top of page

Poove Unn Punnagayil - 8

அத்தியாயம்-8

"அந்த பையனோட பேர் கௌசிக். படிப்பு பீ.ஈ எம்.பீ.ஏ. பீ.ஈ சிவில் நம்ம ஹாசினி படிச்ச அதே காலேஜ்லதான் முடிச்சிருக்கான். ப்ளஸ்-டூலயே நல்ல மார்க் எடுத்து கவர்மண்ட் கோட்டால சீட் வாங்கி படிச்சிருக்கான். காலேஜ் டாப்பர். அதேமாதிரி எல்லா ஆக்டிவிடீஸ்லயும் ஃபர்ஸ்ட்டாம். அப்பறம் வேலைக்கு போயிட்டே எம்.பீ.ஏ..வ கரஸ்ல முடிச்சிருக்கான். அவனோட அப்பா 'ஹரிதா டிரான்ஸ்மிஷன்ஸ் பிரைவேட் லிமிடட் கம்பெனி' இருக்கு இல்ல, அதோட ஃபேக்டரில வேலை செய்யறாரு. அம்மா ஹவுஸ் வைஃப். ஒரே ஒரு தங்கை, பீஈ ஃபைனல் இயர் படிக்குது. அவங்க மதுரை பக்கம். கௌசிக்கோட தாத்தா காலத்துலயே இங்க வந்து செட்டில் ஆகிட்டாங்க.


அவங்க அப்பா அவரோட வருமானத்தை வெச்சு பசங்கள நல்லபடியா படிக்கவெச்சிருக்காரு. கடன் கட்சி இல்லாம சொசைட்டில கௌரவமா வாழ்ந்துட்டு இருக்காங்க, மத்தபடி பெரிய வசதியெல்லாம் கிடையாது.


இப்ப இந்த பையன் வேலைக்கு போக ஆரம்பிச்ச பிறகு, லோன் போட்டு டபுள் பெட்ரூம் பிளாட் ஒண்ணு வாங்கியிருக்கான். ஸெகன்ட்ஸ்ல கார் ஒண்ணும் வாங்கியிருக்கான்.


படிக்கும்போதுல இருந்தே 'ஜீவன்'ல பார்ட் டைமா வேலை செஞ்சிட்டு இருந்திருக்கான். பையன் நல்ல டேலன்டட். ஒர்க்ல நல்லா டெடிகேட்டட். அதனால அவனை கெட்டியா பிடிச்சுகிட்டாங்க. இப்ப அவனுக்கு பிஃப்டி தொளசண்ட் பே பண்றாங்கன்னா பார்த்துக்கோங்க" என கௌசிக்கை பற்றிய தகவல்களை கருணாகரனிடம் சொல்லிக்கொண்டிருந்தான் சத்யா.


'ஜீவன்' என்ற பெயரை கேட்டதும், "எந்த ஜீவன சொல்ற நீ, ஜீவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸா" என அவர் ஒரு அசூயையுடன் கேட்க, "ஆமாம் அத்தான்" என்றான் சத்யா.


"ப்ச்... அன்னைக்கே அந்த பையன எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு யோசிச்சேன். சரியா ஞாபகத்துல வரல. ஏதாவது டெண்டர் ஓபன் பண்ணும்போது வந்திருப்பானோ?"


"ஆமாம் அத்தான்... இப்பலாம் அவன்தான் வரான். ரீசன்ட்டா நான் மட்டும்தான் போயிட்டு இருக்கேன்ல, அதான் உங்களுக்கு ஸ்ட்ரைக் ஆகலன்னு நினைக்கறேன்"


"ப்ச்... இவன மாதிரி இன்ஜினியர்ஸ் பத்து பேருக்கு சம்பளம் கொடுத்து நாம வேலைக்கு வெச்சிருக்கோம், இவ என்னடான்னா...


நம்ம இன்ஜினியர்ஸுக்கு மேக்சிமம் ட்வென்டடி ஃபைவ் கொடுக்கறோமா. அதுவும் ஒரு நாலு அஞ்சு வருஷமாவது எக்ஸ்பீரியன்ஸ் ஆனாதான்.


என்ன இவன் ஒரு எம்.பீ.ஏ கூட படிச்சிட்டு அட்மின்ல வேலை செய்யறான். அதான் இவ்வளவு அமௌண்ட் பே பன்றானுங்க.


ப்ச்... ஏன் சத்யா இந்த பொண்ணுக்கு புத்தி இப்படி போச்சு. நாம பார்த்தா எப்படிப்பட்ட மாப்பிள்ளையா பார்ப்போம்?"


அவர் ஏகத்துக்கும் வருந்த,


"என்ன அத்தான், இப்படி நாலையும் யோசிச்சு, அலசி ஆராய்ஞ்சா அப்பறம் ஏன் காதல்ல போய் மாட்டிக்க போறாங்க? இதெல்லாம் நம்ம பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட விஷயமா இல்ல இருக்கு"


"ஓஹோ, உன்னோட காதல் அனுபவம் பேசுதா?"


"ஏன் அத்தான் பேசக்கூடாதா? இப்படி எல்லாத்தையும் யோசிச்சதாலதான நான்" என சொல்ல வந்ததை முடிக்காமல் அவன் வேதனையுடன் தடுமாற,


"இதெல்லாம் இருக்கட்டும், அவங்க என்ன ஆளுங்க" என அவனை திசைதிருப்பினார் கருணாகரன்.


"அவங்களும் நம்ம வகையறாதானாம். நம்ம &&&ன்னு சொல்லிக்கறோம், அவங்க அந்த பக்கம், &&&ங்கற பேர்ல இருக்காங்க. மத்தபடி நடைமுறை பழக்கவழக்கமெல்லாம் நம்ம மாதிரிதானாம், மனோகர்தான் சொன்னான், அத்தான்"


"நம்ம ஆளுங்க இல்லன்னு நேரடியா சொல்லிட்டு போ, ஏன் சுத்தி வளைக்கற” அவர் காரமாக சொல்ல,


"இல்ல அத்தான், நம்ம சர்க்கிள்லயும் விசாரிச்சேன். பையன் ரொம்ப நல்ல மாதிரியாம்! இப்ப வேணா உங்க லெவலுக்கு ஈக்வலா இல்லாம இருக்கலாம். ஆனா ஃபியூச்சர்ல நல்லா வருவான்னுதான் தோணுது"


இந்த நிமிடம் வரையில் அவரிடமிருந்து ஒரு எட்டு தள்ளியே நின்றுகொண்டு 'உங்க' என்ற வார்த்தையால் அதை உணர்த்தியவனை கூர்மையாக பார்த்தவர், “ப்ச், சும்மா காதலுக்கு முட்டு கொடுக்காதப்பா நீ. பண விஷயமெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்ல. நாம மட்டும் என்ன, கீழ இருந்துதான இந்த நிலைமைக்கு வந்திருக்கோம்” என நாம என்ற வார்த்தையால், அவனுக்கு ஒரு குட்டு வைத்தவர், “அதுல கூட விட்டு கொடுத்துடுவேன் சத்யா. ஆனா ஜாதி விஷயத்தை என்னால ஏத்துக்கவே முடியாது. அப்பறம் ஊர் பக்கம் ஒருத்தன் கூட என்னை மதிக்க மாட்டான். முதல்ல இந்த பொண்ணுக்கு ஒரு நல்லா இடமா பார்த்து முடிக்கணும்" என அவர் தீவிரமாக சொல்ல நொந்தே போனான் சத்யா.


கிட்டத்தட்ட மூன்று தினங்கள் பிடித்தது கௌசிக்கை பற்றிய தகவல்களை சேகரிக்க. அவனுடைய வாழ்க்கை முறை மிகவும் தெளிவானதாக இருக்கப்போக, இவ்வளவு சீக்கிரம் முடிந்தது எனலாம். இல்லாமல் போனால் இன்னும் சில நாட்கள் இழுத்திருக்கும்.


சிறிதுநேரத்திக்கு முன்புதான் மனோகருடன் இணைந்து 'மாயா டிடெக்ட்டிவ் ஏஜென்சி' அலுவலகத்திற்கே நேரில் சென்று கௌசிக்கை பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்துகொண்டான் சத்யா. நேரம் கடத்த விரும்பாமல், உடனே அனைத்தையும் அவனுடைய அத்தானிடம் சொல்லிவிடும் நோக்கத்தில் நேரடியாக அவர்களுடைய அலுவலகம் வந்தவன் தான் அறிந்துவந்த அனைத்தையும் அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.


தான் அடைந்த அந்த மன வலியை இந்த சிறு பெண் என்றுமே உணரவேண்டாம் என்ற எண்ணத்தில் அவன் வேகமாக செயலபட்டுக்கொண்டிருக்க, இவரோ இப்படி பேசுகிறாரே என்றிருந்தது அவனுக்கு.


"ஹாசினிய பத்தி நினைச்சு பார்த்தீங்களா? அவளை எப்படி சமாளிப்பீங்க? அதோட இதெல்லாம் ஆறாத காயமா காலத்துக்கும் மனசை குத்திட்டே இருக்கும் அத்தான்"


அவன் தன் மனதில் பட்டதை மறைக்காமல் சொல்லிவிட,


"எது, அவளே வேண்டாம்னு சொன்னா கூட நீ விடமாட்ட போலிருக்கே" என்றவர், கோபத்தில் அவனுடைய முகம் மாறவும், "விடுப்பா, அவ சின்ன குழந்தை, நான் சொன்னா மறுபேச்சில்லாம கேட்டுப்பா" என்றார் நெஞ்சை நிமிர்த்தி.


அவனை பொறுத்தவரையில் யாருக்குமே பாதிப்பில்லாத சுமுகமான ஒரு தீர்வை கொடுக்க நினைக்க, அது ஒன்றும் அவ்வளவு சுலமாக நடக்கப்போவதில்லை என்பது புரிந்தது.


'உங்க பொண்ணை பத்தி உங்களை விட எங்களுக்குத்தான் தெரியும். ஒரே ஒரு தடவ நீங்க மட்டும் அவ கிட்ட 'நோ’ சொல்லிப்பாருங்க, அப்பறம் தெரியும்' என மனதில் எண்ணியவனுக்கு மேற்கொண்டு அவருடன் வாதிடவே பிடிக்கவில்லை.


கருணாகரனை பற்றி நன்கு அறிவான் அவன். இப்பொழுது அவருக்கு எதிராக எதையவது பேசினால், அவருடைய தீவிரம் கூடிப்போகும். அதனால் ஒரு வார்த்தை கூட பேசாமல், "சரி அத்தான், கோயம்பேடு சைட்ல கொஞ்சம் வேலை இருக்கு. நான் இப்ப கிளம்பறேன். அப்பறம் பேசி முடிவு செய்யலாம்" என்று சொல்லிவிட்டு கிளம்பிச்சென்றான் சத்யா.


ஆனாலும் கூட அவன் நினைத்ததைவிட இன்னும் வேகமாக, இரவு வேலை முடிந்து அவன் வீட்டிற்கு வருவதற்கு முன்பாகவே அங்கே கலவரம் வெடித்திருந்தது கருணாகரனின் பொறுமையில்லாத்தனத்தால்.


***


சத்யா அவரிடம் அனைத்தையும் சொல்லிவிட்டுச் சென்ற பிறகு, மன அழுத்தம் கூட்டிப்போய் வேலையே ஓடவில்லை கருணாகரனுக்கு. அதனால் அனைத்தையும் போட்டது போட்டபடி வீட்டிற்கு வந்துவிட்டார் அவர்.


வீட்டிற்குள் நுழையவும், ஒய்யாரமாக சோபாவில் படுத்தவாறு கைப்பேசியை குடைந்துகொண்டிருந்த அவரது மகள்தான் முதலில் அவருடைய பார்வையில் விழுந்தாள். அவரை பார்த்ததும், "ஹை... ப்பா" என அவள் இயல்பாகப் புன்னகைக்க, பதிலுக்கு முறுவலிக்கக்கூட முடியாமல் வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒரு வேதனை அவருடைய நெஞ்சை அடைத்தது.


கையில் மொறுமொறுப்பான பகோடாவுடன், வாகாக சாய்வு நாற்காலியை இழுத்துப்போட்டவாறு தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த பாபு, "என்னப்பா, அதிசயமா இருக்கு. இந்த நேரத்துல வீட்டுக்கு வந்திருக்க” எனக்கேட்டார் வியப்புடன்.


"ஒண்ணும் இல்லப்பா, முக்கியமான வேலை எதுவும் இல்ல. அதான் எல்லாரோடவும் டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு"


"நல்லதா போச்சு, நானே நீ எப்ப வருவன்னு காத்துட்டு இருந்தேன். சீக்கிரம் போய் கை கால் அலம்பிட்டு வா, ஒரு முக்கியமான விஷயம் பேசணும்"


"என்னப்பா, ஏதாவது பணம் தேவையா?"


"அதெல்லாம் இல்ல, இப்படி நின்ன வாக்குல பேசி முடிகிற விஷயம் இல்லப்பா. நீ வேலையெல்லாம் முடிச்சிட்டு வா, நிதானமா பேசலாம்"


தந்தையின் பீடிகை பல கேள்விகளை எழுப்ப, அவரது அறை நோக்கிச் சென்றார் கருணாகரன்.


"ஹசி, விளக்கு வெக்கற நேரத்துல இப்படி படுத்திருக்காத, போய் கை கால் அலம்பிட்டு வந்து சாமி விளக்கை ஏத்து" எனத் தாமரை மகளை அதட்டுவது செவிகளில் விழுந்தது.


போய் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு உடை மாற்றிவந்தவர், அவரது தந்தைக்கு அருகில் சென்று உட்கார, தயாராக இருந்த சிற்றுண்டியையும் காஃபியையும் கொண்டு வந்து வைத்தார் தாமரை.


மனைவியின் முகத்தில் படிந்திருந்த குழப்ப ரேகையைக் குறித்துக்கொண்டு தந்தையை ஏறிட்டார் அவர்.


"பாப்பாவுக்கு சீக்கிரமா ஒரு இடம் பார்த்து முடிச்சிடலாம்னு எவ்வளவு நாளா சொல்லிட்டு இருக்கேன், காதுலயே வாங்க மாட்டேங்கறியே"


கொஞ்சம் கடுமையாகவே வந்தன பாபுவின் வார்த்தைகள்.


தன் மனதில் நினைத்திருப்பதற்கு ஏற்றவாறு அவரும் பேசவும், சில நொடிகள் ஸ்தம்பித்தவர், "சீக்கிரமே முடிச்சிடலாம்ப்பா" என்றார் சுரத்தே இல்லாமல்.


"இல்ல...ல்ல, இப்படி வழவழ கொழகொழன்னெல்லாம் சொல்லாதடா, உண்டுன்னு தீர்த்து சொல்லு, நம்ம அந்தஸ்துக்கு தகுந்தமாதிரி பசங்கள லைன்ல கொண்டுவந்து நிறுத்தறேன். நம்ம இப்படி மெத்தனமா இருக்கறதாலதான் கொஞ்சம் கூட கூறே இல்லாம போறவன் வரவனெல்லாம் என்னவோ லார்டு மாதிரி நெஞ்ச நிமித்திட்டு வந்து பொண்ணு கேக்கறான்"


படபடவென பொரிந்தார் அவர்.


"கல்யாண வீட்டுல யாராவாது வந்து ஹசிய பொண்ணு கேட்டாங்களா"


"பின்ன, நம்ம மாணிக்கத்தோட மச்சான், அதான் அந்த ஷண்முகம் இருக்கான் இல்ல அவன்தான் அவனோட பிள்ளைக்கு கேட்டான். அன்னைக்கு அவன் தங்கைய உனக்கு கேட்டப்ப அவனும் அவனோட அப்பனும் சேர்ந்து என்ன பேச்சு பேசினானுங்க. இன்னைக்கு நாம காரு பங்களானு இருக்கறத பார்த்துட்டு கொஞ்சம் கூட கூசாம வந்து கேக்கறான் பாரு"


தாமரையை முன்னால் வைத்துக்கொண்டு அவர் சொன்ன விதத்தில் சுருக்கென்று தைத்தது கருணாகரனுக்கு. 'யாரோ பேசிய பேச்சையெல்லாம் நினைவில் வைத்துகொண்டு தெளிவாகப் பேசும் உங்களுக்கு, நீங்கள் சொன்ன வார்த்தைகள் மட்டும் மறந்துபோனதே எப்படி?' என்றுதான் தோன்றியது கருணாகரனுக்கு.


"நீங்க என்ன சொல்லிட்டு வந்தீங்க?"


"பாப்பா மேல் படிப்பு படிக்கணும்னு சொல்லிட்டு இருக்கு, எதுக்கும் என் மகன்கிட்ட கேட்டு சொல்றேன்னு சொல்லிட்டேன்"


பட்டென்று பதில் சொன்னாலும் மகனிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை என்பது புரிந்தது கருணாவுக்கு.


தானாக வருவதை ஏன் தவிர்க்கவேண்டும் எதற்கும் மேற்கொண்டு விசாரித்தால்தான் தவறென்ன என்று தோன்றவே, "அந்த பையன் என்ன செய்யறானாம், ஏதாவது சொன்னாங்களா" எனக் கேட்டு அவருடைய அப்பாவை வியப்பில் ஆழ்த்தினார் கருணாகரன்.


"ஏம்ப்பா கேக்கற, வேற நல்ல இடம் பார்க்கலாமே" என அவர் மறுதலிக்க, "இல்லப்பா, முன்னபின்ன தெரியாத இடத்துல கொடுக்கறதைவிட, நம்ம தூரத்து சொந்தத்துலயே கொடுத்தா கொஞ்சம் சேஃப்னு தோணுது. முன்ன மாதிரி இல்ல, இப்பலாம் இவனுங்களுக்கு நம்ம கிட்ட மரியாதை இருக்கு. கூடவே கொஞ்சம் பயமும் இருக்கு. அதனால அடக்கமா நடந்துப்பானுங்க. நம்ம கைதான் ஓங்கி இருக்கும்"


வித்தியாசமாக மகன் கொடுத்த விளக்கத்தில் வாயடைத்துப்போனார் பாபு.


"அப்பா, என்ன ஒண்ணும் பேசமாட்டேங்கறீங்க" என சத்தமாக அவர் கேட்ட விதத்தில் மீண்டவர், "பையன் ஏதோ ஏரோபிளேன் இன்ஜினியராம். அமெரிக்கால வேலை பாக்கறானாம். நம்ம ஊர் பணத்துல நல்ல சம்பளம்னு ஷண்முகம் சொன்னான்"


தந்தை சொன்ன தகவலில் கருணாகரன் துள்ளி குதிக்காத குறைதான்.


"அப்படினா, நாளைக்கே அவன கூப்பிட்டு பேசிடுங்கப்பா, முதல்ல ஜாதகம் மாத்திக்கலாம், பொருந்தி வந்தா மேற்கொண்டு பேசி முடிச்சிடலாம்" என்றார் கருணாகரன் தீர்மானமாக.


திருமணம் முடிந்து மகள் இங்கே இருப்பதை விட வெளிநாடு சென்றுவிட்டால் இந்த வீணாய்ப் போன காதலின் மிச்சங்களால் அவளுடைய திருமண வாழ்க்கையில் மேற்கொண்டு எதுவும் சிக்கல் நேராது என்கிற ரீதியில் யோசிக்கத்தொடங்கிவிட்டர் அவர்.


கணவரின் இந்த முடிவால் அருகே நின்றிருந்த தாமரையின் முகத்தில் ஒரு ஏமாற்றம் படர்ந்ததென்றால், பூஜை அறையில் விளக்கை ஏற்றிவிட்டு, தந்தையின் பேச்சை கேட்டுக்கொண்டே அங்கே வந்த ஹாசினியின் உடல் அதிர்ந்தது.


'தன் காதல் விவகாரத்தையெல்லாம் சத்யா அவரிடம் சொல்லிவிட்டானா, அல்லது அவராகவே இப்படிப் பேசுகிறாரா?' என்று புரியாமல் அச்சம் மேலிட தந்தையை நோக்கி வந்தவள், "அப்பா, என்னப்பா இது, என்னோட விருப்பத்தை கேக்காம, ஏம்ப்பா திடீர்னு இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கீங்க? எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்ப்பா, தாத்தாகிட்ட ப்ரொசீட் பண்ண வேணாம்னு சொல்லிடுங்கப்பா ப்ளீஸ்" என உள்ளே போன குரலில் சொல்ல, பதிலுக்கு கோபம் மேலோங்கி கருணாகரன் மகளைப் பார்த்த அந்த பார்வை, இதுவரை அவர் அவளைப் பார்த்தே இராத ஒரு புதுமையான பார்வை. முதன்முதலாக ஒரு மறுப்பைச் சுமந்து அவளைத் தாக்கிய அந்த பார்வை மனதிற்குள் ஒரு கலக்கத்தை ஏற்படுத்த, அவளுடைய விழிகளில் திரண்ட கண்ணீர் உடைப்பெடுத்து கன்னத்தில் வழிந்தது.


வழக்கமாக அவள் உகுக்கும் கண்ணீரால் பாசம் பொங்கி பிரவாகிக்க பலகீனப்பட்டுப்போவார் மனிதர்.


ஆனால் அவளது கண்ணீரை பார்த்ததும் வழக்கத்திற்கு மாறாக அன்று எரிச்சல்தான் மூண்டது கருணாகரனுக்கு.


அவருடைய அப்பாவின் முன்னால் காதல் கீதல் என அவள் எதையாவது உளறிவைக்கப்போகிறாளே என்ற அச்சம் வேறு தலை தூக்க, "இது என்ன ஹசி, ஆனா ஊன்னா அழுகை பொத்துட்டு வந்துடுது உனக்கு... ம்ம்? பெரியவங்க பேசறப்ப இது என்ன மரியாதை இல்லாம குறுக்க பேசறது. எனக்கு தெரியும் உனக்கு எப்ப என்ன செய்யணும்னு. பேசாம உள்ள போ" என மகளிடம் கடுகாகப் பொரிந்தவர், "அப்பா நீங்க நாளைக்கே பேசிடுங்க' என்று முடித்தார் தந்தையிடம்.


முதன்முதலாக அவர் அவளிடம் காண்பித்த அந்த கடுமை அவளை அதிர்ச்சியின் உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்த, ஓட்டமும் நடையுமாக தன் அறைக்குள் போய் புகுந்துகொண்டாள் ஹாசினி.


அவள் அறைந்து சாற்றிய வேகத்தில், அப்படியே இரண்டாகப் பிளந்துவிடுவது போல் 'டமால்' என்ற பலமான சத்தத்துடன் மூடிக்கொண்டது அந்த அறையின் கதவு.


நடப்பது எதுவும் பிடிபடாமல் செய்வதறியாமல் திகைத்து நின்றார் தாமரை.


கருணாகரன், முதன்முதலாக மகளிடம் காண்பித்த இந்த கடுமைதான் கடைசியுமாகிப்போனது. அதற்கு மேல் அவருடைய செக்கு எதுவும் அவளிடம் செல்லுபடியாகவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாகிப்போனது.


****************

0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page