top of page

Poovum Naanum Veru-35

இதழ்-35


மகனுடைய நிலையைக் காட்டிலும் கணவரது நிலை பயத்தைக் கொடுக்க அழுகை கூட வரவில்லை கலைவாணிக்கு!


மாரியின் உதவியுடன் ராகவனைத் தூக்கிச்சென்று அவரது கட்டிலில் படுக்க வைத்தவர், ஏதோ யோசனையயுடன் சாப்பாட்டு மேசையைப் பார்க்கவும், அவசரம் அவசரமாக மகனுடைய அறையைப் பூட்டிவிட்டு, வீதியை எட்டிப்பார்க்க, அக்கம்பக்கத்து வீடுகளிலெல்லாம் தொலைக்காட்சி அலறிக்கொண்டிருக்கவே அங்கே நடந்தவற்றை யாருமே கவனிக்கவில்லை என்பது அவருக்கு புரிந்தது.


உடனே, "வசுவை உங்க வீட்டுல கொஞ்ச நேரம் வெச்சுக்கோ மாரி! இங்க நடந்தது இப்போதைக்கு யாருக்கும் தெரிய வேண்டாம்!" என்று சொல்லிவிட்டு, மகளை வற்புறுத்தி மாரியுடன் அனுப்பிவிட்டு, போன் மூலம் மருத்துவரை வீட்டுக்கு வரவழைத்தார் வாணி.


ராகவனுக்கு ஏற்பட்டிருப்பது சாதாரண மயக்கம்தான் என்று சொல்லி அவருக்கு ஒரு ஊசியைச் செலுத்திவிட்டுப் போனார் அந்த மருத்துவர்.


சற்று நேரத்திற்கெல்லாம் மாரி அங்கே வரவும், "மாரி அந்த நிரஞ்சனா அம்மா மத்தியானம் கேசரி கொண்டுவந்து கொடுத்தாங்க! அதுல அவங்க ஏதோ விஷம் கலந்திருக்காங்கன்னு நினைக்கறேன்!


அதைச் சாப்பிட்டுத்தான் வசந்த் இறந்திருக்கணும்!" என வாணி சொல்ல,


"அட கடவுளே! அந்த ஆளுக்குத்தான் பைத்தியம் பிடிச்சிருக்கு! அந்த பொம்பளைக்குமா புத்தி பேதலிச்சு போச்சு!


இப்படி செஞ்சிருச்சே!" எனக் கொதித்த மாரி, "பொறுமையா சொல்லிட்டு இருக்கீங்க! வாங்க வாணிமா! நாம போய் போலீஸ்ல புகார் கொடுக்கலாம்!" என்று சொல்ல,


"மாரி! நீ முதல்ல பொறுமையா நான் சொல்றத கேளு!


அவன் பண்ண தப்புக்கு அவனுக்கு இந்த தண்டனை தேவைதான்! அவன் செத்தது எனக்கு தப்பாவே தெரியல!


நியாயமா இந்த விஷத்தை நானே அவனுக்கு கொடுத்திருக்கணும்! எனக்கு அவ்வளவு துணிவு இல்ல!


அந்த அப்பாவி பொண்ணு செத்தது அவங்களுக்கு எவ்வளவு வேதனையைக் கொடுத்திருக்கும்!


அதோட இல்லாம அவங்க வீட்டுக்காரு வேற இந்த நிலைமைக்கு ஆளாயிட்டாரு!


அவங்க அதிகமா பாதிக்கப்பட்டவங்க மாரி! துணிஞ்சு செஞ்சிட்டாங்க!


நாம போலீசுக்கு போனா அவங்களுக்கு பெரிய அளவுல தண்டனை கிடைக்கும்!


தப்பு பண்ணவனெல்லாம் சந்தோஷமா சுத்தும்போது பாதிக்கப்பட்டவங்க ஏன் தண்டனை அனுபவிக்கனும்!


வேண்டாம் மாரி! நிரஞ்சனா அப்பாவை காப்பாத்த அந்த அம்மா மட்டும்தான் இருக்காங்க!


நாம மேல மேல பாவத்தைச் சேர்க்க வேணாம்!" எனக் கலைவாணி கெஞ்சலாகச் சொல்ல, "என்னவோம்மா! நீங்க படிச்சவங்க! நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்!


எந்த பாவமும் செய்யாத என் புள்ளைய கொன்னவன் கிட்ட பணத்தை வாங்கிட்டு ஒரு வார்த்தை பேசாம போனான் என் புருஷன்!


அவனையே என்னால ஒண்ணும் செய்ய முடியல!


பாவம் பண்ணவனைத்தானே அந்த அம்மா கொன்னிருக்கு!


என்ன செய்யணும்னு சொல்லுங்க! நான் செய்யறேன்!" என மாரி சொல்ல,


"அவங்கள காட்டிக் கொடுக்க வேணாம்! அவ்வளவுதான்!" என முடித்தார் வாணி!


பீதியுடன் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தாள் மாரியை பின் தொடர்ந்து அங்கே வந்த மித்ரா!


ராகவன் மயக்க நிலையிலேயே இருக்கவும், "அம்மா! அய்யா இதுக்கு ஒத்துக்குவாங்களா?" என தயக்கத்துடன் மாரி கேட்க, "நான் நினைக்கிறதுக்கும் அவர் நினைக்கிறதுக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது மாரி!


அவரும் இதையேதான் சொல்லுவாரு?" என்றார் வாணி உறுதியுடன்!


ஊர் அடங்கும் வரை பொறுத்திருந்தவர்கள், நேரம் நள்ளிரவை நெருங்கவும், வீட்டிற்கு பின்னாலேயே மாரி குழியைத் தோண்ட, மூவருமாகச் சேர்ந்து வசந்துடைய உடலை அதில் கிடத்தினர்.


பின் அவன் எடுத்துச்செல்வதற்காகத் தயாராக வைத்திருந்த பொருட்களை மித்ரா அந்த குழியில் கொண்டுவந்து போட, அதை மூடினார் மாரி!


கைகால்களைச் சுத்தம் செய்துகொண்டு மூவரும் வீட்டுக்குள் நுழைய வசந்தின் அறையைச் சுத்தம் செய்ய மாரியுடன் மித்ரா சென்றுவிட, அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கமெல்லாம் மனதை உடைத்துக்கொண்டு வெளியில் கிளம்பவும் கீழே சரிந்து கதறினார் கலைவாணி!


பதறியபடி இருவரும் ஓடிவந்து அவரை தூக்க, வலிப்பு வந்ததுபோல் கை கால்கள் வெட்டி வெட்டி இழுக்கத் தொடங்கியது வாணிக்கு!


"அம்மா! என்ன ஆச்சும்மா!' என மித்ரா பதற, "பாப்பா! சீக்கிரமா அம்புலன்சுக்கு போனு போடு! சீக்கிரம்! சீக்கிரம்!" என மாரி அவளைத் துரிதப்படுத்த, கொஞ்சமும் தாமதிக்காமல் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனையில் அனுமதித்தாள் வசுமித்ரா!


தொடர் சிகிச்சைக்குப் பிறகு அவர் உயிர் பிழைத்தாலும், ஒரு பக்க கையும் காலும் செயலிழந்து போக, படுத்த படுக்கையாக ஆகிப்போனார் கலைவாணி!


***


ராகவன் அவரது உடல்நிலை காரணமாக மாரியின் உதவியுடன் வீட்டிலேயே இருக்க, மித்ரா வாணியுடன் மருத்துவமனையில் தங்கி இருந்தாள்!


அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து அவரை பார்க்க அங்கே வந்தார் திவ்யாபாரதி!


மனது குற்ற உணர்ச்சியில் தவிக்க, பாரதியின் மீது ஏற்பட்டிருந்த நம்பிக்கையின் காரணமாக, அவர் என்ன முடிவு சொன்னாலும் ஏற்றுக்கொள்வது என்ற எண்ணத்துடன், அவரிடமிருந்து எதையும் மறைக்க விரும்பாமல் நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டார் கலைவாணி!


அமைதியாக அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த பாரதி, அவர் சொல்லி முடித்த பிறகும் மவுனமாக இருக்கவும், வாணி அவரது முகத்தைப் பார்க்க, அவரது முகம் சிவந்துபோய் கண்கள் கலங்கி இருந்தது!


பின்பு, "இறந்துபோனவங்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களைக் கூட வசந்துக்கு எங்களால செய்ய முடியல; ஒரு விதத்துல நான் செய்த செயல்கள் சரின்னு தோணினாலும் ஒரு அம்மாவா நான் செய்தது மிகப்பெரிய பாவம்!


இதுக்கு இப்ப நான் அனுபவிக்கிற தண்டனை போறாது!


அந்த விஷத்தை நான்தான் கலந்து கொடுத்தேன்னு சொல்லி எனக்குத் தண்டனை வாங்கி கொடுத்துடுங்க!" என்று வாணி தழுதழுக்க, அவர் சொன்ன அனைத்தையும் ஜீரணித்துக்கொள்ள சில நிமிடங்கள் தேவைப் பட்டது பாரதிக்கு!


பின்பு தன் இயல்புக்குத் திரும்பியவர், "எப்படி? இப்ப நீங்க இருக்கற நிலைமையில போலீஸ் கேஸ் எல்லாம் சரியா வராது!


ஏற்கனவே நீங்க செய்யாத தப்புக்கும் கூட தண்டனையை அனுபவிச்சிட்டுதான் இருக்கீங்க!


நீங்க குற்றவாளி இல்லைங்க கலைவாணி! உங்களை மாதிரி இருக்கறவங்க எல்லாம் நீதிபதியாத்தான் இருக்கணும்!


கடவுள் உங்க மனசுக்கு அமைதியைக் கொடுக்கட்டும்!" என்று சொல்லவிட்டு பாரதி அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க, அவரது கையை பற்றிக்கொண்ட கலைவாணி, "அப்படினா எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் உங்களால செய்ய முடியுமா?" என்று கேட்க, "முடிஞ்சா கண்டிப்பா செய்யறேன்!" என்றார் பாரதி.


"இந்த விஷயங்கள் வேறு யாருக்கும் தெரிய வேண்டாம்!


நாங்க சொன்னதாலத்தான் தீபனுக்கு நீங்க ஹெல்ப் பண்ணீங்கன்னும் அவங்களுக்கு தெரிய வேண்டாம்!


ஏன்னா எங்களை யாரும் நம்ப மாட்டாங்க!


ஏதோ உள்நோக்கத்தோடதான் செய்யறோம்னு பேசுவாங்க!' எனக் கலை சொல்ல, அவரது கையை தட்டிக்கொடுத்தவர், "அப்படி செய்யமாட்டேன் என்கிற நம்பிக்கையை நான் உங்களுக்கு கொடுக்கறேன்!" என்று சொல்லிவிட்டு, அங்கேயே ஓரமாக நின்றுகொண்டு அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த வசுமித்ராவின் தலையை ஆதுரமாகத் தடவியவர், "இனிமேல் நீ எனக்கும் ஒரு மகதான்! உனக்கு என்ன வேணும்னாலும் இந்த அம்மாவையும் கேட்கலாம்! சரியா!" என்று பாரதி சொல்ல, சம்மதமாகத் தலையை அசைத்தாள் அவள்.


உடனே வேகமாக அங்கிருந்து சென்றார் பாரதி!


***


மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த உடனே மாரி மூலம் நிரஞ்சனாவின் அம்மாவை வீட்டிற்கு அழைத்த கலைவாணி, அவர் வரவும், "எங்களை மன்னிச்சிடுங்க நிரஞ்சனா அம்மா!


வசந்த் செய்தது கொடூரமான செயல்தான்; அதுக்காக நீங்க எங்க குடும்பம் மொத்தத்தையும் பழிவாங்க நினைச்சது ரொம்ப தப்பு!" என்று வாணி நேரடியாகச் சொல்ல, வெறிகொண்டவர் போல, "ஓ.. தெரிஞ்சு போச்சா!


அதான் உன் பிள்ளையை காப்பாத்தி எங்கயோ அனுப்பிட்டியா?!


உங்க பிள்ளை செய்த செயலுக்கு நீங்களே குடும்பத்தோட தற்கொலை செய்துகிட்டு இருக்கணும்!


அதை நீங்க செய்யல! நான் செஞ்சேன்!" என்றவர், "வசந்துதான் எங்க நிரூவோட சாவுக்கு காரணம்னு எங்களுக்கு தெரியாது!


ஏன் அவ தற்கொலைக்கு என்ன காரணம்னே தெரியாம தவிச்சிட்டு இருந்தோம்!


நிரூவோட பிறந்தநாளுக்கு ரெண்டு நாள் முன்னால சில பேர் எங்க வீட்டுக்கு வந்து, எங்க பொண்ணோட வீடியோவை எங்க கிட்ட காமிச்சு; 'போலீஸ் வந்து கேட்டால் உங்க பொண்ணு காதல் தோல்விலதான் தற்கொலை செஞ்சுக்கிட்டானு சொல்லணும்! வேற எதாவது சொன்னீங்கன்னா இந்த வீடியோவை எல்லாம் நெட்ல விட்ருவோம்'னு மிரட்டிட்டு போனாங்க!


அதை பார்த்த பிறகுதான் எனக்கு உண்மை புரிஞ்சுது!


என்னால தாங்கவே முடியல! என்னால இந்த ஜென்மத்துல உங்க குடும்பத்தை மன்னிக்க முடியாது" என நிரஞ்சனாவின் அம்மா ஆவேசமாகச் சொல்ல, அவரை அடக்கிய மாரி நடந்த அனைத்தையும் அவரிடம் சொல்லி முடித்தார்.


"இந்தாம்மா! நீயும் உன் புருஷனும் நல்லபடியா இருக்கணும்னுதான் வாணிம்மா இவ்வளவும் செஞ்சாங்க!


அவங்கள தப்பா பேசினா உன் நாக்கு அழுகிப்போயிடும்!


இனிமேலாவது கொஞ்சம் நிதானமா நடந்துக்கோ!" என்று சொல்லவும் ஆத்திரத்தில் அவர் செய்த குற்றம் மூளையில் உரைக்க, உண்மையிலேயே மனம் இளகி, "என்னை மன்னிச்சிடுங்க வசந்த் அம்மா! ஏதோ ஆத்திரத்துல புத்தி கெட்டுப்போய் அப்படி செஞ்சுட்டேன்!' என கண்ணீர் வடித்தார் அந்த பெண்மணி.


***


ராகவன் மற்றும் கலைவாணி இருவருமே விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்திருக்க, அவர்களுடைய வாழ்க்கை விரக்தியுடன் நொண்டிக்கொண்டிருந்தது.


முற்றிலும் நொறுங்கிப்போயிருந்த மித்ராவுக்கு தனது வார்த்தைகளால் எப்படியோ நம்பிக்கை கொடுத்து அவளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதவைத்தார் வாணி!


முந்நூறு யுகங்களாகக் கடந்துபோன மூன்று மாதங்களுக்குப் பிறகு வசந்த் செய்த குற்றங்களின் நிழல் அவர்களை விடாமல் துரத்துவது போல ஜவஹருடைய ஆட்கள் அவனைத் தேடி அவர்களுடை. வீட்டிற்கே வந்தனர்.


அங்கே வசந்த் இல்லை என்பது தெரியவும் அதை நம்பாமல் அவர்கள் அடிக்கடி அங்கே வந்து வசந்தையும்; ஜவஹர் அவனிடம் ஒப்படைத்திருந்த பொருட்களையும் கேட்டு பிரச்சினை செய்ய ஆரம்பித்தனர்.


ஒரு கட்டத்திற்குப் பிறகு அங்கே இருப்பது ஆபத்து என்பதை உணர்ந்து அவர்கள் குடும்பத்துடன் திருவண்ணாமலைக்கு குடியேற, அவர்களுடைய அடிப்படைத் தகவல்களை வைத்துக்கொண்டு சில தினங்களிலேயே அங்கேயும் வந்து அவர்கள் தொல்லை கொடுக்கவே, வசுவின் எதிர்காலத்தை எண்ணி மன அழுத்தத்துக்கு ஆளானார் கலைவாணி.


மித்ரா மூலமாக அதை அறிந்த பாரதி அவர்களைப் பாதுகாப்பாக ஒரு இல்லத்தில் தங்கவைத்துவிட்டு, மித்ராவின் பெயரை 'வசுந்தரா' என மாற்றி தன்னுடனேயே டெல்லிக்கு அழைத்துச்சென்றார்.


முதுகலை படிப்பு முடியும்வரை அவருடன் இருந்தவள், ஆசிரியர் பயிற்சிக்காகச் சென்னைக்கே வந்துவிட, பின் அவளுக்கு வேலை கிடைத்ததும் அந்த வீட்டை வாங்கிக்கொண்டு பெற்றோருடன் அங்கேயே வந்துவிட்டாள் வசுமித்ரா!


நாமக்கல்லிலேயே இருக்கும் நிரஞ்சனாவின் பெற்றோரை மனதளவில் தத்தெடுத்தவள் அவர்கள் செலவுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை மாதம் தோறும் அனுப்புகிறாள் அவள்.


***


கலைவாணி சொல்லிமுடிக்கவும் உறைந்துபோய் பேச்சற்று நின்றனர் அங்கே இருந்த அனைவரும்.


அமைதியாக தன் கண்களைத் துடைத்துக்கொண்டார் செல்வராகவன்.


உணர்வற்று நின்றிருந்தாள் மித்ரா!


வசந்த் நிச்சயம் எங்கோ உயிரோடு இருக்கிறான் என்று அந்த நிமிடம் வரை நினைத்துக்கொண்டிருந்த தீபன் கூட ஆடித்தான் போனான்!


அவர்களுடைய பேச்சற்ற நிலையைக் கவனித்து கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொண்டு மறுபடியும் தொடர்ந்த வாணி,


பிள்ளைகள் தடம் மாறிப் போய் குற்றம் செய்தாங்கன்னா அவங்கள மட்டுமே குற்றவாளியா பார்க்கிறதில்ல மொத்த குடும்பத்தையும் இல்ல குற்றவாளியா பார்க்குது இந்த சமுதாயம்!


குற்றம் செய்யறதுக்கு முன்னால அதை நினைச்சு பார்க்கணும் அந்த பிள்ளைகளும்; ஏன்னா ஒரு சில சந்தர்பங்கள்ல இதுபோல அதாவது ஒரு குற்றத்தால பாதிக்கப்பட்டவங்க குடும்பம் மட்டும் இல்ல சரிகா அம்மா! குற்றம் செஞ்சவங்களோட குடும்பமும் மொத்தமா உருக்குலைஞ்சு போயிடுது!


வசந்த் செய்த குற்றதால எங்க குடும்பம் மொத்தமா உருக்குலைஞ்சு போன மாதிரி!" என அவர் சொல்ல, அவரது விழிகளில் ஓரத்தில் கண்ணீர் வழிந்தது.


அவருடைய பேச்சின் கனம் தாங்காமல் எல்லோருக்கும் முன்பாக அழுத்துவிடுவோமோ என்ற பயத்தில் அருணா அங்கிருந்து எழுந்து வெளியே செல்ல எத்தனிக்க, "சரிகா அம்மா! ஒண்ணுமே சொல்லாம போறீங்களே!" என்று வாணி இறைஞ்சுதலாகக் கேட்கவும், திரும்பவும் வாணியை நோக்கி வந்தவர், தன் புடவை முந்தானையால் வாணியின் கண்ணீரைத் துடைத்தவாறு, "மித்து! உங்க அம்மாவை எப்ப டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க!" என்று கேட்க, "இன்னும் ரெண்டு நாள் ஆகும்னு நினைக்கறேன் அத்.." என "அத்தை" என்று சொல்லவது அப்படியே நிறுத்தினாள் மித்ரா!


அதை கவனிக்காதவர் போல, "வர வெள்ளிக்கிழமை நம்ம சரிகாவுக்கு வளைகாப்பு வெச்சிருக்கோம்! அதுக்கு நீங்க ரெண்டுபேரும் தம்பதி சமேதரா மித்ராவை கூட்டிட்டு வரணும்!


ஏன்னா எங்க மருமகதான் அங்க வரவங்க எல்லாரையும் முன்ன நின்னு வரவேற்கணும்!" அழுகையில் தொண்டையை அடைக்கச் சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினார் அருணா!


அன்னை சொன்னதன் அர்த்தம் புரியவும் தீபன் மனதிற்குள்ளேயே துள்ளிக் குதித்தாலும் அதை முகத்தில் காண்பிக்காமல் நின்றுகொண்டிருக்க, தோழியை அணைத்துக்கொண்டாள் சரிகா முழுமையான மகிழ்ச்சியுடன்!


"சரிக்காக்கா! சாரி! ரொம்ப சாரி! ரொம்ப ரொம்ப சாரி!" என்று சொன்ன மித்ரா, "உங்களுக்கு என் மேல எந்த வருத்தமும் இல்ல ..ல்ல!" என்று கேட்க, "ம்... இருக்கு!" எனக் கோபமாகச் சொல்வதுபோல் சொன்னவள், "நீ இன்னும் என்னை இப்படி காக்கா காக்கான்னு சொல்லிட்டு இருக்க! ஒழுங்கா அண்ணின்னு கூப்பிடு" எனக் கெத்தாகச் சொன்ன சரிகா, "யாரோ செஞ்ச தப்புக்கு நான் உன் மேல எப்படி வருத்தப்படுவேன்!


அதோட நான் அதை பத்தியெல்லாம் நினைக்கறதே இல்ல! ஸோ நீ அன்னைக்கு மாதிரி இன்னைக்குமே என்னோட பெஸ்டீதான்" என்று முடித்தாள் முகம் மலர்ந்த சிரிப்புடன்.


தங்கைக்கு பின்னால் நின்றுகொண்டு அவள் அறியாதவண்ணம் வசுமித்ராவை பார்த்து ஓர் அர்த்தமுள்ள சிரிப்பை உதிர்த்த தீபன் தங்கையுடன் அங்கிருந்து சென்றுவிட, அவனது புன்னகையில் மலர்ந்தவள் அவன் பார்த்த பார்வையில் முகம் சிவந்துபோனாள் மித்ரா!


***


தங்கையுடன் சந்தோஷ் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்குள் நுழைத்த தீபன் நண்பனைப் பார்க்க, கொஞ்சம் தெளிவுடன் எழுந்து உட்கார்ந்திருந்தான் அவன்.


அருணா மட்டும் அங்கே இருக்கவே, "எங்கம்மா எல்லாரும்!" என சரிகா கேட்க, "சாது குட்டியை இங்க வெச்சுகிட்டு சமாளிக்க முடியல! எல்லாருக்கும் பசி வேற! அதுதான் அவளையும் தூக்கிட்டு இங்க இருக்கற ஃபுட் கோர்ட் வரைக்கும் போயிருக்காங்க!" என்றார் அருணா.


அது அவனுக்குச் சாதகமாகப் போகவே, "ம்மா! அவங்க சொன்னதெல்லாம் சரிதான்! அதுக்காகல்லாம் என்னால அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியாது!


நீங்க பாட்டுக்கு மருமக அது இதுன்னு சொல்லிட்டு வந்திருக்கீங்க!" என தீபன் தீவிரமாகச் சொல்லவும், "அதெல்லாம் முடியாது; நீ அவளை லவ் பண்றேன்னு சொல்லி கையை வேற பிடிச்சிருக்க! அதனால அவளை நீதான் கல்யாணம் பண்ணிக்கணும்! கண்டிப்பா அவதான் என் மருமக!" என்றார் அருணா பிடிவாதமாக.


அதை கேட்டு "டீவீ சீரியல் எஃபக்ட்" என்று சந்தோஷ் முணுமுணுக்க, அவனை முறைத்தவாறு, "அதெல்லாம் முடியாது; அந்த மித்ராவை பார்க்கும்போதெல்லாம் சரிகாவுக்கு பழசெல்லாம் ஞாபகம் வரும்! அது அவ மனச பாதிக்கும்! நான் அதுக்கு இடம் கொடுக்கமாட்டேன்!" என விடாப்பிடியாக தீபன் சொல்ல,


"அண்ணா! சந்தோஷ் என்னை எந்த ஒரு நிலையில கல்யாணம் செய்துகிட்டார்னு உங்களுக்கு நினைவிருக்கா?


ஆனா இந்த நொடி வரைக்கும் என் மனம் நோகும்படி ஒரு சின்ன செயல் கூட செஞ்சதில்ல அவர்!


அப்படிப்பட்ட ஒரு மெச்யூர்ட் பெர்சன் கூட வாழ்ந்துட்டு இருக்கற என்னை எதுவும் பாதிக்காது!


மித்ராவை பார்க்கும்போது அவ என் அண்ணின்னு மட்டும்தான் தோணும்!


இதையெல்லாம் காரணமா சொல்லாதீங்க! சம்மதம்னு மட்டும் சொல்லுங்கண்ணா!" என்றாள் சரிகா சலுகையாக.


ஏதோ அவளுக்காகத்தான் சம்மதிக்கிறேன் என்பது போல, "நீங்க ரெண்டுபேரும் இவ்வளவு சொல்றதால நான் சம்மதிக்கறேன்! வேற எந்த காரணமும் இல்ல!" என அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான் தீபன்.


ஜாடையில் அவனை அருகில் அழைத்த சந்தோஷ் ரகசிய குரலில், "டேய் பக்கா நல்லவனே! என்னால சத்தியமா முடியலடா!


எப்படிடா உன்னால மட்டும் முகத்துல எதையுமே காட்டாம இப்படி பேச முடியுது!


நான் வேணா மித்ராவுக்கு வேற நல்ல மாப்பிளை பார்த்துக்கலாம். என் தெய்வ மச்சானை கம்பல் பண்ணாதீங்கன்னு சொல்லிடட்டுமா!" எனக் கிண்டலாகக் கேட்க,


"தெய்வமே! இப்பதான் எல்லாம் ஒரு சுமுகமான நிலைமைக்கு வந்திருக்கு தெய்வமே! என்னை விட்டுடு தெய்வமே! உனக்கு வேணா ஒரு கோவில் கட்டி கும்பிடறேன்!" என்றான் தீபன் அடக்கப்பட்ட சிரிப்புடன், "அது! அந்த பயம் இருக்கணும் என் தெய்வ மச்சானே!" என்றான் சந்தோஷ் வெடித்து கிளம்பிய சிரிப்புடன்!


அவனது அந்த சிரிப்பு அங்கே இருந்த அனைவரது மனதிலும் மகிழ்ச்சியைக் கொண்டுபோய் நிரப்பியது!

0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page