top of page

Poovum Naanum Veru - 20

இதழ்-20


செல்வராகவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆகியிருந்த நிலையில், அங்கே அவருக்குத் துணையாக மாரியை வைத்துவிட்டு, அத்தியாவசியமாக சில பொருட்களை எடுத்துச் செல்வதற்கென, அன்று காலையிலேயே கிளம்பி வீட்டுக்கு வந்தார் கலைவாணி உடன் மகளையும் அழைத்துக்கொண்டு.


அவர் வந்திருப்பது தெரிந்ததும், அவர்களுடைய வீட்டிற்குள் வந்த அருணா, அதீத ஆத்திரத்துடன், "செய்யறதெல்லாம் செஞ்சிட்டு; மூணு நாளா எங்க போய் ஒளிஞ்சிட்டு இருந்த?" என வாணியை வார்த்தைகளால் தாக்க,


தங்களைப் போலவே சரிகாவுக்காக அவர்களும் மருத்துவமனையிலிருந்த காரணத்தால், செல்வராகவனின் நிலையை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது புரியவே, அவர் பேசியதற்காக உணர்ச்சிவசப்படாமல், "சரிகா இப்ப எப்படி இருக்கா சரிகாம்மா! வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடீங்களா?" என வாணி உண்மையான அக்கறையுடன் விசாரிக்க,


"இன்னும் அவளோட உயிர் போகல: அதுதான் மிச்சம் இருக்கு" எனக் கோபம் குறையாமல் சொன்னவர், "உன் பையனை எங்க ஒளிச்சி வெச்சிருக்க? தயவு செஞ்சி சொல்லிடு!" என அருணா சீற,


அனைத்து குற்றங்களும் அவர்கள் பக்கம் இருக்கும் காரணத்தால், "உண்மையாவே அவன் எங்க இருக்கான்; எப்படி இருக்கான்; எதுவுமே தெரியாது சரிகாம்மா! என்னை நம்புங்க" என வெகுவாக தாழ்ந்துபோய் பதில் சொன்னார் வாணி.


அனைத்தையும் மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் மித்ரா.


"உங்களுக்காவது உங்க பிள்ளை எங்க இருக்கான்னுதான் தெரியலன்னு சொல்றீங்க; ஆனா எங்களுக்கு எங்க பிள்ளை உயிரோட இருக்கானான்னே தெரியல;


இங்க யாரையும் எங்களுக்குத் தெரியாது; எங்களுக்கு உங்களை மாதிரி அரசியல்வாதிங்க; போலீஸ்காரங்க சப்போர்ட்லாம் கிடையாது;


எங்க தீபனை எப்படி கண்டுபிடிக்கபோறமோ தெரியல?" என அவர் மெல்லிய குரலில் முனக, பதைபதைத்துப்போனார் வாணி.


"என்ன சொல்றீங்க சரிகாம்மா! எனக்கு ஒண்ணுமே புரியலையே?" என அவர் அச்சத்துடன் கேட்க, "ப்ச்... உங்ககிட்ட சொல்லி என்ன ஆகப்போகுது! கொலைகாரங்க கிட்டேயே நியாயம் கேட்டு என்ன பிரயோஜனம்! நீங்களும் ஒரு பொண்ண பெத்து வெச்சிருக்கீங்க; அதை மறந்துராதீங்க" என அவர்கள் அனைவரையுமே குற்றவாளிகளாக எண்ணி முணுமுணுத்துக்கொண்டே அங்கிருந்து சென்றார் அருணா.


உடலில் கொஞ்சம் நஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்த சக்தியும் வடிந்தாற்போன்று அப்படியே தொய்ந்துபோய் வாயிற்படியில் உட்கார்ந்தார் வாணி.


அவரை எப்படித் தேற்றுவது என்பது புரியாமல் தவித்த மித்ரா, பின் தன்னை சமாளித்துக்கொண்டு உள்ளே சென்று சூடாகப் பாலை காய்ச்சி எடுத்துவந்தவள், அன்னையை வற்புறுத்தி அதனைப் பருகவைக்க, அவர் சற்று தெளியவும், அவருக்கு அருகில் உட்கார்ந்த மித்ரா, "ம்மா; அண்ணா இப்படியெல்லாம் பண்ணியிருப்பாங்களாம்மா?" என அப்பாவியாகக் கேட்க,


மகனுடைய அந்த நம்பிக்கை துரோகம் மனதை சுடவும், கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் கன்னத்தில் வழிய, புடவை தலைப்பால் அதைத் துடைத்துக்கொண்டு, 'அவன் பண்ணித்தான் இருக்கான் வசும்மா; ஆதாரமா வீடியோவே இருக்காம்' என மனதில் எண்ணியவர், அதைச் சொல்லும் துணிவு இல்லாது, "புரிலயேம்மா!" என்றார் வாணி.


அவர் சொன்னது விளங்காமல், "அப்படின்னா அண்ணாவைக் தேடவே வேண்டாமா" என அவள் கேட்க,


"அவன் தப்பு பண்ணியிருக்கான்; அதனாலதான் எங்கேயோ ஓடி ஒளிஞ்சிட்டு இருக்கான்;


அப்பா இந்த மாதிரி நிலைமையில் இருக்கும்போது கூட அவன் வரவே இல்ல; இந்த நிலைமையில் அவனைத் தேடி கண்டுபிடிச்சாலும் அது நமக்கு நிம்மதியைக் கொடுக்காது வசும்மா" எனச் சொன்னவர்,


"இவனுங்க செய்யற அக்கிரமத்தை பத்தி தெரிஞ்சவங்க யாராவது வெளிய சொல்லியிருந்தால் முன்னாலேயே நாம கொஞ்சம் சுதாரிச்சிருக்கலாம்! சரிகாவுக்கு இந்த நிலைமையே வந்திருக்காது" என அவர் எதார்த்தமாகச் சொல்லவும், பெற்றோரிடம் அவர்கள் காதலைப் பற்றி மறைத்துத் தான் செய்த தவறு விஸ்வரூபம் எடுத்து அவள் முன் நிற்க, அவளது மனசாட்சி அவளைக் குத்தி கிழித்தது.


அந்த வலியுடன், "ம்மா! நம்ம அண்ணா தப்பு செஞ்சாங்க; அவங்களை நாம தேட வேணாம்; ஆனா சரிகா அண்ணா எந்த தப்பும் செய்யலியே; நல்லதுதானே செஞ்சாங்க; அவங்களை கண்டுபிடிக்க வேணாமா?" என மித்ரா கேட்க, அந்த கேள்வி அவர் மனதைச் சுட, "நாம இப்ப இருக்கற நிலைமையில் என்ன செய்ய முடியும் வசும்மா? எல்லாருமே நம்மள தப்பானவங்களாத்தன பார்க்கறாங்க?" என கேட்டார் வாணி வேதனையுடன்.


"ம்மா! நாம வேணா திவ்யாபாரதி மேடம்மை நேரில் பார்த்து ஹெல்ப் கேக்கலாமா? அவங்க ரொம்ப நல்லவங்க; கண்டிப்பா நமக்கு ஹெல்ப் பண்ணுவாங்க" எனறாள் மித்ரா.


உடனே முகம் பிரகாசிக்க, "அவங்க ஹெல்ப் பண்ணுவாங்களா வசும்மா! ஆனா அவங்க சி.ஐ.எஸ்.எப் ஹயர் அத்தாரிட்டியா இல்ல இருக்காங்க; அவங்க எப்படி நமக்கு ஹெல்ப் பண்ணுவாங்க?" என வாணி மகளிடம் கேட்க, "தெரியலம்மா; ஆனா அவங்க கண்டிப்பா செய்வாங்கனு தோணுது" என்ற மகளை அணைத்துக்கொண்டவர், "நீ ரொம்ப பெரிய மனுஷி ஆகிட்ட வசும்மா! அம்மாவுக்கே சொல்லிக்கொடுக்கற" என அந்த நிலையிலும் மகளை மெச்சியவாறு, அவசரம் அவசரமாக திவ்யாபாரதியை சந்திக்க கிளம்பினார் வாணி கணவரின் நிலையையும் மறந்து, மகளையும் உடன் அழைத்துக்கொண்டு.


சேலத்தில் அவர்கள் துறைக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார் திவ்யாபாரதி.


அங்கேயே சில நாட்கள் தங்கி இருந்து, அங்கே ஏற்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக, அலுவலக ரீதியாகப் புதுடில்லியிலிருந்து அங்கே வந்திருந்தார் அவர்.


அவருக்கான பிரத்தியேக ஓட்டுநராக செல்வராகவனை நியமித்திருந்தனர்.


திவ்யாபாரதியின் ஆளுமைத் திறன் காரணமாக, அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டமே உண்டு. அதில் மித்ராவும் அடக்கம்.


திவ்யாபாரதி அங்கே வந்தது முதலே அவரை நேரில் சந்தித்து, அவரது 'ஆட்டோகிராப்' பெறவேண்டுமென்று அவள் ராகவனை நச்சரித்துக்கொண்டுதான் இருந்தாள். ஆனால் அதற்கான நேரம்தான் வராமலேயே போனது.


இப்படி ஒரு அனர்த்தமான சூழ்நிலையில் அவரை சந்திக்க வேண்டிய சூழ்நிலை அவளுக்கு உருவாகி இருந்தது.


***


திவ்யாபாரதியை சந்திப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை அவர்களுக்கு.


ராகவன் உடல்நிலை சரியில்லை என்பதும், அதன் தொடர்ச்சியாக வசந்த் பற்றிய தகவல்கள் அனைத்தும் முன்பே அவருக்கு சென்றிருக்க, அவனைக் காப்பாற்றத்தான் உதவி கேட்டு அவர்கள் அங்கே வந்திருக்கிறார்கள் என எண்ணிய பாரதி அவர்களைச் சந்திக்கவே விரும்பவில்லை.


ஆனால் பலமணிநேர மன்றாடுதலுக்கும் காத்திருப்புக்கும் பிறகு, ஒரு கட்டத்திற்கு மேல் நிராகரிக்க இயலாமல், அவர்களை அவருடைய அலுவலகத்திற்குள் அனுமதித்தார் பாரதி.


அவர்கள் உள்ளே நுழைந்ததும் இரு பெண்களையும் பார்த்து பரிதாபமாகிப்போனது அவருக்கு.


"ஏன்மா! குழந்தைகளுக்கு நல்லது கெட்டது சொல்லிக்கொடுக்கற ஸ்கூல் டீச்சர்தானே நீங்க? குற்றம் செஞ்சிருக்கான்னு தெரிஞ்சும் உங்க பிள்ளையை காப்பாத்த துடிக்கறீங்களே இது உங்களுக்கே தப்பா தெரியலையா?" என அவர் கடுமையாக கேட்க,


"இல்ல மேடம்! எங்க பையனுக்காக நான் இங்க வரல!" என வாணி சொல்லவும், கேள்வியுடன் அவரை பார்த்தவர், "உங்க கணவர் வேலை சம்பந்தமாகவா?" என அவர் சற்று அலட்சியமாகக் கேட்க, "இல்லைங்க! எங்க பையனால பாதிக்கப்பட்ட அந்த பொண்ணு சரிகாவோட அண்ணன் தீபனுக்காகத்தான் வந்தோம்!


அந்த பையனை மூணு நாளா காணலைன்னு அவங்க அம்மா சொல்லி அழுதாங்க;


அந்த பையன் இந்த விஷயமா எங்க ஏரியா போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்பளைண்ட் கொடுத்தான்னு மட்டும் எனக்குத் தெரியும்!


அதுக்கு பிறகு என்ன நடந்ததுன்னு தெரியல; எங்க மகனும் எங்க இருக்கான்னே தெரியல;


யார் கிட்ட போய் உதவி கேக்கறதுன்னு தெரியல!


நீங்க கட்டாயம் உதவி செய்வீங்க என்கிற நம்பிக்கையில்தான் உங்களைத் தேடி வந்தோம்!


அந்த தீபனை கண்டுபிடிச்சு கொடுக்க உங்களால முடியுமா" என்று கலைவாணி கோர்வையாக தான் வந்த காரணத்தை சொல்லிமுடிக்க, அந்த பெண்மணியைப் பார்த்து வியந்துபோன திவ்யாபாரதி! அவரது இருக்கையை விட்டு அப்படியே எழுந்து நின்றுவிட்டார்.


அதன்பின் அவர்கள் இருவரையும் உட்காருமாறு சொல்லி, அவர்களுக்குத் தேநீர் வரவழைத்து கொடுத்தவர், அவர்களிடம் நடந்த அனைத்தையும் கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டு, சில தொலைப்பேசி அழைப்புகள் மூலம், அந்த குற்றம் சம்பந்தமான காவல்துறை நடவடிக்கைகளை அறிந்து கொண்டார்.


பின்பு முகம் கறுத்துப்போக, "நீங்க பத்திரமா போய் உங்க கணவரை கவனிச்சுக்கோங்க!


அந்த தீபன் நல்லபடியா வீட்டுக்கு வர நான் உத்திரவாதம்" என பாரதி சொல்ல, அவருக்கு நன்றிசொல்லிவிட்டு நம்பிக்கையுடன் அங்கிருந்து கிளம்பினர் அந்த அன்னையும் மகளும்.


***


திவ்யாபாரதி! அவருடைய ஒளிவு மறைவற்ற நேர்மையான குணத்தினால் பல இடைஞ்சல்களையும், அடிக்கடி ஏற்படும் துறை ரீதியான பணியிட மாற்றங்களையும், பல அரசியல் அடக்குமுறைகளையும் சந்தித்தாலும், அரசாங்கத்தில் அவருக்கென்று ஒரு நன்மதிப்பும் செல்வாக்கும் எப்பொழுதுமே உண்டு.


அவரது குணத்திற்குத் தகுந்தாற்போன்ற நேர்மையான அரசியல்வாதிகளும் அவரது நட்பு வட்டத்துக்குள் இருந்ததால், அதைப் பயன்படுத்தி அடுத்த நாள் அதிகாலையிலேயே தீபன் வீடு திரும்பும்படி செய்தார் அவர். அதற்கு மேல் அந்த விஷயத்தில் அவரால் தலையிட முடியவில்லை.


ஆனால் அந்த மூன்று நாட்களுக்குள், ஜவஹரின் அடியாட்கள் அவனை அடித்துத் துன்புறுத்தியிருக்கவே, உடல் முழுதும் காயங்களுடன் குற்றுயிராகத் திரும்ப வந்தான் தீபன்.


உடல் முழுவதும் கட்டுகளுடன் அன்றே காவல் நிலையம் சென்று, அவன் கொடுத்திருந்த புகார்களைத் திரும்பப் பெற்றான் தீபன் அவனுடைய தந்தையின் வற்புறுத்தலால்.


அடுத்த சில தினங்களிலேயே அந்த வீட்டை காலி செய்துவிட்டு, சென்னை செல்ல தயாராகிக்கொண்டிருந்தார்கள் தீபன் குடும்பத்தினர்.


இதற்கிடையில் செல்வராகவன் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தார், ஒரு இதய நோயாளியாக.


ராகவன் அறைக்குள் படுத்திருக்க, அவருடன் எதோ பேசிக்கொண்டிருந்தாள் மித்ரா. வாணி சமையல் செய்துகொண்டிருக்க, வரவேற்பறையைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார் மாரி.


அங்கிருந்து கிளம்புவதற்கு முன் அங்கே வந்த தீபன், "எப்படியும் அந்த வசந்த் இங்க வருவான்! அவன் கிட்ட சொல்லுங்க; என்னைக்கா இருந்தாலும் என் கையாலதான் அவனுக்கு சாவு; அவனை மட்டும் இல்ல இதுல சம்பந்தப்பட்டிருக்கும் ஒருத்தனை கூட சும்மா விடமாட்டேன்!" என கர்ஜித்துவிட்டு அங்கிருத்து செல்ல எத்தனிக்க, அவன் பேசியது பொறுக்காமல், "தம்பி இங்க நீ நின்னு பேசிட்டு இருக்கியே; அதுக்கு யார் காரணம்னு தெரியுமா உனக்கு?" என மாரி கோபத்துடன் கேட்க, "மாரிம்மா! வேலையை பாரு" என அவரை அடக்கிய கலைவாணி, "வசந்த் வந்த உடனே நீ சொன்னதை அப்படியே அவன்கிட்ட சொல்றேன்; நீ பத்திரமா போயிட்டு வா" என்று அந்த பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் அவர்.


அவர்கள் இருவரையும் முறைத்துப் பார்த்தவாறே அங்கிருந்து சென்றான் தீபன்.


அங்கே வரவே அஞ்சி, உள்ளுக்குளேயே இருந்தவள், தீபன் சென்றதும் சரிகாவை ஒருமுறை பார்க்கும் ஆவலில், மித்ரா வீட்டை விட்டு வெளியில் வர, வீட்டிற்குள்ளிருந்து வந்த சரிகா, அங்கே தயாராக இருந்த காரில் சென்று ஏறினாள்.


அதற்குமுன் அவளது பார்வை அனிச்சையாக மித்ராவுடைய வீட்டின் பக்கமாகத் திரும்ப, அங்கே நின்றுகொண்டிருந்த மித்ராவை பார்த்தவளின் விழிகள் நெருப்பை உமிழ்ந்தன.


"நீ கூட என்னை ஏமாத்திட்டியே!" என்ற கேள்வி அதில் கொழுந்துவிட்டு எறிவதுபோல் தோன்றியது வசுமித்ராவுக்கு!


***


'மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே!


பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே!


வரம் தரும் அன்னையே! வணங்கினோம் உன்னையே!'


படுக்கை அறைக்குள் கலைவாணிக்காக வைத்திருக்கும் தொலைக்காட்சியிலிருந்து அந்த பாடல் சத்தமாக ஒலிக்க, தன் நினைவுகளிலிருந்து கலைந்த மித்ரா, நேரம் காலை ஐந்தரை மணி என்பதை உணர்ந்து எழுந்தவள், தன் அன்றாட வேலைகளில் தன் கவனத்தைத் திரும்ப முயன்றாள்.


முதலில் அறைக்குள் சென்று அவளது அன்னையைப் பார்க்க, அவரது துணைக்கு இருப்பவர், பல் துலக்க அவருக்கு உதவிக்கொண்டிருந்தார்.


பின் அடுப்பில் பாலை வைத்துவிட்டு, காஃபி பொடியை அதன் பில்டரில் போட்டு, தண்ணீரை அவள் ஊற்றிக்கொண்டிருக்கும் நேரம், வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க, அடுப்பைச் சிறிதாக்கிவிட்டு வெளியில் வந்து பார்த்தாள் மித்ரா.


அவளுடைய ஸ்கூட்டி அங்கே நிறுத்தப்பட்டிருந்தது. அதன் அருகில் நின்றிருந்த தீபனின் ஓட்டுநர் அதன் சாவியை அவளிடம் கொடுக்க, அதில் தொங்கிக்கொண்டிருந்த புதிய சாவிக்கொத்தைப் பார்த்து அவளது மனதின் ஓரத்தில் முணுமுணுவென வலி எழ, அதை வாங்கிக்கொண்டு, "தேங்க்ஸ் அண்ணா! உள்ள வாங்க; காஃபி சாப்பிடலாம்" என அவள் அவரை உபசரிக்கும் விதமாகச் சொல்ல, "பரவாயில்ல மேடம்! சார் வீட்டுல எல்லாரும் எங்கயோ வெளியில போகணும்னு சொன்னாங்க; நான் கிளம்பறேன்" என்றவர், "இதை சார் உங்க கிட்ட கொடுக்கச் சொன்னார் மேடம்" என சொல்லிக்கொண்டே ஒரு சிறிய அன்பளிப்பு பெட்டியை அவளிடம் கொடுத்துவிட்டுப் போனார் அவர்.


அதை உடனே பிரித்துப்பார்க்கும் ஆவல் ஏற்பட்டாலும், உள்ளே சென்று, காஃபியை கலந்து அனைவர்க்கும் கொடுத்துவிட்டு, தனக்கான காஃபியை எடுத்துக்கொண்டு தனிமை வேண்டி அவர்கள் வீட்டு மொட்டை மாடிக்கு வந்தவள், ஆவலுடன் தீபன் அனுப்பியிருந்த அந்த அன்பளிப்பைப் பிரிக்க, அவள் கையிலிருந்து பிரிந்து போன அந்த கீ செயின் யானை அதில் அழகாய் வீற்றிருந்தது.


அத்துடன் இருந்த சிறிய காகிதத்தில், 'தீபனை உன்னிடமே கொடுத்துவிட்டேன்! பத்திரமாக வைத்துக்கொள்ளவும்!' எனத் தெளிவான கையெழுத்தில் மிகத்தெளிவாக எழுதியிருந்தான் தீபப்ரகாசன் வசுமித்ராவின் எதிர்காலத்தைப் பற்றிய அவளுடைய எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதிலாக!

0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page