top of page

Poovum Naanum Veru - 18

இதழ்-18


சரிகா தன் கால்களைக் கீழே ஊன்றி எழுந்திருக்க முயல, தலை சுற்றி விழப்போனவள் தானே முயன்று கட்டிலைப் பிடித்துக்கொண்டு அதிலேயே மெள்ள உட்கார்ந்து கொண்டாள்.


வசந்த் மனது வைத்தால் மட்டுமே அவளால் பத்திரமாக வீடு போய்ச் சேர முடியும் என்பதை உணர்ந்தவள், "வசந்த் ப்ளீஸ்! என்னை எங்க வீட்டுல விட்டுடு;


நான் இதைப் பத்தி யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்! ப்ளிஸ்!" எனக் கெஞ்சலாகக் கேட்டாள் சரிகா.


அவள் கண்களில் பெருகிக் கொண்டிருந்த கண்ணீரைக் கண்டும் இளகாமல், "வேணா சொல்லித்தான் பாரேன்!


உங்க குடும்பம் மொத்தமும் விஷத்தை குடிச்சு சாக வேண்டியதுதான்!" என அகங்காரத்துடன் அவன் சொல்ல, பயத்தில் தொண்டை வறண்டு போக மிரட்சியுடன் அவனைப் பார்த்தாள் சரிகா!


"என்ன அப்படி பாக்கற! என்றவன் இந்த ஒரு வீடியோவுக்கே இந்த பொங்கு பொங்குறியே; இதுபோல இன்னும் நாலஞ்சு வீடியோ இருக்கு! என்ன பண்ணுவ!


அதுவும் , உன் கூட வெரைட்டி வெரைட்டியா ஒவ்வொரு படத்துலயும் ஒவ்வொரு ஹீரோ இருப்பான்!


இது எல்லாத்தையும் சோஷியல் மீடியாஸ்ல போட்டேன் வை; பெருமை அடிச்சுப்பியே உங்கொண்ணன்; அந்த சூப்பர் ஹீ...ரோ; அவனையும் கூட சேர்த்துகிட்டு குடும்பத்தோட நீங்க தற்கொலைதான் செஞ்சுக்கணும்"


சொல்லிக்கொண்டே போனவன் ஒரு பையை அவள்மீது விட்டெறிந்து, "போட்டுட்டு வா! வீட்டுல விடறேன்! ஆனா நாங்க எப்ப எங்க கூப்பிட்டாலும் மறுப்பு சொல்லாம வரணும்; இல்லன்னா என்ன நடக்கும்னு நான் சொல்லவே தேவையில்லை" என அவளை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றான் வசந்த்.


அவனுடைய தள்ளாட்டத்தைப் பார்க்கும்போதே தெரிந்தது அவன் முழுவதுமாக போதையில் இருக்கிறான் என்பது.


எதிர்காலத்தைப் பற்றிய பயம் அடிவயிற்றில் பந்தாக உருள; முதலில் எப்படியாவது வெயியே சென்றால் போதும் என்ற மனநிலையில் அவன் கொடுத்த புதிய உடைகளை அணிந்து வெளியே வந்தவள், அங்கே இருந்த வரவேற்பறை முழுதும் சூழ்ந்திருந்த சிகரெட் புகையிலும், அத்துடன் கலந்து வந்த மதுவின் வாடையிலும் குடலை புரட்டிக்கொண்டு வர, தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தாள் சரிகா.


அந்த புகை மண்டலத்துக்கு நடுவே அந்த இடத்தின் ஆடம்பரத்தையும் அங்கே வசந்துடன் சேர்த்து ரத்தம் குடிக்கும் ஓநாய் போன்று தோன்றிய ஐந்து மனித மிருகங்களையும் பார்த்து அச்சத்துடன், அறுவறுத்து போனாள் அவள்.


"வசந்தா; காத்திருந்தது வீண் போகல; நீ இன்னைக்கு கொடுத்தது செம்ம ஹாட் ட்ரீட்தான்டா" என அவர்களில் ஒருவன் சொல்வது தெளிவாக அவளது செவிகளில் விழ, மேற்கொண்டு அவர்களுடைய கோரச் சிரிப்பொலியும் பேச்சும் காற்றில் தேய்ந்து போகும்படி ஒரே ஒட்டமாக, புஷ்பநாதனுக்கு சொந்தமான அந்த 'ஃபார்ம் ஹௌசின்' வாயிற்பகுதிக்கு அவள் வந்துவிட, அவளைத் தொடர்ந்து வந்த வசந்த் அவளை முந்திக்கொண்டு போய் காரை உயிர்ப்பித்தான்.


முன் பக்கக் கதவைத் திறந்து கொண்டு சரிகா உட்கார எத்தனிக்க, "பின்னால போய் உட்கார்!" என அவன் எறிந்து விழவும், அந்த காரிலேயே இருந்த அவளது கைப்பையை எடுத்துக்கொண்டு, மௌனமாகப் போய் பின் புறம் சன்னலோரமாக உட்கார்ந்து கொண்டாள் சரிகா.


ஏனோ அவன் வாகனத்தைக் கிளப்ப சற்று தாமதம் செய்ய, அந்த ஒவ்வொரு நொடியும் அவளது பயத்தைக் கூட்டிக்கொண்டே போனது.


உள்ளே இருந்த மற்ற நால்வரும் தள்ளாடியபடி ஒருவர் பின் ஒருவராக வந்து காரின் பின்பகுதியில் அவளுக்கு அருகில் உட்கார, இடம் இல்லாமல் ஒருவன் மட்டும் முன்னால் போய் உட்கார்ந்து கொண்டான்.


அடுத்த நொடி வசந்துடைய கையில் அந்த வாகனம் அவனைப்போலவே தறிகெட்டுப் பறந்தது.


சில நிமிடங்கள் அமைதியுடன் கடக்க, போதையின் உச்சத்தில், ஒருவன் அவள் இருக்கும் சில காணொளிகளை வக்கிரமாக கைப்பேசியில் ஓட விட்டுப் பார்க்கவும், அறுவறுப்புடனும் இயலாமையுடனும் காதுகளை கைகளால் பொத்திக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு அந்த நிலையினின்றும் ஒதுங்கிப்போக முயன்றாள் சரிகா.


அது பொறுக்காமல், அவளுக்கு அருகில் உட்கார்ந்திருந்த மிருகம், அவளைக் கொத்திக் குதறத்தொடங்க, மற்றொன்று அதையும் கைப்பேசியில் பதிவுசெய்தது.


அந்த நரக நொடிகளைக் கடக்க இயலாமல், வீடு போய் சேரும் வரையிலும் அதை ஏற்க மனமின்றி, 'கடவுளே என் உயிர் இப்படியே போகட்டும்! நான் அறிவுகெட்டுப்போய் பண்ண இந்த முட்டாள்தனத்தால் என் குடும்பத்துக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது!' என்ற பிரார்த்தனையுடன், ஆக்ரோஷமாக, அந்த காரின் கதவை திறந்துகொண்டு கீழே குதித்து உருண்டாள் சரிகா.


***


அன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால், ராகவன், கலைவாணி, மித்ரா என மூவரும் வீட்டின் வரவேற்பறையில் உட்கார்ந்து எதோ திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருக்க,


"மித்ரா அம்மா!" என அழைத்துக்கொண்டே அங்கே வீட்டிற்கு வந்தார் அருணா.


"வாங்க சரிகா அம்மா! நேத்துதான் ஊரிலிருந்து வந்தீங்க போலிருக்கே!" என கலைவாணி கேட்க, "இல்ல முந்தாநாள் ராத்திரியே வந்துட்டோம்!" என்றவர், "ஆனா தூரத்து சொந்தத்துல ஒரு கல்யாணம்; அதை முடிச்சுட்டு சரிகா அப்பா மட்டும் இன்னைக்கு ராத்திரிதான் வருவாங்க!" எனச் சொன்னவர், "குடும்பத்தோட கோவிலுக்கெல்லாம் போயிட்டு வந்தோம் மித்ராம்மா; இந்தாங்க பிரசாதம்" எனச் சொல்லி ஒரு சிறிய பையைக் கொடுத்தவர், "வந்ததில் இருந்து சரியான வேல; இப்பதான் கொண்டுவந்து கொடுக்க முடிஞ்சுது" என்றார் அருணா.


"பொங்கல் பண்டிகையெல்லாம் நல்லா கொண்டாடினீங்களா!" என ராகவன் கேட்க, "நல்லபடியா கொண்டாடினோம் மித்ராப்பா!" என்றவர், "போன திங்கள் கிழமை தீபன் பிறந்தநாள்; அதனால பார்த்தசாரதி பெருமாள் கோவில்; கபாலீஸ்வரர் கோவிலுக்கெல்லாம் போயிட்டு வந்தோம்" என்றார் அருணா.


"நீங்க எல்லாரும் இங்க இருக்கீங்க; பாவம் உங்க மகனுக்குத்தான் கஷ்டமா இருக்கும் இல்ல" எனக் கேட்டார் வாணி.


"ஆமாம்! அவனுக்கு எங்க எல்லாரையும் விட்டுட்டு இருக்க கஷ்டமாத்தான் இருக்கு; இவங்களுக்கு அடிக்கடி ட்ரான்ஸ்பர் வந்துட்டே இருக்கே" என்றவர், “அவன் எந்த சூழ்நிலையையும் பொறுப்பா சமாளிப்பான்! ரொம்ப புத்திசாலி!" என்றார் அருணா.


"ஆமாம்! பசங்க நம்ம வசந்த் மாதிரி தீபன் மாதிரி பொறுப்பா இருந்துட்டா பெத்தவங்களுக்கு கவலையே இல்ல!" என்றவர், "வசந்த் கூட ரொம்பவே பொறுப்பா நடந்துக்குவான்: எங்க பேச்சை மீறி எதுவுமே செய்யமாட்டான்" என தன மகனைப் பற்றி பெருமை பட்டுக்கொண்டார் வாணி அவனது உண்மையான முகத்தை அறியாமல்.


"ஆனா எங்க வீட்டுல அப்படி இல்ல; எங்க தீபன் சொல்ற மாதிரித்தான் அவங்க அப்பாவே செய்வாங்க; பணத்தை எப்படி இன்வெஸ்ட் பண்ணலாம்னு தொடங்கி, சாமான் செட்டு வாங்கற வரைக்கும் அவன்தான் கரெக்ட்டா சொல்லுவான்.


எங்க சரிகாவுக்கு மாப்பிளை பாக்கற பொறுப்பை கூட அவங்க அப்பா அவன் கிட்ட விட்டுட்டாங்க" என அருணா அடுக்கிக்கொண்டே போக, "ஓ!" என்றார் வாணி உள்ளே போன குரலில்.


அப்பொழுது சரியாக அவரது கைப்பேசி ஒலிக்க, "ஏதோ புது நம்பறா இருக்கு! பேசிட்டு வரேன்!" எனச் சொல்லிவிட்டு வெளியே சென்ற அருணா, மிகவும் பதட்டத்துடன் திரும்ப வந்து, "மித்ராம்மா! சரிகாவுக்கு ஏதோ ஆக்சிடென்ட் ஆயிடுச்சாம்!


என்ன ஏதுன்னு புரியல; சேலம் ஜீ.ஹெச்க்கு கொண்டு போறாங்களாம்; அவ போன்ல இருந்து யாரோ ஒரு அம்மா கால் பண்ணாங்க! சரிகா அப்பா வேற ஊருல இல்ல! என்ன செய்யறதுன்னே புரியலியே!" என அழுகையுடன் சொன்னார் அவர்.


"என்ன! சேலமா!" எனக் குழப்பத்துடன் கேட்டவர், "ஒண்ணும் இருக்காது சரிகா அம்மா! நீங்க பயப்படாதீங்க! என்னோட ஆபீஸ் கார் இங்கதான் இருக்கு; அதுலயே போயிடலாம்; வீட்டை பூட்டிட்டு வாங்க" என்று சொல்லிவிட்டு,


"நான் போய் அவங்கள அங்க விட்டுட்டு, என்ன நிலவரம்னு பார்த்துட்டு வரேன்! நீங்க அப்பறம் போய் பாக்கலாம்" என மனைவியிடமும் அழுதுகொண்டிருந்த மகளிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிப்போனார் செல்வராகவன்.


***


மாலை ஐந்து மணிவாக்கில் கிளம்பிப்போன ராகவன், இரவு நேரம் பதினோரு மணியை கடந்தபிறகுதான் வீடு திரும்பினார்.


அவருக்காக, கலைவாணியும் மித்ராவும் உறங்காமல் காத்திருக்க, தந்தையை கண்டதும், ஓடிவந்த மித்ரா, "அப்பா! சரிகாவுக்கு என்ன ஆச்சு! இப்ப எப்படி இருகாங்க!" என்று அக்கறையுடன் விசாரிக்க, "அதெல்லாம் சொல்றேன்; நீ சாப்பிட்டியா கண்ணா" என மகளிடம் கேட்டார் ராகவன்.


"ம்ம்" என அவள் தலையசைக்கவும், "பயப்பட ஒண்ணும் இல்ல வசும்மா! நாளைக்கு நீ நேர்லயே அவளைப் போய் பார்க்கலாம்; ஸ்கூல்ல இருந்து வந்த உடனே நானே உன்னை கூட்டிட்டு போறேன்" என்றவர், "நீ திவ்யபாரதி மேடம்ம நேரில் மீட் பண்ணி ஆட்டோக்ராப் வாங்கணும்னு சொல்லிட்டே இருந்த இல்ல; நாளைக்கு ஹாஸ்பிடல் போயிட்டு வரும்போது, அவங்கள பார்க்க அழைச்சிட்டு போறேன்; இப்ப போய் தூங்கு!" என்று சொல்லி அவளை உள்ளே அனுப்பினார் அவர்.


மற்ற நேரமாக இருந்திருந்தால் இதைக் கேட்டுத் துள்ளிக் குதித்திருப்பாள் மித்ரா. அனால் அன்று அவள் இருந்த மனநிலையில் அமைதியாக உள்ளே போய்விட்டாள் அவள்.


மகளைப் பார்த்து பெருமூச்சு விட்டவர், "அந்த புள்ள அந்த நேரத்துல ஏன் அவ்வளவு தூரம் போச்சுன்னே தெரியல கலை!


ரோடு ஓரம் பள்ளத்துல விழுத்து கிடந்திருக்கு: அது ஜன நடமாட்டம் அதிகமா இல்லாத இடம் வேற;


நல்ல வேளையா யாரோ ஒரு அம்மா பார்த்துத்துட்டு அக்கம்பக்கம் எல்லாரையும் கூப்பிட்டிருக்காங்க!


உடனே ஆம்புலன்சுக்கு சொல்லி; ஜீ.ஹெச்சுக்கு கொண்டு போயிட்டாங்க;


உடம்பு மொத்தம் சிராய்ப்பு நிறைய இருக்கு; அந்த இடம் சேறும்சகதியுமா இருந்ததால, தலையில அடி எதுவும் படல.


ரைட் லெக்குல பிராக்சர் மட்டும்தான்; சீக்கிரமே சரி ஆயிடும்னு சொல்லியிருக்காங்க.


இன்னும் கூட அந்த புள்ளைக்கு மயக்கம் தெளியல கலை!" என வேதனையுடன் அங்கலாய்த்தவர், "அவங்க அப்பா நேரா ஆஸ்பத்திரிக்கே வந்துட்டாரு. அதான் நான் கிளம்பி வந்தேன்.


தீபன் அங்க இருந்து கிளம்பிட்டானாம்!" என விளக்கமாகச் சொல்லிவிட்டு குளியல் அறை நோக்கிப் போனார் ராகவன்.


முந்தைய தினம் சரிகாவின் விபத்தைப் பற்றி கேள்விப் பட்டது முதல் அந்த செய்தியை வசந்துக்கு தெரியப்படுத்த எண்ணி அவனது கைப்பேசிக்கு மறுபடி மறுபடி தொடர்பு கொள்ள, 'தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்' என்றே வந்து கொண்டிருந்தது.


சரிகாவை பற்றிய பயத்தில் இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தவள், இரவு உடையான பேண்ட் சட்டையுடன், பள்ளிக்குக் கிளம்பக்கூட மனமில்லாமல் வரவேற்பறை சோபாவில் படுத்திருந்தாள் மித்ரா.


அவரது மேலதிகாரியின் அழைப்பின் பேரில் அதிகாலையிலேயே அவசரமாகக் கிளம்பி அலுவலகம் சென்றிருந்தார் ராகவன்.


வாசற்கதவு திறந்தே இருக்க, "மித்ரா பாப்பா! வீட்டு சாவியை எடுத்துக்கறேன்" எனச் சொல்லிக் கொண்டே, உள்ளே வந்தார் மகளுடைய வீட்டிற்குச் சென்று அப்பொழுதுதான் திரும்பியிருந்த மாரி.


அவர் போய் ஆணியில் மாட்டப்பட்டிருந்த சாவியைக் கையிலெடுக்க, பைக்கை ஒட்டி வந்து நிறுத்தும் சத்தம் கேட்கவும் வசந்த்...தான் வந்துவிட்டான் என எண்ணி, மித்ரா வாயில் நோக்கிச் செல்ல, சீற்றத்துடன் புயலென உள்ளே வந்து கொண்டிருந்த நெடியவானைக் கண்டு மிரண்டு போய், கதவின் அருகில் ஊள்ள சுவரில் ஒண்டியவாறு அவள் பயத்துடன் நிற்க, நேர் புறமாக நின்றுகொண்டிருந்த மாரியிடம் "இது வசந்த் வீடுதான?" என அந்த புதியவன் சீற, 'ஆமாம்' என்பது போல் மிரட்சியுடன் தலை அசைத்தார் அவர்.


சரிகா பற்றிய தகவல் ஏதும் அவர் அறிந்திராத காரணத்தால், விபரீதமாக ஏதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் அவரது உள்ளுணர்வுக்குப் புரிய கொஞ்சம் சுதாரித்து நிலைமையை சமாளிக்க, "யாரு தம்பி நீங்க! இந்த நேரத்துல உள்ள பூந்து மிரட்டுறீங்க?" எனப் படபடத்தார் மாரி.


"என்ன மிரட்டுறனா?!" என கசந்த புன்னகையை சிந்தியவன், "அந்த நாய் மட்டும் என் கையில கிடைச்சுதுன்னா; அதை அடிச்சே கொண்ணுடுவேன்" என அவன் எகிற, சத்தம் கேட்டு அங்கே வந்த கலைவாணி, "யாருப்பா நீ! ஏன் எங்க வீட்டுல வந்து கூச்சல் போடுற! வெளிய போ!" என அதட்டலாகச் சொல்ல,


"எங்க அந்த நாய் வசந்த்; இப்ப சொல்லப்போறீங்களா இல்லையா" எனக் கர்ஜித்தான் அவன்.


மகனை அவன் கண்டபடி பேசவும், அதில் கொதித்துப்போனவர், "இதெல்லாம் சரியா வராது; நான் போலீசை கூப்பிடறேன்!" எனச் சொல்லிக்கொண்டே அவர் கைப்பேசியை எடுக்க, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அதைப் பிடுங்கித் தூர எறிந்தவன், அருகில் நின்றுகொண்டிருந்த மித்ராவை இழுத்து, பின்னாலிருத்தபடி அவளது கழுத்தை நெரித்தவாறு, "இப்ப அவன் எங்க இருக்கானு மட்டும் நீங்க சொல்லல, அப்படியே கழுத்தை நெரிச்சி போட்டுட்டு போயிட்டே இருப்பேன்" என அனாயாசமாக மிரட்டினான் அவன்.


அவன் இருந்த மனநிலையில் அருகில் இருப்பது ஒரு ஆணா பெண்ணா என்பதைக் கூட கவனிக்கவில்லை அவன்.


அதில் பதறிப்போய், "ஐயோ! கெஞ்சி கேட்டுக்கறேன்! வயசு பிள்ளைப்பா! அவளை விட்டுருப்பா!" எனக் கலைவாணி கெஞ்சலில் இறங்க, அப்பொழுதுதான் தான் பற்றியிருப்பது ஒரு பெண் என்பதையே உணர்ந்தான் அவன்.


ஆனாலும் அவளை விடாமல். "ஓ உங்க வீட்டு பொண்ணுன்னா உங்களுக்கு வலிக்குதோ! எங்க பொண்ணையெல்லாம் உங்க பிள்ளைக்கும் அவன்கூட சேர்ந்து ஊரை அழிக்கும் பொறம்போக்கு நாய்களுக்கும் நேந்து விட்டிருக்கோமா என்ன!" என அவன் கேட்கவும்தான் கொஞ்சம் புரிந்தது மாரிக்கு.


ஆனால் அதுவும்கூட புரியவில்லை கலைவாணிக்கு.


எதையும் உணரும் நிலையில் இல்லாமல், என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது என்பது கூட புரியாமல், கழுத்து நெறிப்பட்ட வலியால் அவனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள மித்ரா மிகவும் போராட, அவனுடைய இரும்பை ஒத்த கரத்தினை அசைக்கக் கூட முடியவில்லை அவளால்.


அவள் பிடிமானத்திற்காகப் போராட, அவனது கையில் தொங்கிக்கொண்டிருந்த கீ செயினை அவள் பிடித்து இழுக்க,


ஓரளவிற்கு நிலைமையை உணர்ந்த மாரிதான், அருகிலிருந்த அலமாரியிலிருந்து ஒரு அழைப்பு அட்டையை எடுத்துவந்தது அவனிடம் நீட்டி, "இதுதான் அவங்க ஆபீசு அட்ரஸு; அங்கதான் வசந்து தம்பி இருக்கும்; அங்க போய் பாருங்க! இந்த புள்ளைய விடுங்க தம்பி" எனத் தன்மையுடன் சொல்லவும், அதை வாங்கிப் பார்த்தவன், 'நாதன் சிஸ்டம்ஸ் அண்ட் கன்சல்டன்சிஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரை பார்த்து திருப்தியுற்றவனாக, மித்ராவை அப்படியே இழுத்துத் தள்ளிவிட்டு, அவளைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் குமுறும் எரிமலையாக அங்கிருந்து சென்றுவிட்டான் அவன்.


அந்த இடம் ஒரு புயலே அடித்து ஓய்ந்ததுபோல் அமைதியாக இருந்தது.


ஒன்றும் புரியாமல் கலைவாணி அப்படியே ஓய்ந்து போய் உட்கார்ந்துவிட, அவர் நிலையுணர்ந்து தண்ணீர் எடுத்துவரச் சமையல் அறை நோக்கிப் போனார் மாரி.


சுவரிலேயே சரிந்து அப்படியே சில நொடிகள் உட்கார்ந்திருந்தவள், தன கையை பிரித்துப்பார்க்க, அதிலிருந்த பொருளைப் பார்த்தவளின் உதடுகள், "சரிகா அண்ணா!" என முணுமுணுக்க, அவள் கண்களிலிருந்து உதிர்ந்த துளிகள் அந்த சிறிய யானை உருவத்தில் பொறிக்கப்பட்டிருந்த தீபன் என்ற பெயரின்மேல் பட்டுத் தெறித்தது.

0 comments

コメント

5つ星のうち0と評価されています。
まだ評価がありません

評価を追加
© KPN NOVELS COPY PROTECT
bottom of page