இதழ்-29
பாரதியின் வீட்டிலிருந்து வரவே தாமதம் ஆகிவிட, காலை சமையல் செய்ய நேரம் இல்லாமல் அனைவருக்கும் வெறும் சிற்றுண்டி மட்டும் தயார் செய்து பரிமாறிவிட்டு பள்ளிக்குச் சென்றாள் மித்ரா.
மதியம் அங்கே இருக்கும் மெஸ் ஒன்றில் உணவை வாங்கி வந்து பெற்றோருக்குப் பரிமாறிவிட்டு தானும் சாப்பிட்டு மறுபடி பள்ளிக்குக் கிளம்பினாள் அவள்.
அவளது வீட்டிற்கு அருகில் இருக்கும் திருப்பத்தில் அவளுடைய பள்ளி சீருடை அணிந்த மாணவன் ஒருவன், "மிஸ்! மிஸ்!" என்றவாறு அவளது வழியை மறிக்கவே ஸ்கூட்டியை நிறுத்தி காலை ஊன்றி நின்றவள், "என்ன தம்பி இந்த நேரத்துல இங்க நிக்கற! உன்னை ஸ்கூல்ல பார்த்தமாதிரியே தெரியலியே! என்ன கிளாஸ் நீ!" என அவள் கேட்க, சட்டென எதிர்பாராத விதமாக எதையோ அவள் முகத்தில் ஸ்ப்ரே செய்தான் அவன்.
அவள் மூச்சு திணறவும், அருகில் நின்றிருந்த எஸ்.யூ.வீ வாகனத்தின் பின்னாலிருந்து வந்த இருவர், அவளைப் பலவந்தமாக அந்த வண்டியில் ஏற்ற, மாணவனைப் போல இருந்தவன், அவளது ஸ்கூட்டியை நோக்கிப் போனான்! அவளது கைபையைப் பிடுங்கி ஒருவன் அதையும் அந்த போலி மாணவனிடம் வீச, அதைப் பிடித்துக்கொண்டான் அவன்.
அவளது கைப்பேசியும் அவளுடைய கைப்பையுடனே போனது.
அவள் எதோ காரணத்திற்காகக் கடத்தப்பட்டிருக்கிறோம் என்பது புரிய, அவளுடைய இதயம் வேகமாகத் துடித்தது.
***
மிக முயன்று கண்களைத் திறந்தாள் மித்ரா!
சில நொடிகள், தான் எங்கே இருக்கிறோம் என்பதே புரியவில்லை அவளுக்கு!
மங்கலான வெளிச்சத்துடன் அந்த இடம் பார்க்க ஒரு நட்சத்திர விடுதியின் அரை போன்றே இருந்தது.
ஏசியின் அதீத குளுமையால் அவளது உடல் நடுங்கியது.
நாசியில் கண்களில் பொறுக்க முடியாத ஒரு எரிச்சல்!
தொண்டை வறண்டுபோய் அங்கேயும் எரிச்சல்!
வெகுவாக கனத்த தலையைத் தூக்கமுடியாமல் மெல்ல எழுத்து, கலைந்திருந்த தன் புடவையைச் சரிசெய்தவள், அங்கே யாராவது ஒளிந்திருக்கிறார்களா என்ற அச்சத்தில் அவள் பார்வையைச் சுழற்ற, அவளைத் தவிர வேறு ஒருவரும் இல்லை அங்கே!
அந்த அறையிலிருந்த ஒரே ஒரு ஜன்னலும் அடைக்கப்பட்டு திரைச் சீலையால் போர்த்தப்பட்டிருந்தது.
மற்றபடி ஒரு தொலைப்பேசி இணைப்பு கூட இல்லை அங்கே.
தன் கண்களை மூடி பயத்தைப் போக்க அவள் முயல, மூடிய கண்களுக்குள் தீபன் நிறைந்திருந்தான்!
"மித்து! பயப்படாத! நீ எங்க போனாலும் எனக்குத் தெரியும்! என் பார்வையைத் தாண்டி உன்னால போகவே முடியாது!" என அவன் சொல்வது போன்றே இருந்தது அவளுக்கு!
அதே நேரம் வேகமாக கதவைத் தள்ளிக்கொண்டு திபுதிபுவென சிலர் அந்த அறைக்குள் நுழைய, தானாகவே மூடிக்கொள்ளும் அந்த கதவு பலத்த ஓசையுடன் மூடிக்கொண்டது.
உள்ளே ஏற்பட்டிருந்த தைரியம் வந்தவர்கள் யார் என அவளைப் பார்க்கத் தூண்ட, அடியாட்கள் புடை சூழ எதிரே நின்றிருந்தான் திவாகர்! கூடவே அவனது உருவ ஒற்றுமையுடன் ஒருவன்.
இதற்குமுன் பார்த்ததில்லை என்றாலும் அவன்தான் ஜவஹர் என்பது அவளுக்குப் புரிந்துபோனது.
"எங்கடி அவன்!" தெனாவெட்டாக ஜவஹர் கேட்க, யாரைப் பற்றிக் கேட்கிறான் என்பது புரியாமல், "எவனை கேக்கற!" என அவள் துணிச்சலுடன் கேட்க, அருகிலிருந்தவனுக்கு அவன் ஜாடை செய்யவும், அவளை ஓங்கி அறைந்தான் அவன்.
உதடு கிழிந்து ரத்தம் வரவும், அனிச்சையாக அதைத் துடைத்தவள், அவனை முறைக்க, "எப்படி முறைக்கறா பாரு ஜவா! வேற ஒண்ணும் இல்ல; இது அந்த தீபன் கொடுக்கற தைரியம்!
தெரியாது இல்ல இவ அவன் கூட எவ்வளவு கிளோஸ்னு!
நேத்து அந்த பார்ட்டில நான் நேர்லயே பார்த்தேன்!" என்றான் திவாகர்.
அவர்களது தொலைக்காட்சிக்காக முந்தைய தினம் பதிவு செய்த டிஜிட்டல் படங்களையும் காணொளிகளையும் அன்று காலை அண்ணன் தம்பி இருவருமாகச் சேர்ந்து பார்த்துக்கொண்டிருக்க அவளுடைய முக ஜாடையைப் பார்த்து ஜவஹருக்கு அவள் வசந்துடைய தங்கையோ எனச் சந்தேகம் எழுந்தது.
தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி அவளுடைய அலுவலக ரீதியான கோப்புகளையும் அதிலிருந்த 'வசுந்தரா' எனப் பெயரை மாற்றியிருந்ததிற்கான அடையாளமான கெஸட் சான்றிதழ் நகலையும் பார்க்கவும், அவள் யார் என்பது அவர்களுக்குத் திண்ணமாகத் தெரிந்துபோனது.
"ஆமாம் அது எப்படிடா அண்ணா! சொந்த தங்கையைத் தாறுமாறா யூஸ் பண்ணவனோட தங்கச்சின்னு தெரிஞ்சும் இவ கூட சுத்திட்டு இருக்கான் அந்த தீபன்!
அதே வழியில பழிக்கு பழி வாங்கறானோ!" என அவளை கண்களால் மேய்ந்தவாறு ஜவஹர் கேவலமாகக் கேட்க, "இருந்தாலும் இருக்கும் யாருக்குத் தெரியும்" என்றான் திவாகர்.
"சீ இப்படியெல்லாம் பேச உங்களுக்கே கேவலமா இல்ல!" என அவள் சீற, "எனக்கு என்ன கேவலம்;
நீ செய்யறதுதான் கேவலம்.
உன் அண்ணன் அன்னைக்குச் சொன்னான், 'ஒருத்தன் கூப்பிட்டானு சொல்லி; கொஞ்சமும் யோசிக்காம அவன் பின்னால போக சொல்லு பார்ப்போம் என் தங்கையை! அவ போக மாட்டா!' அப்படின்னு.
உன்னை பார்த்தால் அப்படி தெரியலியே!
என்னமா அவன் கூட கை கோர்த்துக்கிட்டு போற!
நல்ல வாட்டசாட்டமா இருக்கானே அதுக்காகவா! இல்ல பணத்துக்காகவா?" என ஜவஹர் தன் இகழ்ச்சியைத் தொடரவும்,
"மரியாதை கெட்டுடும் ராஸ்கல்! என்னைப் பத்தியோ மிஸ்டர் தீபனை பத்தியோ பேசற தகுதி உனக்கு இல்ல!" என அவள் மேலும் சீற, "ரொம்ப ஆடாதடி! அவனால உன்னை கண்டுபிடிச்சிட்டு இங்க வர முடியாது!
உன் போனை கூட உன் ஸ்கூட்டியோட சேர்த்து கொளுத்திட்டோம்!
உன் ஆளுக்கு முதல் சந்தேகமே எங்க பேர்லதான் வரும்னு சொல்லி எங்களோட செல்போன்; மத்த காட்ஜெட்ஸ் எதையும் இங்க எடுத்துட்டு வரல! எவனாலயும் ட்ரேஸ் பண்ண முடியாது!" என அவன் சொல்ல அதிர்ந்தாள் மித்ரா!
"வசந்த் எங்க இருக்கான்! அதை சொல்லு உன்னை இப்படியே விட்டுடறேன்! இல்லனா நீ முழுசா இங்க இருந்து போக முடியாது!
நாங்க அப்ப மூடின எங்க பிசினஸ்ஸ இப்ப மறுபடியும் ஸ்டார்ட் பண்ண போறோம்!
நீதான் எங்களோட முதல் இன்வெட்மென்ட்!" என அவன் பேசிக்கொண்டே அவளை நெருங்க, 'எங்க புல்லிங்க எல்லாம் பயங்கரம்! பார்த்த தமன்னா மயங்கி விழுந்துரும்!' எனப் பயங்கரமாக அவனுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தவனுடைய கைப்பேசி ஒலிக்கவும் அதில் எரிச்சலுற்றவன், "ஏய் எரும!" என அவனை முறைக்க, "சாரிண்ணா!" என்றவாறு வெளியில் சென்றவன் உடனே திரும்ப வந்து, "ண்ணா! குமாரு" என்று கைப்பேசியை ஜவஹரிடம் நீட்டிவிட்டு, "ஏதோ முக்கியமா பேசணுமாம்!" என்றான் அவனுடைய அந்த அடியாள்.
அவளை முறைத்துக்கொண்டே கைப்பேசியைப் பிடுங்கி ஒரு சலிப்புடன், "ப்ச்.. சொல்லு குமாரு!" என்று சொல்ல, "சார்! ப்ரெஷ் ஸ்டாக் வந்திருக்கு! மொத்தமா கால் கிலோ! எங்க வரணும்னு சொன்னா உடனே வந்து சப்ளை பண்ணிடுவேன்!" என்றான் எதிர் முனையிலிருந்தவன்.
திவாகரன் எதிரில் பேச விரும்பாமல், "அண்ணா இதோ வந்துடறேன்!" எனச் சொல்லிவிட்டு வெளியே வந்தவன், "உனக்கு நேரம் காலமே கிடையாதா! அண்ணன் வேற பக்கத்துல இருக்கான்!" என அவன் கடுகடுக்க, "சார் பிரெஷ் கோகைன்!" என்றவன், "கஸ்டம்ஸ்ல இருந்து கஷ்டப்பட்டு காப்பாத்தி கொண்டுவந்திருக்கேன்!
உங்களுக்கே தெரியும்! கைலயே வெச்சிருந்தா பேஜாரு!
எங்க வரணும்னு சொன்னால் கொண்டுவந்து கொடுத்துடுவேன்!" என்றான் அந்த குமார் பதட்டத்துடன்.
தாடையைத் தடவியவாறு சில நொடிகள் யோசித்தவன், "அண்ணன் பக்கத்துல இருக்கானேன்னு பாக்கறேன்!
அவன் போனதும் போன் பண்றேன்! என்னோட ஈ.சி.ஆர் கெஸ்ட் ஹவுஸ் தெரியும் இல்ல அங்க வந்திடு!" எனச் சொல்லி அழைப்பைத் துண்டித்தான் ஜவஹர்.
மறுபடியும் உள்ளே நுழைந்தவன் கைப்பேசியை உரியவனிடம் கொடுத்துவிட்டு, "வசந்த் பத்தி சொன்னாளா?" என அவன் கேட்க, "ப்ச்! அசர மாட்டேங்கறா ஜவா!" என்றான் திவாகர் சலிப்புடன்.
உடனே அவன் 'ம்..’என்றவாறு அவளை நோக்கி கை காட்டவும், அருகிலிருந்தவன் அவளை அறைய, அங்கேயே சுவர் ஓரமாகப் போய் விழுந்து அவள் அவர்களைச் சீற்றமாகப் பார்க்கவும், "இந்த லுக்கு விடுற வேலையெல்லாம் வேணாம்! சொல்லு வசந்த் எங்க!" என்றான் ஜவஹர்!
அவனுடைய நடையிலிருந்த வேறுபாட்டைக் கவனித்தவள் அருவருப்புடன், "தெரியாது!" என அழுத்தமாகச் சொல்ல, "டேய் அண்ணா! இவளை இப்படியே கொன்னு போட்டுட்டு போயிடலாம்!" என ஆத்திரத்துடன் சொல்ல,
"ப்ச்! இத்தனை வருஷமா தேடி இப்பதான் கண்டுபிடிச்சிருக்கோம்! அந்த கேமரா; செல்போன்; லேப்டாப் எல்லாமே முக்கியமா வேணும் டா! இல்லனா பெரிய பிரச்சினை ஆயிடும்!
ஏற்கனவே நீ செஞ்சதெல்லாம் போதும்; மறுபடியும் லூசுத்தனமா காரியத்தை கெடுத்துடாத!" எனச் சொல்லிவிட்டு, அருகிலிருந்தவனுடைய கைப்பேசியைப் பிடுங்கி நேரத்தைப் பார்த்தவன், "மணி இப்ப ஆறு ஆகுது; மறுபடியும் எட்டு மணிக்கு வருவேன்! வசந்த் எங்க இருக்கான்னு சொல்லிடு!
இல்லன்னா ஜவஹர் சொன்னதுதான் நடக்கும்!" என மிரட்டலாக சொல்லிவிட்டு "வாடா! உன்னை ட்ராப் பண்ணிட்டு போறேன்!" என்றவாறு அவன் அங்கிருந்து செல்ல எத்தனிக்க, கிட்டத்தட்ட பன்னிரண்டு லட்சம் பெறுமானமுள்ள போதை வஸ்துவுடன் குமார் என்பவனை அங்கே வரச் சொல்லி இருக்கும் காரணத்தால், அதைச் சொல்ல முடியாமல், "இல்ல நான் இங்கேயே இருக்கேன்! எனக்கு இப்ப வேற வேலை எதுவும் இல்ல!" என ஜவஹர் மழுப்பலாகச் சொல்லவும் கலவரமானவன், "ஏய் அறிவில்ல உனக்கு; உன் புத்தி மாறவே மாறாதா?
பொண்ணுங்க விஷயத்துல நீ திருந்தவே மாட்டியா!
இருந்திருந்து இப்பதான் உனக்கு கல்யாண ஏற்பாடு நடக்குது!
அந்த தீபன் ஏற்கனவே நம்ம பேர்ல கொலை காண்டுல இருக்கான்!
இந்த பொண்ணு மேல கைய கிய்ய வெச்சு தொலைஞ்சன்னா; பதிலுக்கு நேரம் பாத்து அவன் வேற எதையாவது செய்து வெக்க போறான்!
அடங்குடா!" என நீளமாகச் சொல்லி முடிக்க, முகம் கறுத்துப்போக, "ப்ச்.. அதெல்லாம் ஒண்ணும் இல்ல; கீழ இருக்கிற ரூம்ல ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கேன்!" என அவன் சொல்ல,
"பார்த்து அதிகமா ரெஸ்ட் எடுக்காத; டயர்ட் ஆகிட போகுது!" என நக்கலாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான் திவாகர்.
அங்கிருந்து அவளால் தப்பிக்க இயலாது என்ற நம்பிக்கையாலோ, அல்லது அங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் காரணத்தினாலோ எல்லோருமே அங்கிருந்து சென்றுவிட, அங்கே ஒருவரும் இல்லை என்பதை உறுதிப் படுத்திக்கொண்டு அந்த அறையின் கதவை உட்புறமாக தாளிட்டவள் புடவை தலைப்பால் தன்னை முழுவதுமாக போர்த்திக்கொண்டு, அங்கேயே இருக்கும் ஒரு சோபாவில் உட்கார்ந்தவாறு, கட்டாயம் அவளைத் தேடி தீபன் அங்கே வருவான் என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் அமைதியாக உறங்கிப்போனாள் மித்ரா!
சில நிமிடங்கள் கடந்த நிலையில் தடதடவென கதவு தட்டப்படும் சத்தத்தில் அவள் விழித்துக்கொள்ள, நீண்ட நேரம் உறங்கியதுபோல ஒரு எண்ணம் ஏற்பட்டது அவளுக்கு!
'மணி எட்டு ஆகிவிட்டது போலும்; திவாகர்தான் வந்துவிட்டான்' என்ற எண்ணத்துடன் தயங்கியவாறு அவள் கதவைத் திறக்க, ஒரு போர் வீரனைப் போன்ற தோற்றத்துடன் அங்கே நின்றுகொண்டிருந்தான் தீபன்.
மனம் முழுதும் மகிழ்ச்சியில் திளைக்க,முகம் முழுவதும் புன்னகை அப்பிக்கொள்ள, "எனக்குத் தெரியும் நீங்க வருவீங்கன்னு!" என்றவாறு தன்னை மறந்து அவனை அணைத்துக்கொண்டாள் வசுமித்ரா கண்களில் பெருகிய சந்தோஷ கண்ணீருடன்!
Comments