திருமணத்திற்கு முழு மனதுடன் சம்மதித்திருக்க முடியாது. காரணம் அம்மு! அதுவும் இப்பொழுது அவள் மனம் முழுவதிலும் தேவா நிறைந்திருக்க, அவளால் நிச்சயமாக ஆதியை மணக்கவே முடியாது. இதையெல்லாம் அவனிடம் விளக்கவும் முடியாது. தலையே வெடித்துவிடும் போல் இருந்தது மல்லிக்கு. ஜெகனும் பரிமளாவும் அவளது காதுகளில் ரத்தம் வரும் அளவிற்கு அவன் புகழ் பாடிக் கொண்டிருந்தனர். அப்படி என்ன உலகத்தில் இல்லாத அதிசய மனிதன் இவன்!? அப்பொழுதுதான் அவளுக்கு நினைவில் வந்தது, இதுவரை ஆதியினுடைய புகைப் படத்தை அவள் பார்க்கவே இல்லை என்பது. உடனே அங்கே மேசையின் மேல் அவள் தூக்கி எறிந்திருந்த அந்தக் கவரை எடுத்துப் பிரித்து, அதிலிருந்த புகைப் படத்தைப் பார்த்து உறைந்தாள் மரகதவல்லி. தேவாவாக அவளது மனதையும், ஆதியாக அவளது எண்ணங்களையும் அலைக்கழித்துக் கொண்டிருந்தவன், அவளது அத்தனைக் கேள்விகளுக்கும் ஒரே விடையாக, அதில் புன்னகைத்துக் கொண்டிருந்தான் தேவாதிராஜனாக! *** ‘அவளுடைய தேவாவா அது!’ நம்பவே முடியவில்லை மல்லியால். “நீ என்னை இதுக்கு முன்னாடி பா..ர்த்திருக்கியா? குட் ஜோக்”. “நான் வேறு ஆதி வேறு இல்லை”. “ஹேய் என்னைப்பற்றி உனக்குத் தெரியாது… ஐயா வேர்ல்ட் பேமஸ்மா” “உன்னிடம் உண்மையை மட்டும்தான் சொல்வேன் மல்லி!” அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் நினைவில் வந்தது அவளுக்கு. ராயல் அமிர்தாசில் அவன் கரங்களில் மயங்கியதும், அதற்கு அடுத்த நாளே அங்கே ஏற்பட்டிருந்த மாற்றங்களுக்கான காரணங்களும் புரிந்தது மல்லிக்கு. “அப்படியானால் அங்கே விபரீதமாகத்தான் ஏதோ நடந்திருக்க வேண்டும்” உணர்ந்தாள் அவள். “ஒருவேளைத் தேவா மட்டும், அன்று அங்கே இல்லை என்றால்?” இப்பொழுது நினைத்தாலும் உள்ளுக்குள்ளே நடுங்கியது அவளுக்கு. அவளுக்காக அவன் பார்த்துப் பார்த்து செய்யும் ஒவ்வொன்றையும் நினைக்கும் பொழுது அவனை நினைத்து கர்வம் எழுந்தது அவளுக்குள். அவன் சொன்னது போல் அவளிடம் உண்மையை மட்டுமே அவன் பேசியிருந்தது அவளுக்குப் புரிந்தது. ஆதி வேறு ஒருவனாக அவள் மனத்தில் இருந்தபொழுது அவளுக்கு எழுந்த குற்ற உணர்வு மொத்தமாக மறைந்து போனது. ஆனால் திருமணத்தைப் பற்றிய நினைவு வந்தவுடன், அடுத்த நொடியே அத்தனையும் மாறிப்போய் கலக்கத்தைத் தத்தெடுத்தது அவள் மனது. காரணம், அம்மு சொல்லாமல் அவளால் தேவாவை மணக்க முடியாது. பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாய் தேவாவை அழைத்தாள் மல்லி. அவன் அவளது அழைப்பை ஏற்கவில்லை. ஆனால், ‘இரண்டு நாட்களில் அங்கே வருகிறேன் நேரில் பேசிக்கொள்ளலாம்’ என்று குறுந்தகவல் அனுப்பியிருந்தான். ‘நான் உங்களுக்காகக் காத்திருக்கிறேன் தேவா!’ என அவள் பதில் அனுப்ப, ‘இப்பதான் போட்டோவைப் பார்த்தியா?’ என்ற கேள்வியை பதிலுக்கு அனுப்பியிருந்தான் அவளின் தேவாவாகிய ஆதி. ‘இப்பொழுதுதான் தேவா என்ற தேவாதிராஜனைப் பார்த்தேன்!’ என அவள் பதிலுரைக்க, ‘ஓகே! நான் இங்கே கொஞ்சம் பிஸி நேரில் பார்க்கலாம்?’ என முடித்துக் கொண்டான் அவன். பதிலுக்கு, ஒரு புன்னகைமுகத்தை அனுப்பிவிட்டு அவனுடைய வருகைக்காக காத்திருந்தாள் மல்லி. *** மல்லியைப் பார்க்க அவர்கள் வீட்டிற்கு வந்தாள் சுமா. எப்பொழுதுமே சல்வாரிலேயே அவளைப் பார்த்திருக்கிறாள் மல்லி. ஆனால் அன்று எளிமையான ஒப்பனையுடன் திருத்தமாக ஒரு காட்டன் புடவையை உடுத்தி இருந்தவளின் தோற்றம் வித்தியாசமாக இருந்தது. “மல்லி! உங்களால் இப்பொழுது ஓரளவிற்கு சாதாரணமாக நடக்க முடிகிறதுதானே?” என சுமா கேட்க, “ஆமாம் சுமா! கட்டு பிரிச்சுட்டாங்களே நன்றாகவே நடக்க முடியும்.” என மல்லி பதிலுரைக்கவும், பரிமளாவிடம் சென்ற சுமா, “அத்தை! மல்லியை நான் என்னுடன் ஹோட்டலுக்கு அழைச்சுட்டு போறேன். இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் இருப்பதால் அங்கே இருக்கும் 'ஸ்பா'விலேயே, மல்லியை ஃபேசியல் செய்துக்க சொல்லி லட்சுமி அம்மா சொன்னாங்க” என அவள் சொல்ல, ‘ஐயோ! அவளை எப்படி அங்கே அனுப்புவது’ என பரிமளா சற்று யோசிக்கவும், அதற்குள் அவரைக் கைப்பேசியில் அழைத்து, லட்சுமியும் சுமா சொன்னதையே சொல்ல, “இல்லை அண்ணி! உங்களுக்கே தெரிந்திருக்கும் அந்த இடத்திற்கு மல்லி எப்பொழுது போனாலும் ஏதாவது பிரச்சனையில் மாட்டிக்கிறாளே. அதனாலதான் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு” என பரிமளா தயங்க, “ஒரு பிரச்சனையும் வராது அண்ணி. முன்பு நடந்ததெல்லாம் எதோ எதிர் பாராமல் நடந்ததுதான். இனிமேல் அவளுக்கு எந்த கெடுதலும் வர ஆதி விடமாட்டான்” என உறுதியாகச் சொன்னவர் தொடர்ந்து, “நீங்க கவலையே படாதீங்க; ஒரு பிரச்சினையும் வராது” என முடிக்க, அதற்குமேல் மறுக்க முடியாமல், மல்லியை சுமாவோடு அனுப்பிவைத்தார் பரிமளா, ராயல் அமிர்தாசுக்கு. மல்லி காரிலிந்து இறங்கி உள்ளே செல்லவும் அதே நேரம் சரியாக அங்கே வந்து நின்றது வெள்ளை நிற ஆடி கார் ஒன்று. அதிலிருந்து இறங்கிய ஓட்டுநர் மிகவும் பணிவுடன் அதன் கதவைத் திறந்துவிட, கம்பீரமாக இறங்கி, வேக எட்டுகளுடன் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான் தேவா?! ஆதி?! ராஜன்!? அவனைத் தொடர்ந்து, அவனது வேகத்திற்கு ஈடுகொடுத்தவாறு வந்துகொண்டிருந்தான் விஜித். அவன் வந்த விதத்தைப் பார்க்கும்போதே மல்லிக்குப் புரிந்தது, அந்த விஜித் ஆதியின் பிரத்தியேக பாதுகாவலன் என்று. அந்த ஓட்டுனரை எங்கோ பார்த்தது போல் தோன்றவும், மின்னல் வெட்டியதுபோல் அவர் முகம் நினைவில் வந்தது மல்லிக்கு. அன்று அந்த வீராவை தவிர்க்க நினைத்து, அவள் திரும்பும் பொழுது ஏதோ ஒரு காரில் அவள் இடித்துக் கொண்டாளே, அந்த வண்டியை ஓட்டி வந்தவர்தான் இவர். அன்று அவர் பார்த்த அந்தக் கோபப் பார்வை இன்றும் அவள் நினைவில் அப்படியே இருக்கிறது. அப்படியென்றால் அன்று அந்தக் காரின் உள்ளே இருந்தது அந்த வீராவின் கையை உடைத்து, எல்லாம் இந்த தேவாதிராஜன்தானா!? தேவாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தாள் மரகதவல்லி அவனை நோக்கி வேகமாக எய்வதற்குத் தயாராக கேள்விக் கணைகளுடன்.

1 comment
© KPN NOVELS COPY PROTECT
bottom of page