top of page

Poovum Naanum Veru 11

இதழ்-11


"எப்படி மச்சான்! எப்படி கண்டுபிடிச்ச? சித்தி உன்கிட்ட சொல்லியிருக்க வாய்ப்பே இல்ல! ஏன்னா 'உன் ஃப்ரண்ட் இங்க வந்த பிறகு நீயே அவன் கிட்ட சொல்லிக்கோ'ன்னு அவங்கதான் சொன்னாங்க!” என வியந்தவண்ணம் எதிர் முனையில் திலீப் படபடக்க, அதற்கு "ஓ! நான் கெஸ் பண்ணது கரக்ட்தானா?" எனக்கேட்டு சத்தமாகச் சிரித்தவன், "உன் மனசுல வசுந்தராவை பத்தி இப்படி ஒரு எண்ணம் இருக்குனு அவங்களுக்கு சொன்னதே நான்தான்.


ஆனா இந்த ட்விஸ்ட்டை இவ்வளவு சீக்கிரம் நானே எதிர்பாக்கல. பயங்கர அவசரமா தீயா வேலை செஞ்சி முடிச்சிருக்காங்க உங்க சித்தி!" என மனதில் நினைத்ததை அப்படியே சொன்னான் தீபன்.


"பாரதி சித்திக்கு எப்படி இந்த மேட்டர் தெரியும்னு மண்டைய பிச்சிட்டு இருந்தேன். நீ தான் காரணமா!


தேங்க்ஸ் டா மச்சான்.


கரெக்டான பர்சன் கிட்ட சொல்லி, இவ்வளவு ஈஸியா இந்த வேலையை முடிச்சிட்டியே!" என்றான் திலீப் மகிழ்ச்சியுடன்.


"தேங்க்ஸ்லாம் இருக்கட்டும். வசு எப்படி இதுக்கு இவ்ளோ டக்குனு சம்மதிச்சா...ங்க!" என அவன் யோசனையுடன் கேட்க அதற்கு, "சித்தி சொன்னா அவ அதை மீற மாட்டாளாம்! அவளோட பேரண்ட்சும் அப்படித்தானாம்! சித்தி கிட்ட அவ்வளவு ரெஸ்பெக்ட் அவங்களுக்கு!" என்றான் திலீப் பெருமையுடன்.


உணர்ச்சியற்ற குரலில், "ஓஹோ!" என்றவன், "காதல் ஒருத்தரோட ரெகமண்டஷன்லயோ நிர்பந்தத்துலயோ வராது திலீப். வரவும் கூடாது.


இந்த மாதிரி இன்ஃப்ளுயன்ஸ் பண்ணி கல்யாணம் செய்தால், அது நல்லதில்ல. அந்த பெண்ணோட சம்மதத்தை நீ நேரில் கேட்டிருக்க வேண்டாமா?" என வெகுவாக அவனைக் கடிந்துகொண்டான் தீபன்.


"நீ சொல்றதும் சரிதான் மச்சான். ஆனா இந்த பெரியவங்க அப்படி ஒரு ஆப்ஷனையே எனக்கு கொடுக்கலையே" என அவன் சொன்னதை ஆமோதிப்பது போல் திலீப் சொல்ல,


"அவங்க ஏன் குடுக்கணும்? வசு உனக்கு முன்ன பின்ன தெரியாத பொண்ணா என்ன? ஒரு தடவை அவ..ங்களை நேரில் மீட் பண்ணி நீயே கேட்டுட வேண்டியதுதானே" என அவன் சொல்வதுதான் சரி என திலீப்பை முற்றிலுமாக எண்ணவைத்தவன், "என்ன இருந்தாலும் இது உன்னோட வெட்டிங்; உன்னோட ஃபியான்சி; ஸோ... நீதான் பேசணும்; எதுவா இருந்தாலும் நீயேதான் ஃபேஸ் பண்ணனும்; அன்னைக்கு மாதிரி என்னை இதுல இழுக்காத; ஏன்னா நான் யூ.எஸ் போனதால அஞ்சு ஆறு நாளா எக்கச்சக்க வேலை குவிஞ்சு கிடக்கு. நான் முடிச்சே ஆகணும். ஆல் தி பெஸ்ட் திலீப்!" என எதிர் முனையிலிருந்தவன் பேச இடமே கொடுக்காமல் சொல்லி முடித்து அழைப்பைத் துண்டித்தான் தீபன்.


எப்படியும் திலீப் அவனை மறுபடியும் அழைப்பான் என்ற நம்பிக்கையில் கைப்பேசியின் திரையையே அவன் பார்த்துக்கொண்டிருக்க, அவனது எண்ணத்தைப் பொய்யாக்காமல் சில நொடிகளுக்குள்ளாகவே அழைத்த திலீப், "நீ சொன்னதுதான் சரி தீபன்; நீ வந்தா நான் கொஞ்சம் கான்ஃபிடென்ட்டா பீல் பண்ணுவேன் மச்சான். இது பிசினஸ் டீல் இல்ல பாரு; அதனால எனக்கு கொஞ்சம் டென்ஷானாதான் இருக்கு. ப்ளீஸ் மாட்டேன்னு சொல்லிடாத!" என அவனிடம் கோரிக்கையாகச் சொல்லவும், "ப்ச்! சொன்னா கேக்க மாட்ட. சரி! அவ...ங்க கிட்ட பேசிட்டு எங்க எப்ப வரணும்னு சொல்லு; வர முயற்சி செய்யறேன்" என்று முடித்தான் தீபன்.


***


முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியையும் காண்பிக்காமல், கடமையே கண்ணாகப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்திக்கொண்டிருந்த வசுவை பார்த்து, "இன்னும் ஒரு வாரத்தில் நிச்சயதார்த்தத்தை வெச்சிட்டு, நீ இப்படி விட்டேத்தியா இருக்கறது கொஞ்சம் கூட நல்லா இல்லை வசு. முக்கியமான விஷயம் பேசணும்னு மாப்பிள்ளை உன்னைக் கூப்பிடும்போது வர மாட்டேன்னு சொன்னால் அது மரியாதையா இருக்காது. ஒழுங்கா நீ கிளம்பு." என மூச்சுவிடாமல் சொல்லி முடித்தார் கலைவாணி.


திலீப்புடனான வசுவின் திருமணத்தை உறுதி செய்தது முதல் பிடிவாதம் பிடித்து வீட்டிற்கே வந்துவிட்டார் அவர். முந்தைய தினம் கைப்பேசியில் தொடர்பு கொண்டு, அவளை நேரில் சந்தித்துப் பேசவேண்டும் என்று அழைத்திருந்தான் திலீப்.


அவனை நேரில் சந்தித்துப் பேச மனதில் எழுந்த தயக்கத்தால், பரீட்சை தாள்களைத் திருத்தி முடிக்க வேண்டிய வேலையைக் காரணம் காட்டி அவளால் வர இயலாதது என அவள் மென்மையாய் மறுத்துவிட, பாரதியின் துணையை நாடினான் திலீப்.


"அவன் முக்கியமா பேசணும்னுதான உன்னை வர சொல்றான்; போய்ட்டு வா வசு; எத்தனை நாளைக்கு உன்னால இப்படி ஓடி ஒளிய முடியும்; எதார்த்தத்தை ஃபேஸ் பண்ணு; ஆனா கொஞ்சம் பார்த்து கவனமா பேசு; இப்போதைக்குப் பழசைப் பத்தி அவனுக்கு எதையும் சொல்லணும்னு அவசியம் இல்ல; ஜாக்கிரதை" என அவள் அவனைச் சந்தித்தே ஆகவேண்டும் எனச் சொல்லிவிட்டார் பாரதி. அவள் சொல்லாமலேயே அந்த தகவல் கலைவாணி வரை எட்டி இருந்தது.


உடனே மகளைக் கிளம்பச் சொல்லி பிடிவாதத்தால் இறங்கினார் அவர். அவள் இப்படி நடந்துகொண்டால், அந்த திருமணம் தடை பட்டுவிடுமோ என்ற பயம் அவருக்கு.


அன்னையின் பிடிவாதம் அவள் அறிந்ததே. இந்த விஷயத்தைப் பொறுத்த மட்டும் அவள் மறுத்துப் பேசினால் அதன் பின் அவரை எதிர்கொள்வது கடினம் என்பதும் புரியவே, திலீப்பை சந்திக்க ஒப்புக்கொண்டாள் அவள்.


அதன்பிறகு கொஞ்சமும் நேரம் கடத்த விரும்பாமல், அவனுடைய வீட்டிற்கும் அவளுடைய வீட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் ஆடம்பரமான ஒரு நட்சத்திர விடுதிக்கு அன்று மாலையே அவளை வரச்சொல்லி குறுந்தகவல் அனுப்பியிருந்தான் திலீப்.