top of page

Poovum Naanum Veru - 17

இதழ்-17


கேள்வியாக வஸந்தை நோக்கிய சரிகாவை, "நீ வீட்டுக்கு போ! நான் மித்ரா கிட்ட பேசிக்கறேன்!" எனச் சொல்லி சில நொடிகள் கூட அவள் அங்கே இருக்க இடம் கொடுக்காமல் அவளை அனுப்பிவிட்டு, "வசும்மா! நீ இந்த விஷயத்தைப் பத்தி யார் கிட்டயும் சொல்லிடாத என்ன? என்னோட படிப்பு முடிஞ்சு நான் வேலையில ஜாயின் பண்ணனும்; சரிகாவுக்கும் இன்னும் ஒரு வருஷ படிப்பு இருக்கு இல்ல; நேரம் பார்த்து பெரியவங்க கிட்ட சொல்லிக்கலாம்; இப்பவே எல்லாருக்கும் தெரிஞ்சுதுன்னா அவளை அவங்க சென்னை கூட்டிட்டு போயிடுவாங்க; புரியுதா" எனச் சிறு குழந்தைக்குச் சொல்வதுபோல மித்ராவிடம் சொன்னான் வசந்த்.


அவளிடம் அன்பாகவும் நட்பாகவும் இருக்கும் சரிகா அவளுடைய அண்ணியாக வரவேண்டும் என்கிற ஆசை ஒருபுறம் இருந்தாலும், 'அவளைச் சென்னைக்கு கூட்டிட்டு போயிடுவாங்க' என்ற வசந்த்துடைய வார்த்தை, எங்கே சரிகாவை பிரியவேண்டி வருமோ என்ற அச்சத்தை அவளுக்குள் விதைக்க, வசந்த் சொன்னது போல் அதை யாரிடமும் சொல்லாமல் மறைத்தாள் மித்ரா.


அதன் பிறகு சரிகாவை அக்கா என விளிப்பதையே முற்றிலுமாக தவிர்த்தவள், யாரும் இல்லாத சமயங்களில் 'அண்ணி' என அவளை அழைத்து அவளுடைய மனதில் அந்த நம்பிக்கையை முற்றிலுமாக வளர்த்தாள் அவள்.


***


ஒரு நாள் பேச்சு வாக்கில், "முக்கியமா கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ணனும்! குவாலிட்டி சென்டர் வரைக்கும் போகலாம்னு இருக்கேன்" என 'எப்படியும் தானும் கூட வரவேண்டும் எனக் கெஞ்சுவாள்' என்ற எண்ணத்துடன், மித்ராவின் ஆசையை தூண்டும் வண்ணம் சரிகா சொல்ல, "என்ன வாங்க போறீங்க அண்ணி" என்று கேட்டாள் மித்ரா அவளுடைய தூண்டிலில் சிக்கியவாறு.


"நெஸ்ட் வீக் அண்ணாவுக்கு பர்த்டே! அவங்களுக்கு பர்த்டே கார்ட் வாங்கலாம்னு இருக்கேன்!" என சரிகா சொல்ல, "அண்ணின்ணீ! ப்ளீஸ் அண்ணி! நானும் வறேன்! உங்க கூட சேர்ந்து நானும் உங்க அண்ணாவுக்கு கார்டு செலக்ட் பண்றேன்!" எனக் கெஞ்சலாகக் கேட்டாள் மித்ரா.


அவளும் உடன் வந்து எதாவது வாங்குவாள் என்றுதான் சரிகா நினைத்தாள். அவள் வாழ்த்து அட்டையை தேர்ந்தெடுக்கிறேன் என அவள் சொன்னதும் வியப்புடன் தோழியைப் பார்த்தவள், "ஓகே! சீக்கிரம் ரெடி ஆகி வா! இருட்டறதுக்குள்ள போய்ட்டு வரணும்; இல்லனா அம்மா திட்டுவாங்க! " என்றாள் சரிகா சம்மதமாக.


கலைவாணியின் அனுமதியுடன் அவரிடம் கொஞ்சம் பணமும் வாங்கிக்கொண்டு, அந்த வயதிற்கே உரிய உற்சாகத்துடன் மித்ரா தயராகி வெளியே வர, எங்கோ சென்றுவந்து அவனது பைக்கை நிறுத்திக்கொண்டிருந்த வசந்த் தங்கையை பார்த்து, "எங்க கிளம்பற வசு" என கேட்க, "சரிகா கூட ஷாப்பிங் சென்டர் போறேன்னா" என அவள் எதார்த்தமாகச் சொல்லவும்,"டூ வீலர்லயா?" எனக் கேட்டான் வசந்த்.


அதற்கு அவள் 'ஆமாம்' என தலையசைக்க, "உன் கிட்ட எத்தனை தடவ சொல்லியிருக்கேன்! வெளியில எங்க போனாலும் முகத்தை துப்பட்டவால கவர் பண்ணிட்டு போன்னு:


அறிவில்ல! ஒரு தடவ சொன்னா புரியாது!" என அவன் கோபமாக உறும, அவள் முகம் தொங்கிப்போனது.


அதைப் பார்த்துக்கொண்டே அங்கே வந்த சரிகா, "வசந்த்! உனக்கு கோவம் கூட வருமா?" என வியந்தவள், "அவளை எதுக்கு இப்படி திட்டின வசந்த்! இப்ப வெயிலா கூட இல்லியே" என அவள் தோழிக்கு பரிந்துவர" பதட்டத்துடன் தன் தலையை கோதிக்கொண்டவன், "இல்ல பொல்யூஷனுக்காக சொன்னேன்" என்றான் தணிந்த குரலில்.


பின் 'உன்ன அப்பறம் கவனிச்சுக்கறேன்' என மெல்லிய குரலில் சொல்லிவிட்டு, மித்ராவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு தன் வாகனத்தை நோக்கிப் போனாள் சரிகா.


***


கடைக்குச் சென்ற பிறகும் கூட, சரிகா தேர்ந்தெடுத்த எந்த ஒரு வாழ்த்து அட்டையிலும் திருப்தி அடையாமல், எதாவது காரணம் சொல்லி நிராகரித்த மித்ரா, இறுதியாகத் தானே ஒன்றைத் தேர்ந்தெடுக்க, அதில் 'ஹாப்பி பர்த்டே' என்று மட்டும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. சரிகாவிற்கும் அது பிடித்திருந்தாலும், "மித்து; இந்த கார்டு; டெட்டி பியர் போட்டு அழகாத்தான் இருக்கு; ஆனா ஹார்ட் போட்டிருக்கேடி; இதை அண்ணாவுக்கு கொடுக்கலாமா?" என்று கேட்க, "எல்லாம் கொடுக்கலாம் தப்பில்ல; உங்களுக்கும் பிடிச்சிருந்தா இதை வாங்குங்க அண்ணி!" என மித்ரா சொல்ல, அவளுடைய அண்ணி என்ற வார்த்தையில் மந்திரத்திற்கு கட்டுண்டதுபோல அதையே வாங்கினாள் சரிகா.


ஏனோ வேறு எந்த பொருளும் வாங்கத் தோன்றாமல், சரிகாவுடனேயே அவளுடைய வீட்டிற்கு வந்தவள், ஒரு அந்நிய ஆண்மகனுக்கு கொடுக்கப்போவது என்ற எண்ணமெல்லாம் தோன்றாமல், வெகு சாதாரணமான ஒரு நட்பின் அடிப்படையில் மட்டும், பிடிவாதமாகத் தானே அந்த அட்டையில் பிறந்தநாள் வாழ்த்தை எழுதி அவளிடம் கொடுக்க,