இதழ்-14
மழை பொழிந்து தரை ஈரமாக இருந்ததால், எச்சரிக்கையுடன் கால்களை ஊன்றி நடந்தவள், அங்கே இருக்கும் கிணற்றுக்கு அருகில் இருக்கும் சிறிய மோட்டார் அறையைத் திறந்து அதிலிருந்த கடப்பாரையையும் மண் வெட்டியையும் தூக்க முடியால் கைகளில் தூக்கியவாறு, கை விளக்கின் ஒளியில் அங்கே இருக்கும் சுற்றுச்சுவர் ஓரமாகக் கொண்டுபோய் போட்டாள் அவள்.
அந்த பகுதி முழுவதையும் ஒரு முறை சுற்றிலும் பார்த்தவள், அவளுடைய தலைக்கு மேல் உயர்ந்திருந்த அந்த சுற்றுச்சுவரை தாண்டி உள்ளே யாராலும் பார்க்க முடியாது என்ற துணிவு வரப்பெற்றவளாக, அங்கே இருக்கும் ஒரு மா மரத்தின் அடியில் தன பலம் முழுதையும் திரட்டி தோண்ட ஆரம்பித்தாள் வசு.
சேற்றில் கால்கள் வழுக்க, பயத்தினால் பூத்த வியர்வையால் கடப்பாரையைப் பிடிக்க இயலாமல் கைகள் வழுக்க, ஏற்கனவே அவள் திணறிக்கொண்டிருக்க, "பாப்பா! என்ன செஞ்சிட்டு இருக்க நீ?" எனக் கடுமையுடன் ஒலித்த குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தவள், மொத்தமும் இருள் சூழ்ந்திருக்க, அங்கே படர்ந்திருந்த தெருவிளக்கின் மெல்லிய ஒலியின் தெரிந்த மாரியின் உருவத்தை கண்டு விதிர்விதிர்த்துப்போனாள் அவள்.
"நீ 'அம்மா அப்பாவுக்கு தெரியாம இங்க வந்திருக்கேன்'ன்னு சொல்லும்போதே நினைச்சேன் பாப்பா! இந்த மாதிரி எதுவோதான் இருக்கணும்னு" என அவர் சொல்லிக்கொண்டே போக, எச்சிலைக் கூட்டி விழுங்கியவள், "மாரிம்மா! உங்களுக்கு எப்படி புரியவைக்கறதுன்னு தெரியல!" என வருந்தும் குரலில் சொல்லிவிட்டு, "சரிகா அண்ணா என்னை அடையாளம் கண்டுபிடிச்சுட்டாங்க மாரிம்மா!" என முடித்தாள் வசு.
"யாரை சொல்ற?" எனப் புரியாமல் யோசித்தவர், "ஐயோ பாப்பா! பக்கத்துக்கு வீட்டுல இருந்துச்சே அந்த சரிகா புள்ளையோட அண்ணனா?" எனப் பதட்டத்துடன் கேட்டார் மாரி.
ஆமாம் என்பதுபோல் தலை அசைத்தவள், இருளில் அவர் அதைப் கவனிக்கவில்லை என்பதை உணர்ந்து, "ஆமாம்!" என்று சொல்லிவிட்டு, "வேற யார் வந்து நின்னாலும் கவலைப் பட்டிருக்க மாட்டேன் மாரிம்மா!
என்ன இருந்தாலும் அவங்க பெரிய அளவுல பாதிக்க பட்டவங்க இல்ல!
எல்லாத்தையும் விட நடந்த தப்புக்கு நானே ஒரு விதத்துல உடந்தையா இருந்துட்டேனே!
என்னால ஓடி ஒளிய முடியல மாரிம்மா! அதுவும் அவங்கள நேர்ல பார்த்த பிறகு..." என மேலே பேச முடியாமல்அவள் அழுகையில் குலுங்க, "கண்ணு! பாப்பா! உன்னைப் பத்தி தெரிஞ்சும் நான் இப்படி பேசி இருக்க கூடாது! தப்பு பண்ணிட்டேன்! நீ அழுவாத!" என சொல்லிக்கொண்டே அவளை அணைத்துக்கொண்டார் மாரி.
அவள் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு, "இங்க புதைச்சோமே அந்த பாவியோட திங்க்ஸ். அதையெல்லாம் வெளியில எடுக்கணும்!" எனச் சொல்லிக்கொண்டே கடப்பாரையைக் கையில் எடுத்தாள் வசு.
அதை ஆவேசமாக அவளிடமிருந்து பறித்தவர், இந்த கடப்பாரைய தூக்கவே பிறந்தவ பாப்பா நானு. உனக்கு எதுக்கு இந்த வேலை?" எனச் சொல்லிவிட்டு, வெகு சாதாரணமாக அந்த இடத்தில் தோண்ட ஆரம்பித்தார் மாரி.
***
"ச்ச! என்ன ஹாண்டசம் இல்ல நம்ம பாஸ்! என்ன ஃபிஸிக்! என்னா ஆட்டிட்யூட்! செம்ம ல! இவரை சைட் அடிக்கத்தான் என்னோட சண்டேவை கூட தியாகம் பண்ணிட்டு இங்கே வந்தேன்!"
இவ்வாறு தீபனை பார்த்து தன் தோழியிடம் கிசுகிசுப்பான குரலில் உருகிக்கொண்டிருந்தாள் அவனுடைய அலுவலகத்தில் வேலையில் இருக்கும் ஒரு பெண் ஊழியர்.
சென்னையின் முக்கிய பகுதியில் இருக்கும் ஒரு உயர்தர அடுக்குமாடி கட்டிடத்தில் அமைந்திருந்தது தீபனுடைய அலுவலகம்.
அதில் ஏற்படுத்தப்பட்டிருந்த, 'கான்பரன்ஸ் ஹால்'லில், அவனுடைய கல்வி நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் இருக்கும் பிரதிநிதிகளுடன் அலுவலக ரீதியான ஒரு அவசிய சந்திப்பில் பேசியவாறு பலருடைய ரசனையை களவாடிக்கொண்டிருந்தான் அவன்.
சத்தம் எழுப்பாமல் ஒளிர்ந்தவண்ணம் ஏதோ அழைப்பு வருவதை அவனுக்கு அறிவித்தது மேசைமீது வீற்றிருந்த அவனது கைப்பேசி.
அதில் வசுவின் பெயரைப் பார்த்தவன், அனிச்சை செயலாக அந்த அழைப்பைத் துண்டித்துவிட்டு, தனது உரையைத் தொடர்ந்தான் தீபன்.
சில நிமிடங்களில் அந்த சந்திப்பை முடித்துக்கொண்டு, தனது பிரத்தியேக அறைக்கு வந்தவன், நேரத்தைப் பார்க்க, மாலை ஆறாகி இருந்தது. 'அவள் எதற்காக அழைத்திருப்பாள்' என்ற யோசனையுடன் வசுவின் எண்ணிற்கு அழைத்து, "வாட் மிஸ். மித்...ரா இந்த நேரத்தில் கால் பண்ணியிருக்க;
நாமக்கல் போயிருந்த போலிருக்கே.
உன் அண்ணனை கையோட கூட்டிகிட்டு வந்துட்டியா என்ன" வெகு இயல்பாகக் கேட்டான் அவளிடம்.
"ஸோ... நீங்க என்னைத் தொடர்ந்து ஸ்பை பண்ணிட்டேதான் இருக்கீங்க இல்ல மிஸ்டர். தீ...பன்!" என அவன் கேட்டது போலவே அவனிடம் கேட்டாள் வசு.
"யா! அஃப்கோர்ஸ்! எனக்கு அது ஒண்ணும் தப்பா தெரியல!
எனக்குத் தேவையான தகவலை சொல்லிடு; அப்பறம் நான் ஏன் உன்னை ஸ்பை பண்ண போறேன்" என்றான் தீபன் எகத்தாளமாக.
"கண்டிப்பா மிஸ்டர்.தீபன்! நீங்க கேட்ட தகவலை உங்களுக்குக் கொடுக்கத்தான் போறேன்!
பட்; நீங்க என்னை ஸ்பை பண்ணுவீங்க; ஃபாலோ பண்ணுவீங்கன்னு பயந்துட்டெல்லாம் இல்ல!
என் மனசாட்சிக்கு அதுதான் சரின்னு படுது; அதுக்காக" என்றவள், நான் உங்களை உடனே மீட் பண்ணனும்! எங்க வரலாம்" எனக் கொஞ்சமும் தயக்கமின்றி அவள் கேட்கவும், சில நொடிகள் யோசித்தவன், "நாளைக்கு மீட் பண்ணலாம்; ஏற்கனவே மணி சிக்ஸ் ஆயிடுச்சு!" என அவன் சொல்ல, "இல்ல; உங்களை உடனே பார்க்கணும்; நான் இப்ப கத்திப்பாரா கிட்ட இருக்கேன்; எங்க வரணும்னு சொல்லுங்க" பிடிவாதத்தின் உச்சத்தில் ஒலித்தது அவளது குரல்.
"ப்ச்! பஸ்லதான வந்துட்டு இருக்க!" என அவன் கேட்க, "ப்ச்! இல்ல! ஸ்கூட்டிலதான்" என அவள் சலிப்பாக சொல்லவும், "நான்சன்ஸ்! அறிவில்லை உனக்கு!" எனப் பற்களைக் கடித்தான் தீபன், தன்னையும் அறியாமல் அவன் மனதில் இருக்கும் அவளுக்கான அக்கறையை வெளிப்படுத்துகிறோம் என்பதை உணராமல்.
ஆனால் அந்த அக்கறையைக் கூட உணராதவளாக, "ப்ச்! இபபோதைக்கு ஸ்டாக் இல்ல! நேரில் வந்து வாங்கிக்கறேன்; எங்க வரணும் சொல்லுங்க" என அவள் அதிலேயே இருக்க, எப்படியும் அவள் விட்டுக்கொடுக்கமாட்டாள் என்பதை உணர்ந்தவனாக, "சரி... என் கிண்டி ஆபீஸ்க்கு; அதான் தீபன்ஸ் டவர்ஸ் தெரியும் இல்ல? அங்கே வந்திடு!" என்றான் அவன்.
"நோ! நோ! எல்லாரும் வந்துபோகும் இடம் வேண்டாம்! பிரைவேட் பிளேஸ் எதாவது சொல்லுங்க!" என அவள் சொல்ல, தலையில் அடித்துக்கொண்டவன், நேரம் கடந்துகொண்டிருப்பதை உணர்ந்து, "சரி! என்னோட அடையாறு வீட்டுக்கு வந்து தொலை! அட்ரஸ் மெசேஜ் பண்றேன்!" என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான் தீபன்.
வசு அங்கே வருவதற்குள், அடித்து பிடித்து அவனுடைய வீட்டை அடைந்தவன், வீட்டின் காவலாளியிடம் ஏதோ சொல்லிவிட்டு உள்ளே சென்றான் அவன்.
அங்கே வரவேற்பறையில் அமர்ந்திருந்த அருணாவிடம், "மா! ஆபிஸ் ரூம் போறேன்! சமையல்காரம்மாகிட்ட சொல்லி ரெண்டு காபி அனுப்புங்க!
நீங்க யாரும் அங்க வரவேண்டாம்!" என அழுத்தமாகச் சொல்லிவிட்டு, தனியாக வீட்டின் முன்புறம் அமைந்திருந்த அவனது அலுவலகம் நோக்கிச் சென்றான் தீபன்.
அவனுடைய வீட்டைக் கண்டுபிடித்து வசு அங்கே வர சில நிமிடங்கள் பிடித்தது.
அவன் வீடு எனச் சொல்லவும், சாதாரணமாக எண்ணி வந்தவள், அந்த பங்களாவின் ஆடம்பரத்தைப் பார்த்து வியந்தவளாக, தனது ஸ்கூட்டியிலிருந்து இறங்கி, அதனை ஓரமாக நிறுத்திப் பூட்டிவிட்டு, அதிலிருந்த லேப்டாப் பேக் மற்றும் இன்னும் ஒரு கைப்பையையும் எடுத்துக்கொண்டு, அங்கே இருந்த காவலாளியை நெருங்கி, "இங்க மிஸ்டர் தீபன்னு!" என விசாரிக்க, "வாங்கம்மா! நீங்க தான் வசுந்தரா மேடம்மா! நீங்க வருவீங்கன்னு சார் சொன்னாங்க!" எனப் பணிவுடன் சொல்லிவிட்டு, அவர் முன்னே செல்ல, அவரை பின்தொடர்ந்து அவனது அலுவலக அறைக்குள் சென்றாள் வசு.
கதவைத் திறந்து அவளை உள்ளே அனுப்பிவிட்டு அவர் சென்றுவிட, அங்கே இருந்த வரவேற்பறையில் உள்ள சோபாவில் தோரணையாக உட்கார்ந்திருந்த தீபன், "வா வசு...மித்ரா!" எனச் சொல்ல, "எல்லாரும் என்னை வசுந்தரான்னு கூப்பிட்டாலும், நான் என்னைக்குமே வசு...மித்ராதான்!
நான் அப்படி இருக்கத்தான் ஆசைப்படறேன்!
அதை அடிக்கடி நீங்க ஒண்ணும் ஞாபகப்படுத்தவேண்டிய அவசியம் இல்ல!" என்றவள், தான் கொண்டுவந்திருந்த மடிக்கணினியை அதன் பையிலிருந்து எடுத்தவள், அதை அருகிலிருந்த டீப்பாயின் மீது வைத்துவிட்டு, தனது கைப்பையிலிருந்து, சில கைப்பேசிகளையும், ஒரு 'ஹாண்டி கேமரா'வையும் எடுத்து வைத்தாள் வசு.
தீபன் அவளைக் கேள்வியுடன் பார்க்கவும், " வசந்தை பத்தி இனிமேல் எதுவும் கேட்காதீங்க; அதை மட்டும் என்னால சொல்ல முடியது;
ஆனா நீங்க கேட்ட; என் அண்ணன் கிட்ட இருந்த உங்களுக்கு தேவையான தகவல்கள் இதுல இருக்கு" என அவள் சொல்ல, அதற்குள் வீட்டில் சமையல் வேலை செய்யும் பெண்மணி காபியையும், சில பிஸ்கட்டுகளையும் கொண்டுவந்து அங்கே வைத்துவிட்டு செல்ல, "முதலில் இதை சாப்பிடு! பிறகு பேசலாம்!" என்றான் அவன்.
இருந்த பசிக்கு அவளுக்குமே அது தேவையாக இருக்கவும் நிதானமாக அதனைப் பருகி முடித்தவள், "இ்னிமேல் என்னை ஸ்பை பண்ணாதீங்க!
உங்களை கெஞ்சி கேட்டுக்கறேன்" எனச் சொல்லிவிட்டு அவள் அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க,
அவள் சொன்னதில் இருக்கும் உண்மைத் தன்மையை அவன் உணர்ந்தாலும், "எல்லாத்தையும் கொடுத்துட்ட; பட் என்னோட பொருள் ஒண்ணை இன்னும் வெச்சிட்டு இருக்கியே; அதையும் கொடுத்துட்டு போயிடு!" என முகத்தில் மலர்ந்த மெல்லிய புன்னகையை மறைத்துக்கொண்டு அவன் சொல்ல, "வாட்! அப்படி எதுவும் என்கிட்டே இல்ல!" எனச் சொல்லி அவள் கைகளை விரிக்க, அவளது வலதுகை சுட்டு விரலில் மாட்டியிருந்த அவளது ஸ்கூட்டியின் சாவி கோர்க்கப்பட்டிருந்த செயினை தீபன் அவனது கையால் பற்றியவாறே, "இது யாரோடாதும்மா! நீதான் கொஞ்சம் சொல்லேன்!" எனக் கேட்டான் கிண்டலுடன்.
அது நழுவி அவன் கைக்குள் போகவும், அதிர்ந்துபோய் அதைப் பிடித்து இழுத்தவள், அவன் பிடி தளராமல் இருக்க, அவன்மீதே சரிந்து விழுந்தாள் வசு!
சில நொடிகளேனும் அவளுடைய முகம் அவனுடைய வலியத் தோளில் பதிந்து மீள, அதில் அவளுடைய இதயம் வேகமாகத் துடிக்க துவங்கவும், வாயிற்புறம் நோக்கி அங்கிருந்து வேகமாகச் சென்றாள் வசு, அவளுடைய சாவிக்கொத்தில் கோர்க்கப்பட்டிருந்த சிறிய யானை மட்டும் தனியாக அறுந்துபோய் அவனுடைய கையிலேயே சிக்கி இருப்பது புரிந்தும்.
தன்னை மறந்து தனது வலது கையை விரித்து அவன் அதைப் பார்க்க, வெண்கலத்தால் ஆன அந்த சிறிய யானை உருவத்தில் அழகான தமிழில் எழுதப்பட்டிருந்த 'தீபன்' என்ற அவனது பெயர் அவனை பார்த்து சிரித்தது.
குற்றவாளியா நீ?
குற்றத்தின் உடந்தையா நீ?
குற்றத்தின் நிழல் கூட படியாத அப்பாவிதானோ நீ?
விடை தெரியாத கேள்விக்குறிகளுடன்...
என் மனசாட்சியின் சாயலை...
உன்னில் தேடித் தொலைந்திருந்தேன்!
சாட்சியாகவே...
என் மனசாட்சியாகவே...
நீயே (என்) முன் வந்து நிற்பதால்...
இரும்பையும் இளகவைக்கும்தன்மையை நீகொள்வதால்...
பூ இல்லை... நீ வேறுதான்!
Comments