top of page

Poovum Naanum Veru -13

Writer's picture: Krishnapriya NarayanKrishnapriya Narayan

இதழ்-13


நேரம் இரவு ஏழு மணியைக் கடந்திருக்க, நாமக்கல் முக்கிய பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியவள், அவசரமாக ஒரு ஆட்டோவில் ஏறி, செல்ல வேண்டிய இடத்தை சொல்லி, பதினைந்து நிமிடத்தில் அங்கே அவர்களுக்குச் சொந்தமாக இருக்கும் வீட்டை அடைந்தாள் வசு.


மழை வேறு மெலிதாக தூறிக்கொண்டிருந்தது.


மேலே தெறித்த அந்த மழைத்துளியில் உடல் சிலிர்க்க, ஆட்டோவிற்கான கட்டணத்தை கொடுத்துவிட்டு, 'இந்த மாரிம்மா வேற எங்கேயும் போகாம வீட்டுல இருக்கணுமே!' என எண்ணிக்கொண்டே, காம்பௌண்ட் கேட்டை திறந்துகொண்டு, அந்த வீட்டின் பக்கவாட்டில் அமைத்திருக்கும் மாடிப்படிகளில் வேகமாக ஏறிப்போய் அங்கே சிமெண்ட் கூரை போடப்பட்டு வெகு எளிமையாக இருந்த வீட்டின் பகுதியை அடைந்தவள், கதவு திறந்திருப்பதைக் கண்டு நிம்மதியுற்றாள்.


அந்த வீட்டின் உள்ளே கதவின் அருகில் சென்று நின்றுகொண்டு, "மாரிம்மா! மாரி அம்மா!" எனக் குரல் கொடுக்க, அந்த ஒற்றை அறையையே தடுத்துச் சமையல் அறையாகப் பிரிக்க ஏற்படுத்தியிருந்த சிறிய தடுப்பு சுவருக்குப் பின்னாலிருந்து வெளியில் வந்த நடுத்தர வயதில் இருக்கும் பெண்மணி, நெற்றியைச் சுருக்கி, அவளுடைய முகத்தைப் பார்த்தவர், அவள் யார் என்பதை உணர்ந்ததும் வியந்தவண்ணம், "பாப்பா! நீயா!" என அவளுக்குப் பின்புறமாகப் பார்த்துவிட்டு அதிர்ந்துபோய், "இந்த நேரத்தில், அதுவும் தனியாவா வந்திருக்க?" எனப் படப்படத்தவர், "நீ என்ன யாரோ மாதிரி அங்கேயே நின்னுட்டு; மொதல்ல வந்து உக்காரு பாப்பா" என்று சொல்லிக்கொண்டே நெகிழியால் செய்யப்பட்ட நாற்காலி ஒன்றை எடுத்துப் போட, அவள் கொண்டுவந்திருந்த பயண பையை ஓரமாக வைத்துவிட்டு ஆயாசமாக வந்து அதில் உட்கார்ந்தாள் வசு.


"ஐயோ! இத மாடி வரைக்கும் சொமந்துகிட்டா வந்த! கீழையே வெச்சிருந்தா நான் எடுத்துட்டு வந்திருப்பேன் இல்ல?" என அவளை அந்த மாரி கடிந்துகொள்ளவும், "ப்ச்! உங்களுக்கு என்ன மனசுல இன்னும் குமரின்னு நினைப்பா! என்னால செய்யமுடியாதுன்னு நீங்க செய்ய!" என அவள் கிண்டலாகக் கேட்டாள் வசு.


"பார்றா இந்த பொண்ண! இதோ பார் பாப்பா! வேலை செஞ்சு செஞ்சு வலு ஏறின உடம்பு இது! இந்த காலத்து குமரிங்க உங்களை விட எனக்கு தெம்பு அதிகம் தெரிஞ்சுக்க!" என அவளுக்கு சளைக்காமல் பதில் கொடுத்தார் மாரி.


"விட்டுக்கொடுக்க மாடீங்களே!" எனச் சிரிப்புடன் சொன்னவள், "நீங்க எப்படி இருக்கீங்க மாரிம்மா! உஷா; உங்க மருமகப்பிள்ளை; பேத்திங்க எல்லாரும் எப்படி இருகாங்க?" என கேட்க,


"கலைவாணிம்மா புண்ணியத்துல எல்லாருமே நல்ல இருக்கோம் கண்ணு!" எனக் கண்கள் பணிக்க சொன்னவர், "உங்க அம்மா அப்பா எப்படி இருகாங்க மித்ரா பாப்பா!" என அவள் கேட்க, "நீங்க மட்டும்தான் இன்னும் என்னை இப்படி கூப்பிட்டுட்டு இருக்கீங்க மாரிம்மா! ரொம்ப தேங்க்ஸ்!" என்றவள், "அம்மா அப்பா, போன மாசம் நீங்க அங்க வந்தப்ப எப்படி இருந்தாங்களோ அப்படியேதான் இருகாங்க;" என்றாள் அவள் உணர்வற்ற குரலில்.


பேசிக்கொண்டே அவளுக்கு தேனீர் எடுத்துவந்து கொடுத்துவிட்டு, "எனக்கு என்னாத்துக்கு தேங்க்குஸெல்லாம் சொல்லிட்டு இருக்க!" என் கடிந்தவர், "என்னவோ பாப்பா இந்தமுட்டுமாவது அவங்க இருக்காங்களே! அதுவே சந்தோஷம்தான் எனக்கு! நீ வருத்தப்படாத!" என்றார் மாரி அவளை ஆறுதல் படுத்த.


அவர் கொடுத்த தேனீரை வாங்கி பருகியவாறே, "நீங்க சொல்றதும் சரிதான் மாரிம்மா!" என முடித்தாள் வசு அந்த பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதுபோல்.


"இரு கண்ணு! நீ இங்க பத்திரமா வந்து சேர்ந்துட்டன்னு ராகவன் அய்யாவுக்கு போனு பண்ணி சொல்லிடறேன்" எனச் சொல்லிக்கொண்டே மாரி அவரது கைப்பேசியை எடுக்க, பதறிய வசு, "ஐயோ மாரிம்மா! நான் இங்க வந்திருக்கறது அம்மா அப்பாவுக்குத் தெரியாது; நீங்க போட்டுக்கொடுத்துடாதீங்க ப்ளீஸ்!" என அவள் இறைஞ்சுதலாகச் சொல்லவும், அதில் கோபமுற்றவர், "நீ இப்படியெல்லாம் செய்ய மாட்டியே பாப்பா! நீ மெட்ராஸ் போய் ரொம்பவே மாறிபோயிட்ட! என கடுமையுடன் சொன்னார் மாரி,


"ஐயோ அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல மாரிம்மா! நான் இந்த நேரத்துல இங்க வரது தெரிஞ்சா அவங்க வருத்தப்படுவாங்க! அதனாலதான் ஃப்ரண்ட் கல்யாணத்துக்கு போறதா சொல்லிட்டு இங்க வந்தேன்; ப்ளீஸ் புரிஞ்சுக்குங்க!" என அவள் கெஞ்சலாகச் சொல்ல,


"என்னவோ நீ படிச்ச புள்ள! உங்க அம்மா மாதிரி டீச்சர் வேலையெல்லாம் பாக்குற! உனக்கு நான் என்ன சொல்ல!" என அலுத்துக்கொண்டவர், "முகம் கழுவிட்டு டீவி பார்த்துத்துட்டு இரு; பக்கத்துல கடைக்கு போயிட்டு வரேன்!" எனச் சொல்லிவிட்டு அவளது பதிலுக்குக்கூடக் காத்திராமல் ஒரு கூடையில் பர்ஸையும் கைப்பேசியையும் போட்டுக்கொண்டு, மழை சற்று வலுத்திருக்கவே குடையைக் கையில் எடுத்து விரித்தவரே வேகமாகக் கீழே இறங்கத்தொடங்கினர் மாரி.


"மாரிம்மா!" என்று அழைத்துக்கொண்டே வசு அவரை பின்தொடரவும், "பாப்பா! நான் உங்க அப்பாவுக்கு போனு பண்ண மாட்டேன் பயப்படாத!" எனச் சொல்லிக்கொண்டே வேகமாக அங்கிருந்து சென்றார் அவர்.


அவர் சென்றதும் முகம் கழுவி, வேறு உடைக்கு மாறியவள், அவளுடைய கைப்பேசியை எடுத்துப் பார்க்க, அதில் பாரதியிடமிருந்து ஒரு அழைப்பும், ராகவனுடைய எண்ணிலிருந்து சில அழைப்புகளும், திலீப்பிடமிருந்து பல அழைப்புகளும் வரிசை கட்டிக்கொண்டு நின்றது.


அவளறியாமல் அந்த கைப்பேசி'சைலன்ட் மோடிற்கு' மாறியிருந்தது புரிந்தது அவளுக்கு.


பாரதியை அழைத்தால் அவர் பல கேள்விகள் கேட்டு குடைவார் என நினைத்தவள் அவரை அழைக்கும் எண்ணத்தைக் கைவிட்டு, பின் தத்தையை அழைத்து அவள் பத்திரமாக இருப்பதாகத் தகவல் சொன்னவள், "சாரி! பிசி இன் ஃப்ரெண்ட்ஸ் வெட்டிங்! வில் மீட் யூ ஆன் மண்டே இன் பர்சன்!" என திலீப்பிற்கு ஒரு குறுந்தகவல் அனுப்பினாள் வசு!


அடுத்த நொடியே "ஐ ஆம் வைட்டிங் டியர்!" என அதற்கு அவனிடமிருந்து பதில் வந்தது!


'நல்ல வேளை மறுபடியும் கால் பண்ணல!' என எண்ணிக்கொண்டாள் வசு.


அதற்குள் கடைக்குச் சென்ற மாரி, கூடையில் கொஞ்சம் காய்கறிகளுடன் அரைத்த தோசை மாவும் வாங்கி வந்திருந்தார்.


"ஒரு அஞ்சு நிமிஷம் இரு பாப்பா! தோசை ஊத்தறேன்! உனக்கு பிடிச்ச வெங்காய சட்டினியும் ரெடி பண்றேன்!" என்றவர்,


"பொண்ணு மாப்பிளை பேத்திங்க எல்லாரும் வந்தாதான் எதாவது பலகாரம் செய்யறேன் பாப்பா!


என் ஒருத்திக்காக செய்ய பிடிக்கல! நீ முதல் முதலா தனியா வந்திருக்கியா! அதான் உனக்கு பிடிச்சதை செஞ்சு கொடுக்கலாம்னு!" எனச் சொல்லிக்கொண்டே வேலையில் மும்முரமானார் அவர்.


அவருடைய அன்பில் நெகிழ்ந்தவள் அவருக்கு உதவியவாறே, "தனியா இருந்தாலும் சத்தான சாப்பாடா செஞ்சு சாப்பிடுங்க மாரிம்மா! இப்படி இருக்கக்கூடாது" என்றாள் வசு அக்கறையுடன்.


ஏதேதோ பேசிக்கொண்டே இருவரும் உண்டு முடிக்க, கீழே சென்றவர் கையில் பாய், போர்வை மற்றும் தலையணையுடன் திரும்ப வந்தார்.


"பாப்பா! கீழ நீ தனியா படுக்க வேண்டாம்! இங்கேயே படுத்துக்க!" என்று சொல்லிவிட்டு வசுவின் வீட்டிலிருந்து எடுத்து வந்த பாயை விரித்தார் அவர்.


அவள் எதற்காக அங்கே வந்திருக்கிறாள் என அவர் எதுவும் கேட்கவில்லை. அதுவே நிம்மதியை அளித்தது அவளுக்கு.


நேரம் நள்ளிரவைக் கடந்துகொண்டிருந்தது. மாரியுடைய குறட்டை சத்தம் தெளிவாகக் கேட்கவும், அவர் நன்றாக உறங்கிவிட்டார் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, அங்கே ஒளிர்ந்த மங்கலான இரவு விளக்கின் வெளிச்சத்தில் அவளுடைய கைப்பையிலிருந்து அவர்கள் வீட்டுச் சாவியையும், கையுடன் எடுத்துவந்திருந்த 'டார்ச் லைட்'டையும் எடுத்துக்கொண்டு, பூனை போல் நடந்தவள், மெதுவாகக் கதவைத் திறந்துகொண்டு மழை நின்றிருக்கவும் கீழே சென்றாள்.


பூட்டியிருந்த வீட்டின் கதவைத் திறந்து, அவள் மின் விளக்கை உயிர்ப்பிக்க, மாரியின் கைவண்ணத்தில் அந்த வீடு முன்பு இருந்ததை போலவே தூய்மையை இருந்தது.


அவர்கள் தேவைக்கென எடுத்துச்சென்ற ஒரு சில வீட்டு உபயோக பொருட்களைத் தவிர, மற்ற அனைத்தும் வைத்தது வைத்தபடி அப்படியே இருந்தன.


அனிச்சையாக அவளது பார்வை அங்கே சுவரில் மாட்டி இருந்த அவர்களுடைய குடும்ப புகைப்படத்தில் செல்ல, அதில் முழு ஆரோக்கியத்துடன் கலைவாணியும் ராகவனும் விரிந்த புன்னகையுடன் இருக்கையில் உட்கார்ந்திருக்க, அன்னைக்கு அருகில் வசுவும் அவர்களுடைய தந்தைக்கு அருகில் வசந்தும் நின்றுகொண்டிருந்தனர்.


அதனைப் பார்த்ததும் அவர்களுடைய இனிமையான நாட்கள் நினைவுக்கு வந்து அவளுடைய நெஞ்சை அடைத்தது.


விம்மலுடன் கிளம்பிய அழுகையை மிக முயன்று கட்டுப்படுத்தியவளாக, வீட்டின் பின்புற கதவைத் திறந்து அங்கே சென்றாள் வசு.


***


கரைக்க நினைக்கிறேன்!


கடந்தகால பாவத்தை...


நிகழ்கால புண்ணியத்தில்!


கரையாதோ? கரை சேராதோ?


கடினப்பட்டுப்போன பாவங்கள் அத்தனையும்!?


திரும்பாதோ? தித்திக்காதோ?!


கடந்த பொற்காலங்கள் மறுபடியும்?


நீ தீயென்றறிந்தே...


என் கடந்தகாலமாக...


என் நிகழ்காலமாக...


என் எதிர்காலமாக...


என் எல்லா காலங்களுமாக...


உனை மட்டுமே நிறைத்துவைத்திருப்பதால்...


பூவும் நானும் வேறுதான்!



0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page