top of page

Poovum Naanum Veru 10

இதழ்-10


குளிர் நிலவு வேண்டாம் எனக்கு...


சுட்டெரிக்கும் சூரியனாக நீ இருப்பதால்!


வெண் பனி வேண்டாம் எனக்கு...


நீ சீறும் எரிமலையாகவே இருந்துவிட்டு போ!


சூரியனின் வெப்பத்தை...


எரிமலைக் குழம்பின் வெப்பத்தை தாங்கும் நிலமாக நான் இருப்பதால்...


பூவும் நானும் வேறுதான்!


ஏற்கனவே தீபன் வசுந்தராவை பற்றி அனைத்தையும் தெரிந்துகொண்டதால் அவன் தன் மேல் கொண்டிருக்கும் நம்பிக்கையில் தான் ஒரு படி இறங்கிவிட்டோமோ என்ற எண்ணத்திலிருந்தார் திவ்யபாரதி.


அடிபட்ட புலியாகப் பழிதீர்க்க நேரம் பார்த்துக் காத்திருக்கும் தீபனிடம் வசு நன்றாகச் சிக்கிக்கொண்டிருப்பது அவருக்குத் தெளிவாகப் புரிந்தது.


தீபனை பொறுத்தவரையில் அவனது மனதில் ஒன்றை நினைத்துவிட்டால், அதை நடத்தி முடித்த பின்புதான் ஓய்வான்.


அவனுடைய அந்த குணமும் அதீத புத்திசாலித்தனமும்தான் அவனுடைய அபரிமிதமான வளர்ச்சிக்குக் காரணம்.


நேரம் பார்த்துக் காத்திருந்து அவனுக்குத் தடையாக இருந்தவர்களையே வீழ்த்தி அவர்கள் மீதே ஏறி மேலே வந்தவன் அவன்.


அவனுடைய அந்த குணமே அவனிடம் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது பாரதிக்கு.


வசுமித்ராவை பாதுகாப்பான இடத்தில் வைக்க, தெளிவான ஒரு முடிவை எடுக்கவேண்டிய அவசியம் உண்டாகி இருந்தது அவருக்கு.


ஏற்கனவே ஒரு முறை திலீப் வசு திருமணம் பற்றிப் பேச அவரது தமக்கையையும் அவரது கணவரையும் சந்திக்க அவர்களுடைய வீட்டிற்குச் சென்றிருந்த சமயம், வசு காயம்பட்டு மருத்துவமனையில் இருந்த காரணத்தால் எதுவும் பேசாமல் திரும்பிவிட்டார் பாரதி.


எனவே தீபன் அமெரிக்கா சென்ற அடுத்த தினமே நேரம் கடத்தாமல் அவரது அக்காவையும் மாமாவையும் சந்தித்துப்பேச அவர்களுடைய வீட்டிற்கு வந்தார் அவர்.


திலீப்புடைய அன்னை ராஜலக்ஷ்மி, தந்தை பராசரன். இருவருமே பாரதியிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள்.


பாரதி ஐ.பி.எஸ் முடித்து பணியில் சேர்ந்த சமயம், அவருடன் பணிபுரிந்த சந்திரகாந்த் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.


பாரதி மற்றும் ராஜலக்ஷ்மி இருவரின் தந்தை சுந்தரமூர்த்தி. பரம்பரை பணக்காரரான அவர் பாரதியின் திருமணத்தை முற்றிலும் எதிர்க்க, அவரை பகைத்துக்கொண்டு அவர்களுடைய திருமணத்தை முன்னின்று நடத்திவைத்தார் பராசரன்.


மிகவும் எளிமையான மனிதரான அவர், மற்றவர் உணர்வுகளுக்கு மிகவும் மதிப்பளிப்பவர். ராஜலட்சுமியும் கணவரின் மனநிலையைப் பிரதிபலிப்பவர்.


அவர்கள் இருவரையும் பற்றி நன்றாகப் புரிந்துவைத்திருக்கும் காரணத்தால், சுற்றி வளைக்காமல் திலீப் வசுவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அவர்களிடம் சொன்னவர், எந்த இடத்திலும் தீபனை பற்றிக் குறிப்பிடாமல், வசுவை பற்றிய அனைத்தையும் தெளிவாகச் சொல்லி முடித்தார் பாரதி.