top of page

Poovum Naanum veru-Epilogue

இதழ்-36


கடைக்காப்பு அத்தியாயம்!


(Epilogue)


ஓம் தத் புருஷாய வித்மஹேI


வக்ரதுண்டாய தீமஹி தந்நோ தந்தி: ப்ரசோதயாத்II


கணீரென்று அய்யர் சொல்லும் மந்திரங்கள் வீட்டில் எதிரொலிக்க, வீடு முழுதும் ஹோம புகை பரவி இருந்தது.


அவர்களது நாமக்கல் வீட்டில் உறவுமுறை பங்காளிகள் எல்லோரையும் அழைத்து வசந்த் இறந்ததற்காக அவனுக்குச் செய்யவேண்டிய காரியங்களை முறைப்படி செய்து முடித்தவர்கள், காலம் கடந்து அதனைச் செய்தற்காக சில பரிகாரங்களுடன் கணபதி ஹோமம் செய்துகொண்டிருந்தனர்.


அவர்களுடைய அழைப்பை ஏற்று உறவினர்கள் அக்கம்பக்கத்தினர் என அனைவரும் அங்கே வந்திருக்க, அவர்களுக்கு ஏற்பட்டிருந்த அவப்பெயர் கொஞ்சம் மாறியிருப்பது எல்லோருக்கும் புரிந்தது.


அங்கே ஓரமாக நின்றுகொண்டிருந்த மாரியிடம் மித்ராவின் பார்வை செல்ல, "உனக்காக மட்டுமில்ல மித்ரா பாப்பா! தீபன் தம்பி சொன்னா கூட குழி எடுப்பேன்!' என அவர் சொல்வதுபோல் தோன்றியது அவளுக்கு!


அந்த குற்றங்களைப் பற்றிய உண்மைகள் ஊடகங்களில் வந்த பிறகு, வசந்தை தேடிக்கொண்டு அவர்கள் வீட்டிற்கே வந்தது காவல்துறை.


விசாரணையில் என்ன சொல்வது என்பது புரியாமல், வசந்தை பற்றிய உண்மைகள் தங்களுக்குத் தெரிந்துவிட்டதால் அவன் வீட்டிற்கே வராமல் எங்கோ சென்றுவிட்டதாகவும், அவனைத் தேடி மீண்டும் அழைத்துவர விரும்பாமல் அவர்கள் அப்படியே விட்டுவிட்டதாகவும் வாணி சொல்ல அதைப் பின்பற்றியே ராகவனும் பேசவும், அதை நம்பாமல் காவல்துறையினர் மேலும் மேலும் அவர்களைக் கேள்வி கேட்டு குடைய, அந்த மன உளைச்சலினால்தான் கலைவாணிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.


மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யும் சமயத்தில் மித்ரா அதை தீபனிடம் சொல்ல, அவளைக் குழப்பும் விதமாக அதைக் காதிலேயே வாங்காதது போல ஏதும் சொல்லாமல் மௌனாக இருந்துவிட்டான் அவன்.


அந்த வாரத்திலேயே சரிகாவின் வளைகாப்பிற்காக அம்மா அப்பாவுடன் வசுமித்ரா அவர்கள் வீட்டிற்குச் செல்ல வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அந்த வைபவம்.


அவர்களுடைய சொந்தத்தில் பலரும் வந்திருக்க அவர்களுடைய அழைப்பின் பெயரில் திவ்யாபாரதியும் அங்கு வந்திருந்தார்.


தீபனை பற்றிய தயக்கமெல்லாம் மறைந்து மிகவும் நிறைவான மனநிலையிலிருந்தவர் வசுமித்ராவை அங்கே காணவும் அவளை மகிழ்வுடன் அணைத்துக்கொண்டார் பாரதி.