top of page

TIK - 4

இதயம்-4


கை முட்டியில் அடிப்பட்டிருந்ததால் முந்தைய இரவு முழுதும் வலியில் துடித்துப்போயிருந்தாள் மல்லி.


நல்ல அழகான குடும்பம் அவளுக்கு இருக்கிறதுதான். ஆனால் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அவளது அப்பாவின் நிலையோ பரிதாபமாகிப்போனது. தம்பியும் மிகவும் சிறியவன்.


அம்மாவிடம் கூட நடந்தது எதையும் சொல்லவில்லை மல்லி. ஏற்கனவே அப்பாவின் உடல்நிலையில் ஓரளவிற்குமேல் எந்த முன்னேற்றமும் இல்லை என்ற கவலையில் இருப்பவர், இதுவும் தெரிந்தால் மிகவும் வருந்துவார்.


இது போன்ற பிரச்சினையைச் சொன்னால் அவருடைய முதல் நடவடிக்கை, இருப்பதையெல்லாம் திரட்டி மகளுக்குத் திருமணம் செய்துவிட வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.


குறைந்தபட்ச ரொக்கம், நகை, சீர் செனத்தி, மற்ற பொருட்கள் என்று நிறையச் செலவு செய்ய வேண்டி வரும். மேலும் அவர்கள் வழக்கத்தில் மாப்பிள்ளைக்கு என்று பைக் வேறு எதிர்பார்ப்பார்கள். மொத்தத்தில் தீபனின் படிப்பிற்கு உலை வைப்பது போல் ஆகிவிடும்.


தீபன் ‘நீட்’ தேர்விற்காக முயற்சித்தால் கட்டாயம் மருத்துவப் படிப்பிற்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று சொல்வதற்குத்தான் அவனுடைய வகுப்பு ஆசிரியர் அன்று அவளைப் பள்ளிக்கு அழைத்ததே. அதோடு நிறுத்தாமல், தனிப்பட்ட முறையில் அவரது நண்பர் ஒருவர் நடத்தும் பயிற்சி வகுப்பில், குறைந்த கட்டணத்தில், அவன் சேரவும் ஏற்பாடு செய்திருந்தார். பள்ளி நேரம் முடிந்தபின் அந்த வகுப்புகளுக்கும் போகத் தொடங்கியிருந்தான் தீபன்.


ஆக வலியுடன் இந்த பிரச்சனையையும் பொறுத்துக்கொண்டாள்.


காலை எழும் பொழுது வலி கொஞ்சம் குறைந்திருந்தது. விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் தனியாக இருக்கவும் அவளுக்கு மனமில்லை. எனவே அலுவலகம் கிளம்பிவிட்டாள்.


ஏனோ தேவாவைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவள் மனம் அலைபாயத்தொடங்கி விடுகிறது. ‘வேண்டாம்! அவனிடமிருந்து விலகியே இரு அதுதான் உன் குடும்பத்துக்கு நல்லது’ என்ற அறிவின் கட்டளையை அவளால் புறந்தள்ள முடியவில்லை.


அவனது அக்கறையான செயல் ஒவ்வொன்றும் அவன் பால் அவளை ஈர்ப்பதைத் தடுக்க முடியாமல்தான் அவனிடம் அவள் அப்படி எடுத்தெறிந்து பேசியதே.


அவன் அவளுக்காக வைத்திருந்த வலி நிவாரணி அவள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.


மாலை வீட்டிற்குக் கிளம்பும் முன் தீபனுக்கு, “உன்னால ஒரு ஐந்து நிமிடம் முன்னதாகவே வந்து வெயிட் பண்ண முடியுமா?” என்று குறுந்தகவல் அனுப்பினாள்.


“அக்கா! க்ளாஸ்ல இருக்கேன் சீக்கிரம் வர முயற்சி செய்யறேன். முன்ன பின்ன ஆனாலும் வெயிட் பண்ணு ப்ளீஸ்!” என்று அவனிடமிருந்து பதில் வந்தது.


முதல் நாள் நடந்த நிகழ்வு அவளை மிகவும் பாதித்திருக்கவே, ‘மறுபடியும் வந்து அவன் ஏதாவது தொந்தரவு செய்தால் என்ன செய்வது?’ என்று எண்ணியவளாய் தன் கரங்களால் தலையை தாங்கிப் பிடித்தவாறு சிறிது நேரம் உட்கார்ந்திருந்தாள் மல்லி.


பிறகு பேருந்திற்கான நேரமாகிவிடவே, அங்கிருந்து கிளம்பிச்சென்றாள். ஆனால் அங்கே நிலைமையோ தலை கீழாக மாறியிருந்தது!


அனைத்தையும் நினைத்தவாறே, குழப்பத்துடனேயே வீடு வந்து சேர்ந்திருந்தாள் மல்லி.


‘இதே மாதிரியே போச்சு நமக்கும் பைத்தியம்தான் பிடிக்கும். யார்ரா அவன் இந்த வீராவோட கைய இப்படி ஓடிச்சு வச்சிருக்கான்? அவன் நேத்து பேசின பேச்சுக்கு இன்னைக்கு இப்படி பம்முறான்? ஐயோ!’ என மனதிற்குள்ளேயே புலம்ப மட்டுமே அவளால் முடிந்தது.


‘ஆனால் இனி அவன் அவளை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யமாட்டான்’ என்கிற எண்ணத்தில் சற்று நிம்மதியாக உணர்ந்தாள் மல்லி.


அடுத்த நாள் அலுவலகத்திற்குள் நுழையும்போதே புதிய மெல்லிய நறுமணம் இதமாக அவளை வரவேற்றது. சிறிது நாட்களாகவே அவளுக்கு அலர்ஜி ஏற்படுத்தும் அந்த ஸ்பிரே மாற்றப்பட்டிருந்தது. எப்பொழுதிலிருந்து என்றுதான் அவள் கவனிக்கவில்லை.


மலர்ந்த முகத்துடன் உள்ளே நுழைந்தவளைக் கண்ட தேவா அவளை அழைத்து, “உன் கை வலி தலை வலி எல்லாம் சரியா போச்சு போலிருக்கே” என்று உணர்ச்சியற்ற குரலில் கேட்க,


“தேவா சார்” என்று ஆரம்பித்தவளை, “மிஸ் மரகத...வல்லி! நீங்க என்ன சொல்லுவீங்கன்னு தெரியும். இனி நாம நம்ம வேலைய மட்டுமே பார்க்கலாம், ஓகே” என்றவனின் வார்த்தைகள் அவளை ஊசி போல் குத்தியது.


“இனி உங்களுக்கான வொர்க்ஸ சுமாயா கிட்டயே ரிப்போர்ட் பண்ணிடுங்க” என்றதோடு முடித்துக்கொண்டான் .


அன்றுமுதல் அவன் மல்லியிடம் நேரடியாக எந்த வேலையும் கொடுப்பதில்லை. சுமாயா மூலமாகேவே அவளை தொடர்பு கொண்டான். மதிய உணவு அவர்களுடன் உண்பதையும் கூட தவிர்த்தான். மல்லிக்கு அவனைப் பார்ப்பதே அரிதாகிப்போனது.


அவனுடைய இந்த பாராமுகம் நல்லதுக்கே என்று அவளுக்குத் தோன்றினாலும் அவளை மிகவும் பாதிக்கவே செய்தது. அவள் எவ்வாறு உணர்கிறாள் என்று அவளுக்கே புரியவில்லை.


உணவு இடைவேளையில் பெண்கள் நால்வரும் அமர்ந்து சாப்பிடும் நேரம் சுமாயா, “மல்லி! உங்க ஏரியால பிளாட் ஏதாவது காலியா இருக்கா? எனக்கும் என் ஹஸ்பண்ட்க்கும் வேலைக்குப் போக அந்த ஏரியாத்தான் வசதியா இருக்கும்” என்று கேட்க,


“ஹேய்! எங்க பக்கத்து பிளாட்டே, ரொம்ப நாளா காலியாகத்தான்பா இருக்கு நீங்க வேணா வந்து பார்க்கறீங்களா?” என்று மல்லி உற்சாகமாகப் பதில் சொல்லவும், அதற்குள் சவிதா கொஞ்சம் நக்கலாக, “அது ஒரு மிடில் கிளாஸ் அபார்ட்மெண்ட் ஆச்சே” என்று இடைப்புகுந்தாள்.


மேகலா அதற்கு ஒரு படி மேலே போய், “ஹேய் ஆமாம்பா அது உனக்கு செட் ஆகாது. இன்னும் பெட்டரா வேற இடம் பாருப்பா” என்று சொல்ல, மல்லியின் முகம் வாடிப்போனது.


ஆனால் சுமாயாவோ, “மல்லி, எப்பவாவது என் சிஸ்டர் இன்லா வந்து தங்குவாங்க. டபிள் பெட் ரூமா இருந்தா போதும். அந்த ஏரியாதான் எனக்கு கம்பர்டபிள். இன்னைக்கு வேல முடிஞ்சு நான் உன் கூடவே வந்தா, அந்த பிளாட்ட பார்க்க முடியுமா?” என்று முடிவாய்க் கேட்க,


மல்லி அந்த வீட்டு உரிமையாளரிடம் பேசிவிட்டு, அன்றே சுமாயாவை அவளுடன் அழைத்துச் சென்றாள். சுமாயாவிற்கும் அந்த இடம் பிடித்து விடவே முன்பணமும் கொடுத்துவிட்டேச் சென்றாள் அவள்.


அடுத்த வாரத்திலேயே அங்கே சுமாயா தன் கணவருடன் குடியேறினாள்.


அவள் தினமும் அலுவலகத்திற்குப் பேருந்தில் மல்லியுடனேயே வந்து போகவே, மல்லிக்கும் தீபனை துணைக்கு அழைக்கும் தேவை இல்லாமல் போனது.


***


மல்லி சில துணிகளின் மாதிரியை வைத்துக்கொண்டு, அவற்றைப் பற்றிய தகவல்களைக் குறித்துக்கொண்டிருந்தாள். சவிதாவும், மேகலாவும் சிரித்துப் பேசியவாறே கணினியில் ஆழ்ந்திருந்தனர். அப்பொழுது அவர்கள் இருவரையும் தேவா அழைப்பதாகக் கூறிச்சென்றாள் சுமாயா.


இருவரும் போய் அவனெதிரில் நிற்க, அவன் அவர்களை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. மும்முரமாக செல்பேசியை குடைந்து கொண்டிருந்தான்.


சிறிதுப் பொறுத்துப் பார்த்த சவிதா, “சார்!” என்று அழைக்க மேலும் சில நிமிடங்கள் காக்க வைத்த பிறகே அவர்களை நோக்கியவன், “நீங்கல்லாம் வேலை செய்யத்தான் வறீங்களா, இல்ல அரட்டையடிக்கவா? ஒழுங்கா வேலை செய்யறதுன்னா செய்ங்க. இல்ல இதே ஆட்டிட்யூடோடதான் இருப்பீங்கன்னா, உங்களை பர்மனண்ட் செய்ய விடமாட்டேன்” என்று மிரட்ட, அதிர்ந்த இருவரும், “சாரி!” என்ற வார்த்தையுடன் முகம் தொங்கிப்போய் வெளியே வந்தனர் . இன்னும் ட்ரைனிங் முடிய வெகு சில நாட்களே இருக்க, அவனைப் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை அவர்கள் அவ்வளவே!


***


அன்று மாலை கொஞ்சம் சீக்கிரமாகவே கிளம்ப எண்ணியிருந்தாள் மல்லி. எனவே அனுமதி கேட்கவேண்டி கதவைத் தட்டிவிட்டு, தேவாவின் கேபினுக்குள் நுழைய, “சொல்லுங்க மிஸ். மரகத…வ…ல்…லி!” என அவள் பெயரை ஒவொவொரு எழுத்தாய் பிரித்து உச்சரித்தவாறு, “என்ன விஷயமா என்னைப் பார்க்கணும்னு சொன்னீங்க” என்று கிண்டல் இழையோட கேட்டான்.


அவள் வெளியில் காட்டிக் கொள்ளவில்லையே தவிர, ஏற்கனவே அவன் அவளைக் கொஞ்சம்கூட கண்டுகொள்ளவில்லை என்ற கடுப்பில் இருக்கிறாள்.


அதுவும் அன்று அவன் மற்ற இருவரை மட்டும் கூப்பிட்டு எதோ பேசியிருக்கிறான் என்றும் தெரியும். ஆனால் அவர்களை அவன் வறுத்து எடுத்ததெல்லாம் அவளுக்குத் தெரியாதே! அந்தப் புகைச்சல் வேறு சேர்ந்துகொள்ள, அவனது இந்த நக்கலான பேச்சு இன்னும் அவளது கோபத்தை கிளப்பினாலும், அவளால் பற்களை மட்டுமே கடிக்க முடிந்தது.


“இன்னைக்கு கொஞ்சம் வெளியில போகணும். நாலு மணிக்கு நான் கிளம்ப பர்மிஷன் வேணும்” என அவன் முகத்தைக்கூடப் பார்க்காமல் அவள் கேட்க,


அவளது அந்தச் சிறுபிள்ளைத்தனமான செய்கையில் அவனுக்கு சிரிப்புதான் வந்தது. அவளை வம்பிழுக்க எண்ணியவன், “தாராளமா நீங்கப் போகலாம். ஆனா எங்க போகப்போறீங்கனு சொன்னா பர்மிஷன் கொடுக்கலாமா வேணாமான்னு நான் முடிவுசெய்வேன்” என்று சொல்ல,


“பர்சனல்! ஸோ என்னால ரீசன்லாம் சொல்ல முடியாது. நீங்க பர்மிஷன் கொடுக்கலன்னா நான் மணிகிட்ட கேட்டுக்கறேன்.” என்று சொல்லிவிட்டு திரும்பியும் பார்க்காமல் சென்றவள், அடுத்த நிமிடம் மணியின் எதிரில் நின்றிருந்தாள்.


அவனோ கொஞ்சம் கூட யோசிக்காமல், “எதுவா இருந்தாலும் மிஸ்டர். தேவாகிட்டயே கேட்டுக்கோங்க!” என்று சொல்லிவிட, “என்ன மணி இப்படி சொல்றீங்க? நீங்க அவருக்கு சீனியர்தான? என்று கேட்டாள் மல்லி. “உங்கள பொறுத்தவரை அவர்தான் நேரடி இன்ச்சார்ஜ். ஸோ, நீங்க அவர்கிட்டதான் அனுமதி கேட்கணும்” என்று முடித்துவிட்டான் மணி.


அதற்கெல்லாம் அடங்காமல், “நான் குமார் சார்கிட்ட போய் கேட்டா?” என்ற அவளது கேள்விக்கு “இதையேதான் அவரும் சொல்வார். நீங்க தேவையில்லாமல பல்பு வாங்காதீங்க” என்று சொல்லிவிட்டான். அதற்கு மேலும் தேவாவிடம் மறுபடியும் போய் நிற்கப் பிடிக்காமல், அவளது இடத்தில் அமைதியாக வந்து உட்கார்ந்துகொண்டாள்.


சில நிமிடங்களில் அவள் அருகில் வந்து நின்றான் தேவா. சுமாயா மட்டுமே அங்கே இருந்தாள். மற்ற இருவரும் தையல் வேலை செய்யும் பகுதிக்குச் சென்றிருந்தனர்.


அவள் தலை நிமிர்ந்து அவனை பார்க்கவும், “சொல்லு எங்கே போகணும்” என்று தேவா கேட்க, அவள் அமைதியாக இருக்கவும், “நீ என்கிட்ட பதில் பேசாம இப்படி ஆட்டிட்யூட் காமிச்சா, இன்னைக்கு நேரத்தோட வீட்டுக்குக் கூட போக முடியாது! எப்படி வசதி?” என்று பெரிய குண்டை தூக்கிப் போட்டான்.


“ஐயோ!” என்றவள் நான், “ஜி ஹெச் போகப்போறேன்...” என்றாள் பட்டென. “என்ன? நீ எதுக்கு இப்ப அங்க போகணும்?” என்று அவன் அடுத்த கேள்விக்கு தாவ, எப்படியும் பதில் சொல்லாமல் விடமாட்டான் என்பது விளங்கவே, “இல்ல, நம்ம சுகுணா அக்கா இருக்காங்க இல்ல, அவங்க ஹஸ்பண்ட அங்க அட்மிட் பண்ணி இருக்காங்க. அவங்கள பார்க்கத்தான்” என்று ஒருவாறு சொல்லி முடித்தாள்.


“யாரு ந.. ம்.. ம.. சுகுணா அக்கா?” என்றவனை முறைத்தவாறே, “இங்கே ஆபீஸ் அட்டெண்டரா வேலை செய்யறாங்களே அவங்க” என்று நொடித்துக்கொண்டாள்.


“இப்பவே மணி நாலு ஆயிடுச்சு. ஸோ, நீ போகணும்னா தாராளமா போகலாம்!” என அவன் அனுமதித்த அடுத்த நொடி அங்கிருந்து பறந்திருந்தாள் மல்லி.


அவனிடம் மட்டும் ஏன் இப்படி கோவம் கொள்கிறாள்?


ஏன் இவ்வளவு உரிமை உணர்வு?


அவனை வேண்டாம் என்று விலக்கவும் முடியவில்லை! வேண்டும் என்று நெருங்கவும் முடியவில்லை!


அவன் பெயரைத் தவிர அவனைப் பற்றி வேறு எதுவுமே தெரியாது!


அவன் யார் அவளுக்கு?


அன்றைய பார்ட்டியில் அவளை காப்பாற்றியது யார்?


வீராவை அடக்கி வைத்தது யார்?


அனைத்தையும் விட,


அம்மு எங்கே இருக்கிறாள்?


எதற்கும் பதில் இல்லை அவளிடம்.


குழப்பங்கள் மட்டுமே மிஞ்ச பேருந்து நிலையத்தில் நின்றிருந்தாள் மல்லி.


அவளுக்கு அருகில் வந்து நின்றது சிவப்பு நிற ஸ்விஃப்ட் ஒன்று. உள்ளே உட்கார்ந்திருந்த தேவாவை பார்த்து வியந்தாள்.


அவளது பார்வையை படித்தவனாக, முன் பக்க ஜன்னல் கண்ணாடியை திறந்து, “உள்ள வந்து உட்காரு மல்லி” என்றவனிடம், “இல்ல, தேங்க்ஸ்... நான் பஸ்லயே போய்க்கறேன். உங்களுக்கு ஏன் வீண் சிரமம்” என்று பதில் கொடுத்தாள்.


“நான் இப்ப டீ. நகர் ஷோரூம்தான் போறேன் மல்லி. நீ என்கூட வந்தா, ஃபர்ஸ்ட் அங்கே போயிட்டு, தென் ஜி ஹெச் போகலாம். அங்க போனா அப்படியே உனக்கு பிடிச்ச, ‘சுவர்ணதாரிணி’ கலெக்க்ஷன்ஸ் சாரிசையும் பார்த்த மாதிரி இருக்கும் இல்ல” எனகேட்டான்.


அந்தப் புடவைகளைக் காணும் ஆவல் அவனுடன் போகச்சொல்லி அவளைத் தூண்ட, அவள் முகம் பூவாய் மலந்து போனது. ஆனால் அடுத்த நொடியே வாடியும் போனது.


“இந்த மாதிரிலாம் நான் யார் கூடவும் எங்கயும் போனதில்ல. இதெல்லாம் வீட்டுல ஒத்துக்க மாட்டங்க, தேவா, அம்மாகிட்ட பர்மிஷன் கேட்க கூட பயமாக இருக்கு” என்றாள் மல்லி கலவரமாக.


தேவாவோ விட்டுக்கொடுக்காமல், கதவைத் திறந்துவிட்டவாறே, “சரி உள்ளே வந்து உட்கார்ந்து, உங்க அம்மாவுக்கு போன் பண்ணு. அப்பறமா முடிவு செய்யலாம்” என்று சொல்ல, தயங்கியவாறே அவள் ஏறி உட்கார்ந்து, அவளது போனில் டயல் செய்யத் தொடங்குவதற்குள், கார் அவன் கையில் நூற்றியிறுபதில் பறக்கத் தொடங்கியிருந்தது.


பதறியவாறே போனில் பரிமளாவை அழைத்து அவள், “அம்மா!” என்று தொடங்க, எதிர் முனையில், “மல்லி, இப்பதான் நம்ம சுமா சொல்லிச்சுமா. தேவா தம்பி உன்ன ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு போறேன்னு சொன்னாராமே! நீ கூட போக மாட்டேன்னு சொல்லிட்டியாம்?


நானே, அவ்ளோ தூரம் நீ தனியா போகணுமேன்னு கவல பட்டேன். அவரை பத்தி அந்த பொண்ணு ரொம்ப நல்ல விதமா சொல்லுதுமா. உன்னை பத்திரமா அழைச்சுட்டு போவாரு. அவரோடவே போயிடு வா!” என அவளுக்கு பேச வாய்ப்பே கொடுக்காமல் பேசி முடித்தார் அவர்.


“சரிம்மா!” என்றவளுக்கு தேவாவை நினைத்து ஆயாசமாக இருந்தது. ‘என்னவெல்லாம் செய்து வைத்திருக்கிறான்! எல்லோரையும் இப்படி வளைத்து வைத்திருக்கிறானே! அலுவலகத்தில் இன்னும் யார்தான் மீதம்?’ என்று.


அவளுக்குத் தெரியாது வீட்டிலும் கூட யாரும் மீதமில்லை என்று அவள் உட்பட.

0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page