top of page

Poovum Naanum Veru - 24

இதழ்-24


அடுத்த ஆண்டிற்கான படிப்பைத் தொடர வேண்டி சரிகாவைச் சென்னையிலேயே ஒரு கல்லூரியில் சேர்த்தனர்.


அமைதியாகக் கல்லூரிக்குச் சென்றுவரத் தொடங்கியிருந்தாள் அவள்.


அதைப் பார்க்கும்பொழுது சரிகாவின் மன காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆற தொடங்கியிருப்பது போல் தோன்றினாலும் புதியவர்களைப் பார்த்தால் அதீதமாகப் பயம் கொள்வது, கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு மவுனமாகிவிடுவது, எங்கேயோ வெறித்துக்கொண்டே தனிமையில் உட்கார்ந்திருப்பது, தனக்கு ஒரு நல்ல எதிர்காலமே இல்லை என்பதைப் போன்ற அவளது பேச்சுக்கள் எல்லாம் அவள் அதிலிருந்து வெளிவரவேயில்லை என்பதை எல்லோருக்கும் புரியவைத்துவிடும்.


அவன் பெற்றிருந்த மதிப்பெண் காரணமாக, படிப்பு முடிந்த உடனேயே ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட, அமெரிக்கா சென்றுவிட்டான் சந்தோஷ்.


அவனுடைய இந்த செய்கை தீபனுக்கே கூட கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. காரணம் இந்திய ராணுவத்திலோ அல்லது விண்வெளி துறையிலோ விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதுதான் இருவருக்குமே லட்சியமாக இருந்தது.


அதற்கான தேர்வுகளுக்கும் படித்துக்கொண்டுதான் இருந்தனர் இருவரும்.


தீபனின் மனநிலை இப்படி மாறிப்போயிருக்க, அவனது பாதைதான் மாறிபோனதென்றால், சந்தோஷ் ஏன் மாறவேண்டும்.


பெற்றவர்களுக்கு ஒரே பிள்ளை சந்தோஷ். அவனுடைய அப்பா அம்மா இருவருமே நல்ல வேலையில் இருக்க, பணத்திற்கும் எந்த குறைவுமில்லை. அப்படி இருக்கும்போது சந்தோஷ் ஏன் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தான் எனக் குழம்பினான் தீபன்.


அதை அவனிடம் நேரடியாகவே கேட்டுவிட, "ப்ச்.. இங்க நடக்கற எல்லாத்தையும் பார்க்கும்போது; நம்ம சமூகத்துமேல எனக்கு நம்பிக்கையே போச்சு!" என ஒரே வரியில் பதில் வந்தது அவனிடமிருந்து. தான் பட்ட பாட்டை அவன் நேரிலிருந்து பார்த்ததால் வந்த மனநிலை என்பது புரிய அதை அப்படியே ஏற்றுக்கொண்டான் தீபன்.


***


புஷ்பநாதனுடைய பலம், அவன் ஊழல் செய்து குவித்துக்கொண்டிருக்கும் சொத்துக்கள்தான் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது தீபனுக்கு.


இணையதளத்தில் அழகாக வலை விரித்துக் காத்திருக்க, வெளிநாட்டில் சேமித்து வைத்திருக்கும் அவனுடைய கருப்புப்பண வங்கி கணக்குகள்; அவனுடைய பினாமிகள் பற்றிய தகவல்கள்; அவனுடைய வியாபார முதலீடுகள்; அவனுடைய அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள்; முக்கியமாக அவன் செய்துவரும் கல்வி நிறுவனங்களின் மூலம் அவன் கொள்ளையடிக்கும் பணத்தின் விவரம் என அனைத்தும் தீபனிடம் சிக்கியது.


முதல் கட்டமாக புஷ்பநாதனுடைய கருப்புப் பணத்தின் ஒரு மிகப்பெரிய பெரிய தொகையைக் கைப்பற்றி, தன் நண்பர்கள் சிலருடைய துணையுடன் திட்டமிட்டு அதை முதலீடு செய்து தன் வியாபார சாம்ராஜ்யத்தை நிறுவினான் தீபன்.


ஆனாலும் அவன் முக்கியமாகக் குறி வைத்து அழிக்க நினைத்தது, அவர்களுக்கு பணத்தைக் கணக்கின்றி கொண்டு வந்து குவிக்கும் புஷ்பநாதனுடைய கல்வி நிறுவனங்களைத்தான்.


அதை நோக்கிய அவனது அடிகளையும் வைக்கத் தொடங்கியிருந்தான் தீபன்.


சில மாதங்கள் இப்படியே செல்ல, அந்த பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட மற்றொருவனும் தற்கொலை செய்துகொள்ள, "அண்ணா! ஒருத்தன் செத்துப்போன போது அது தானா நடந்ததுன்னு நினைச்சேன்!


ஆனா இப்ப எனக்கு அப்படி தோணல! நீங்க எதாவது செய்யறீங்களா?" என சரிகா அவனிடம் கேட்க, அதற்குப் புன்னகைத்தவன், "தானா எல்லாமே நடக்கும்னு நாம கையை கட்டிட்டு வேடிக்கை பார்த்துகிட்டே இருந்தா; இங்க ஒண்ணுமே நடக்காது குட்டிம்மா!" என்றவன், "இனிமேல் இதைப் பத்தி என்னிடம் எந்த கேள்வியும் கேக்காத" எனச் சொல்லிவிட்டான் தீபன்.


திடீரென்று ஓர் நாள் காவல்துறையின் முக்கிய பதவியிலிருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரி திவ்யபாரதி அவர்களிடமிருந்து அவரது காரியதரிசி மூலம் உடனே தன்னை நேரில் வந்து பார்க்கச்சொல்லி அவர் தகவல் அனுப்பவும், வியந்து போன தீபன், சென்னையிலேயே அவர் தங்கி இருந்த காவல்துறையினருக்கான விருந்தினர் விடுதிக்கு அவரை சந்திக்கச் சென்றான்.


ஒரு முக்கிய கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக அவர் இங்கே வந்திருப்பது தெரிந்தது.


அங்கே சென்றதும், அவருக்கு எதிரில் நிமிர்வுடன் அமர்ந்து, பணிவுடன் அவன் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள, கொஞ்சமும் சுற்றிவளைக்காமல் எடுத்த எடுப்பிலேயே, "அந்த சுகன் செத்துப்போன போது அது தானா நடந்ததுன்னுதான் நினைச்சேன்!


பட் அந்த சேலம் ரியல் எஸ்டேட் தனசேகரன் சன் தூக்கு போட்டுட்டு இறந்தபிறகு எனக்கு அப்படி தோணல! நீ....ங்க எதாவது செய்யறீங்களா மிஸ்டர் தீபன்!" என சரிகா கேட்ட அதே கேள்வியை வேறு விதமாக அவனிடம் கேட்டார் திவ்யபாரதி!


சரிகாவிடம் எளிதாகப் பதில் சொல்ல முடிந்ததே தவிர அப்படி ஒரு பதிலை திவ்யபாரதியிடம் சொல்ல இயலவில்லை அவனால்!


திகைப்புடன், 'இவங்க ஸ்டேட் கிரைம் டிபார்ட்மென்ட் கிடையாதே! சென்ட்ரல்ல ஏதோ பெரிய போஸ்டிங்ல இல்ல இருக்காங்க!


அந்த ஜவஹர்க்காக அன்-அபிஷியலா இன்வால்வ் ஆகுறாங்களா?' என்ற யோசனையில் மௌனமாக இருந்தவன், அவரது நேர்மையான குணம் நினைவுக்கு வர, அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு, "அவங்க ரெண்டு பேருமே சூசைட் பண்ணிகிட்டாங்க இல்ல! நான் கூட டீவில பார்த்தேன்;


ஆனா நான் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் ஆளு மேம்; அவங்களுக்கும் எனக்கும் பர்சனலா என்ன இஷ்யூஸ் இருக்க முடியும் சொல்லுங்க!


இன்ஃபேக்ட் அவங்கள நான் நேர்ல பார்த்ததுகூட கிடையது; என் கிட்ட போய் இப்படி ஒரு கேள்வி கேக்கறீங்க?" என அவன் இயல்பாகப் பேசவும், அசந்தே போனார் திவ்யபாரதி.


அவரது புருவம் மேலே உயர, "ப்ரில்லியண்ட்!" என அவனை மெச்சியவர், "நான் நினச்சிதைவிட நீ ரொம்ப புத்திசாலி தீபன்! ஐ லைக் யூ!" என்றவர், "ஷேர் மார்க்கெட்ல இப்ப உன்னோட வால்யூ அரௌண்ட் ஒன் நைண்டீ க்ரோர்ஸ்! ரைட்!


ப்ராபர்டீஸ் எதுவும் இதுவரைக்கும் நீ வாங்கலைன்னாலும், உன்னோட பேங்க் அக்கௌண்ட்ல ஒரு தர்டி சி இருக்கு! அதுவும் இதை எல்லாமே நீ ரொம்ப சிம்ப்பிளா சம்பாதிச்சிருக்கறது ஓவர் தி பீரியட் ஆஃப் போர் டு சிக்ஸ் மந்த்ஸ்; அவ்வளவுதான?!


நீ ஒரு சாதாரண மிடில் க்ளாஸ் ஆளா தீபன்!" அவர் நிதானமாகக் கேட்கவும், உண்மையிலேயே அதிகமாக வியந்தவன், "இன்ஃபேக்ட் இதெல்லாம் என்னோட அம்மா அப்பாவுக்கு கூட தெரியாதது!


இன்னும் சொல்லனும்னா என்னை மொத்தமா க்ளோஸ் பண்ணனும்னு நினைச்சிட்டு, என்னையே வாட்ச் பண்ணிட்டு இருக்கற என்னோட எதிரிகளுக்குக்கூட தெரியாது!


உங்களுக்கு எப்படி?" என கேட்டான் தீபன் உள்ளே போன குரலில்.


அதற்கு சத்தமாகச் சிரித்தவர், "நான் ஒரு உண்மையான போலீஸ்காரி கண்ணு!


எத்தனை பேர் கண்ணுல விரலை விட்டு ஆட்டியிருக்கேன்!


எத்தனை டிபார்ட்மென்ட் பார்த்திருக்கேன்!


எவ்வளவு பாலிடிக்ஸ் ஃபேஸ் பண்ணியிருக்கேன்! சிம்பிளா என்ன போய் இப்படி ஒரு கேள்வி கேட்டுட்ட!" எனக் கர்வத்துடன் சொன்னவர், "நீதான் பயங்கர புத்திசாலியாச்சே! நீதான் சொல்லேன் எனக்கு எப்படி தெரிஞ்சிருக்கும்னு" என்றார் பாரதி சவாலாக.


ஆயிரம் கேள்விகள் மூளைக்குள் குடைய, சில நொடிகள் யோசித்தவன், "யா! ஐ காட் இட்!" என்றான் தீபன் ஒரு துள்ளலுடன்.


தொடர்ந்து, "ஹோம் மினிஸ்டர் அஞ்சலி தீக்ஷித்; உங்களோட பெஸ்ட் ஃப்ரெண்ட் இல்ல?! நான் கேள்விப்பட்டிருக்கேன்!


அப்படினா! அன்னைக்கு என்னை; எங்க குடும்பத்தை அந்த இக்கட்டுல இருந்து மீட்டது நீங்களா!


ஓ மை காட்!" என நெகிழ்ந்தவன், "அந்த நேரம் மட்டும் நீங்க அந்த உதவியை செய்யாம இருந்தீங்கன்னா; நான் இப்ப உயிரோட இருந்திருப்பேனான்னே தெரியல!" என முடித்தான் அவன்.


"பரவாயில்ல! உண்மையிலே நீ புத்திசாலிதான்; கண்டுபிடிசுட்ட!


ஆனா அந்த புஷ்பநாதனும் அவனோட மகன்களும் இன்னும்கூட என்னைத் தேடி சுத்திட்டு இருக்காங்க" என்றார் அவர் கிண்டல் தொனிக்க.


"ஆனா அன்னைக்கு யார் எங்களுக்கு ஹெல்ப் பண்ணாங்கன்னு தெரியலன்னாலும்; என்னைக்காவது அவங்கள கண்டுபிடிச்சு நன்றி சொல்லணும்னு நினைச்சிட்டே இருந்தேன் மேம்!


எப்படி ட்ரை பண்ணாலும் எனக்கு ஒரு க்ளூ கூட கிடைக்கல!


இன்னும் சொல்ல போனா அஞ்சலி மேடம்ம நேரில் சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு நாலு மாசமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்னா பார்த்துக்கோங்க!" என்றான் தீபன்.


"ஹா! ஹா!" எனச் சிரித்தவர், "இதெல்லாம் வெளிய தெரியவேண்டாம்னு நினைசேன்ப்பா! உன்னை இப்படி நேரில் மீட் பண்ற ஐடியாவெல்லாம் எனக்கு சுத்தமா கிடையாது!" என்றவர், "அந்த சூழ்நிலையில என்னால ஓரளவுக்கு உங்கள காப்பாத்த முடிஞ்சுதே தவிர, அந்த கிரிமினல்ஸ ஒண்ணுமே பண்ண முடியல!


அதுக்கு காரணம் அவங்களுக்கு அந்த கட்சில இருக்கற செல்வாக்கு!


அவங்க உன்னை உயிரோட விடறதுக்கு கேட்ட விலை; அந்த கேஸை இதுக்கு மேல தோண்டக்கூடதுங்கறதுதான்! அப்ப இருந்த சூழ்நிலைல அதை அப்படியே விட்றத தவிர வேற வழி தெரியல!


ஆனா என்னால அதை அப்படியே சும்மா விட முடியல! எதாவது செய்யணும்னு உள்ளுக்குள்ள குத்திகிட்டே இருந்தது! அவங்க எல்லாரையும் கண்காணிச்சிட்டேதான் இருந்தேன்!


அப்பறம் இந்த ரெண்டு ஸ்யூஸைட் பத்தி டிவீல பார்த்ததும் என்ன நடந்ததுன்னு விசாரிக்க சொன்னேன். கிளியர் வ்யூ கிடைக்கலன்னாலும்; அவங்க ரெண்டுபேருமே கொஞ்சநாளா சைக்காலஜிக்கலா அஃபெக்ட் ஆகியிருந்தாங்கனு தெரிஞ்சுது!


அப்பறம் அந்த ஜவஹரையும்; அவங்க கூட சுத்திட்டு இருந்த தங்கம்; அதான் அந்த ஏரியாவோட அவங்க கட்சி மாவட்ட நிர்வாகி சந்தோஷம் இருக்கார் இல்ல அவரோட மகன்; அவங்க ரெண்டுபேரையும் வாட்ச் பண்ண சொன்னேன்!


டோட்டலா ஆளே மாறிட்டாங்களாமே! என்னவோ வித்யாசமா நடந்துக்கறாங்கன்னு கேள்விப்பட்டேன்!


ஆனா இதெல்லாம் ஏதோ தானா நடக்கற மாதிரி தெரியல! பின்னால யாராவது இருக்காங்களானு பார்த்தால், உன்னைத் தவிர வேற யார்மேலயும் எனக்கு சந்தேகம் வரல!


ஒன் வீக்கா உன்னை வாட்ச் பண்ணதுல; நீ என்ன செய்யறன்னு எக்ஸாக்ட்டா தெரியலைன்னாலும்; பக்கவா பிளான் பண்ணி ஏதோ செய்யறன்னு மட்டும் புரிஞ்சது!


என்ன நடந்தா என்ன; நாம சேஃபா இருந்தா போதும்னு நினைக்கறவங்களுக்கு நடுவுல நீ டிஃபரெண்டா தெரியவும்; எனக்கு உன்னை நேரில் பார்த்தே தீரணும்னு தோணிப்போச்சு!


இதோ பார்த்துட்டேனே!" என்றார் திவ்யபாரதி குதூகலத்துடன்.


"யார் சொல்லி எங்களுக்கு உதவி செஞ்சீங்க? அந்த வசந்தை பற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா?" என்ற தீபனின் இரண்டு கேள்விகளுக்கும், "தெரியும்! ஆனாலும் சொல்லமாட்டேன்!


இது ரெண்டுக்குமே எப்பவுமே என் கிட்ட பதிலை எதிர்பார்க்காதே!" என உறுதியாக மறுத்துவிட்டார் பாரதி.


அந்த பதில் அவனுக்கு உவப்பாக இல்லாமல் போனாலும் அவர்மீது ஏற்பட்டிருந்த மரியாதை காரணமாக அதை அப்படியே விட்டுவிட்டான் தீபன்!


'என்னதான் உயர் பதவிகளை வகித்தாலும், ஒரு வட்டத்தை தாண்டி எந்த ஒரு நன்மையையும் சுதந்திரமாக செய்ய முயவிலையே!


பல சந்தர்ப்பங்களில் மனசாட்சியை மரத்துப்போக வைத்துவிட்டு ஆட்சி அதிகாரத்திற்குக் கட்டுப்பட வேண்டியதாக இருக்கிறதே' என்ற மன உளைச்சலில் இருப்பவருக்கு தீபன் செய்வதுதான் சரி என்ற எண்ணம் தோன்ற, அதன்பின் அவனது ஒவ்வொரு செயலுக்கும் அவர் அவனுக்குப் பக்கபலமாகவே நின்றார் எனலாம்!


தீபனை பொறுத்தவரை திவ்யபாரதிமேல் அளவுகடந்த மதிப்பும் மரியாதையும் அன்பும் நட்பும் நன்றி உணர்வும் உருவாகியிருந்தது.


சில சந்தர்ப்பங்களில் பெற்றோர் சொன்னால் கூட கேட்காமல் தான் நினைத்ததைச் செய்பவன், பாரதி சொன்னால் மட்டும் மறுபேச்சின்றி அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வான்!


இருவருக்கும் இடையே ஒரு நல்ல பிணைப்பு உருவாகியிருந்து.


அந்த பிணைப்பின் பயனாக உருவானதுதான் டீ.பீ. லீக்ஸ்!


ஒரு சிறு வட்டத்துக்குள் இல்லாமல், எங்கெங்கெல்லம் குற்றங்கள் திவ்யபாரதியின் கண்ணில்படுகிறதோ; அங்கெல்லாம் படரத் துவங்கியது தீபனின் இருண்ட வலை. பாலியல் குற்றம் புரிபவர்கள், லஞ்ச ஊழல் பேர்வழிகள், பொருளாதார குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எனப் பலரும் அதில் சிக்கித் தவித்தனர். நாளடைவில் டீ.பீ என்ற பெயரே பலரை பெரும் பீதியில் ஆழ்த்தியிருந்து!


அந்த சந்தர்ப்பத்தில்தான் திவ்யபாரதி மூலமாக அறிமுகமாகி, தீபனுக்கு நல்ல நண்பனாகவும் ஆகிப்போனான் திலீப்.


***


புஷ்பநாதனின் கருப்புப் பணத்தை முதலீடாகக் கொண்டு அவன் தொழில் தொடங்கினாலும், அவனுடைய புத்திசாலித்தனமும், அவனுடைய உழைப்பும் அவனை உயர உயரக் கொண்டு சென்றது.


அவன் தொடங்கிய கல்வி நிறுவனங்கள், அதன் தரமான செயல்பாடுகளால் வேகமாக அதிக கிளைகளுடன் வளர்ந்துகொண்டே போக, நடத்த இயலாமல் புஷ்பநாதன் கைவிட்ட கல்வி நிறுவனங்களைக் கூட கைப்பற்றி தனது நிறுவனங்களுடன் இணைத்துக்கொண்டான் தீபன்.


ஜவஹர் தன் நிலையிலேயே உழன்றுகொண்டிருக்க; திவாகரும் புஷ்பநாதனும் தீபன் மேல் ஆத்திரத்தில் புழுங்கிக்கொண்டிருந்தனர்.


அவனுக்கு எதிராக ஒரு சுண்டுவிரலைக் கூட அசைக்க இயலவில்லை அவர்களால். அந்த அளவிற்கு அழகாக தன் வியூகங்களை வகுத்திருந்தான் தீபன்.


***


இதற்கிடையில் சரிகா அவளுடைய இறுதி ஆண்டின் படிப்பை முடித்திருக்க அந்த சமயம், அமெரிக்காவிலிருந்து விடுப்பில் வந்திருந்த சந்தோஷ் அவனுடைய பெற்றோர்களுடன் அவர்கள் வீட்டிற்கு வந்து நேரடியாகவே அவளைப் பெண் கேட்டான்.


முதலில் அவள் மறுக்கவும், அவளைத் தனிமையில் சந்தித்த சந்தோஷ், "இது உனக்கு வாழ்க்கை கொடுக்கவோ இல்ல பரிதாபப் பட்டோ நான் எடுத்த முடிவு இல்லை!


நான் எந்த ஒரு தியாகமும் செய்யறதா நினைக்கல!


இப்படி ஒரு சம்பவம் நடக்கறதுக்கு முன்னாலேயே, நான் லைஃப்ல செட்டில் ஆன உடனே உங்க வீட்டில் வந்து பெண் கேட்கும் எண்ணத்தில்தான் இருந்தேன்!


முதலிலிருந்தே எனக்கு உன்னைப் பிடிக்கும்! அதுதான் முக்கியமான காரணம்னாலும் அதைவிட முக்கியமான காரணம் தீபனோட எனக்கு இருக்கும் ஃப்ரெண்ட்ஷிப்த்தான்!


அவனை மாதிரி ஒரு ஒரிஜினல் பீஸை எங்கேயும் பார்க்கவே முடியாது!


எப்பவுமே அவன்கூடவே இருக்கணும் என்கிற சுயநலமும் இந்த எண்ணத்துக்கு ஒரு காரணம்" என்றவன், "நான் இன்னும் ஃபோர்ட்டி டேஸ் இங்க இருப்பேன்! அதுக்குள்ள முடிவை சொல்லு! கல்யாணத்தை சிம்ப்பிளா முடிசிட்டு உன்னை என் கூடவே கூட்டிட்டு போயிடுவேன்!" எனத் தெளிவாக அவளிடம் சொல்லிவிட்டுப் போனான் சந்தோஷ்.


அதன் பிறகும் கூட தெளிவில்லாமல் முரண்டு பிடித்தவளை அருணாவும் தீபனும் கொஞ்சி, கெஞ்சி, மிரட்டி சம்மதிக்கவைத்து ஒருவழியாக அந்த திருமணத்தை நடத்தி முடித்தனர்.


அதன்பிறகு சந்தோஷுடன் அமெரிக்கா சென்றவள், அவனுடைய அக்கறை கலந்த அன்பினாலும் முதிர்ச்சியான நடத்தையினாலும், பக்குமான அணுகுமுறையாலும் கொஞ்சம் கொஞ்சமாக தன கூட்டை விட்டு ஒரு இயல்பான வாழ்க்கைக்கு திரும்பினாள் சரிகா!


ஆனால் கருவுற்ற சமயம்கூட தாய்நாடு திரும்ப அவள் உடன்படவே இல்லை! அருணாவும் அரங்கனும்தான் அங்கே சென்று அவளையும் குழந்தையையும் கவனித்துக்கொண்டார்கள்.


***


எல்லாம் நினைத்தபடி சென்றுகொண்டிருக்க, முதன்முதலில் வசுவை அந்த வீடியோவில் பார்த்ததும் தீபனுடைய எண்ணமெல்லாம், 'எதிர்காலத்தில் இதுபோன்ற ஆசிரியர்கள் அரசுப்பள்ளிகளில் உருவானால் அவனுடைய கல்வி வியாபாரம் பெரிதாக அடிவாங்கும்!


அந்த வசுந்தரா அதற்கு அடிகோலுகிறாள்!' என்பதாகவே இருந்தது. அதைத் தாண்டி அவன் வேறெதுவும் யோசிக்கவில்லை!


ஆனால் திவ்யபாரதியின் வீட்டில் அவளை நேரில் பார்த்ததும், அனைத்தையும் கடந்த ஒரு ஈர்ப்பு அவளிடம் உருவானது தீபனுக்கு!


அதைவிட அன்று அவள் கேட்ட உதவிக்காக அவனை விடுத்து பாரதி திலீப்பிடம் அதனை பரிந்துரைத்தது அவனுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை.


அடுத்த நாளே, திலீப்பின் அலுவலகத்தில் அவளைப் பார்த்ததும், அவளது படபடப்பை ரசித்தவாறு, அவளுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் ஆராந்துகொண்டிருதான் தீபன். அவளுடைய பார்வை தன்னையே தொடர்வதை உணர்ந்தவன், அது சொல்லும் செய்தியைப் படிக்க முடியாமல் திணறிப்போனான்.


அவள் அங்கிருந்து சென்றதும், 'கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது இவளோடதான்னு முடிவே பண்ணிட்டேன்!' என திலீப் சொன்னதற்குக் கூட, அவளிடம் அவனுக்கு உண்டாகியிருந்த ஈடுபாடு, 'அவ உனக்கு செட் ஆக மாட்டா!' என்று அவனைச் சொல்லவைத்தது.


'அவள் வேண்டாம்!' என்கிற ரீதியில் திலீப்பிற்கு அவன் சொன்ன புத்திமதி யாவும் பயனற்றதாக போனது.


தொடர்ந்து வந்த நாட்களில் திவ்யபாரதி கூடுமான வரையில் வசுவை அவனிடமிருந்து தள்ளி நிறுத்தவே முயன்றுகொண்டிருக்க, அதன் காரணத்தை ஆராயும் பொருட்டு, அவளைப் பற்றிய தகவல்களை ஆராய்ந்தான் தீபன்! அது வசந்த்திடம் போய் முடியவே, வசுவைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு அவனால் வர முடியாமல் போனது.


அவளுடைய கைப்பேசியை 'ஸ்பை வேர்' மூலம் வேவு பார்க்கத் தொடங்க , அவள் அந்த இடுகாட்டில் எடுத்த காணொளி அடுத்த நொடியே அவனிடம் சிக்கியது.


அவள் ஆபத்தில் இருக்கிறாள் என்பதை உணர்ந்து பதறி அவன் அவளைத் தேடி வர, அவள் பத்திரமாக மருத்துவமனையில் இருக்கிறாள் என்பதை அறிந்தவன், அந்த காணொளியை இணையதளத்தில் வெளியிட்டான்!


அவளுடைய நல்ல குண இயல்பு அவனுக்குப் புரியவே, அவனுடைய மனது அவளையே சுற்றிவர, அதை உணராமல், அவனுக்கு வசு யார் என்பது தெரிந்துவிட்டது என்கிற பதட்டத்தில் அவசரம் அவசரமாக திலீப்புடன் அவளுக்கு திருமணத்தை நிச்சயித்துவிட்டார் திவ்யாபாரதி!


ஆனாலும் அவளுடைய மனநிலையைக் கணிப்பதற்காகத்தான், திலீப் மூலம் வசுமித்ராவை அந்த நட்சத்திர விடுதிக்கு வரவழைத்தான் தீபன். என்னதான் அவள், 'எனக்குச் சம்மதம்' எனச் சொன்னாலும், அவன் எண்ணியதுபோல் முழுமனதுடன் அந்த திருமணத்திற்கு அவள் சம்மதிக்கவில்லை என்பது அவளுடைய நடவடிக்கைகள் மூலமாக அவனுக்கு நன்றாகவே விளங்கியது. அதுவும் அந்த யானை கீ செயின் அவனுக்குள் பல கேள்விகளை எழுப்பியது.


திவ்யபாரதியை துன்பப்படுத்தி அந்த திருமண ஏற்பாட்டை அவன் தடுக்க விரும்பவில்லை; ஆனால் வசந்த் பற்றிய உண்மையும் அவனிடம் இங்கும் சரிகாவின் காணொளிகளும் அவனுக்கு தேவையாக இருந்தது.


அதனால்தான் வசுமித்ராவின் தன்மானத்தை சீண்டி, அவை அனைத்தையும் அவனிடம் கொண்டுவந்து கொடுக்கும்படியான நிலைக்கு அவளை கொண்டுவந்தான் தீபன் தன் பேச்சு சாதுர்யத்தால்.


அவனைப் பொறுத்தவரை அது அவளுடைய நேர்மைக்கு அவன் வைத்த ஒரு சோதனையும் கூட.


ஆனால் அதையும் கடந்து, வசந்துடைய கணினி மற்றும் அனைத்து பொருட்களுடனும் அவள் அவன் முன் வந்து நிமிர்வாக நின்றபொழுது, அவன் வைத்த சோதனையில் ஜெயித்தது வசுமித்ரா இல்லை அது தீபனேதான்!


அதனாலேயே தன்னை மொத்தமாக அவளிடம் கொடுத்துவிட்டு மும்பைக்கு வந்திருந்தான் தீபன் உறுதியாக ஒரு முடிவை எடுத்தபிறகு!

© KPN NOVELS COPY PROTECT
bottom of page