top of page

Poovum Naanum Veru-31

இதழ்-31


"டேய் தீபா! என்னடா சொல்ற; அந்த பொண்ணை பழி வாங்கறதுக்காக காதலிக்கற மாதிரி நடிக்கறியா!


தப்புடா! முடிஞ்சா அந்த வசந்தை கண்டுபிடிச்சி அவனை என்ன வேணா பண்ணு! கொலையே பண்ணா கூட நான் ஏன்னு கேட்கமாட்டேன்!


ஆனா ஒரு பெண்ணை ஏமாத்தறது ரொம்ப பாவம்டா!" எனப் பதறினார் அருணா.


"அண்ணனோட கேடு கெட்ட புத்திதானே தங்கைக்கும் இருக்கும்! அவளை இப்படி செஞ்சா தப்பே இல்ல" என அவன் மறுப்பாகச் சொல்ல,


"சச்ச! மித்ரா அப்படிப்பட்ட பொண்ணெல்லாம் இல்லண்ணா! அவ ரொம்ப இன்னசன்ட்! யாருக்கும் கெடுதல் நினைக்க மாட்டா!


ஆரம்பத்துல எனக்கே கூட அவ மேல கொஞ்சம் கோவம் இருந்தது!


ஆனா யோசிச்சு பாத்தா! அப்ப அவளுக்கு நல்லது கெட்டது தெரியாத வயசுதானண்ணா!


அவளுக்கு வசந்த் பத்தி தெரிஞ்சிருந்தா அவ்வளவு இயல்பா என் கிட்ட பழகி இருக்க முடியாது!" என சரிகா மித்ராவுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு வர, மனதிற்குள்ளேயே தங்கையை மெச்சியவன்,


"ப்ச்! என்னால நீ சொல்றதை ஒத்துக்க முடியாது!


அந்த ஜவஹர் ஆளுங்க என்னை கடத்தி கொண்டு வெச்சிருந்த சமயம்; மித்ராவும் அவங்க அம்மாவும்தான் பாரதி மேடம் கிட்ட போய் என்னை காப்பாத்த சொல்லி கேட்டாங்களாம்; அந்த நேரத்துல அவங்க அப்பா ஆக்சிடென்ட் ஆகி ஹாஸ்பிடல்ல இருந்தாராம்!


இன்னைக்குத்தான் அவங்க சொன்னாங்க!


என்னால நம்ப முடியல! பாரதி மேடம்மே சொல்றதால நம்பாம இருக்கவும் முடியல!" என்றான் தீபன்.


ஏதோ யோசித்தவர், "இருக்கும் டா தீபா! அப்போ சரிகாவை ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு கூட்டிட்டு வந்த அன்னைக்கு, உன்னைக் கண்டுபிடிக்க முடியாத வேதனைல அவங்க வீட்டுக்கு போய் ரொம்பவே கோவமா பேசிட்டு வந்தேன்!


உன்னை காணும்னு சொன்னதும் அவங்க ரொம்பவே பதறினாங்க!


செஞ்சிருந்தாலும் செஞ்சிருப்பாங்க!" என்றார் அருணா தணிந்த குரலில்!


"அதுக்காக லவ் பண்றேன்னு சும்மா சொன்னதுக்காகவெல்லாம் நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்! நீங்க பயப்படாதீங்க!" என தீபன் சொல்ல,


"காதல்னு சொல்லி ஒரு பெண்ணை ஏமாத்தறது தப்பில்லையா அண்ணா!" எனக் கலவரத்துடன் சரிகா கேட்க, "ப்ச்! தப்பு ரைட்டு பத்தி இப்ப என்ன பேச்சு!" என்றவன் அப்பொழுதுதான் அரங்கநாதன் குறுகுறுவென அவனைப் பார்ப்பதை உணர்ந்தான்.


அம்மாவும் தங்கையும் அறியாவண்ணம் தந்தையைப் பார்த்து அவன் கண்களைச் சிமிட்டவும் எழுந்த சிரிப்பை அவர் அடக்க படாதபாடு பட புரை ஏறியது அரங்கநாதனுக்கு.


"ப்பா! பார்த்து; இந்தாங்க தண்ணி குடிங்க!" என்றவாறு தண்ணீர் குவளையை அவரிடம் நீட்டியவன்,, "உங்க மாப்பிள்ளை நாளைக்கு வரான்; ஏர்லி மார்னிங் அவனை பிக் அப் பண்ண ஏர் போர்ட் போகணும்;


சாது குட்டி பிறந்த அப்பவே மருந்து பிழியறது, வளை காப்பு எதுவுமே செய்ய முடியல இப்பாவது எல்லாரையும் கூப்பிட்டு க்ராண்டா பண்ணனும்னு சொல்லிட்டு இருந்தீங்க இல்லம்மா!


அதுக்கெல்லாம் நம்ம அய்யரை பார்த்து நாள் குறிச்சிடீங்களா!


இவ்வளவு வேலையை வெச்சிட்டு தேவை இல்லாததுக்கெல்லாம் கவலை பட்டுட்டு இருக்கீங்க!" என அவன் பேச்சைத் திசை திருப்ப, "இது தேவை இல்லாத விஷயமாடா?" என கேட்டார் அருணா!


"இப்போதைக்கு இது தேவை இல்லாத பிரச்சினைதான் மா! டயர்டா இருக்கு! ஆளை விடுங்க!" எனச் சொல்லிவிட்டு, கையை கழுவிக்கொண்டு அங்கிருந்து அவனுடைய அறையை நோக்கி ஓடியே போனான் தீபன்!


அவன் போய் கட்டிலில் படுத்துக்கொண்டு கைப்பேசியை குடைய, கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார் அரங்கநாதன்.


அங்கே இருந்த இருக்கையை இழுத்துப் போட்டு மகனின் அருகில் அவர் உட்காரவும், "என்னப்பா! அம்மா உங்களைப் படுத்தி எடுத்துட்டாங்களா!" எனச் சிரிப்புடன் தீபன் கேட்க, "பின்ன! சும்மா இருப்பாளா!


டீவீல பார்தத்த்துல இருந்து புலம்பி தள்ளிட்டா! வேலூர் முதல் சென்னை வரை இடி மின்னல் மழைதான்!" என அவர் சொல்ல, கோபமாகப் புலம்பி அழுதிருக்கிறார் அருணா என அவர் சொன்னதன் அர்த்தம் விளங்கவும், "அம்மா அழுத்தங்களாப்பா!" என உள்ளே போன குரலில் கேட்டான் தீபன்!


"கொஞ்சம்!" என்றவர், "நீ எப்படி சமாளிக்க போறயோன்னு பயந்துட்டே இருந்தேன்!


நீதான் வாலி மாதிரி எதிர நிக்கறவங்களோட பலத்துல பாதியை எடுத்துக்குவியே!


உன்னைப் பத்தி சொல்லணுமா!" என்றவர், "அந்த பொண்ணை பத்தி என்ன முடிவு எடுத்திருக்க தீபா?" எனக் கேட்டார் அவனுடைய அப்பா.


"வேற என்ன! கல்யாணம்தான்! ஆனா நான் அந்த பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னா இங்க பெரிய போரே நடக்கும்!


அந்த பொண்ணு வேணாம்னு சொன்னேன்னு வைங்க! அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு அவங்களே இறங்கி வருவாங்க பாருங்க! இன்னும் என் மாப்பிள்ளை வேற வந்துட்டான்னா கேக்கவே வேணாம்! அவனே அவங்கள டீல் பண்ணிப்பான்!" எனச் சொல்லி தீபன் சிரிக்க, மகனுடைய சிரிப்பைப் பார்த்து மகிழ்ந்தவராக, "எப்படியோ நீ சந்தோஷமா இருந்தால் போதும்!" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார் அவனை முழுவதுமாக புரிந்துவைத்திருக்கும் அவனுடைய அப்பா!


***


அடுத்த நாள் அதிகாலை சந்தோஷை வரவேற்க விமான நிலையம் சென்ற தீபன் அவனை நேராக அவனுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்ல, சந்தோஷுடைய அம்மாவும் அப்பாவும் அவர்களை உற்சாகமாக வரவேற்றனர்.


சற்று நேரத்திற்கெல்லாம் சரிகாவும் குழந்தையுடன் அங்கே வந்தாள்.


சாத்விகா சில நாட்களுக்குப் பின் அவளுடைய அப்பாவைப் பார்க்கவும், தாவிக்கொண்டு போய் அவனிடம் ஒட்டிக்கொள்ள, அனைவருக்கு முன்பாக எதுவும் பேச இயலாமல், கண்களாலேயே பேசிக்கொண்டனர் சந்தோஷும் அவனுடைய சரிபாதியும்!


'ம்க்கும்!' எனத் தொண்டையை செருமிக்கொண்டவன், சந்தோஷை பார்த்து விஷமமாகச் சிரிக்க, தன சுட்டுவிரலை ஆட்டி தீபனுக்கு பத்திரம் காண்பித்தவன், "மச்சான்! என் கிட்ட உன் வேலையெல்லாம் காட்டாத! அப்பறம் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை!" என மென் குரலில் எச்சரித்தான் சந்தோஷ்!


"சீனியரே! நீங்க சொன்னா சரிகாதான்!" என்று சத்தமாக கிண்டலுடன் சொல்லிவிட்டு, "ச்ச... சரிக்கான்னு வாய் தவறி வந்திடுச்சு! நீங்க சொன்னா சரிதான் மாப்ள!" என அதை மாற்றி அனைவரையும் சிரிக்க வைத்துவிட்டு அவர்கள் வீட்டில் காலை உணவை முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான் தீபன்!


***


இரண்டு நாட்கள் புகுந்த வீட்டு வாசத்திற்கு பிறகு பிறந்த வீடு திரும்பியிருந்தாள் சரிகா! 'ஜெட் லாக்'லிருந்து சற்று மீண்டிருக்கவும் சந்தோஷும் வந்திருந்தான்.


மருமகன் வந்திருப்பதால் விருந்துக்கான ஏற்பாடுகள் அவர்கள் வீட்டில் தடபுடல் பட்டுக்கொண்டிருந்தது.


"அத்தை! எங்க தீபனை காணும்!" என சந்தோஷ் எதார்த்தமாக மாமியாரிடம் விசாரிக்க, "உங்களை வீட்டுல விட்டுட்டு வந்தவன்தான், ராப்பகலா ஆபீஸே கதின்னு கிடக்கிறான் தம்பி!


சாப்பிட மட்டும்தான் வீட்டுக்கு வரான்; மத்தபடி எல்லாமே அங்கதான்!


சரியா தூங்கறானான்னு கூட தெரியல! கண்ணெல்லாம் சிவந்து போய் கிடக்கு!


அவன் கிட்ட எதாவது கேட்டாலே எரிஞ்சு விழறான்! பேச்சு கொடுக்கவே யோசனையா இருக்கு!" என மருமகனிடம் குற்றப் பத்திரிகை வாசித்தார் அருணா!


சாப்பாடு தயாராகிவிட, "சரிகாவும் மாப்பிள்ளையும் வந்துட்டாங்க தீபா! உனக்காகத்தான் வெயிட்டிங்! சீக்கிரம் வா!' எனக் கைப்பேசியில் மகனை அழைத்தார் அரங்கநாதன்.


சில நிமிடங்களில் தீபன் அங்கே வர, கலைந்த தலையும் தூக்கமின்றி சிவந்த விழிகளுமாக அவனைப் பார்க்கவும் சரிகா எதோ சொல்ல வரவும், "அவன் எதோ முக்கியமான வேலையில் இருக்கான்; எதுவும் கேக்காத" என அவளைத் தடுத்தான் சந்தோஷ்.


பின்பு பொதுவாகப் பேசிக்கொண்டே உணவை முடிக்க, சந்தோஷிடம் ஜாடை செய்துவிட்டு வீட்டை ஒட்டி இருக்கும் அலுவலகத்தை நோக்கிப் போனான் தீபன்.


"பாப்பாவை தூங்க வெச்சுட்டு நீயும் ரெஸ்ட் எடு; நான் என்னனு பார்த்துட்டு வரேன்!" என சந்தோஷ் சொல்ல, "சாயங்காலம் பாப்பாவுக்கு டிரஸ் நகையெலாம் வாங்கணும்னு அத்தை சீக்கிரம் வரச்சொல்லி இருக்காங்க; உங்க ஃப்ரெண்ட பார்த்த ஜோர்ல நீங்க மறந்துட போறீங்க!" என அவள் முணுமுணுக்க, "ஏய்.. உங்கண்ணன் கூடதாண்டி போறேன்! இப்படி அலுத்துக்கற" என மென்மையாகச் சிரித்துவிட்டு தீபனை தேடிப் போனான் சந்தோஷ்!


***


அந்த 'அவுட் ஹவுஸ்' அலுவலகத்தின் வரவேற்பறையிலேயே காத்திருந்த தீபன் சந்தோஷ் வந்ததும் அவனை அழைத்துக்கொடு தன்னுடைய அலுவலக அறைக்குள் சென்று கதவை உட்புறமாகப் பூட்டினான்.


பின் அங்கே தரையில் விரிக்கப்பட்டிருந்த கார்பெட்டை நகர்த்தி, கீழே பதிக்கப்பட்டிருக்கும் டயில்சின் மெல்லிய கோடு போன்ற இடைவெளியில் 'ஆக்ஸஸ் கார்ட்' ஒன்றைப் பொறுத்த, அடுத்த நொடி அந்த டைல்ஸ் நகர்ந்து அவர்களுக்கு வழி விட்டது.


"இங்க இப்படி ஒரு அண்டர் கிரவுண்ட் ரூம் இருக்கும்னு யாருமே நினைச்சு கூட பார்க்கமாட்டாங்க இல்ல டீப்ஸ்!" என சந்தோஷ் கேட்க, 'ம்ம்...' என்றபடி படிக்கட்டுகள் வழியாகக் கீழே இறங்கினான் தீபன்.


"அப்படியே கண்டுபிடிச்சு வந்தாலும், என் செல் போனோட ஒரே ஒரு பட்டன் போதும் சான்! இந்த ரூம் மொத்தத்தையும் ஒரு நொடில பூஊஊம்” என்று அவன் சொல்ல, "அதுதான் மச்சான் உன் மூளை!' என நண்பனைப் பாராட்டினான் சந்தோஷ்.


ஏர் கண்டிஷனின் ஆதிக்கத்தில் அந்த அறை முழுதும் உரை நிலை குளிரிலிருந்தது.


அறை முழுதும் நவீன ரக கணினிகளும் அது சம்பந்தப்பட்ட உபகரணங்களும் நிறைந்திருக்க, அந்த அறை ஒரு சோதனை கூடம் போலவே காட்சி அளித்தது!


அதில் தீபன் மற்றும் சந்தோஷ் இணைந்து கண்டுபிடித்த, ஹாக்கிங் செய்வதற்கு உபயோகிக்கும் சில கருவிகளும் இருந்தன.


அதனை வெளி உலகுக்கு அறிமுகம் செய்தால் பல கோடிகளை அவர்கள் ஒரே நாளில் சம்பாதித்து விட முடியும்.


அவை பல ஆபத்தான சமூக விரோத காரியங்களுக்கும் உபயோகப்படுத்த முடியும் என்ற காரணத்தினால் அதை அவர்கள் இருவரும் ரகசியமாகவே வைத்திருந்தனர்.


"ப்ச்... இதுல இருக்கற டிவைஸ் எல்லாம் வேற ஒருத்தன் கிட்டேயும் இருக்காது! எந்த கொம்பன் வந்தாலும் நம்ம செய்யறத கண்டுபிடிக்கேவே முடியாது இல்ல மச்சான்!" கர்வத்துடன் சந்தோஷ் கேட்க,


"டேய் மாமா! இந்த எண்ணத்தை மண்டைக்குள்ள கொண்டு போனால், நாம தோற்க ஆரம்பிச்சிடுவோம்! ஸோ.. டோன்ட்!" என்றான் தீபன் அழுத்தமாக.


"எங்கடா மச்சான் அந்த தாத்தா கொள்ளுத்தாத்தால்லாம்!" அலட்சியமாக சந்தோஷ் கேட்க, அங்கே பரப்பி வைக்கப்பட்டிருந்த வசந்துடைய பொருட்களைச் சுட்டி காண்பித்தான் தீபன்.


"அல்மோஸ்ட் முடிச்சிட்டேன்!" என்றவன், "கிட்டத்தட்ட தவுசண்ட் டூ ஹண்ட்ரட் வீடியோஸ்! எல்லாத்திலேயும் பொண்ணுங்க முகம் நல்லாவே தெரியுது!


அதை மறைக்கிறதுதான் பெரிய வேலையா இருக்கு! மறுபடியும் யாரும் அதை ரீஸ்டோர் பண்ண கூடாது. அதுவும் முக்கியம் பாரு!" என தீபன் சொல்ல, "ஹும்! புரியுது" என்றான் சந்தோஷ்.


பேசிக்கொண்டே அங்கே இருந்த கணினியின் மிகப்பெரிய திரையில் ஒரு செய்தி தாளில் 'அமைச்சர் புஷ்பநாதன் இல்ல திருமணம்' என முழு பக்க அளவில் வெளியாகியிருந்த திருமண அழைப்பிதழில் 'ஸ்க்ரீன் ஷாட்'டை சுட்டிக் காட்டியவன், "பார்த்தியா மாமா! இந்த நாதா** ஜவஹருக்கு கல்யாணமாம்!


பெருமையா இனிவிட்டேஷன ந்யூஸ் பேப்பர்ல எல்லாம் போட்டிருக்கானுங்க!


இவன்தான் ஏழு எட்டு வருஷமா காலி டப்பாவா சுத்திட்டு இருக்கானே! வீட்டுல யாருக்குமே தெரியாதா?" எனத் தீவிரமாக தீபன் கேட்க, "இவன் கொஞ்சம் கூட திருந்தவே மாட்டானா?" எனத் தலையில் கையை வைத்துக்கொண்டான் சந்தோஷ்.


"விடு மாப்பிளை! அவனை மொத்தமா திருத்தீஈஈஈடலாம்! இன்னும் முடிக்க வேண்டிய போல்டர்ஸை கொஞ்சம் பார்த்துடலாம்!" என்றவன் கணினியின் திரையில் சில காணொளிகளின் 'ஃபோல்டர்'களை ஒவ்வொன்றாகத் திறந்து காண்பித்தான்.


'நந்தினி'


'சாரா'


'ப்ரீத்தா'


'டாக்டர்.பத்மினி'


'நிரஞ்சனா'


கடந்துகொண்டே வர, கடைசியிலும் கடைசியாக 'சரிகா!' என்ற 'ஃபோல்டர்'ரில் கர்சர் வந்து நிற்கவும் இரண்டு கைகளும் கல்லாகிப் போனதுபோல் அசைவற்று நின்று போனது தீபனுக்கு.


அவன் அண்ணன்! மற்றவன் அவளுடைய கணவன்! இதை எப்படிக் கையாள முடியும்! அந்த அதீத குளிரிலும் வியர்வை ஊசிகள் அவனது முகத்தைத் துளைத்து வெளியேற, உதிரம் மொத்தமும் மூளைக்குப் பாய, முகம் சிவந்து நண்பனைப் பார்த்தான் தீபன்!


சந்தோஷுடைய முகம் கல்லைப் போன்று இறுகிப் போய் இருந்தது.

0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page