top of page

Poovum Naanum Veru! 15

இதழ்-15


முந்தைய இரவு, ஈரப்பதம் தாக்காவண்ணம் நெகிழிப்பைகளால் இறுக்கமாகச் சுற்றி, ஒட்டும் பட்டி கொண்டு ஒட்டப்பட்டு, அழுத்தமான நெகிழியால் ஆன ஒரு பெட்டிக்குள், காற்று புகாவண்ணம் சீல் செய்யப்பட்டு, அங்கே புதைக்கப்பட்டிருந்த வசந்தின் பொருட்களை, மாரி தோண்டி எடுத்து வசுவிடம் கொடுத்தார்.


அனைத்தையும் எடுத்து பிரித்துப் பார்த்தவள், அதிலிருந்த மடிக்கணினியை முன்பே தான் கொண்டுவந்திருந்த, அதை வைக்கும் பிரத்தியேக பையிலும், அத்துடன் தோண்டி எடுக்கப்பட்ட மற்ற அனைத்தையும் பயண பெட்டிக்குள்ளும் பத்திரப்படுத்திக்கொண்டு, அடுத்த நாள், மாரியுடைய வற்புறுத்தலின் பெயரில், காலை உணவைச் சாப்பிட்டுவிட்டு, "தேங்க்ஸ் மாரிம்மா! ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்!" என்று திரும்பத்திரும்ப நன்றி சொல்லிவிட்டு, "ப்ளீஸ்! மாரிம்மா! அம்மா அப்பாவுக்கு இது எதுவும் தெரிய வேண்டாம்; ஏற்கனவே நொந்துபோயிருக்கறவங்கள மேல மேல கஷ்டப்படுத்த நான் விரும்பல" என்றவள் தன் திருமண விஷயம் பற்றி அவரிடம் எதுவும் சொல்லாமல், அருகிலிருந்த பானையிலிருந்து தண்ணீரை எடுத்துக் குடித்து, நெஞ்சை அடைக்கும் வேதனையைத் தணிக்க முயன்று, "அதனாலதான் பல விஷயத்துல அவங்க இழுக்கிற இழுப்புக்கெல்லாம் நான் போயிட்டு இருக்கேன்!" எனச் சொல்லிவிட்டு, "போயிட்டு வரேன் மாரிம்மா!" என்றவாறு பயணப்பெட்டியை இழுத்துக்கொண்டு கிளம்பினாள் வசு.


"கொஞ்சம் இரு மித்ரா பாப்பா!" என்ற மாரி, அடர்த்தியாகத் தொடுத்த ஜாதிமல்லி சாரத்தை அவளது கூந்தலில் சூட்டிவிட்டு, "நம்ம!" என்று தொடங்கி, 'வீட்டுல பூத்தது' என்று சொல்ல வந்ததை அப்படியே விழுங்கியவர், அவளுடைய கையில் பிடித்திருந்த பயணப் பெட்டியைப் பிடுங்கி , தானே இழுத்துவந்து ஆட்டோவில் வைத்தார்.


இரண்டு மனை அளவிலிருந்த தோட்டத்துடன் கூடிய அவர்களது வீட்டை, ஏக்கத்துடன் கண்களில் நிரப்பியவாறு வசு ஆட்டோவில் ஏறி உட்கார, அவளுடைய அனுமதியைக்கூட கேட்க்காமல், உரிமையுடன் அவளுக்கு அருகில் உட்கார்ந்து, அவளுடன் பேருந்து நிலையம் வரை வந்தவர், செல்லவேண்டிய பேருந்தில் அவள் ஏறி உட்கார்ந்தபிறகும் வீட்டிற்கு செல்லாமல், அந்த பேருந்து கிளம்பும் வரையிலும் உடனிருந்து, "பத்திரமா போயிட்டு வா பாப்பா! நான் ராத்திரி உனக்கு போனு போடறேன்" எனப் பரிவுடன் சொல்லிவிட்டு, பதிலுக்குச் சம்மதமாக அவளது தலையசைப்பைப் பெற்றுக்கொண்டுதான் அங்கிருந்து கிளம்பினார் மாரி.


மாலை அவளது வீட்டை அடைந்தவள், வெதுவெதுப்பான நீரில் குளித்து, வேறு உடைக்கு மாறிய பின்பு, பெற்றவர்களுடன் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அவர்களது கவனத்தை கவராவண்ணம், வசந்தின் பொருட்களை எடுத்துக்கொண்டு, பெற்றோரிடம் ஏதேதோ காரணங்களை புனைவாய் சொல்லிவிட்டு வெளியில் வந்து, தான் பத்திரமாக வந்து சேர்த்துவிட்டதை மாரியிடம் சொன்ன வசுமித்ரா பின்பு நேரம் கடத்தாமல் தீபனை சந்திக்கக் கிளம்பினாள்.


***


இரண்டு தினங்களுக்கு முன் அந்த சாவிக்கொத்தை அவள் கையில் கண்டதும், அதுவும் எட்டு வருடங்களாக அவள் அதனைப் பத்திரமாக வைத்திருக்கிறாள் என்பது அவனுக்கு புரியவும், அவன் எப்படி உணர்ந்தான் என்பது அவனுக்கே புரியவில்லை.


திலீப்புடனான திருமணத்திற்கு அவளுக்கு முழு சம்மதம் என்பதை, அதுவும் அவள் மொழியாகவே கேட்ட பின்பு, அவன் பெயர் பொறித்த அந்த கீ செயின் அவளிடம் இருப்பது மட்டும் ஏனோ அவனுக்குப் பிடிக்கவில்லை.


ஆனாலும் கூட அதை வசுவின் கையிலிருந்து பிடுங்கவேண்டும் என்றெல்லாம் எண்ணவில்லை அவன்.


முதலில் அதை மென்மையாகத்தான் பற்றினான், ஆனால் பிடிவாதத்துடன் அவள் அதனை இழுக்கவும், அவனும் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை அவ்வளவே.


ஆனால் எதிர்பாராமல் அவன் மீதே அவள் சரிந்து விழவும், சில நொடிகள்தான் என்றாலும் அவளுடைய அந்த ஸ்பரிசம், அவள் திலீப்பை திருமணம் செய்யச் சம்மதித்திருக்கிறாள் என்பதை முற்றிலுமாக மறக்கச் செய்து, அதீத போதையில் கூட தன்வசம் இழக்கவிடாமல் அவன் கட்டுக்குள் வைத்திருக்கும் அவனுடைய சிந்தனையை மொத்தமாக வேலை நிறுத்தம் செய்ய வைத்திருந்தது.


அவளுடைய கூந்தலிலிருந்து வந்த ஜாதிப்பூவின் மணம் அவனை மொத்தமாகக் களவாடிச் சென்றிருந்தது.


***


முகப்பில் நர்த்தன விநாயகர் சிலையுடன் அமைக்கப்பட்டிருக்கும் சிறிய செயற்கை நீரூற்று, மா, வேம்பு, எலுமிச்சை என சில மரங்களுடனும் அழகிய மலர்ச் செடிகளுடனும் மனதை மயக்கும் சிறு தோட்டம் என அதற்கிடையில் வெகு ஆடம்பரமாக அமைந்திருந்தது தீபனுடைய பங்களா.


அந்த பங்களாவின் முக்கிய பகுதியைச் சார்ந்தாற்போன்று அமைந்திருக்கும் 'அவுட் ஹவுஸ்' பகுதியைத்தான் தனது அலுவலகமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தான் அவன்.


தவிர்க்க முடியாத சில அலுவலக ரீதியான சந்திப்புகளுக்காக அதை ஏற்படுத்தியிருந்ததால் வீட்டில் இருப்பவர்கள் யாரும் அங்கே தேவையின்றி வரமாட்டார்கள். எனவேதான் வசுவை அங்கே வரச்சொல்லியிருந்தான் அவன்.


அந்த அலுவலக பகுதியின் நுழைவாயில், அவனுடைய வீட்டிலிருந்து தனியாக அமைந்திருந்தாலும், அந்த பங்களாவின் முக்கிய வாயில் வழியாகத்தான் அந்த இடத்திற்குள் வரவோ வெளியே செல்லவோ முடியும்.


தீபன் தன்னை மறந்திருந்த சில நொடிக்குள், அதன் வாயிலை நெருங்கி, தானாக மூடிக்கொள்ளும் அதன் கதவைத் திறந்துகொண்டிருந்தாள் வசு.


அதைக் கவனித்தவன், நொடிக்குள் சுதாரித்து, வேக எட்டுக்களில் அவளை நெருங்கி அவளுடைய கையை அழுந்த பற்றி, அவளைத் தடுத்தான் தீபன்.


அதில் கலவரமானவள், பயத்துடன் அருகிலிருந்த சுவருடன் ஒன்றியவாறு, "என்...ன; என்ன. என்ன பண்றீங்க மிஸ்டர் தீபன்?" என அவள் நடுங்கிய குரலில் கேட்க,


அவளுடைய முகத்தில் குடிகொண்டிருந்த பதட்டத்தைப் பார்த்து, "இவ்ளோ நேரம் ராணி மங்கம்மா மாதிரி பேசிட்டு இருந்த. உன்னோட வீரம் ஸ்டாக் தீர்ந்துபோச்சா என்ன" என விரிந்த புன்னகையுடன் சொல்லிக்கொண்டே, அருகிலிருந்த திரைச் சீலையைச் சற்று நகர்த்தி அருகில் சுட்டிக்காட்டினான் தீபன்.


அங்கே அவர்களுடைய தோட்டத்தில் இருந்த கல் மேடையில் அருணாவும், அவருக்கு அருகில் சரிகாவும் உட்கார்ந்திருப்பது, அங்கிருந்த கண்ணடி தடுப்பு வழியாகத் தெரிந்தது.


அந்த கல் மேடையில் ஒரு பக்கமாகத் திரும்பி உட்கார்ந்தவாறு பூ தொடுத்துக்கொண்டே மகளிடம் எதோ வளவளத்துக்கொண்டிருந்தார் அருணா முகம் நிறைந்த சிரிப்புடன்.


சரிகாவின் பின்புறத் தோற்றத்தை மட்டுமே பார்க்க முடிந்தது அவளால்.


பந்தல் அமைத்து அதில் படரவிடப்பட்டிருந்த கொடியில் ஜாதிமல்லி பூத்துக் குலுங்க, அங்கே ஏற்படுத்தப்பட்டிருந்த புல் தரையில் ஓடிக்கொண்டிருந்த முயல்களைத் துரத்தியவாறு, தானும் ஒரு முயல் குட்டிபோல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தாள் சாத்விகா.


அங்கே பொருத்தப்பட்டிருந்த 'போகஸ் லைட்' வெளிச்சத்தில் அந்த காட்சிகள் நன்றாகவே தெரிந்தது.


"அங்க அம்மாவும், சரிகாவும் உட்கார்ந்துட்டு இருக்காங்க; அவங்களை க்ராஸ் பண்ணிதான் வெளியில போக முடியும்" என தான் அவளை தடுத்ததற்கான காரணத்தை அவன் சொல்ல,


"சரிகா! சரிகாக்காவா அது! நான் அவங்க கிட்ட சாரி கேக்கணும்! கண்டிப்பா கேக்கணும்!" எனச் சொல்லிக்கொண்டே வசு வேகமாக அடிகளை எடுத்துவைக்க, மறுபடியும் அவள் கையை பிடித்து சுவர் ஓரமாக அவளை நிறுத்தி அவனது கைகளை அவளுக்கு அருகில் ஊன்றி, அவளை வழிமறித்து நின்றவன், "நீ சாரியும் கேட்க வேண்டாம்; ஒரு மண்ணும்... வேணாம்!" எனக் கடுமையாக ஆரம்பித்து, "இதோ பார் மித்ரா! அவ எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு சந்தோஷமாவும் நிம்மதியாவும் ஒரு புது வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கா! அவளை நீ மீட் பண்றது, அதுவும் அவ இப்ப இருக்கற நிலைமையில் அவளுக்குக் கொஞ்சம் கூட நல்லது இல்ல. அதே மாதிரிதான் அம்மாவும் எதையுமே மறக்கல; அவங்க உன் மேலயும்; உன் குடும்பத்துல இருக்கறவங்க மேலயும் ரொம்பவே கோபமா இருக்காங்க. நீ மட்டும் அவங்க கண்ணுல பட்ட, அது உனக்கு நல்லதில்ல.


நீ உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டு இருக்க. இப்ப இது தேவையில்லாத வேலை" எனத் தன்மையாகவே சொல்லி முடித்தவன், எங்கேனும் அவர்கள் திரும்பிப் பார்த்துவிடப்போகிறார்களே என்ற எண்ணத்தில் வசுவை மறைத்தாற்போன்று மேலும் அவளை நெருங்கி நின்றுகொண்டான் தீபன்.


முதலில் அவனது செயலால் வசு பயந்துபோனாலும், அதற்கான கரணம் புரியவும் நிம்மதி உண்டானது அவளுக்கு.


ஆனால் இதற்கு முன்பு வரை பார்த்ததுபோல் இறுக்கமாக இல்லாமல், தீபனுடைய முகத்தில் தோன்றி, அங்கேயே நிலைத்திருந்த புன்னகையும், அவனுடைய அக்கறை கலந்த பேச்சும், அவனது நெருக்கமும், எப்பொழுதுமே அவளை ஈர்க்கும் அவனுடைய நறுமணமும், அவளை ஏதோ ஒரு உலகிற்கு இட்டுச்செல்ல, நாணத்தில் முகம் சிவந்தாள் வசு.


சரியாக அதே நேரம் அருணா தான் தொடுத்துக்கொண்டிருந்த பூச்சரத்தை மகளின் கூந்தலில் சூட்ட சாத்விகா ஓடி வந்து பாட்டியின் மடியைக் கட்டிக்கொண்டு தொங்கவும் அவளுடைய கண்ணெதிரிலேயே காட்சியாக விரிந்திருக்கும் அவளுடைய கடந்தகாலம் நிதரிசனத்தை அவளுக்கு உணர்த்த, உயிர்வரை அடிவாங்கினாள் வசுமித்ரா.


"மித்ரா!" மிக மென்மையாக ஒலித்த அவன் குரலில் தன் கழிவிரக்கத்திலிருந்து மீண்டவள், தன்னை மறந்து "ம்" என்று கேட்க, "உன்னைப் பார்க்கவே ரொம்ப டயர்டா தெரியற! சரியா சாப்பிட்டாயான்னுகூட தெரியல! நீ இப்ப ஸ்கூட்டியை ஓட்டிட்டு போக வேண்டாம்" என தீபன் சொல்ல, அவள் அவனைக் கேள்வியுடன் பார்க்கவும், "இல்ல! என்னால உன்னை இப்ப ட்ராப் பண்ண முடியாது! நான் இன்னும் கொஞ்ச நேரத்துல மும்பைக்கு கிளம்பனும்!" என்றவன், "எங்க கம்பெனியோட கேப் ஆப்பரேட்டர்ஸ் கிட்ட சொல்லி நீ கிளம்ப கார் அரேஞ்ச் பண்ண சொல்லியிருக்கேன்! இன்னும் டென் மினிட்ஸ்ல வந்திடும்; நான் அவங்கள உள்ளே அனுப்பிட்டு வரேன். நீ செக்யூரிட்டி கேட் கிட்ட போய் வெயிட் பண்ணு!" எனக் கட்டளையாகச் சொல்லிவிட்டு, அதற்கு அவள் சொன்ன மறுப்பையெல்லாம் பொருட்படுத்தாமல் அங்கிருந்து சென்றான் தீபன்.


பின்னர் அங்கே உட்கார்ந்திருந்த அவனுடைய அன்னையிடம் சென்றவன், "மா! இருட்டிப்போச்சு! சாது குட்டிய இங்க வெச்சுட்டு என்ன பண்ணிட்டு இருக்கீங்க! கொசு கடிக்க போகுது! மழை வேற வரும்போல இருக்கு! சரிகாவுக்கும் நல்லதில்லை" எனக் கண்டன குரலில் சொல்ல, அவன் சொன்னதும் சரி என்று படவே, எழுந்த சரிகா முன்பாக செல்ல, குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவளை பின் தொடர்ந்து வீட்டிற்குள் சென்றார் அருணா. அவர்கள் உள்ளே சென்றுவிட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு, அவன் வீட்டின் முக்கிய வாயிற்பகுதிக்கு வர, அங்கே வந்து சேர்ந்தாள் வசு.


அங்கே வந்து காத்திருந்த 'கேப்'பில் அவள் ஏறி உட்காரவும், அதை ஓட்டி வந்த ஓட்டுநரின் பெயரைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அந்த வண்டியின் பதிவு எண்ணைச் சரி பார்த்து, "பத்திரமா பார்த்து கூட்டிட்டு போங்க!" எனத் தோரணையுடன் சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றான் தீபன்.


மேலும் மேலும் அவனது இத்தகைய செய்கைகளால், எதிர்காலத்தைப் பற்றிய அவளுடைய பயத்தை அதிகமாக்கிக்கொண்டே போனான் தீபன்.


அவளுடைய அண்ணன் அவள் மீது ஏற்றிவிட்டுச் சென்றிருந்த சுமைகளை தீபனிடம் இறக்கி வைக்கச் சென்றவள், அவனால் மனம் முழுதும் பாரம் ஏறிய உணர்வுடன் வீடு நோக்கிச் சென்றாள் வசு!


***


வசுவை அனுப்பிவிட்டு தீபன் வீட்டிற்குள் வரவும், “வசுந்தா ஆந்தீ!" என்றவாறே மாடியிலிருந்து இறங்கி ஓடி வந்தாள் குழந்தை சாத்விகா!


"என்னடா தீபா! ரெண்டு நாளா இந்த குட்டி பொண்ணு யாரோ ஆன்டியை பத்தி சொல்லிட்டு இருக்கா. இப்ப கூட ஜன்னல் வழியா உன்னை பார்த்துட்டுதான் இப்படி ஓடிவறான்னு நினைச்சேன். ஆனா யாரோட பேரையோ சொல்றாளே" என அருணா குழப்பத்துடன் கேட்க, மாடி ஜன்னல் வழியாக சாத்விகா வசுவை பார்த்துவிட்டாள் என்பது புரிந்து திடுக்கிட்டு போனான் தீபன்.


உடனே தன்னை சமாளித்துக்கொண்டு, சாத்விகாவை நோக்கி, "யாரை பத்தி சொல்றாங்க குட்டி பேபி! அன்னைக்கு பார்த்தோமே அந்த வசுந்தரா ஆன்டியை பத்தியா" என அவன் இயல்பாகக் கேட்க, குதூகலத்துடன், தலையை ஆட்டி, "வதுந்தா ஆந்திதா! மாமா! வா அவங்க கூப்பிதாம்" என சொல்லிக்கொண்டே வெளியே செல்லவேண்டும் என தீபனின் கையை பிடித்து இழுத்தாள் குழந்தை.


"கண்ணா! அவங்க இங்க எப்படி வருவாங்க? நீ பார்த்த ஆன்டி வேற யாரோ. அவங்க மாமாவோட ஸ்கூல்ல வேலை செய்யற டீச்சர்" என அவளுக்கு விளக்கியவன், "நம்ம அண்ணாநகர் சென்டர் ஹெச்.எம் மா!" என அருணாவிடம் தன சமாளிப்பைத் தொடர்ந்தான் தீபன்.


"சரி; அது இருக்கட்டும்; யாருப்பா அந்த வசுந்தரா! குட்டி வேற ரெண்டுநாளா அவங்க பேரையே சொல்லிட்டு இருக்கா!" என அருணா கேட்கவும், என்ன சொல்வது என யோசித்தவன், "நம்ம திலீப் இருக்கான் இல்ல. அவனோட பியான்சி. அன்னைக்கு அவங்கள இன்ட்ரோ கொடுக்கத்தான் கூப்பிட்டிருந்தான்" எனச் சொன்னான் தீபன், அவளை திலீப்புடைய வருங்கால மனைவி எனச் சொல்ல மனமே இல்லாமல்.


"ஓஓஓஓ..." எனக் கொஞ்சம் அதிகமாகவே வியந்தவர், "பொண்ணு ரொம்ப அழகா இருப்பாளா தீபா!" என மகனின் மனநிலை புரியாமல் அருணா தொடர, வசுவின் மென்மையான முகம் அவன் மனக்கண்ணில் தோன்றி மறைய, "ம்ம்! ரொ...ம்ப" எனத் தன்னை மறந்து சொல்லிவிட்டு, "ஏன்மா இப்படி கேள்வி மேல கேள்விகேட்டு கொல்றீங்க. நான் வேற ஏர்போர்ட் போகணும்" என எறிந்து விழுந்தான் தீபன் தன இயலாமையை மறைக்க.


"ம்ம்; ஊரு உலகத்துல எல்லாருக்கும் கல்யாணம் நடக்குது; எனக்குன்னு ஒண்ணு வந்து பொறந்திருக்கு பாரு; எப்ப கேட்டலும் எதாவது சாக்குபோக்கு சொல்லிட்டு! அடுத்தவன் கல்யாணத்தை பத்தி கேட்டதுக்கே இந்த குதி குதிக்கறான்!" என வாய்க்குள்ளேயே முனகியவாறு பேத்தியைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து சென்றார் அருணா.


தன் எண்ணப்போக்கை தானே வெறுத்தவனாக மும்பை செல்வதற்காக தயாரானான் தீபன்.


***


வீட்டிற்குள் நுழைந்ததும் யாரிடமும் ஏதும் பேசாமல் குளியலறைக்குள் புகுந்துகொண்டவள், குளித்து இரவு உடைக்கு மாறி பின்பு அமைதியாகச் சமையலறை நோக்கிப் போனாள் வசு.


"வசும்மா! அந்த பசங்க எல்லாரும் எப்படி இருகாங்க!" என ராகவன் அவளிடம் கேட்க, கவனமில்லாமல், "எந்த பசங்கப்பா?" என உள்ளே இருந்துகொண்டே கேட்டாள் அவள்.


"அந்த போதை பழக்கத்துக்கு அடிமை ஆன பசங்க; அவங்கள பார்க்கத்தானே நீ போயிருந்த!" என்றார் அவர் எதார்த்தமாக.


அவள் சொல்லியிருந்த பொய் நினைவில் வரவும், மனம் வருந்தியவளாக, ஈரமாக இருந்த கைகளை அவள் துப்பட்டாவால் துடைத்தவாறு, வெளியில் வந்து அவரது முகத்தைப் பார்த்து, "அந்த பசங்க இப்ப பெட்டரா இருக்காங்கப்பா!" என்று தொலைப்பேசி மூலம் அவள் அறிந்த அவர்களது உண்மை நிலையை நேரில் பார்த்ததுபோல சொல்லி விட்டு, மறுபடியும் உள்ளே புகுந்துகொண்டாள் வசு.


பின்பு கலைவாணிக்கு இரவு உணவை தன் கையாலேயே ஊட்டி விட்டு, மற்ற இருவருக்கும் உணவைப் பரிமாறி, தானும் உண்டு அவள் வந்து படுக்க, இரவு பதினொன்று ஆனது.


இரவு விளக்கின் ஒளியில், அந்த கூடத்தின் ஓரமாக சாய்த்து வைக்கப்பட்டிருந்த அவளுடைய பயணப்பையில் அவளது பார்வை அடுக்கடி சென்று மீள, உறக்கம் வராமல் தவித்தவள், ஒரு கட்டத்தில் தன்னை மறந்து உறங்கிப்போக, "உன்னை முழுசா நம்பினேனே! என்னை இப்படி ஏமாத்தி என் கழுத்தை அறுத்துட்டயே!" என ஆத்திரத்துடன் ஒலித்த குரலில் திடுக்கிட்டு விழித்தவள், உடல் முழுதும் வியர்வையில் நனைய, விண்ணனென்று வலித்த தலையை கைகளால் தாங்கிப் பிடித்தவாறு சில நிமிடங்கள் உட்கார்ந்திருந்தவள், பின்பு தண்ணீரை அருந்திவிட்டு, கண்களை மூடி படுத்துக்கொண்டாள் வசு.


கடந்து போன கசந்த நாட்கள் அவள் கண்முன்னே காட்சியாய் விரியத்தொடங்கியது.


நா..கிட..தக்.தறிக்கிட...தின்னா...தோம்... என வேகமான மெட்டுடன், பாடல் தொடங்க, தன் இடையை வளைத்து ஆட முயன்று கொண்டிருந்தாள் மித்ரா.


"எங்கே என் புன்னகை; எவர் கொண்டு போனதோ!" என அந்த பாட்டின் வரிகளைத் தானும் பாடியபடி மித்ராவை கவனித்துக்கொண்டிருந்தவள், "ஏய்: பொட்டேட்டோ! என்ன டீ ஆடுற நீ! செம்ம காமெடியா இருக்கு" என சொல்லிக்கொண்டே அவள் முதுகில் தொப் என அடித்த சரிகா, "எத்தனை தடவ இந்த சாங்க டீவீல பிளே பண்ணி காட்டினேன். இப்படி சொதப்பறியே! ஹிப் கொஞ்சம் கூட வளையல' எனக் கிண்டலுடன் சொன்னாள் சரிகா.


அதற்கு அவள், "அக்கா! எனக்கு டான்ஸெல்லாம் செட் ஆகாது. பாட்டு மட்டும் பாடறேன்...ன்னு சொன்னதுக்கு; நீங்கதானே டான்ஸ்ல நேம் குடுக்க சொன்னீங்க! இப்ப இப்படி சொன்னா?" என மித்ரா சரிகாவிடம் சண்டைக்கு கிளம்ப,


"ஏய்! என்ன அக்கான்னு கூப்பிடாதன்னு சொல்லி இருக்கேன் இல்ல! சரிகா...க்கா! சரிகா...க்கா! நீ கூப்பிடும்போதெல்லாம் காக்கா; காக்கான்னு கூப்பிடற மாதிரியே இருக்கு" என அவளிடம் காய்ந்த சரிகா, "நல்லா சீஸ் பர்கர்; பிஸ்ஸானு சாப்பிட்டா இப்படித்தான் இடுப்பு பெருசா அடுப்பு மாதிரி இருக்கும். டான்ஸ் ஆடினா எக்ஸர்சைசா இருக்குமேன்னு சொன்னேன்!" என அவள் தீவிரமாகச் சொல்ல,


"அப்படி சொல்லு சரிகாம்மா! இவ அண்ணங்காரன் செய்யற வேல. அம்மா அப்பாவுக்கு தெரியாம இந்த கன்றாவியெல்லாத்தையும் வாங்கிட்டு, நேரா இங்க வந்து இவளுக்கு கொடுக்கிறான். இந்த புள்ளையும் 'ப்லீஸு! ப்லீஸு! அம்மா கிட்ட சொல்லிடாதேன்னு கெஞ்சிகிட்டே சாப்பிட்டுட்டு போகுது!


மொத்தத்துல இவங்க செய்யற கூட்டு களவாணித்தனத்துக்கு நானும் உடந்தையா இருக்க வேண்டியதா போகுது!" என அருகில் இருந்த மாரி சலித்துக்கொள்ள,


பாடிக்கொண்டிருந்த சிறிய 'ஆடியோ சிஸ்ட'த்தை டப்பென அணைத்து அதனைக் கையில் எடுத்துக்கொண்டு, "ரெண்டு பெரும் சேர்ந்துட்டு என்னை கிண்டல் பண்றீங்க இல்ல! நான் போறேன்" எனச் சொல்லிக்கொண்டே கோபத்துடன் மாடிப்படியை நோக்கிப் போனாள் மித்ரா.


"ஏய்! மித்து பேபி! நான் எங்க உன்னை கிண்டல் பண்ணேன்! உன் நல்லதுக்குத்தானே சொன்னேன்!" என அவளைச் சமாதான படுத்தும் விதமாக அவளை பின் தொடர்ந்து சரிகா போக, மாடிப்படிகளில் ஏறி மேலே வந்துகொண்டிருந்தான் வசந்த்.


இரண்டு பெண்களும் இறங்கி கீழே செல்ல, அண்ணனின் கண்களும், சரிகாவின் கண்களும் ஜாடையாக எதோ பேசிக்கொள்ள, அது புரிந்தும் புரியாதவள் போல கீழே இறங்கிப்போனாள் பன்னிரண்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் வசுமித்ரா.


மலர்ந்து மணம் பரப்பும் மலர்கள் அழகுதான்!


மணமில்லா மலர்களென்றாலும் கூட...


மலர்களாய் இருப்பதே அழகுதான்!


தானே அறியாமல் விழிகளுக்கு விருந்தாகும்...


பலவண்ணம் பூசிய மலர்கள் அழகுதான்!


மென்மையை தன் தன்மையாய் பூண்டிருப்பதால்...


மலர்கள் அழகுதான்!


அழகாய் இருப்பதால்தானோ...


வண்ணமயமாய் இருப்பதால்தானோ...


மென்மையாய் இருப்பதால்தானோ...


பெண்ணும் மலரெனும் இயல்புக்குள் அடங்கிப்போனாளோ?

0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page