Poovum Naanum Veru! 12
இதழ்-12
"அவங்க யாருன்னு அவங்களுக்கே மறந்துபோச்சு போலிருக்கு" எனக் கிண்டலாக சொன்ன தீபன், "ஐ மீன் அவங்க பேருக்கு என்ன அர்த்தம்னு அவங்களுக்கே புரியல! ம்..." என முடித்தான்.
அதற்கு என்ன பதில் சொல்வது எனப் புரியாமல், மிக முயன்று புன்னகைத்தாள் வசு.
அதன் பின் அவள் கொஞ்சம் கலகலப்பாக இருப்பதுபோல் தெரிந்தாலும் அவளுடைய கவனம் மொத்தமும் சாத்விகாவிடம் மட்டுமே இருந்தது.
அவள் ஓயாமல் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் அலுக்காமல் பதில் சொல்லிக்கொண்டே சாதுவுக்கு உணவை ஊட்டியவள், தானும் சாப்பிட்டு முடித்தாள்.
அதற்குள், "ஆன்டி! சூச்சூ!" என அவள் நெளிய, அவளைத் தூக்கிக்கொள்ள எழுந்த தீபனை தவிர்த்து, தானே அவளை அழைத்துக்கொண்டு ஓய்வறை நோக்கிப் போனாள் வசு.
அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, "என்ன பேசிட்டியா?" என தீபன் கேட்க, "எங்க!" என அலுத்துக்கொண்டவன் அனைத்தையும் சொன்னான் திலீப்!
"சரி விடு!" என அப்போதைக்குப் சொன்னவன், வசு அங்கே வந்த உடனேயே, "மிஸ்.வசு! இவன் உங்களை இங்க ஏன் வரச்சொன்னான் தெரியுமா?" என தீபன் கேட்க, 'தெரியாது' என்பது போல் தலையை ஆடியவள், மிரட்சியுடன் திலீப்பை பார்த்தாள் வசு.
"நீங்க இப்படி டென்ஷன் ஆக என்ன இருக்கு" என்றவன், "இந்த கல்யாண ஏற்பாட்டில் உங்களுக்கு விருப்பம்தானா? இல்ல பெரியவங்க சொல்றாங்களேன்னு நீங்க இதுக்கு சம்மதிச்சீங்களா?" என நேரடியாகவே அவளிடம் கேட்டுவிட்டேன் தீபன்.
என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் மிரண்டுபோய் குழப்பத்துடன் சில நொடிகள் யோசித்தவள், கலைவாணி சொன்ன வார்த்தைகள் நினைவில் வர, தட்டுத்தடுமாறி, "எனக்குச் சம்மதம்தான்!" எனச் சொல்லிவிட்டாள் வசு.
உள்ளுக்குள்ளே கனன்ற கோபத்தைக் கொஞ்சமும் வெளிக்காண்பிக்காமல், திலீப்பை பார்த்தவன், அவன் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியில் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு, "போதுமா திலீப்! சந்தோஷம்தான! இனிமேல் நிம்மதியா தூங்குவ இல்ல!" என தீபன் கிண்டலாகக் கேட்க, "மச்சான் ரொம்ப ஓட்டாதடா!" என்றான் திலீப் புன்னகையுடனே.
"ஓகே டா! பாப்பாவுக்கு தூக்கம் வந்திடும்! நான் கிளம்பறேன்!" என்றவன், "நீங்க எப்படி போவீங்க வசு!" எனக் கேட்க, "நான் ட்ரைன்ல போயிடுவேன்! ஊரப்பாக்கம் ஸ்டேஷன்ல ஸ்கூட்டியை விட்டிருக்கேன்! அதுல வீட்டுக்கு போயிடுவேன்" என்றாள் அவள் சற்று தயக்கத்துடன்.
"வாட்… தனியாவா" என்றவன், "நோ! நோ! இப்பவே மணி நைன் ஆகப்போகுது; திலீப் நீ அவங்களை ட்ராப் பண்ணிட்டு அப்பறம் வீட்டுக்கு போ!" என்றான் தீபன் உண்மையான அக்கறையுடன்.
"இல்ல! பரவாயில்ல! இங்கிருந்து நைன் தர்டிஃபைக்கு ஒரு டைரக்ட் ட்ரெயின் இருக்கு; நான் போயிடுவேன்" என வசு மறுப்பாகக் கூற, அவளுடன் பயணிக்க ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைக்கவும் அதை விட்டுவிட மனம் இல்லாமல், "நீ சும்மா இரு வசு; தீபன் சொல்றதுதான் சரி. நான் முதலிலேயே யோசிக்கல; இல்லனா உன்னை பிக் அப் பண்ண கார் அனுப்பியிருப்பேன்" என்றான் திலீப் அவளுடைய மறுப்பை ஏற்காமல்.
அதே நேரம் சரியாக அவனுடைய கைப்பேசி ஒலிக்க, அதில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்து, “ஆஆஆ” என்றவாறு விழிகளை இறுக மூடித்திறந்தவன், "தாத்தாடா மச்சான்! இந்த நேரத்துல ஏன் கூப்பிடறார் தெரியலியே" எனப் புலம்பலாக தீபனை பார்த்துச் சொல்லிவிட்டு, "சொல்லுங்க தாத்தா!" என்றான் பணிவு தோய்க்கப்பட்ட குரலில்.
"முக்கியமா பேசணும். உடனே கிளம்பி வா." என அவர் கட்டளையாகச் சொல்ல,
"என்ன… இப்பவேவா; உடனே வரனுமா?!" என அவன் அதிர்வுடன் கேட்க, "இதென்ன கேள்வி; உடனே வான்னு சொன்னா அதுதானே அர்த்தம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இங்க வந்து சேரு" என அழுத்தமாகச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார் அவர்.
அவன் பரிதாபமாக தீபனை பார்க்க, கலகலவென சிரித்தவன், "உங்க அம்மா செஞ்ச வேலையா இருக்கும்!