top of page

Poovum Naanum Veru-25

Writer's picture: Krishnapriya NarayanKrishnapriya Narayan

இதழ்-25


'தீபா! எங்கேயோ போகணும்னு சொன்னியே; நேரம் ஆயிடுச்சு பார்; சீக்கிரம் கிளம்பு!' என அருணாவின் குரலில் கைப்பேசியில் அவன் பதிவு செய்து வைத்திருந்த அலாரம் அவனைத் துரிதப்படுத்த, அதில் நிகழ்காலத்துக்கு வந்தவன் அவன் மேற்கொண்டு வந்திருந்த பணியைக் கவனிக்கச் சென்றான் தீபன்.


மும்பையில் வேலைகள் முடிந்து அவன் சென்னை விமான நிலையத்தை அடைய மணி ஏழு ஆகியிருந்தது.


மேற்கொண்டு எந்த அலுவலக வேலையிலும் ஈடுபட மனமின்றி நேரே வீட்டிற்குச் சென்றவன், சாத்விகாவிற்காக அவன் வாங்கிவந்திருந்த பரிசுகளை அவளிடம் கொடுத்து அவளது மகிழ்ச்சியில் கலந்துகொண்டு பின் அனைவருடனும் சேர்ந்து இரவு உணவை முடித்து அவனுடைய அறைக்குள் நுழைந்தான்.


அப்பொழுது அவனது கைப்பேசி ஒலிக்க, "சொல்லு திலீப்!" என்றவாறு தீபன் அந்த அழைப்பை ஏற்க, "ஹாய் டா மச்சான்! மும்பை போய்ட்டு வந்துட்டியா?" என எதிர்முனையில் திலீப் கேட்க, "ம்ம்... ஜஸ்ட் இப்பதான்" என்றான் அவன் சோர்வான குரலில்.


"ஓஹ் சாரி! டயர்டா இருக்கியா! நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?" என திலீப் தயக்கத்துடன் கேட்க, "இட்ஸ் ஓகே! சொல்லு" என தீபன் சொல்லவும்,.


"நாளைக்கு என்னோட ஒரு நியூ ப்ராடக்ட் லாஞ்சிங் பார்ட்டி இருக்கு ஞாபகம் இருக்கா?" என்றவன், "ரிமைண்ட் பண்ணத்தான் கால் பண்ணேன்" என்றான் திலீப்.


"எஸ் டா! அபிஷியல் இன்விடேஷன் வந்துதே! கண்டிப்பா வரேன்!" என தீபன் சொல்ல, "மச்சான்! இது ஜஸ்ட் அபிஷியல் பார்ட்டி இல்ல! அதனால அம்மா; அப்பா; சரிகா; பாப்பா எல்லாரையும் அழைச்சிட்டு வா;


எங்க பேமிலி மெம்பெர்ஸ் எல்லாரும் அங்கதான் இருப்பாங்க!


நாளைக்கு ஒரு முக்கியமான அனௌன்ஸ்மெண்ட் கொடுக்கப் போறோம்! கேட்டால் உனக்கே ஷாக்கிங்கா இருக்கும்!" என திலீப் உற்சாக குரலில் சொல்ல, அந்த வார்த்தை அவன் மனதில் கலவரத்தை ஏற்படுத்தவும், "ஏய்! என்ன ஷாக்; சர்ப்ரைஸ்னு பில்ட் அப் எல்லாம் பலமா இருக்கு; என்ன மேட்டர்னு சொல்லு!" என தீபன் தன் படபடப்பை மறைத்துக்கொண்டு இயல்பாக கேட்க, "எல்லாத்தையும் கெஸ் பண்ணி கரெக்ட்டா கண்டுபிடிச்சு சொல்லிடுவ இல்ல! இதையும் கண்டுபிடிச்சு நாளைக்கு நேர்ல வந்து சொல்லு!" எனச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் திலீப்.


திருமண அறிவிப்பைப் பற்றிச் சொல்கிறானோ என்ற யோசனையில் 'விண்' என்று தெறித்த வலியில் அப்படியே தலையைப் பிடித்துக்கொண்டான் தீபன்.


***


சந்தோஷுடைய சித்தப்பா மகனின் திருமணத்திற்காக, வீட்டில் எல்லோருமே அதிகாலையிலேயே கிளம்பி வேலூர் சென்றுவிட, தேவையற்ற சிந்தனைகளிலிருந்து தப்பித்து ஓடி ஒளிந்துகொள்ள,அவன் நடத்திவரும் ஒரு பொறியியல் கல்லூரிக்குச் சென்ற தீபன், அங்கே வேலையில் நாள் முழுவதும் தன்னை மூழ்கடித்துக் கொண்டான்.


மாலை வீட்டிற்கு வந்தவன், ஒரு ஆடம்பர பார்ட்டியில் கலந்துகொள்ள ஏற்றவாறு பகட்டாகக் கிளம்பி திலீப் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்த நட்சத்திர விடுதிக்கு வந்தான் அவனைத் தவிர்க்க இயலாமல்.


அவன் அங்கே வந்து சேருவதற்குள்ளாகவே, 'இன்னும் எவ்வளவு நேரத்தில் இங்க வருவ?' என்ற கேள்வியுடன் நான்கு முறை அழைத்துவிட்டான் திலீப்.


ஆடம்பரத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த பார்ட்டி ஹாலுக்குள் தீபன் நுழையவும், அவனுக்காகவே காத்திருந்தவன் போன்று அவனை நோக்கி ஓடிவந்த திலீப், "வெல்கம்டா மச்சான்!" என்றவாறு அவனை உற்சாகமாக அணைத்துக்கொண்டான்.


பின், "உன் கிட்ட நேர்லதான் சொல்லணும்னு காத்துட்டு இருந்தேன் தீபன்! இந்த முடிவுக்காக நீ என் மேல கோவப்பட கூடாது!" என்ற பீடிகையுடன் ஆரம்பித்தவன், "இன்னைக்கு பார்ட்டில அப்பா என்னோட மேரேஜ் அனௌன்ஸ்மென்ட் கொடுக்கப்போறாங்க!


வசுந்தரா முடிவா சொன்னதுனாலதான் நான் இந்த ஏற்பட்டுக்கே சம்மதிச்சேன்!


ஒரு விதத்துல இது எல்லாருக்குமே; முக்கியமா தாத்தாவுக்கு ரொம்ப திருப்தி! அதனாலதான் உடனே சரின்னு சொல்லிட்டேன்!" என அவன் சொல்லிக்கொண்டிருக்க, தீபனுடைய மனம் வெகுவாக கனத்துப்பேனது. "கங்கிராட்ஸ் டா!" என்றுமட்டும் சொன்னான் மேற்கொண்டு அவனிடம் என்ன பேசுவது என்று புரியாமல்.


தீபனுடைய வழக்கமான உற்சாகம் அவனிடம் இல்லாதது போல் தோன்றவும், "என்ன தீபன் உனக்கு உடம்பு எதாவது சரியில்லையா! ஒரு மாதிரி டல்லா இருக்க" என திலீப் கேட்க, அவனுடைய மனதில் இருப்பது வெளிப்படையாகத் தெரிவதுபோல் நடந்துகொள்வது தீபனுக்கே நன்றாகப் புரியவும், தன் நிலையை எண்ணி அவனுக்கே கொஞ்சம் வெட்கமாக இருந்தது.


தன்னை சமாளித்துக்கொண்டு, "ப்ச்... ஒண்ணும் இல்ல ரெண்டு மூணு நாளா சரியான தூக்கம் இல்ல; அதனால இருக்கும்" என அவன் சமாளிப்பாகச் சொல்லிக்கொண்டிருக்க, தீபனை பார்த்துவிட்டு அவனை அருகே வரும்படி அழைத்தார் அங்கே சற்று தள்ளிப் போடப்பட்டிருந்த இருக்கையில் உட்கார்ந்திருந்த திவ்யபாரதி.


அருகில் அவருடைய அப்பாவும் அம்மாவும் உட்கார்ந்திருக்க, திவ்யபாரதியின் முகத்தில் ஒரு அமைதி தெரிந்தது. அவர் என்ன நினைக்கிறார் எனக் கணிக்கமுடியாமல், அவரை நோக்கிச் சென்றான் தீபன்.


"நான் சொன்னேன் இல்ல தீபன்னு; இவன்தான் அது!" என பாரதி அவனை அவர்களுக்கு அறிமுகப்படுத்த, நாகரிகமாக அந்த மூத்த தம்பதியை வணங்கினான் தீபன்.


"வாய் ஓயாம உன்னைப் பத்திதான் சொல்லிட்டே இருப்பாப்பா பாரதி! அதுக்கு ஏத்த மாதிரி நல்ல மரியாதையை தெரிஞ்ச பிள்ளையா இருக்க!" என்றார் திவ்யபாரதியின் அம்மா அதாவது திலீப்புடைய பாட்டி.


"பாரதி மட்டுமில்ல சுந்தரா! நம்ம திலீப்பும்கூட!" என்றவர், "சட்டுனு எடுத்தெறிஞ்சு பேசுற அவனோட குணத்துக்கு இவ்வளவு க்ளோஸ் ஃப்ரெண்ட்னு வேற யாருமே இல்ல!" என திலீப்புடைய தாத்தா தொடரவும், "ஐயோ! அவனை எதாவது சொல்லலேன்னா உங்களுக்கு பொழுதே போகாதே!" என்றார் பாட்டி, செல்ல கோபம் போன்று!


"இங்க நின்னோம் இவங்க சண்டைக்குப் பஞ்சாயத்து செய்யவே நமக்கு நேரம் பத்தாது!" என்றவாறு நாசூக்காக அவனது கையை பற்றி அவனை ஒரு ஓரமாகத் தனியே அழைத்துச்சென்றவர், "காலைல கால் பண்ணியிருந்தேனே ஏன் எடுக்கல?" எனக் கண்டன குரலில் கேட்டார் பாரதி.


முக்கியமான விஷயமாக இருக்கும் பட்சத்தில்தான் அவனைக் கைப்பேசியில் அழைப்பார் பாரதி. தவிர ஒரு டெக்ஸ்ட் மெஸேஜ் கூடச் செய்யமாட்டார் அவர்.


அதுவும் பெரும்பாலான அவர்களுடைய உரையாடல் நேரில் மட்டுமே இருக்கும்.


ஏதோ முக்கியமான விஷயம் என்பது புரியவும் உண்மையான வருத்தத்துடன், “டே ஃபுல்லா போனை சைலண்ட்ல போட்டிருந்தேன்! நிறைய மிஸ்ட் கால்ஸ்! அதுல உங்க கால மிஸ் பண்ணிட்டேன்! சாரி!” என்ற தீபன், “காலைல காலேஜ்ல ஒரு சின்ன பங்க்ஷன்; அது முடிஞ்சதும் செகண்ட் இயர் மேக்கட்ரானிக்ஸ் கிளாஸ்ல லெக்ச்சர் கொடுத்தேன் அதனாலதான்!”என்றான் அவனது சூழ்நிலையை விளக்கும் விதமாக.


"இட்ஸ் ஓகே! திலீப் உன்கிட்ட எதாவது சொன்னானா!" என அவர் கேட்க, "ம்ம்... சொன்னான்! சொன்னான்! அவன் என்ன உங்களை மாதிரியா!" என்றவன், எங்கேஜ்மென்ட் ஃபங்க்ஷனுக்கு இன்னும் த்ரீ டேஸ் இருக்கு இல்ல; அதுக்குள்ள ஏன் இந்த திடீர் முடிவு?" எனக் கேட்டான் தீபன் உணர்வற்ற குரலில்.


தெரியும் என அவன் சொன்ன காரணத்தால், "எல்லாம் உன்னாலதான்; இந்த வசு கிட்ட என்ன பேசின; அந்த பொண்ண என்ன சொல்லி மிரட்டின; அவ ஏன் இவ்வளவு அவசரமா இப்படி இரு முடிவுக்கு வந்தா?" என அவர் கோபத்துடன் அவனுடைய தெளிவற்ற முகத்தைப் பார்த்துக்கொண்டே கேட்கவும், 'அவளை பற்றி தான் நினைத்தது தவறோ? அந்த கீ செயினை அவளிடம் அப்படி திரும்ப கொடுத்திருக்கக்கூடாதோ? அதனால்தான் அவள் அவசரமாக இப்படி ஒரு முடிவுக்கு வந்தாளோ?' என்ற எண்ணம் தோன்ற, என்னைக் கேட்டால் எனக்கு என்ன தெரியும்! அவளையே கேக்க வேண்டியதுதானே" என்றவன், "நான் ஏன் அவளை மிரட்டணும்! அப்படி எந்த ஒரு அவசியமும் எனக்கு இல்ல" என்றான் தீபன் காரமான குரலில்.


அப்பொழுது பிங்க் நிற பார்டருடன் கூடிய ஆரஞ்சு நிற டிசைனர் பட்டுப்புடவையில், அதற்கு ஏற்றவாறு அதே நிறத்தில் ஒரு பெரிய ஜிமிக்கி செவிகளில் அசைந்தாட, மிக எளிமையான ஒப்பனையுடன் அந்த ஹாலின் உள்ளே நுழைந்த வசுமித்ரா நேராக அவர்களை நோக்கி வந்தாள்.!


அவளது முகத்தில் தெரிந்த தெளிவும் அவளது நடையில் தெரிந்த துள்ளலும் ஏமாற்றத்தையும் கோபத்தையும் அவனுக்குள் ஒரு சேர விளைவிக்க, அவளைத் தவிர்க்கும் பொருட்டு வேகமாக அங்கிருந்து சென்ற தீபன் தனியே போடப்பட்டிருந்த ஒரு இருக்கையில் போய் அமைதியாக உட்கார்ந்துகொண்டான்.


அவனை ஒரு புரியாத பார்வை பார்த்துக்கொண்டே, திவ்யாபாரதியுடன் அவரது பெற்றோரை நோக்கிச் சென்ற மித்ரா, பரஸ்பர அறிமுகத்திற்குப் பின் அவர்களிடம் இன்முகமாகப் பேசிக் கொண்டிருக்க, கண்களை அகற்றாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் தீபன்.


அவன் தன்னை பார்ப்பதை உணர்ந்து அவள் அவனை திரும்பி பார்க்க, அதே நேரம் அவளை நெருங்கி வந்த திலீப் அவளிடம், " வெல்கம் வசு! யூ ஆர் லுக்கிங் ஹாண்ட்ஸம்!" என்றவன், “இப்ப உனக்கு ஓகே தான வசு; நீ ஹாப்பிதான!?" எனக் கேட்க, "டபுள் ஓகே! ரொம்ப ரொம்ப ஹாப்பீ!" என்றாள் அவள் உண்மையான மகிழ்ச்சியுடன்.


"நடந்து நடந்து! நான் சொன்னதையே கேக்கலன்னா நீ யார் சொல்லி கேக்க போற" என பாரதி அலுத்துக்கொள்ள, "பாரதிம்மா! இதை பத்தி நேத்தே தெளிவா சொல்லிட்டேன்! ஆமாம்!" என்றாள் மித்ரா சலுகையுடன்.


அவர்கள் பேசுவது புரியாவிட்டாலும், எல்லோரிடமும் காணப்பட்ட நெருக்கமும் உற்சாகமும் தீபனின் மனதைக் கிழித்தது.


ஒரு சாதாரண விஷயத்துக்குக் கூட யாரிடமும் தோற்க விரும்பாதவன், அவளை மொத்தமாக இழக்கப்போகிறோம் என்ற ஏமாற்றத்தில் நெருப்பின் மேல் அமர்ந்திருப்பவன் போல் உட்கார்ந்திருக்க, உபசரிப்புக்காக அவனுக்கு நேரே நீட்டப்பட்ட மதுபான கோப்பைகளில் ஒன்றை எடுத்து கொஞ்சம் கூட யோசிக்காமல் மொத்தமாக வாய்க்குள் கவிழ்த்துக்கொண்டான் தீபன்.


0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page