Poovum Naanum veru-28
இதழ்-28
"இது என்ன புது கதை?" என்றவர் மித்ராவை பார்த்து, "ஹேய் உங்க அப்பா எனக்கு எப்பவாவது ட்ரைவரா இருந்தாரா என்ன?" என ஏதும் தெரியாததுபோல் அதிசயிக்கும் குரலில் கேட்டார் பாரதி.
அவரது அந்த பாவனையில் சிரிப்பு வந்து விட அதை மிக முயன்று அடக்கிய மித்ரா, என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் இப்படியும் அப்படியும் தலையை ஆட்ட, "உங்க பொண்ணுக்கு இன்னும் ட்ரைனிங் பத்தல மேம்!" என தீபன் சத்தமாகச் சிரிக்க, கோபத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டார் அவர்.
அதற்குள் திலீப்பை சூழ்ந்திருந்த பத்திரிகையாளர்கள் சிலரின் பார்வை தீபன் மேல் விழ, அதை உணர்ந்தவராக மித்ராவை அங்கிருந்து இழுத்துச்சென்றார் பாரதி.
அதற்குள் அவனை நெருங்கி வந்த நிருபர் ஒருவர், "உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட் தீலீப் சார் மேரேஜ் அனௌன்ஸ் பண்ணிட்டார்! உங்க மேரேஜ் எப்ப?" எனக் கேட்டார்.
அனிச்சை செயல் போல அவரது பார்வை வசுமித்ராவை தொடர்வதை கவனித்தவன், "அடுத்தவங்க பெர்சனல் விஷயங்களை தெரிஞ்சிக்க உங்களுக்கு என்ன இவ்வளவு ஆர்வம் ம்ம்!” எனச் சற்று குத்தலாக ஆனால் சிரித்துக்கொண்டே சொன்னவன், “என் கல்யாணம் பிக்ஸ் ஆனா முதல்ல உங்க கிட்ட சொல்றேன் ஓகேவா!" என அழுத்தமாகச் சொல்லவிட்டு, அவருடைய மைக்கையும் அடையாள அட்டையையும் பார்த்தவன், "என் பிக் எதாவது ஒண்ணு வெளியில வந்தாலும் அப்பறம் உங்களுக்கு ஏற்படக்கூடிய சேதாரத்துக்கு கம்பெனி பொறுப்பில்லை!" என்று முடித்தான் தீபன் கிண்டலாகவே!
அதில் அடங்கியிருந்த மறைமுக எச்சரிக்கை புரிந்ததால் அந்த நிருபரின் முகம் போன போக்கைப் பார்த்துக்கொண்டே அவன் அங்கிருந்து திலீப்பை நோக்கி சென்றான்.
அவனது கோட் பாக்கட்டில் கைவிட்டு ஒரு சிறு நகைப் பெட்டியை எடுத்து அதை திலீப்பிடம் நீட்ட, அதில் கண்ணைப் பறித்த வைர மோதிரங்களைப் பார்த்தவன், "எப்ப மச்சான் வாங்கின? நான் மேரேஜ் பத்தி ஒண்ணுமே சொல்லலையே?" என அவன் அதிசயிக்க, "ஒரு சின்ன கெஸ்சிங்தான்! ஆனா பாதி சரி! பாதி தப்பு!" என தீபன் சொல்ல, அவன் சொல்லவருவது புரியவும், அதை கவனிக்காதவன் போல, "ஹேய் மாலு! இவரை தெரியும் இல்ல...?"
"எஸ்; மிஸ்டர் தீபன் தானே?! இவரைத் தெரியாமல் இருக்குமா?"அவன் முடிப்பதற்குள்ளாகவே சொன்னாள் மாளவிகா.
"ஓ மை காட்!" என்ற தீபன், "இவ்வளவு அழகான பெண்ணுக்கு என்னை தெரிஞ்சிருக்கே! ஐ ஆம் பிரிவிலிஜ்ட்!" என்றான் அவளைப் பாராட்டும் விதமாக.
"தேங்க் யூ அண்ணா! நான் அழகா இருக்கேன்னு அக்செப்ட் பண்ணதுக்கு! இது புரிய ஒருத்தருக்கு சில வருஷங்கள் ஆச்சு!" என அவள் திலீப்பை கிண்டல் செய்ய, "நீங்க ரொம்ப அழகுதான்! ஒத்துக்கறேன் மேடம்" என்றவாறு தீபன் பரிசளித்த மோதிரத்தை அவளுக்கு அணிவித்தான் திலீப்.
அவனுக்கான மோதிரத்தை அவளும் அணிவிக்க, சுற்றி இருந்த படக்கருவிகள் அந்த காட்சிகளைப் பதிவுசெய்து கொண்டன.
அப்பொழுது உடல் முழுதும் சரிகையிட்ட பட்டுப்புடவையில், நடமாடும் நகைக்கடை போலத் தோற்றமளித்த அவனுடைய மனைவியுடன் திவாகர் திலீப்பை வாழ்த்த அங்கே வரவும், சபை நாகரிகம் கருதி அவனிடம் ஒரு, "ஹை!" மட்டும் சொல்லிவிட்டு தனியே வந்தவன், எதோ எச்சரிக்கை உணர்வு தோன்ற அதன் பின்பு மறந்தும் மித்ராவின் அருகில் செல்லவில்லை தீபன்.
அவளையும் அவனுக்கு அருகில் செல்ல அனுமதிக்கவில்லை பாரதி.
தூரத்திலிருந்தே கண்களாலேயே மித்ராவை சுவைத்தவன், பஃபே முறையில் அங்கே கமகமத்துக்கொண்டிருந்த உணவு வகைகளை விழுங்கிவிட்டு, அவள் திலீப்பிடமும் பாரதியிடமும் என்ன சொல்லி அவர்களை தன் விருப்பத்திற்கு உடன்படச் செய்தாள் என மிர்தாவிடம் கேட்டு அறிந்துகொள்ளாமலேயே அனைவரிடம் சொல்லிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிச்சென்றான் தீபன்.
சில நிமிடங்களில் வசுமித்ராவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார் பாரதி!
***
அடுத்த நாள் காலை அனைத்து செய்தித்தாள்களிலும் திலீப் திருமண அறிவிப்பு பற்றிய செய்தி வெளியாகியிருந்தது.