Poovum Naanum Veru - 22
இதழ்-22
சரிகா அரைகுறையாகச் சொன்ன அடையாளத்தை வைத்து ஜவஹருடைய பண்ணைவீட்டைக் கண்டுபிடிக்க முடியாமல் சுற்றித்திரிந்த தீபன், நேரத்தைக் கடத்த விரும்பாமல் வசந்தின் வீட்டிற்கே சென்றான் அவனைத் தேடி.
அங்கே அவன் இல்லாமல் போனாலும், அவனது அலுவலக முகவரி கிடைக்கவும், விடாமல் அவனைத் தேடி அங்கேயும் சென்றான் தீபன்.
சேலம் புறநகர்ப் பகுதியிலிருந்த அந்த முகவரியைக் கண்டுபிடித்து, அந்த அலுவலகத்திற்குள்ளே சென்று பார்க்க, ஒரு அலுவலகத்திற்கான எந்த ஒரு லட்சணமும் அங்கே இல்லை.
பெயருக்கென்று ஒருவன் வரவேற்பு பகுதியில் அமர்ந்திருக்க, அங்கே போடப்பட்டிருந்த விலை உயர்ந்த சோபா, மேசை என அனைத்திலும் தூசி மண்டியிருக்க, எங்குப் பார்த்தாலும் சிகரெட் துண்டுகளும் சாம்பலுமாக அலங்கோலமாக இருந்தது அந்த இடம்.
வெளிநாட்டு மதுபான பாட்டில்களும், பியர் டின்களும் கூட பஞ்சமில்லாமல் உருண்டு கிடக்க, அரைகுறையாகச் சாப்பிட்டுவிட்டுச் சுத்தப்படுத்தப்படாமல் கிடந்த ஹோட்டல் உணவுகளின் துர்நாற்றமும், சிகரெட் மற்றும் மதுவின் கலவையான வாடையும் சேர்த்து வயிற்றை புரட்டிக்கொண்டு வந்தது தீபனுக்கு.
ஊரை நம்ப வைக்க அப்படி ஒரு போலியான அலுவலகம் போலும். மற்றபடி அங்கே அவர்கள் உருப்படியாக எந்த வேலையும் செய்யவில்லை என்பது அவனுக்கு நன்றாகப் புரிந்துபோனது.
அங்கே இருந்தவனை முதலில் மென்மையாகக் கேட்கச் சரியான பதில் கிடைக்காமல் போகவும், தீபன் அவனைப் புரட்டி எடுக்கவும், "தம்பி! தம்பி! அடிக்காதிங்க தம்பி!" என்றவன், "வாராவாரம் சனி ஞாயிறுன்னாக்க மட்டும்தான் ஜவஹர் தம்பி; அவங்க ஃப்ரெண்டுங்க எல்லாரும் இங்க வருவாங்க!
சமயத்துல இங்க வராம நேரா பண்ணை வீட்டுக்கே போனாலும் போயிருவாங்க தம்பி!
நான் பத்துநாளா ஊருக்கு போயிட்டு நேத்துதான் வந்தேன்!
இப்பதான் உள்ள நுழையறேன்! பாருங்க இன்னும் சுத்தம்கூட செய்யல!" என அவன் சொல்ல, அதன் பின்புதான் அவன் மூலமாக தீபனுக்கு தெரிந்தது அந்த பகுதியில் பல இடங்களை புஷ்பநாதன் வளைத்துபோட்டிருப்பது.
அதன்பின் அந்த அலுவலகத்திலிருந்து சற்று தள்ளி இருந்த அந்த பண்ணை வீட்டின் முகவரியை அவனிடமிருந்து தெரிந்துகொண்டு, அங்கே சென்றான் தீபன்.
அங்கேயிருந்த காவலாளியிடமும் சண்டையிட்டு, அவனைத் தாக்கிவிட்டுத்தான் அவனால் உள்ளேயே செல்ல முடிந்தது.
அங்கே வரவேற்பறையிலேயே போதை மயக்கத்தில் அலங்கோலமாக சரிந்துகிடந்த மூவரை பார்த்ததும், அவனுக்கு இருந்த கோபத்தில் அவர்களை அடித்து நொறுக்க, ஒருவன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஒருவருடைய மகன்; மற்றொருவன் அந்த பகுதியின் ரியல் எஸ்டேட் அதிபரின் மகன்; இன்னும் ஒருவன் புஷ்பநாதன் சார்ந்திருக்கும் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவரின் மகன் என்பது அவனுக்குத் தெரியவந்தது.
அங்கே வசந்தோ அல்லது ஜவஹரோ இல்லை என்பதும் தெரிந்தது.
எதோ யோசனை தோன்றவும், தீபன் அவர்களுடைய கைப்பேசியைப் பிடுங்கிப் பார்க்க, அவற்றிலிருந்த பல காணொளிகள், அவனை நிலைகுலையச் செய்தது.
சரிகாவை மயக்கநிலையில் வைத்து எடுத்த காணொளி அதில் இல்லை என்றாலும், பல பெண்களை அதேபோன்றே மயக்கத்தில் வைத்தோ அல்லது பலவந்தப் படுத்தியோ எடுக்கப்பட்ட காணொளிகள் அதில் நிறைய இருந்தன.
ஒவ்வொன்றும் அந்த பெண்களின் பெயருடன் தனித்தனி போல்டர்களாக சேமிக்கப்பட்டிருக்கவும், அவற்றை அவர்கள் பலருக்கு பகிர்வதும் புரியவும், அவர்களை அப்படியே விடவும் அவனுக்கு மனம் வரவில்லை.
முதலில், சரிகாவை பாதிக்கும் அந்த காணொளியைக் கண்டுபிடித்து அழிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே அவன் அங்கே வந்திருந்தானே தவிர, காவல் துறைக்குச் சென்று இந்த பிரச்சினையை ஊரறிய செய்ய அவன் கொஞ்சமும் விரும்பவில்லை.