top of page

Poovum Naanum Veru-33

இதழ்-33


கிழக்கு கடற்கரைச் சாலையில் காற்றைக் கிழித்து அபரிமிதமான வேகத்தில் பறந்துகொண்டிருந்தது தீபனின் வாகனம். அருகில் சந்தோஷ்!


அவனது மூளைக்குள் எரிந்துகொண்டிருந்த நெருப்பை அணைக்கும் என நினைத்து அவன் அங்கே செலுத்தியிருந்த போதை, அணைப்பதற்குப் பதிலாக அந்த நெருப்பை இன்னும் அதிகமாகக் கொழுத்து விட்டு எரியும்படியே செய்துகொண்டிருந்தது.


நியாயத்திற்கு ஜவஹருடைய மரணம் அவனுக்கு மகிழ்ச்சியையே கொடுத்திருக்க வேண்டும். பதிலாக அவனுடைய கோபத்தை மிகைப் படுத்தியிருந்தது.


மகாபலிபுரத்தில் இருக்கும் ஒரு நட்சத்திர விடுதியில் நண்பர்களுக்கு மட்டுமேயான ஒரு சிறிய பார்ட்டி என அவன் வழக்கமாகச் செல்லும் க்ளப் நண்பர் கவுதம் அழைத்திருக்க, மறுக்க முடியாமல் அங்கே சென்றான் தீபன். அவர் சந்தோஷையும் அழைத்திருக்க அவனையும் உடன் அழைத்துச்சென்றிருந்தான் அவன்.


அங்கே திலீப்பும் வந்திருக்க, அதுவும் பேசுவதற்கே அவர்களுக்கு அப்பொழுதுதான் நேரம் கிடைக்கவும், வசுவை திருமணம் செய்துகொள்ளக் கூடாது என அவன் முடிவெடுத்ததற்கான காரணத்தை திலீப் விளக்கமாகச் சொல்லவும், இடையில் சிரித்துவைக்காமல் அதனைக் கேட்பதே அவ்வளவு கடினமாக இருந்தது தீபனுக்கு!


சந்தோஷ் வேறு அவனைக் கிண்டலுடன் பார்க்கவும் கண்களாலேயே அவனை அடக்கிக்கொண்டிருந்தான் அவன்.


ஆரம்பத்தில் உற்சாகமான மன நிலையில்தான் இருந்தான் தீபன்.


பொதுவான நண்பர்கள் பலரும் வரவும்வேடிக்கையும் விளையாட்டுமாகத் தொடங்கிய பேச்சு, பின் அன்றைய தினத்தில் 'ட்ரெண்டிங்'காக இருக்கும் 'அதிகார வர்க்கத்தின் அராஜகம்' பற்றியதாக மாறிப்போக, அதனைப் பற்றிய அலசலும், அதில் சம்பந்தப்பட்டிருக்கும் பெண்களைப் பற்றிய விமர்சனங்களுமாக இருந்தது.


தீபனுடைய சகோதரியும் அதில் சிக்கி இருக்கிறாள் என்பதை அவர்கள் அறியாத காரணத்தால், பேச்சு கொஞ்சம் எல்லை கடந்ததாகவே இருக்க, அருகில் சந்தோஷ் வேறு இருக்கவும் மிகவும் சங்கடமாக ஆகிப்போனது தீபனுக்கு.


அங்கிருந்து கிளம்பலாம் என்றாலும் அந்த கவுதம் அவனை விடுவதாக இல்லை. அந்த நேரம் பார்த்து ஜவஹர் இறந்த செய்தி வேறு அவனுக்கு வந்து சேர, சட்டப்படி அனுபவிக்க வேண்டிய தண்டனையிலிருந்து அவன் தப்பிவிடவே அதற்கும் அவன் மீது கோபம்தான் வந்தது தீபனுக்கு.


மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தவன், உபசரிப்புக்காக அங்கே தாராளமாகப் பரிமாறப்பட்ட மதுவை வெகு தாராளமாகவே குடித்துக் கொண்டிருந்தான்.


"மச்சான்! வேணாம்! உன் தங்கைக்கு என்னால பதில் சொல்ல முடியாது" என சந்தோஷ் தடுத்ததெல்லாம் அவனுடைய செவியில் நுழையவே இல்லை!


அங்கே இருந்தவர்களும் அவர்களது வாக்குவாதத்தை நிறுத்துவதாக இல்லை.


"இது மாதிரி ஒரு நியூஸ் வந்தா போதும்! எல்லாருமே பொங்கிட்டு வந்துருவாங்க! பொண்ணுங்கள யாராவது குறை சொன்னால்; அவங்க மேல பாஞ்சிருவாங்க!


சோஷியல் மீடியால யாரு என்னனு வரைமுறை இல்லாம போட்டோவெல்லாம் ஷேர் செய்யறது யாரு!


அதை யூஸ் பண்ணி மிரட்டினா அதுக்கு பயந்துட்டு வீட்டுல இருக்கிறவங்களுக்கு தெரியாம அவங்க கூப்பிடற இடத்துக்கு ஏன் போகணும்!


பணத்துக்காக எந்த எல்லை வரைக்கும் பொண்ணுங்க போக ஆரம்பிச்சுட்டாங்க!


பசங்க கூட சேர்ந்தது என்ன வேணா செய்யறது; கூட இருக்கறவங்களையும் இதுல இழுத்துவிடுறது!


பிரச்சினை வெளிய தெரிஞ்ச உடனே கூட இருக்கற பசங்கள மாட்டி விட்டுட்டு இவங்க மட்டும் தப்பிச்சிக்கிறாங்க!" என ஒருவர் அடுக்கிக்கொண்டே போக,


"எங்கே இந்த மாதிரி கிரைம்ஸ் நடந்தாலும் ஏண்டா பொண்ணுங்களையே குறை சொல்றீங்க? இப்படி கேவலமா பேச உங்களுக்கே வெக்கமா இல்ல?


இந்த மாதிரி பேச்சையெல்லாம் க்ராஸ் பண்ண முடியாமதான பாவம் அத்தன பொண்ணுங்க தற்கொலை பண்ணிகிட்டாங்க;


உங்க வீட்டுல எல்லாம் கூட பெண் குழந்தைங்க இருக்காங்க ஞாபகம் இருக்கட்டும்! அவங்களையும் இப்படித்தான் பேசுவீங்களா?" என தீபன் அங்கே எல்லோருடனும் சண்டைக்குக் கிளம்ப, "பொதுவா பேசற பேச்சுக்கு நீங்க ஏன் மிஸ்டர் தீபன் இப்படி பெர்சனலா எடுத்துக்கறீங்க! உங்க வீடு பொண்ணுங்களையா குறை சொன்னாங்க" என ஒருவர் குதர்க்கமாகக் கேள்வி கேட்க, அவரை அடிக்கவே போய்விட்டான் தீபன்.