Poovum Naanum Veru-16
இதழ்-16
அழகும்...
அழகாய் இருப்பதும்...
மலரும்...
மலராய் இருப்பதும்...
மென்மையும்...
மென்மையாய் இருப்பதும்...
பெண்மையும்...
பெண்ணாய் இருப்பதும்...
வரமா? சாபமா?
கொய்தெடுத்து...
கசக்கி...
நுகர்ந்து...
சின்னாபின்னப்படுத்த...
சுலபமாகப் பூத்துக்கிடப்பது...
மலர்களுக்கும்...
மங்கையருக்கும்...
வரமா? சாபமா?
அச்சாப கூட்டுக்குள் அடைத்துவைத்து வஞ்சனை செய்திட...
பெண்ணே மலரல்ல!
நீ வேறு!
அதை நீ உணரு!
நாமக்கல்லின் முக்கிய பகுதியில் அமைந்திருக்கும் அவர்கள் வீட்டிலிருந்து பேருந்து மூலம் ஒருமணி நேரப் பயண தூரத்தில் அமைந்திருக்கும் பரங்கிப்பூப்பட்டி என்னும் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார் கலைவாணி.
செல்வராகவன் காவல் துறையில் வாகன ஓட்டுநராக சேலம் உருக்கு ஆலையில் இருக்கும் காவல்துறையின் சிறப்புப் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
சொந்த வீடு, இருவர் சம்பாத்தியம், எளிமையான வாழ்க்கை முறை, ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாய் இரண்டு பிள்ளைகள் என நிம்மதியான நடுத்தட்டு வாழ்க்கை அவர்களுடையது.
வெளி உலகைப் பற்றி எதுவும் அறியாத மிகவும் அப்பாவியான பெண் அவர்கள் மகள் வசுமித்ரா. நன்றாகப் படித்து, விருப்பப்பட்ட கணினியியல் துறையைத் தேர்ந்தெடுத்து இறுதி ஆண்டு பொறியியல் படித்துக்கொண்டிருந்தான் வசந்த்.
கேம்பஸ் செலெக்ஷனில், மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு தேர்வாகியிருந்தான். வெளிநாட்டு வாழ்க்கையை எதிர்கால கனவாகக் கொண்டு, நிகழ் காலத்தி