Poovum Naanum veru-32
இதழ்-32
நொடிக்கும் குறைவான நேரத்திற்குள் சந்தோஷ் தன்னை சமாளித்துக்கொண்டு, "தீபன்! நான் இப்ப சந்தோஷ் இல்ல; தீபனோட ஃப்ரெண்ட் இல்ல! சரிகாவோட ஹஸ்பண்டும் இல்ல; ஜஸ்ட் இந்த வீடியோவை எடிட் பண்ணப்போற ஒரு டெக்கீ அவ்ளோதான்;
இந்த வீடியோவை பார்க்கறதால சரிகா மேல எனக்கு இருக்கற அன்பு மாறிடப்போறதில்ல!
ஏன்னா இதோட பாதிப்பை பக்கத்துல இருந்து பார்த்தவன் நான்!" என்று சொல்லிவிட்டு, "ஹால் பிரிட்ஜ்ல கூலா எதாவது இருந்தா எடுத்துட்டு வா!" எனச் சொல்ல அங்கிருந்து சென்றான் தீபன்.
அவன் ஏதோ குளிர் பானத்துடன் திரும்ப வர, அதற்குள் வேலையை முடித்திருந்தான் சந்தோஷ்.
அந்த பாட்டிலைத் திறந்து அவனிடம் நீட்டியவாறு, "சாரி சந்தோஷ்; என்னோட பிடிவாதத்தால உங்க எல்லாரையும் ரொம்ப கஷ்டப்படுத்தறேன் இல்ல?" என தீபன் வருந்த, "லூசு மாதிரி பேசுற! நானும் ஒரு பெண் குழந்தைக்கு தகப்பன் டீப்ஸ்! நாளைக்கு நம்ம சாதுக்குட்டி இந்த சொசைட்டில பயமில்லாம நடமாட வேண்டாமா!
இதை சமூக அக்கறைனு மழுப்பினாலும் ஓகே! சுயநலம்னு ஓப்பனா சொன்னாலும் ஓகே! இந்த நேரத்துல இது ரொம்ப அவசியம் மச்சான்!
ஸோ.. நோ ஹர்ட் பீலிங்ஸ்!" என முடித்தான் சந்தோஷ்.
பெருமையுடன் நண்பனை அணைத்துக்கொண்டான் தீபன், "லவ் யூ டா மாமா!" என்றவாறு.
***
மிரட்டி பாலியல் ரீதியாக பெண்கள் துன்புறுத்தப்படும் சில காணொளிகளுடன், கடவுச்சீட்டு எண் ஆதார் எண் உட்பட அந்த காணொளியில் இடம்பெற்றிருக்கும் ஆண்கள், மற்றும் ஜவஹர், திவாகர் மேலும் சில பெண்கள் உட்பட அதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்பட்டிருக்கும் குற்றவாளிகளின் ஒவ்வொருவரையும் பற்றிய அனைத்து தகவல்கள்;
அந்த காணொளிகள் யார் யாருக்கெல்லாம் பகிரப்பட்டிருக்கிறது என்கிற தகவல்கள்;
அந்த பிரச்சினையில் சிக்கி பல பெண்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனதற்கான ஆதாரங்கள் என அனைத்தையும் எல்லா சமூக வலைத்தளங்களிலும் 'அதிகார வர்க்கத்தின் அராஜகம்!' என்ற தலைப்பில். 'டீ.பீ. லீக்ஸ்' பெயரில் அன்றைய நள்ளிரவே பதிவேற்றம் செய்தான் தீபன்.
அடுத்த நாள் பொழுது புலர்வதற்குள்ளாகவே, அந்த குற்ற சம்பவம் ஒரு செய்தியாக அனைத்து ஊடகங்களிலும் குறிப்பாகத் தொலைக்காட்சிகளில், 'பிரேக்கிங் நியூஸ்!' என்ற பெயரில் ஒவ்வொருவருடைய வீட்டுக்குள்ளும் சென்று அன்றைய நாளை பரபரப்பாக்கிக்கொண்டிருந்தது.
தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அந்த காணொளிகளை பார்த்துவிட்டு, சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் என பலர் தாமாகவே முன்வந்து வெவ்வேறு பகுதிகளில், அந்த குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு தொடுத்தனர்.
அன்றே சகோதரன் மற்றும் கணவனுடன் நேரில் சென்று, அந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியிடம் அவளுக்கு ஏற்பட்ட வன்கொடுமை பற்றி, நேரடியாகப் பாதிக்கப்பட்டவள் என்கிற முறையில் புகார் அளித்தாள் சரிகா.
மேலும் அந்த வழக்கை எடுத்துக்கொள்ளாமல், குற்றவாளிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, அலட்சியமாக நடந்துகொண்டதுடன், தீபனை அவர்களிடம் சிக்க வைத்து வன்முறை தாக்குதலுக்கு உட்படுத்தவும் காரணமான அதிகாரியின் பெயரிலும் அவருக்குத் துணை போனவர்கள் பெயரிலும் தீபன் ஒரு புகார் கொடுத்தான்.
அவனைக் கடத்தி சென்று அடைத்துவைத்துத் துன்புறுத்திய ஜவஹரின் அடியாட்கள் ஒவ்வொருவர் பெயரிலும் அவர்களுடைய அடையாளத்துடன் அவன் புகார் கொடுக்கவும், அதனை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லாமல் போனது அங்கே.
'இவ்வளவு நாட்களாக இல்லாமல், இப்பொழுது ஏன் இந்த புகாரை அளிக்கிறீர்கள்?' என்ற கேள்வி எழவும், "அந்த சமயத்துல நான் கொடுத்த கம்பளைண்ட்டை வாபஸ் வாங்கற சூழ்நிலைக்கு என்னை தள்ளிட்டாங்க!
என் கிட்ட இருந்த வீடியோ ஆதாரங்களையும் அழிச்சிட்டாங்க!
இப்ப டீ.பீ லீக்ஸ் வெளியிட்டிருக்கும் வீடியோஸ் பார்த்த உடனே, இதே ஸ்க்காம்ல என் தங்கையும் சிக்கியிருந்ததாலதான் இந்த கம்பளைண்ட்டை கொடுக்கறேன்!" எனத் தெளிவாகப் பதில் சொன்னான் தீபன்.
மேலும் எங்கெங்கெல்லாம் அழுத்தம் கொடுக்க முடியுமோ அங்கெல்லாம் அழுத்தம் கொடுத்து, அந்த வழக்கைத் திசை திருப்ப விடாமல் பார்த்துக்கொண்டான் அவன்.
இறந்தவர்கள் தவிர, மீதம் இருக்கும் ஜவஹர், அவனுக்கு துணை நின்ற காரணத்திற்காக திவாகர் ஆகியோரை நீதி மன்ற காவலில் எடுத்து விசாரணையை தொடங்கியது காவல் துறை.