top of page

Poove Unn Punnagyil - 37 (final)

அத்தியாயம்-37

சத்யாவை அங்கே பார்த்ததும் வியப்பும் மகிழ்ச்சியும் போட்டிப்போட அவனை நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்து, "ஆட்டோ பிடிச்சு போயிருப்பேனே சத்யா, உங்களுக்கு ஏன் வீண் சிரமம்" என அவள் சொன்னாலும் அதில், ‘இவன் இங்கே வந்து காத்திருப்பதே எனக்காகத்தானே!’ என்பதாக அப்படி ஒரு பெருமிதம் தொனிக்கவும், அவள் அதை ஒப்புக்காக மட்டுமே சொல்வது நன்றாகப் புரிந்தது அவனுக்கு.


பதிலேதும் சொல்லாமல் ஒரு புன்னகையுடன் சரிந்து கார் கதவை அவன் திறந்து விட மறுத்து பேசாமல் உள்ளே உட்கார்ந்தவள், "உண்மையிலேயே உங்க வீட்டு பங்க்ஷன் எனக்கு ஒரு நல்ல ஃபீல் கொடுத்தது சத்யா" என்றாளவள்.


"உஃப்... பங்க்ஷன் முடிஞ்சு எல்லாரையும் வழியனுப்பி மண்டபத்தை காலி பண்றதுக்குள்ள ஒரு வழி ஆகிட்டோம்" என சலித்தவன், "சாரி அதனாலதான் மார்னிங் என்னால உன்னை ட்ராப் பண்ண முடியல" என குறையாகச் சொல்லவும், "ச்சச்ச சத்யா, அதான் கோபாலை அனுப்பினீங்களே அதுவே எனக்கு போதும். மோர் ஓவர் நான் இதையெல்லாம் யார்கிட்டயும் எக்ஸ்பெக்ட் பண்றதும் இல்ல" என்றவள், "ஆனா எனக்கு வேற ஒரு ஹெல்ப் வேணுமே" என இழுக்க, "ப்ச்... என்ன சக்தி இது பார்மலா பேசிட்டு" என்றான் அவன் குற்றம்சாட்டும் குரலில்.


என்ன சொல்வது என புரியாமல் அவள் மௌனம் காக்கவும், “சரி சொல்லு" என அவன் விட்டுக்கொடுக்க, "அது இல்ல, ஊர்ல இருக்கற வீட்டை தங்கச்சி பேருக்கே மாத்தி கொடுக்கச் சொல்லி அம்மாகிட்ட சொல்லிட்டேன். ஆனா அம்மாவை அவ கூட விட முடியாது. அவங்கள இங்கயே கூட்டிட்டு வந்துடலாம்னு இருக்கேன். அதனால எனக்கு அர்ஜண்டா வாடகைக்கு ஒரு வீடு வேணும். நல்ல ரெசிடென்ஷியல் ஏரியால ஒரு வீடு பார்த்து கொடுக்க முடியுமா?" என அவள் கேட்க அவள் முகத்தையே ஆழ்ந்து பார்த்தவன், "அந்த பெரிய கிச்சனோட இருக்கற வீட்டை ஒரு தடவ வந்து பார்க்கமாட்டியா சக்தி?" என்றான் அவன் ஒரு மாதிரியான குரலில்.


"அதை பார்த்து நான் என்ன பண்ண போறேன் சொல்லுங்க. என்னால இப்ப வீடு வாங்க முடியாதுனு உங்களுக்கு நல்லாவே தெரியும் இல்ல?" என அவள் வருத்தத்துடன் சொல்ல, "சும்மா விண்டோ ஷாப்பிங் பண்ணுவாங்க இல்ல அந்த மாதிரி நினச்சு இப்ப என் கூட வந்து பாரு. அப்பறம் முடிவு பண்ணலாம்" என்றவன் பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடாமல் பிடிவாதமாக தான் சொன்ன இடத்திற்கு அவளை அழைத்துவந்தான்.


சென்னையை விட்டு கொஞ்சம் தள்ளி, அடுக்குமாடி கட்டிடங்கள் பள்ளிக்கூடம் கடைகள் என எல்லா அடிப்படை வசதிகளையும் உள்ளடக்கியிருந்தாலும் அதிக பரபரப்பில்லாமல் அமைதியுடன் இருந்தது சமீபமாக முன்னேறிக்கொண்டிருக்கும் அந்த குடியிருப்பு பகுதி.


அங்கே இருக்கும் ஒரு தனி வீட்டின் அருகில் வாகனத்தை நிறுத்தி அவன் இறங்கவும் தானும் இறங்கி வந்தாள் சக்தி.


அவனுடைய லேப்டாப் பேகிலிருந்து சாவிக்கொத்தை எடுத்தவன் காம்பவுண்ட் கேட்டை திறந்து அவளை முன்னே செல்லுமாறு ஜாடை செய்து வழி விட்டு நிற்க, உள்ளே நுழைந்தவள் அந்த வீட்டின் அமைப்பைப் பார்த்து அப்படியே நெகிழ்ந்துபோய் நின்றாள்.


நான்கு மூலைகளிலும் தொங்கும் பூத்தொட்டிகளில் வண்ணமிகு மலர்கள் பூத்து குலுங்க ஒரு கார் நிறுத்தும் அளவுக்கு அகன்ற போட்டிக்கோவுடன் அந்த வீட்டின் முகப்புத்தோற்றமே அவ்வளவு கம்பீரமாக காட்சி அளித்தது.


கண்ணுக்கு குளிர்ச்சியாக வீட்டைச் சுற்றிலும் ஏதேதோ செடி கொடிகள் நேர்த்தியாக பராமரிக்கப்பட்டிருந்தன.


சூரியன் அஸ்தமனமாகி லேசாக இருள் கவிழத் தொடங்கியிருக்க வீட்டின் கதவைத் திறந்து மின்விளக்குகளை ஒளிரவைத்தவன், "உள்ள வா சக்தி" என அழைக்கவும், அங்கே வந்தவளின் முகம் இன்னதென்று விவரிக்க இயலாத ஒரு உணர்வைப் பிரதிபலிக்க, வீட்டைச் சுற்றி பார்வையைச் சுழலவிட்டாள் அவள்.


வெண்மை நிறத்தில் டைல்ஸ் பளபளக்க எளிமையாக அமைக்கப்பட்டிருந்த முகப்பறையில் புத்தம்புதிய சோஃபாக்கள் போடப்பட்டிருந்தன.


கண்ணாடிக் கதவுகள் போடப்பட்ட ஷோகேஸ் ஒன்று காலியாக இருந்தது.


"ரெண்டு பெட்ரூம் இருக்கு சக்தி. இன்னும் பர்னிஷ் பண்ணல. குடிவந்த பிறகு உனக்கு பிடிச்ச மாதிரி வாங்கி போட்டுக்கலாம்" என்றவன் அவற்றையும் காண்பிக்க, அவள் கற்பனையில் உருவாக்கிவைத்திருக்கும் அவளுடைய இல்லம் அப்படியே உயிரோட்டமாக அவளுடைய கண்முன்னே விரிந்திருக்க வியப்பு தாங்கவில்லை அவளுக்கு.