TIK - 1
திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடுத்து விடு!
இதயம்-1
மனம் விரும்பிச்செய்யும் எந்தச் செயலும் மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுக்கும்.
அப்படித்தான் தன் விருப்பப்படி டெக்ஸ்டைல் டிசைனிங் முடித்து உலக அளவில் கொடிகட்டிப் பறக்கும் ஆதி டெக்ஸ்டைல்ஸின் டிசைனிங் பிரிவில் வேலைக் கிடைத்து சம்பளத்துடன் கூடிய ஆறு மாத பயிற்சியில் இருக்கிறாள் நமது நாயகி மல்லி என்கிற மரகதவல்லி.
இருபத்திரண்டு வயதில், அழகிய கொடிபோன்ற தோற்றத்தில், எலுமிச்சை நிறத்தில், துறுதுறு விழிகளுடன் ஒருமுறை பார்த்தால் மறுமுறை பார்க்கத்தூண்டும் அழகி அவள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பூவரசந்தாங்கல் எனும் சிறிய கிராமம் அவர்களுடையது.
அவளுடைய அம்மா பரிமளா, அப்பா ஜகன்நாதன், செல்லத் தம்பி தீபன். ஜகன் ஒரு கைத்தறி பட்டு நெசவாளி. சிறிய அளவில் விவசாயமும் செய்து வந்தார்.
பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி வசதி வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தேவைக்கு வருமானமும், நிறைவான எளியக் கிராமத்து வாழ்க்கையுமாகச் சென்றது அவர்களது நாட்கள்.
சிறந்த கல்வி வேண்டி மகளை ஹாஸ்டலில் சேர்த்திருந்தார் ஜகன். அவளின் தாத்தா பாட்டி இருந்தபொழுதில் மூன்றாக இருந்த பட்டுத் தறி இறுதியில் குறைந்து ஒன்று என ஆகிப்போனது.
ஒரு கட்டத்தில் கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டு, தொடர்ந்து தறியை ஓட்ட முடியாமல் போய் அதுவும் இல்லாமல் போக, மன உளைச்சலால் ஜகனை நோயில் விழவைத்தது.
ஸ்ட்ரோக் ஏற்பட்டு அவரது வலது கை செயலிழந்து போக பேச்சும் சற்று குளறலாகிப்போனது.
அதன் பிறகு, மருத்துவ செலவுக்காக, கடன்களை அடைக்கவென அவர்களுடைய வீட்டையும், சிறிய அளவிலான விளைநிலத்தையும் விற்றுவிட்டு, ஜகனுடைய மருத்துவ வசதிக்காகச் சென்னை புறநகர்ப் பகுதியில் ஒரே அறை கொண்ட ஃப்ளாட்டில் வாடகைக்குக் குடியேறினர் மல்லி குடும்பத்தினர்.
பரிமளாவும் பி. எட் முடித்திருந்ததால், அங்கேயே ஒரு தனியார் பள்ளியில் வேலைக் கிடைத்துவிட, ஜகனும் வீட்டில் வெறுமையாக இருக்கப்பிடிக்காமல் தெரிந்தவர் ஒருவர் மூலம், அருகில் உள்ள ஒரு நூலகத்தில் வேலைக்குச் செல்லத் தொடங்கியிருந்தார்.
இதற்கிடையில் மல்லியை ஹாஸ்டல் படிப்பை நிருத்தி, வீட்டிலிருந்தே படிக்க வைத்தனர். அவளும் படித்து முடித்து இந்த வேலையிலும் சேர்ந்து விட்டாள்.
தீபன் பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கிறான். அழகான சிறு கூடு போல அவள் குடும்பம். அதில் அல்லிராணியாக மல்லி.
***
இருள் பரவத்துவங்கியிருந்த மாலைநேரம் அலுவலகப் பேருந்தில் சன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த மல்லி வெளிப்பறம் வேடிக்கைபார்த்தவாறே பயணித்துக்கொண்டிருந்தாள்.
அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் தோழி சவிதா, ஏதோ சளசளத்துக்கொண்டே வரவும், பெயருக்கு, ‘ம்’, ‘ஓ’, ‘ஓஹோ’ என்றவாறு வந்தாலும் அவள் மனம் அவள் வீட்டிலேயே சுழன்றது.
பயிற்சி காலத்தில் ஒரு மாதம் முடிந்திருக்க, அன்று முதல் சம்பளம் வாங்கியிருப்பது மல்லிக்கு மன நிறைவை கொடுத்தது.
இனி ஓரளவுக்குப் பெற்றோருக்கு தோள் கொடுக்க முடியும், அதுவும் ஐந்து மாதத்தில் ட்ரைனிங் முடிந்தால் மழுமையான சம்பளமும் கணிசமாக வரும் என்று மகிழ்ந்தாலும், ‘தன் கனவு ஏன்றேனும் நிறைவேறுமா?’ என்ற அச்சமும் அவள் மனதில் சூழ்ந்தது.
கூடவே அவள் மனக்கண்ணில் வந்து மறைந்தாள் அம்மு. ‘அம்மு எங்கடீ இருக்க? எப்பதான்டீ நான் உன்னை பார்க்ப்போறேன்?’ என ஓடிய எண்ண ஓட்டம், ‘கிரீச்’ என்ற பஸ்ஸின் சடன் பிரேக்கில் கலைய, அவள் இறங்க வேண்டிய இடமும் வந்திருக்க, சவிதாவிடம், கையை அசைத்து. “பை” எனக் காண்பித்துவிட்டு பேருந்திலிருந்து இறங்கினாள் மல்லி.
கண்களால் தீபனைத் தேடியவள், ‘ஐயோ இவன் இன்னும் வரலியே’ எனக் கலங்கியவாறு அவனுக்காக காத்திருந்தாள்.
அது ரயில் நிலையம், பேருந்து நிருத்தம் என மக்கள் கூட்டம் நிறைந்த இடம்தான் எனினும் அங்கிருந்து அவள் தனியாக வீடு போய் சேருவதென்றால் கொஞ்சம் பதட்டம் சூழ்ந்துகொள்ளும்.
காரணம், வழியில் இருக்கும் அரசு மதுபானக்கடையும், தினமும் அதன் அருகே நின்று பல்லை இளிக்கும் வீரா என்பவனும், அவனுடைய அல்லக்கைகளும்.