top of page

Poove Unn Punnagayil - 35

அத்தியாயம்-35

சத்யா கையில் ஏந்தியிருந்த தலைக்கவசம் அவன் இரு சக்கர வாகனத்தில்தான் வந்திருக்கிறான் என்பதை சொல்லாமல் சொன்னது.


அவளுடன் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்த கையுடன் சென்னையிலிருந்து அவன் கிளம்பியிருக்க வேண்டும், அதனால்தான் இந்த நள்ளிரவு நேரத்தில் இங்கே நின்றுகொண்டிருக்கிறான் என்கிற எண்ணமே அப்படி ஒரு உவகையைக் கொடுத்தது சக்திக்கு.


ஆனாலும், "என்ன சத்யா இந்த நேரத்துல இப்படி கிளம்பி வந்திருக்கீங்க" என அவள் சங்கடத்துடன் கேட்க, "ப்ச்... நீங்க ஏதோ ஒரு பிரச்சனைல இருக்கும் போது இதைக் கூட செய்யலன்னா எப்படி" என்றவன், "என்ன ஆச்சு உங்க அம்மாவுக்கு" என்றான் அக்கறையுடன்.


"திடீர்னு சிவியர் அட்டாக் சத்யா. இங்க அட்மிட் பண்ணிட்டு தங்கச்சி கால் பண்ணா. உடனே கிளம்பி வந்தேன்" என்றாள் அவள்.


"ஓஹ், இப்ப எப்படி இருக்காங்க?"


"இப்ப கொஞ்சம் ஸ்டேபிளா இருக்காங்க சத்யா. ஆனாலும் கொஞ்சம் க்ரிட்டிக்கல்தான். ஆஞ்சியோ பண்ணியிருக்காங்க. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணனும்னு சொல்றாங்க"


"பயப்படாதீங்க சக்தி. இப்ப இந்த சர்ஜரியெல்லாம் ஈஸியா செய்யறாங்க"


அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கையில் ஒரு குவளை தேநீருடன் அங்கே வந்த ஞானம் அதை அவளிடம் நீட்டினார்.


"ஓ, நீங்களும் இங்கதான் இருக்கீங்களா?"


"ஆமாம் தம்பி, ஆபிஸ்ல இருக்கும்போதுதான் மேடம்க்கு தகவல் வந்துது. கே.ஆர் சார்தான், அவங்கள இந்த மாதிரி நேரத்துல பஸ்ல தனியா அனுப்ப வேண்டாம்னு கார்லயே கொண்டுவந்து விட சொன்னாரு"


"பரவாயில்ல அண்ணா, இப்படிப்பட்ட நல்லவங்களும் இருக்காங்க இல்ல" என அவன் வியக்க, "மேடம் உங்க அம்மா உங்களை பார்க்கணும்னு கூப்பிடறாங்க. கொஞ்சம் வந்து என்னனு கேளுங்க" என்றார் அங்கே வந்த செவிலியர் ஒருவர்.


வேறெதைப் பற்றியும் சிந்திக்காமல் அவள் வேகமாக அவளுடைய அம்மா அனுமதிக்கப்பட்டிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் செல்ல, அனிச்சையாக அவளைப் பின்தொடர்ந்தான் சத்யா. இரவு நேரம் என்பதால் யாரும் அவனைத் தடுக்கவில்லை போலும்.


அவள் உள்ளே நுழைந்ததுமே, "சக்திம்மா, எனக்கு உங்க அப்பாவை பார்க்கணும். எப்படியாவது அவரை இங்க கூட்டிட்டு வா கண்ணு" என அவர் கெஞ்சலாகக் கேட்க, இயலாமையில் அப்படி ஒரு கோபம் வந்தது சக்திக்கு. அதை அவரிடம் காண்பிக்கக்கூட முடியாமல் அவளுடைய கண்கள் கலங்க அவன் பக்கமாக முகத்தைத் திருப்பினாள் அவள். அதைப் பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு அந்த சூழ்நிலையை உள்வாங்கிக்கொள்ளவே இயலவில்லை. மனைவி உடல்நிலை சரியில்லாமல் இந்த நிலைமையில் இருக்கும்போது அவரை பார்க்கக்கூட அவருடைய கணவர் வரவில்லையா!? ஏன்!?


அப்பொழுதுதான் அவன் அங்கே வந்ததையே உணர்ந்தவளாக தன்னை சமாளித்துக்கொண்டு, "உனக்காக காலைல போய் அவரை கூப்பிட்டு பார்க்கறேன் மா" என்றவள் அவளுடைய அம்மாவுக்கு சத்யாவை அறிமுகப்படுத்தினாள்.


அவர் சக்தியின் அம்மா என்றால் நம்பவே இயலவில்லை அவனால். அக்கா என்றே சொல்லலாம். அச்சு அசல் சக்தியின் ஜாடையுடன் அவ்வளவு அழகாக இருந்தார் அவர்.


ஒரு வணக்கத்தைச் சொல்லிவிட்டு அவன் வெளியில் வர, சில நிமிடங்களில் அங்கே வந்தவள் ஓரமாகப் போடப்பட்டிருந்த இருக்கையில் போய் அமர்ந்துகொண்டாள்.


கையை முட்டுக்கொடுத்து தலை குனிந்து அவள் உட்கார்ந்திருந்த நிராதரவான தோற்றம் அவனுடைய அப்பாவைத் தேடி அவன் அலைந்த நாட்களை அவனுக்கு நினைவு படுத்த, ஏதோ ஒரு உந்துதலில் அவளுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தவன், "இப்ப என்னால உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா சக்தி" எனக் கேட்டான் உண்மையான அக்கறை தொனிக்க.


இப்படிப்பட்ட ஒரு அக்கறையும் துணையும் அந்த நேரத்தில் அவளுக்கு அத்தியாவசிய தேவையாக இருந்ததோ என்னவோ, கேட்பவனும் சத்யா என்பதினாலோ என்னவோ, "கூட இருங்க சத்யா. இப்போதைக்கு எனக்கு அது போதும்" என அவளைச் சொல்ல வைத்தது. சத்தியமாக அவள் சொன்ன அந்த பதிலை அவன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.


'இப்ப மட்டும் இல்ல சக்தி. நீ எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தா காலம் முழுமைக்கும் உன் கூட இருக்க விரும்பறேன்' என மனதிற்குள்ளேயே சொல்லிக்கொண்டவன், தலையை மட்டும் ஆட்டினான் சம்மதமாக.


அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களின் உதவிக்காக இருப்பவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் காத்திருப்பு பகுதி அது. வரிசையாக நால்வர் அமரக்கூடிய இரும்பினாலான இருக்கைகள் போடப்பட்டிருக்க, இரவு நேரம் என்பதால் அதிக கூட்டம் இல்லாமல் இருந்தது அங்கே. சில நிமிடங்களில் அந்த இருக்கையிலேயே அவள் சரிந்து கண்களை மூடி படுத்துவிட, எதிர் முனையிலிருந்த இருக்கையில் உட்கார்ந்திருந்த ஞானத்துக்கு அருகில் போய் அமர்ந்தான் சத்யா.


அவனுடைய பார்வை ஆராய்ச்சியுடன் அவளிடமே நிலைத்திருக்க, அதை உணர்ந்தவராக, "பாவம் தம்பி இந்த பொண்ணு. இந்த அம்மா இப்படி கிடையா கிடைக்கும்போது கூட மதியம் இவங்களோட தங்கச்சியும் அதோட வீட்டுக்காரும் அப்படி ஒரு சண்டை பிடிச்சிட்டு போனாங்க. எல்லாத்தையும் தாங்கிட்டு எப்படித்தான் இப்படி இரும்பு மாதிரி துணிச்சலா நிக்கிதோ?" என்றார் அங்கலாய்ப்பாக.


"ஏன் அண்ணா, என்ன பிரச்சனை. இவங்க அப்பா கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இந்த நேரத்துல எப்படி இவங்கள இந்த மாதிரி தனியா விட்டாரு?" எனக்கேட்டான் சத்யா எரிச்சலுடன்.


"அப்பாவாம் அப்பா, அந்த ஆளு ஒழுங்கானவனா இருந்தா இந்த பொண்ணுக்கு ஏன் இந்த நிலைமை" என எரிச்சலாக மொழிந்தவர், "அந்த ஆளுக்கு அவங்க சொந்த ஊரோட வேற ஒரு குடும்பம் இருக்கு தம்பி. உள்ள உடம்பு சரியில்லாம படுத்திருக்கே அந்த மகராசி அவருக்கு தொடுப்புதான். ரெண்டும் பொம்பள பிள்ளைங்கன்னு கூட இல்லாம அந்த ஆளுக்கு இவங்க மேல கொஞ்சம் கூட ஈடுபாடே கிடையாது. ஏதோ கொஞ்ச காலம் சேர்ந்து வாழ்ந்த பாவத்துக்கு இங்க வேலூர்ல ஒரு வீட்டை மட்டும் இந்த அம்மா பேர்ல எழுதி வெச்சிருக்காரு அவ்வளவுதான். இப்ப அந்த ஆளு வந்து போறது கூட இல்ல. உரிமையா இவர்தான் என் அப்பான்னு சொல்லிக்க முடியாம அசிங்கப்படறதால அந்த ஆளை கண்டாலே சக்தி அம்மாவுக்கு பிடிக்காது. தன்மானத்தோட வீட்டைவிட்டு தனியா வந்து தானே கஷ்டப்பட்டு படிச்சு, அந்த ஆளோட சப்போர்ட் இல்லாமலேயே சொந்த கால்ல நிக்கறாங்க.


ஆனா இவங்க தங்கச்சி அப்பப்ப அந்த ஆளுக்கு கிட்ட அஞ்சு பத்துன்னு துட்டுக்கு போய் நிற்கும். அதிகம் தோண்டி துருவாம இருக்க அவரும் தூக்கி எறிஞ்சிடுவாரு.


விட்ட குறை தொட்டகுறையா இவங்க அம்மா மட்டும்தான் இந்த நிலைமையிலயும் அந்த ஆளை நினைச்சு கிடந்தது உருகிட்டு கிடக்குது.


அவரு வேற ஜாதி இந்த அம்மா வேற ஜாதிங்கறதால சக்தி அம்மாவுக்கு கல்யாணம் கூட கூடி வரல. அக்கறையோட எடுத்து செய்யவும் ஆளில்லாம போச்சு.


ஆனா இவங்க தங்கச்சி தானே தேடி ஒருத்தன கல்யாணம் கட்டி வீட்டோட கூட்டிட்டு வந்துடுச்சு.


இப்ப அவன் என்னடான்னா இவங்க வீட்டுல வந்து உட்கார்ந்துட்டு நாட்டாமை செஞ்சிட்டு இருக்கான்.


இப்ப இந்த அம்மாவோட ஆபரேஷனுக்கு பதினைஞ்சு லட்சத்துக்கும் மேல தேவைப்படுது தம்பி. அவ்வளவு பணத்துக்கு சக்தி அம்மா இப்ப எங்க போவாங்க சொல்லுங்க. அந்த வீட்டை பேங்க்ல வெச்சு கடன் வாங்கலாம்னு பார்த்தாக்க, பிசினஸ் பண்றேன் அது இதுன்னு சொல்லி அவங்க அம்மாவை ஏமாத்தி கையெழுத்து வாங்கி அந்த வீட்டை ஏற்கனவே அவங்க மருமகன் அடமானம் வெச்சிருக்கான்னு இன்னைக்குதான் தெரிஞ்சுது. அதை சக்திம்மா கேட்டதுக்குத்தான் அதுங்க ஆட்டமா ஆடிட்டு போச்சுங்க" என மூச்சை பிடித்துக்கொண்டு சொல்லி முடித்தார் அவர்.


போதும் என்று இருந்தது சத்யாவுக்கு. இதையெல்லாம் வெளிக்காண்பித்துக்கொள்ளாமல் எப்படி அவளால் இவ்வளவு இயல்பாக எல்லோரிடமும் அன்பும் அக்கறையும் செலுத்த முடிகிறது என எண்ணும்போது இன்னும் இன்னும் அதிகமாக பிடித்தது அவனுக்கு இந்த சக்தியை.


அவருடைய முகத்தைப் பார்த்துக்கொண்டே அவன் ஸ்தம்பித்துப்போய் உட்கார்ந்திருக்க, எங்கே அவன் தன்னை தவறாக புரிந்துகொண்டனோ என்கிற பரிதவிப்பில், "இதெல்லாம் இவனுக்கு எப்படி தெரியும்னு தப்பா நினைக்காதீங்க தம்பி. சக்திம்மா எங்க கே.ஆர் சார் கிட்ட ஜுனியரா சேர்ந்து பத்து பன்னெண்டு வருஷம் இருக்கும். வக்கீல் படிப்பு படிச்சு முடிச்ச உடனே இங்க வந்தவங்க இப்ப வரைக்கும் தனியா போகல. ரொம்ப திறமையானவங்க வேற. அதனால எங்க சார் இவங்கள மக மாதிரி நடத்துவாரு. நான் இவங்க இங்க வரத்துக்கு முன்னால இருந்தே சாருக்கு ட்ரைவரா இருக்கேன். அதனால இதெல்லாம் தெரியும்" என ஒரு தன்னிலை விளக்கத்தையும் கொடுத்தார் அவர்.


"ச்ச..ச்ச.. அதெல்லாம் ஒண்ணும் இல்லண்ணா" என்றான் அவன் அவரை அமைதி படுத்தும் விதமாக.


பெற்றவள் இப்படி ஒரு நிலையில் இருக்க, அவரது ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அடுத்த நாள் பொழுது விடிந்ததும் விடியாததுமாக அவளது பிறப்புக்குக் காரணமானவரை சந்திக்கக் கிளம்பினாள் சக்தி. அவளை தனியாக அனுப்ப விரும்பாமல் தானும் அவளுடன் சென்றான் சத்யா. ஆனால் வேலை மெனக்கெட்டு அங்கே சென்றாலும் கூட அவ்வளவு சுலபமாக எதுவுமே நடந்துவிடவில்லை.


ஒரு கிராமத்து வீட்டிற்கு உண்டான அனைத்து லட்சணங்களுடன் மிகப் பிரம்மாண்டமாக இருந்தது சக்தியின் அப்பா என்கிற மனிதனின் பூர்விக வீடு. அந்த வீட்டை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த கார்களே சொல்லியது அவருடைய செல்வ நிலையை.


வாயிலில் வீட்டு வேலை செய்பவர்கள் சிலர் தங்கள் கடமையே கண்ணாயினாராக அவரவர் வேலையில் ஈடுபட்டிருந்தனர். ஞானம் காரை ஓட்டி வர சத்யா சகிதம் சக்தி அங்கே போய் இறங்கியதும் அவர்கள் அவளைப் பார்த்த பார்வையில் ஒரு துளி அளவு கூட மரியாதையோ கவுரவமோ இல்லை.


மாறாக புழு பூச்சியை பார்ப்பது போன்று ஒரு அருவருப்புடன் அவளைப்பார்த்து வைத்தார்கள்.


அதையெல்லாம் பற்றி கொஞ்சமும் கவலை கொள்ளாமல், அப்பா என்ற ஒரு வார்த்தையைச் சொல்ல விரும்பாதவளாக, "உங்க அய்யா இருந்தா கொஞ்சம் வர சொல்லுங்க அர்ஜெண்டா பார்க்கணும்" என்று மட்டும் சொன்னாள் சக்தி, கட்டளை தொனிக்க. அதில் ஒருவர் வேகமாக வீட்டிற்குள் சென்று தகவலைச் சொல்ல, நடுத்தர வயதில் இருக்கும் ஒருவன் வெளியில் வந்தான்.


"பொழுது விடிய எதுக்குடி இங்க வந்து நிக்கற. எங்க அப்பா இப்ப வீட்ல இல்ல. எங்க அம்மா கண்ணுல பட்டுத்தொலையாம நீ முதல்ல இங்கிருந்து கிளம்பு" என்றான் அவன் இளக்காரமாக. அதிலிருந்தே தெரிந்தது அவன் அவருக்கு முறையான உறவில் பிறந்த மகன் என்று.


"இதோ பாருங்க, இந்த வாடி போடீங்கற வேலையெல்லாம் வெச்சுக்காதீங்க. மரியாதை கொடுத்தால் மரியாதை கிடைக்கும்" என சீறியவள், "நான் இப்போ உங்ககிட்ட உரிமை எதிர்பார்த்தோ இல்ல உங்க சொத்துல பங்கு கேட்டோ இங்க வரல. எங்கம்மா ஆஸ்பத்திரியில ரொம்ப முடியாம இருக்காங்க. அப்பரேஷனுக்கு பிறகு அவங்க உயிரோட இருப்பாங்களான்னு கூட சொல்றதுக்கில்ல. இந்த நிலைமையில அவங்க அவங்களேட வீட்டுக்காரரை ஒரு தடவ பார்க்கணும்னு ஆசைப்படறாங்க. அதை அவர்கிட்ட சொல்லத்தான் இங்க வந்து நின்னுட்டு இருக்கேன். அவரை கொஞ்சம் வரச்சொல்லுங்க" என்றாள் சக்தி கொஞ்சமும் விட்டுக்கொடுக்காமல்.


அதுவே அவனுடைய முகத்தில் அடித்தது போல் இருக்க ஒரு நொடி ஸ்தம்பித்தவன், "அதுதான் அவர் வெளியூர் போயிருக்காருன்னு சொல்றேன் இல்ல. இங்க நின்னு டென்ஷன் பண்ணாம நீ முதல்ல கிளம்பு" என்றான் அவன் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல். அதற்குள் அந்த மனிதரே எதேச்சையாக வெளியில் வர எதிர்பாராதவிதமாகச் சக்தியை அங்கே கண்டவர் ஒரு நொடி அதிர்ந்து போனார்.


"நீ எதுக்கும்மா இப்ப இங்கல்லாம் வந்திருக்க" என அவர் பின்பக்கமாகத் திரும்பி வீட்டின் உள்ளே பார்த்துக்கொண்டே பதற, அவள் அவளுடைய அம்மாவின் நிலைமையைப்பற்றிச் சொல்லவும், "இப்ப என்னை என்ன பண்ண சொல்ற? என்னால உன்கூட ஆஸ்பத்திரிக்கு எல்லாம் வர முடியாது. என் பிள்ளைங்க எல்லாம் அதை விரும்ப மாட்டாங்க. என்ன ஆனாலும் நீயே பார்த்துக்கோ. பணம் வேணும்னாலும் சொல்லு அக்கவுண்ட்ல டிரான்ஸ்பர் பண்ணி விடுறேன்" என்றார் அவர் விட்டேற்றியாக. அதையெல்லாம் கண்களில் கனல் பறக்க பார்த்துக்கொண்டே நின்றான் அவருடைய மகன்.


அந்த பதிலில் அவளது கோபம் எல்லையைக் கடக்க, "யாருக்கு வேணும் உங்களோட பணம். எங்க அம்மா ஒரு தடவை உங்களைப் பார்க்கணும்னு ஆசைப்படுறாங்க. அதை சொல்லத்தான் வந்தேன். முடிஞ்சா வாங்க இல்லனா விடுங்க. அவங்க வாழ்ந்த வாழ்க்கைக்கு இதெல்லாம் அவங்களுக்கு தேவைதான்" என்று உணர்ச்சியற்ற குரலில் சொல்லிவிட்டு அங்கிருந்து அவள் கிளம்ப எத்தனிக்க, அதுவரை ஒரு பார்வையாளராக மட்டுமே அங்கே நின்றிருந்தவன், "சக்தி, ஒரு செகண்ட் இருங்க" என அவளைத் தடுத்தான் சத்யா.


அவள் கேள்வியாக அவனைப் பார்க்க, 'என்ன சார், அங்க ஒருத்தங்க உசிரை கையில பிடிச்சிட்டு இருக்கற நிலைமையில கூட உங்கள பார்க்கணும்னு சொல்றாங்கன்னா அவங்களுக்கு உங்க மேல எவ்வளவு அன்பு இருக்கனும். அவங்கள உதாசீனபடுத்தற அளவுக்கு ஒரு அடிப்படை மனிதாபிமானம் கூடவா உங்களுக்கு இல்லாம போச்சு" என கொதிப்புடன் கேட்க, "பார்க்க புதுசா தெரியற, நீ யாருப்பா இதையெல்லாம் கேட்க?" என்றான் அவருடைய மகன்.


அதற்க்கு என்ன பதில் செய்வது என அவன் ஒரு நொடி திணற, "இவர் என்னோட ஃப்ரெண்ட், வெல் விஷர் எப்படி வேணா சொல்லலாம். அதுக்கு மேல இவரை பத்தி கேள்வி கேட்க உங்க யாருக்கும் உரிமை இல்ல" என்றாள் சக்தி வெட்டுவதுபோல்.


அவளுடைய அப்பாவே ஒரு நொடி அதிர்ந்துதான் போனார்.


"ப்ச்... இப்ப நீங்க எங்க கூட கிளம்பி வரீங்க, இல்லனா இவங்க உங்க சொத்துல பங்குகேட்டு கோர்ட்டுக்கு போவாங்க. அந்த காலம் மாதிரி இல்ல. ஒரு சின்ன டி.என்.ஏ டெஸ்ட் போதும் இவங்க உங்க பொண்ணுன்னு நிரூபிக்க" என்றவன், "என்ன சக்தி நான் சொல்றது சரிதான?" எனக் கேட்டான் அவளிடம்.


இந்த அளவுக்கெல்லாம் அவள் யோசிக்கவே இல்லை. 'ஆங்' என வியப்புடன் அவனைப் பார்த்தவளின் தலை 'சரி' என்பதாக ஆடியது.


"இவங்க கிட்டயெல்லாம் நியாயமா பேசினா வேலைக்கே ஆகாது. நீங்க சொல்றதுதான் தம்பி சரி" என அவனுக்கு வக்காலத்து வாங்கினார் ஞானமும்.


அதன் பிறகு அங்கே கொஞ்சம் சலசலப்பு மூண்டாலும் தகப்பன் மகன் இருவருக்குமே உதறல் எடுத்து என்னவோ உண்மை. சக்தியின் வக்கீல் தொழில் அவள் சார்ந்திருக்கும் புகழ்பெற்ற நிறுவனம் இதெல்லாமும் ஒரு காரணம்.


மறுத்துக் கூற துணிவில்லாமல் பலி ஆடு போல அவர்களைத் தொடர்ந்து அவர் மருத்துவமனை வரை வந்து சக்தியின் அம்மாவைப் பார்த்து சுமுகமாக சில வார்த்தைகள் பேசிவிட்டுப் போனார் 'சொத்தில் பங்கு' என சத்யா கையிலெடுத்த கூர்மையான ஆயுதம் கொடுத்த பயத்தால்.


அதன் பிறகுதான் அந்த பெண்மணி முழு மனதுடன் அறுவைசிகிச்சைக்கே சம்மதித்தார்.


மீண்டும் அவள் மருத்துவமனையின் உள்ளே நுழைந்ததுமே பணம் செலுத்துமாறு ஒரு மிகப்பெரிய பட்டியல் அவளுக்கு எதிராக நீட்டப்பட, அந்த நிலையிலும் கூட அவரிடமிருந்து ஒற்றை ரூபாவைக்கூட வாங்க முற்படவில்லை சக்தி.


முதற்கட்டமாக தன் வங்கியிலிருந்த தொகை மொத்தத்தையும் துடைத்து பணத்தைக் கட்டி முடித்தாள்.


விட்டால் போதும் அங்கிருந்து ஓடிவிடலாம் என்கிற மனநிலையிலிருந்தாரே ஒழிய தன் மகளின் துணிச்சலையோ தன்மான உணர்ச்சியையோ எண்ணி வியக்கவோ பெருமைப்படவோ எல்லாம் இல்லை அந்த மனிதர். உண்மையில் மனைவி மகள் என்ற உணர்வெல்லாம் இல்லவே இல்லை அவருக்கு.


"மேற்கொண்டு செலவுக்கு என்ன பண்ண போறீங்க சக்தி?" என சத்யா கேட்க, என்ன நினைத்து 'கூட இருங்க சத்யா. இப்போதைக்கு எனக்கு அது போதும்' என்று அவள் சொன்னாளோ அது அவளுக்கே புரியவில்லை என்றாலும் அவன் உடன் இருப்பது அப்படி ஒரு பலத்தைக் கொடுத்தது அவளுக்கு.


"பர்சனல் லோன் எடுக்கலாம்னு இருக்கேன் சத்யா, எங்க சீனியர் கிட்ட கொஞ்சம் அட்வான்ஸ் வாங்கலாம். அப்படி இருந்தால் கூட ஒரு நாலு லட்சம் தேவை படும். அதுக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன். முதல்ல பணம் கட்டி நல்லபடியா சர்ஜரி முடிஞ்சா போதும். இந்த எக்ஸ்பென்சஸ் எல்லாத்தையும் ஏதாவது ஒரு பைனான்ஸ்ல போட்டு ஈ.எம்,ஐயா கன்வர்ட் பண்ணிக்கலாம். என்னோட ஆவரேஜ் இன்கம் சிக்ஸ்டி தவுசண்ட். எனக்கு எலிஜிபிலிட்டி இருக்கு" என அவள் தெளிவாக விளக்க, அவளை வற்புறுத்தி அவளுடைய வங்கிக்கணக்கு எண்ணை வாங்கியவன், மொத்தமாக ஐந்து லட்சத்தை அவளுடைய கணக்குக்கு மாற்றல் செய்ய, நம்பவே இயலவில்லை சக்தியால். அதைப் பெற்றுக்கொள்ளக் கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் அவளுடைய சூழ்நிலை ஒரு அளவுக்கு மேல் அவளை மறுக்க விடவில்லை.


ஒரு வழியாக அவளுடைய அம்மாவுக்கு அறுவை சிகிச்சை முடிந்து, சில நாட்கள் மருத்துவமனை வாசத்திற்குப் பிறகு நல்லபடியாக வீடு வந்து சேர்த்தார் அவர்.


அதுவரை காலை சென்னையிலும் மாலை தொடங்கி அதிகாலை வரை வேலூரிலுமாக சத்யாவின் நாட்கள் கழிந்தன.


ஒரு கண்ணாடி பாத்திரத்தைக் கையாளுவது போல சக்தியின் அம்மாவை கவனித்துக்கொள்ள வேண்டியதாக இருந்ததால், சென்னை வரை பயணம் செய்ய இயலாத நிலையில் வேறு அவர் இருக்கவும், ஓரிரு மாதங்கள் வேலூரிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது சக்திக்கு.


அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபின் சத்யா அங்கே வரவே இல்லை.


அவ்வப்பொழுது கைப்பேசியில் அழைத்து அவளிடம் அவரை பற்றி அக்கறையாக நலம் விசாரிப்பான். அதற்கு மேல் வேறெந்த பேச்சும் இருக்காது இருவருக்குள்ளும்.


ஆனாலும் கூட சத்யா என்பவன் அவளுடைய கைப்பேசியைப் போல ஒரு அத்தியாவசியமானவனாக ஆகிப்போனான் சக்திக்கு, இனி அவனில்லாமல் வாழ சாத்தியமே இல்லை என்பதுபோல.


****************

0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page