இதழ்-21
அன்று மாலை, வசுமித்ரா அங்கு வந்து சென்றது முதல் அவனுடைய சிந்தனை ஒரு நிலையில் இல்லாமல் தவித்தான் தீபன்.
அருணாவிடம் இருந்து தப்பித்து அவனது அறைக்குள் வந்தவன், அந்த யானையையே பார்த்துக்கொண்டு சில நிமிடங்கள் உட்கார்ந்திருந்தான்.
அது அவன் சென்னை ஐ.ஐ.டி யில் இளநிலை படிப்பு படித்துக்கொண்டிருந்த சமயம், பிரத்தியேகமாக வாங்கிய, அவனுக்கு மிகவும் பிடித்த கீ செயின்.
அது எந்த சூழ்நிலையில் காணாமல் போனது என்பதே அவனுக்கு நினைவில் இல்லை.
அன்று தற்செயலாக மித்ராவின் கையில் அவன் அதைப் பார்த்ததும், அதன் பொருள் விளங்கவே இல்லை அவனுக்கு.
ஆனால் அதை அவன் கையில் பார்த்த நொடி, அவளது கண்கள் பேசிய வார்த்தையின் பொருள் அவனுக்கு நன்றாகவே புரிந்துபோனது.
அவள் கொண்டுவந்து கொடுத்த வசந்துடைய கணினி மற்றும் கைப்பேசிகளை உயிர்ப்பித்துப் பார்க்க அவனுக்கு அப்பொழுது நேரம் இல்லை.
ஆனால் அவ்வளவு முனைப்போடு அவள் அவற்றை கொண்டுவந்து கொடுக்கவும், அதற்குப்பின் இருந்த அவளது தூய்மையான மனது அவனை முற்றிலும் மதியிழக்கச் செய்து விட்டது.
அவனிடம் இருந்த புதிய சாவிக்கொத்தில் அவளுடைய வாகனத்தின் சாவியைக் கோர்த்துவிட்டு, தன் மனநிலையைச் சொல்லாமல் சொல்வதுபோல் சிறிய குறிப்பை எழுதி, அதை அந்த சிறிய யானையுடன் சேர்த்து அழகாக 'கிஃப்ட் பேக்' செய்து, அவனுடன் விமானநிலையம் வந்திருந்த அவர்கள் ஓட்டுநரிடம் கொடுத்து மித்ராவிடம் சேர்க்க சொல்லிவிட்டு, கிளம்ப மனமே இல்லாமல், ஒப்புக்கொண்ட வேலையின் காரணமாக மும்பை வந்துசேர்ந்தான் தீபன்.
காலை ஆறுமணிவாக்கில் மும்பையை அடைந்தவன், அங்கே முக்கிய பகுதியில் அமைந்திருக்கும் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில், முன்பே பதிவு செய்யப்பட்டிருந்த அறைக்குள் வந்தான் தீபன்.
அவனை பின் தொடர்ந்து வந்து, "ஷார்ப் ட்வெல்லுக்கு; மிஸ்டர்.ஆகாஷ் சின்ஹா' வோட உங்க மீட்டிங்; தென் அவரோட லன்ச்; அகைன் ஈவினிங் ஃப்போர்க்கு பிளைட் டு சென்னை சார்!" என அங்கே அவன் செய்யவேண்டியனவற்றைப் பட்டியலிட்டுச் சொல்லிவிட்டு, அங்கே வேலை செய்பவர் அவனுடைய உடைமைகளை அங்கே கொண்டுவந்து வைத்த பிறகு அங்கிருந்து சென்றார் தீபனுடைய காரியதரிசி.
பின் எளிய உடைக்கு மாறி, இரவு முழுதும் உறங்காமல், பயணம் செய்த களைப்பில். அங்கே போடப்பட்டிருந்த கட்டிலில் கண்களை மூடி படுத்துக்கொண்டான் தீபன்.
உறக்கம் மட்டும் அவனை நெருங்க மறுத்தது, கடந்தகால நினைவுகள் கொடுத்த வலியினால்.
***
சரிகாவுக்கு விபத்து எனக் கேள்விப்பட்டதும் சற்றும் தாமதிக்காமல் தன் பைக்கிலேயே கிளம்பி, அன்று நள்ளிரவே நாமக்கல் வத்துவிட்டான் தீபன்.
இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் நண்பன் இருசக்கர வாகனத்தில் அவ்வளவு தூரம் தனியே பயணிப்பதை அனுமதிக்க முடியாமல், தானும் அவனுடன் கிளம்பி வந்தான் அவனுடைய உயிர்த் தோழன் சந்தோஷ்.
சரிகாவின் உடலில் ஏற்பட்டிருந்த காயங்கள், அவள் வாகனத்திலிருந்து விழுந்ததால் மட்டுமே ஏற்பட்டவை. அவளை மயக்கத்திலேயே வைத்திருந்து அந்த மிருகங்கள் அந்த கொடூரத்தை அரங்கேற்றி இருக்கவே, அப்படி ஒரு வன்கொடுமை அவளுக்கு நடந்ததே யாருக்கும் தெரியவில்லை.
இவ்வளவு நீண்ட நேர மயக்கத்திற்குக் காரணம் அந்த விபத்து மட்டும் இல்லை, அவள் ஏதோ போதைப் பொருளை உட்கொண்டதால்தான் என மருத்துவர்கள் ஏற்கனவே அவர்களிடம் சொல்லியிருந்ததால், முற்றிலும் உடைந்துபோனவர்கள், அவள் ஏன் வீட்டிலிருந்து அவ்வளவு தூரம் சென்றாள், இந்த விபத்து எப்படி நடந்தது என்ற மண்டையைக் குடையும் பல கேள்வியுடன், சரிகா கண் விழிக்கும் வரை அனைவரும் காத்திருக்க, அடுத்த நாள் அதிகாலையில் மயக்கத்திலிருந்து மீண்டவள் முதலில் விழித்ததே அண்ணனின் முகத்தில்தான்.
அருணா உணர்ச்சிக்கொந்தளிப்பில் மகளை அடித்து நொறுக்கும் அளவுக்குக் கோபத்துடன் இருக்க, மனதில் இருக்கும் வேதனையை வெளிக்காண்பிக்காமல் உள்ளுக்குள் உடைந்துபோயிருந்தார் அரங்கன்.
அதனை உணர்ந்ததால் அனைத்தையும் மனதில் வைத்துக்கொண்டு தான் பேசி முடிக்கும் வரை யாரும் உள்ளே வரவேண்டாம் எனச் சொல்லிவிட்டு அவன் மட்டும் அந்த வார்டுக்குள் வந்திருந்தான் தீபன்.
நாகரிகம் கருதி சற்று ஒதுங்கியே இருந்தான் சந்தோஷ்.
சரிகா! கண் விழித்ததும், அவள் மயக்கமடைவதற்கு முன்பு இருந்த அதே நினைவினிலிருந்து மீளாமல், என்ன நடக்கிறது; எங்கே இருக்கிறோம் என்பது ஒன்றும் புரியாமல், தீபனை பார்த்ததும், அது அவன்தான் என்பதைக் கூட உணராமல், "வசந்த்! ப்ளீஸ்! என்னை விட்று! நான் வீட்டுக்கு போகணும்; அம்மாவை பார்க்கணும்" என்றவள் பயத்தில் முகம் வெளிறிப்போய், "ஐயோ என்னால அவங்களுக்கு எதுவும் ஆகக்கூடாது; என்னை கொன்னுடு!" என அவள் தன்னை மறந்து பிதற்ற, துடிதுடித்துப்போனான் தீபன்
தனியார் மருத்துவமனைகளில் இருப்பது போல் தனி அறையிலெல்லாம் அவளை வைத்திருக்கவில்லை.
அதனால் அவள் அமைதியில்லாமல் புரளுவதைத் தூரத்திலிருந்து கவனித்துவிட்டு ஓடிவந்த அங்கே பணியிலிருந்த செவிலியர், தடுப்புக்காகப் போடப்பட்டிருக்கும் திரைச் சீலைகளை இழுத்துவிட்டுவிட்டு, மருத்துவரை அழைக்க, அவளை அமைதிப் படுத்துவதற்காக ஒரு ஊசியைப் போடச்சொல்லிவிட்டுப் போனார் அவர்.
பின் அந்த செவிலியருடைய உதவியுடன், அவளிடம் இதமாகப் பேசி, அவளைக் கட்டுக்குள் கொண்டுவர சில நிமிடங்கள் பிடித்தது அவனுக்கு.
அவள் இயல்பு நிலைக்குத் திருப்பிவிட்டாள் என்பது புரிந்ததும் அந்த செவிலியர் அங்கிருந்து சென்றுவிட, அவள் ஏதோ பெரிதாகப் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பது நன்றாக விளங்க, அவளது கண்களை பார்த்துக்கொண்டே, "குட்டிமா! யாரு அந்த வசந்த்!" என இயல்பாக கேட்பது போல் கேட்டான் தீபன்.
"யாரு! யாரை பத்தி கேக்கறீங்கண்ணா!" என பதட்டத்துடன் கேட்டவள், நடந்த வன்கொடுமையை அவனிடம் எப்படி விவரிப்பது எனப் புரியாமல், மேலும் இதைச் சொல்வதால் பெற்றோருக்கு எதாவது ஆகிவிடுமோ என்ற உச்சபட்ச பயத்தில் அவளது கண்கள் கண்ணீரை உதிர்க்க, "அப்படிலாம் யாரும் இல்ல! எதுவும் நடக்கல; எனக்கு யாரையும் தெரியாது" என முன்னுக்குப்பின் முரணாக உளறியபடி, அனைத்தையும் மூடி மறைக்கவே முயன்றாள் சரிகா!
அது அவனுக்கு நன்றாகவே புரிந்துவிட, அவள் இருக்கும் அந்த நிலைமையைக் கூட பொருட்படுத்தாமல், "எவ்வளவு அழணுமோ அழுது முடிச்சிட்டு சொல்லு நாம பேசலாம்" எனக் கடுமையாக தீபன் சொல்லவும்,
சில நொடிகள் அழுகையில் குலுங்கியவள், முகத்தைத் துடைத்துக்கொண்டு அவனைப் பார்க்க, அதுவரை பொறுமையாய் கை கட்டி நின்றவன், "இதோ பார் சரிகா! என்ன நடந்திருந்தாலும் சரி!
அது எப்படிப்பட்ட தவறா இருந்தாலும் பரவாயில்ல!
எதையும் மூடி மறைக்க ட்ரை பண்ணாம; அண்ணா உனக்கு நன்மையைத்தான் செய்வேன்..ன்னு என்னை நம்பி நடந்தது நடந்தபடி எல்லாத்தையும் என்கிட்டே சொல்லு;
உனக்கே தெரியும் என் கிட்ட இருந்து யாராலயும் எதையும் எதையும் மறைக்க முடியாது;
நீயா சொல்லிட்டா; ஒரு அண்ணனா நான் உன் பக்கத்துல இருப்பேன்;
நானா கண்டுபிடிச்சேன்னா ஒரு மூணாவது மனுஷனா உன் எதிர்ல நின்னு வேடிக்கை பார்த்துட்டு போயிட்டே இருப்பேன்!
அதுக்கு பிறகு என் கிட்ட இருந்து எந்த ஒரு சாப்ஃட் கார்னரையும் நீ எதிர்பார்க்கமுடியாது!" எனக் கொஞ்சமும் இளக்கமின்றி அவன் சொல்ல, அவனது வார்த்தையிலிருந்த கூர்மை, அவனது விழிகளிலும் இருக்க, அவை தைத்த வேகம் தாங்காமல், அனைத்தையும் அவனிடம் சொல்லி முடித்தாள் சரிகா.
ஊர் உலகில் எங்கெங்கோ யார் யாருக்கோ நடப்பதாகக் கேள்விப்பட்டு சர்வசாதாரணமாக கடந்து போகக்கூடிய ஒரு சம்பவம், தன் குடும்பத்திலேயே, பொத்தி பொத்தி போற்றும் தங்கள் பெண்ணுக்கே ஏற்பட்டிருப்பதை அறிந்த பொழுது, அவன் உணர்ந்த அந்த வலி, அவளுக்கு ஏற்பட்ட வன்கொடுமைக்கு நிகராகவே இருந்தது.
முதலிலேயே இதனைக் கவனிக்காமல், அந்த பிரச்சினை தனது கோரத் தாண்டவத்தை முழுவதுமாக ஆடி முடித்த பிறகு, அதில் அவள் மொத்தமாக உருக்குலைந்து போயிருக்கும் இந்த நிலைமையில், அவளிடம் கோபப்படுவதோ அல்லது அவளைத் தூற்றுவதோ எந்த விதத்திலும் அர்த்தமற்ற ஒன்று, அவளை இந்த நிலையிலிருந்து மீட்பது ஒன்றுதான் முக்கியம் என அவனது அறிவு அவனுக்குப் போதிக்க, கண்களை மூடி தனது ஆத்திரம், ஆதங்கம் அனைத்தையும் அப்படியே விழுங்கியவன்,
"வெல்; குட்டிமா! நடந்தது நடந்து முடிஞ்சு போச்சு! இனிமேல் இதைப் பத்தி கவலைப் பட்டு பிரயோஜனம் இல்ல!
நேத்து நீ ஒரு பள்ளத்துல விழுந்து கிடந்த இல்ல; அங்க சாணியும் சேரும் சகதியுமா இருந்திருக்கும் போலிருக்கு;
உன்னை இங்க கொண்டுவரும்போது உன் மேல அந்த சேரெல்லாம் ஒட்டிக்கிட்டு அதோட அங்கங்க பிளட் வந்துட்டு பேட் ஸ்மெல்லோட உன்னைப் பார்க்கவே பயங்கரமா இருந்துதாம்; அம்மா சொன்னாங்க.
ஆனா இப்ப அப்படியா இருக்க: அதையெல்லாம் வாஷ் பண்ணி! மெடிசின் போட்ட பிறகு பெட்டரா இருக்க இல்ல;
இப்போதைக்கு வலி இருந்தாலும் இன்னும் ஃபியூ டேஸ்ல நார்மல் ஆயிடுவ இல்ல; ஆனா இது உன்னைக் குற்ற உணர்ச்சியில் எல்லாம் தள்ளாதுதானே?
அதே மாதிரிதான் அந்த இன்சிடென்ட்டும்; அதையும் சீக்கிரமா நீ கிராஸ் பண்ணி வந்துடனும்; வர ட்ரை பண்ணனும்;
ஸோ இப்போதைக்கு எதையும் நினைச்சு கவலை படாம இரு; நான் பார்த்துக்கறேன்!" என தீபன் இதமாக பேசி அவளுடைய மனநிலையை மாற்ற முயல, தான் வேண்டுமென்றே விபத்தைத் தேடிக்கொண்ட அந்த தருணம் நினைவுக்கு வர, அவள் மனம் அமைதி அடைவதாகவே இல்லை.
***
சேலம் புறநகர்ப் பகுதியில், ஆள் அரவமே இல்லாத அந்த சாலையில் அவள் கார் கதவைத் திறந்துகொண்டு குதித்துவிட, வந்த வேகத்தில் அந்த வாகனம் சற்று தூரம் சென்று, பின் அதை 'ரிவர்ஸ் எடுத்து' அவள் விழுந்த இடத்தில் அதை நிறுத்தி வசந்தும் முன் இருக்கையிலிருந்த ஒருவனும் மட்டும் கீழே இறங்க, உடலெங்கும் சிராய்ப்புகளுடன் அந்த வீதியின் ஓரத்தில் கிடந்தவளைப் பார்த்து, "வசந்தா! இவளைத் தூக்கிட்டு போனா; நமக்குத் தேவை இல்லாத குடைச்சல்தான்;
உயிரோட பொழைச்சு வந்தா; இருக்கற வீடியோவை வெச்சு நம்ம இஷ்டத்துக்கு யூஸ் பண்ணிக்கலாம்;
இல்லனா இப்படியே செத்துத் தொலையட்டும்!" எனச் சொல்லிக்கொண்டே அவன் கால்களால் அவளை உதைத்து, அருகிலிருந்த பள்ளத்துக்குள் தள்ளிவிட்டு, "ப்ச்! என்ன; ஒரு சுப்பீரியர் குவாலிட்டி பீசு; இப்படி கைவிட்டு போகுதேன்னு இருக்கு!" என அவன் அலுத்துக்கொள்ள,
"போனா போகுது ஜவா! இது இல்லனா வேற ஒண்ணு" என வசந்த் சொன்ன வார்த்தைகள், எங்கோ கிணற்றுக்குள்ளிருந்து கேட்பது போல் அவளது செவிகளுக்குள் திராவகம் ஊற்றியதுபோல் சுட்டது.
***
"இல்லண்ணா; நான் உயிரோட இருக்கற வரைக்கும் அவனுங்க நம்மள தொல்லை செஞ்சுட்டே இருப்பானுங்கண்ணா!
உங்களைப் பத்தியெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காம ஒரு எக்ஸைட்மெண்ட்ல நான் பண்ண தப்புக்கு, என்னோட மரணம்தான் சரியான பிராயச்சித்தம்; தண்டனை எல்லாம்!" என விரக்தியுடன் அவர்கள் பேசிய அனைத்தையும் அண்ணனிடம் சொன்னாள் சரிகா.
தங்களுடைய வக்கிரங்களைத் தணித்துக்கொள்ள, உயிர் வாழவே பயப்படும் நிலைக்கு ஒரு பெண்ணை தள்ளிவிட்டு, எங்கோ நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்கும் அந்த கேடுகெட்ட பிறவிகளை எண்ணி அவனுடைய ஒவ்வொரு அணுவும் கோபத்தில் துடிக்க, 'தங்கை கொஞ்சமாவது நிம்மதியாக இருக்கவேண்டுமானால், முதலில் அந்த காணொளிகளையாவது கைப்பற்றி அழிக்கவேண்டும்' என்ற எண்ணம் தோன்றவும், "இப்படியெல்லாம் தத்துபித்துன்னு உளறாதே! எல்லாத்தையும் நான் சரி பண்ணிடுவேன்!" என ஆறுதலாக அவளிடம் சொல்லிவிட்டு, " நீ சொன்ன மாதிரி நீ செத்துப்போனா அது உனக்கு தண்டனையா இல்ல உயிரோட இருக்கற எங்களுக்கு நீ கொடுக்கற தண்டனையா?” எனக் கேட்ட தீபன், தொடர்ந்தான்.
“நீ செஞ்ச தப்பே சாவை விடக் கொடுமையான ஒரு தண்டனையை உனக்கு கொடுத்துடுச்சு குட்டிம்மா! ஸோ புதுசா உனக்கு ஒரு தண்டனை எல்லாம் தேவை இல்ல புரிஞ்சுதா!
அதே மாதிரி நீ இப்படி இருந்தால் அது செய்யாத தப்புக்கு நீ எங்களுக்கு கொடுக்கற தண்டனை" என்றவன் அவளது முகத்தை ஆழமாகப் பார்த்து, "அதுக்கு நீ செய்ய வேண்டிய பிராயச்சித்தம் என்னன்னு தெரியுமா?" எனக் கேட்க, அவள் ஆவலுடன் தலையை ஆட்டவும், "இந்த ஒருநாள் உன் வாழ்க்கையில் நடத்த விபத்தை மறந்துட்டு; எப்பவும்போல கலகலப்பா ஹாப்பியா இருக்கனும்; செய்வியா?" என அவன் ஆதூரமாக கேட்க, 'ட்ரை பண்றேன் அண்ணா" என்றாள் சரிகா மிக முயன்று வரவழைக்கப்பட்ட புன்னகையுடன்.
உடனே அங்கிருந்து வெளியில் வந்தவன், சந்தோஷிடம் அவர்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, வசந்தை தேடிக் கிளம்பினான் தீபன்.
Commentaires