Poove Unn Punnagayil - 34
அத்தியாயம்-34
கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஆண் பெண் என பாகுபாடில்லாத மிகப்பெரிய நட்பு வட்டம் இவர்களுடையது. எல்லோருமே வசதி படைத்த வீட்டுப்பிள்ளைகள் என்பதால் காலத்திற்கேற்றால்போல சினிமா, மால், பார்ட்டிகள் என்பதெல்லாம் இவர்களுக்குள் வெகு சகஜமான ஒன்றாக இருந்தது.
இவர்கள் முதல் ஆண்டில் படிக்கும்போது இறுதியாண்டு படிப்பிலிருந்தான் கௌசிக். அவனுடைய வசீகரிக்கும் தோற்றமும் 'காலேஜ் டாப்பர்' என்கிற பெருமையும் பெண்களையெல்லாம் அவன் பக்கம் ஈர்க்க, பாடத்தில் சந்தேகம் கேட்பதுபோல் இவர்களும் அடிக்கடி கௌசிக்கிடம் போய் பேச்சுக்கொடுக்கவும் முதலில் இயல்பாக விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் இவர்களுடைய மனநிலை புரிந்து, 'இனிமேல் டௌட் கேட்டு என் கிட்ட வராதீங்க. உங்க பிரஃபஸர் கிட்டயே கேட்டுக்கோங்க. நிச்சயமா கிளியர் பண்ணுவாங்க" என நேரடியாகச் சொல்லி அவர்களிடமிருந்து ஒதுக்கிப்போய்விட்டான். அதற்குள் அவனுடைய படிப்பும் முடிந்துவிட அவனுடைய தொடர்பே இல்லாமல் போனது.
மற்ற பெண்களெல்லாம் அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல் போனாலும் பலாவால் அந்த முகத்திருப்பலை சகிக்கவோ அவனுடைய பிரிவை ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை.
ஏதோ ஒரு விதத்தில் அவனுடன் பழக்கத்தை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் முக நூலில் அவனுக்கு நட்பு அழைப்பு விட்டுப்பார்க்க அதைக் கூட ஏற்க தயாராயில்லை அவன். அந்த ஏமாற்றமும் அவமானமும் அவளுக்குள் நீறு பூத்த நெருப்பாக கனன்றுகொண்டே இருந்தது.
அந்த நேரத்தில்தான் அவர்களுடன் படிக்கும் தருணுக்கு ஹாசினியிடம் ஒரு தனிப்பட்ட விருப்பம் இருப்பது புரிந்தது பாலாவுக்கு. ஆனால் அதை ஹாசினிதான் உணர்ந்ததாகவே தெரியவில்லை. எல்லோருடனும் இயல்பாகப் பழகுவதுபோல்தான் அவனுடனும் பழகினாள் என்றாலும் பாலாவுக்கு அவள் மீது ஒரு பொறாமை உணர்வு முதன்முதலாக ஏற்பட்டது அப்பொழுதுதான்.
'இங்கே இத்தனை பெண்கள் இருக்கும்போது இந்த தருணுக்குக்கூட அவளிடம் மட்டும் எப்படி இவ்வளவு நாட்டம் உண்டானது? தன்னிடம் இல்லாதது அப்படியென்ன இருக்கிறது அவளிடம்?' என்கிற எண்ணம் கொஞ்சம் அதிகமாகவே தலைதூக்கியது. காரணம் கௌசிக்கே ஹாசினியை ஆர்வமுடன் பார்ப்பதுபோல பல சமயங்களில் தோன்றியிருக்கிறது அவளுக்கு.
ஆனாலும் அதை வெளிக்காண்பிக்காமல் அவள் சென்றுகொண்டிருக்க, ஒரு விடுமுறை தினம் பார்த்து மேகலாவின் பிறந்தநாள் வரவும், அவர்களுடைய வழக்கப்படி ஒரு நட்சத்திர விடுதியில் அனைவருக்கும் ட்ரீட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தாள் அவள்.
அவர்கள் அனைவருமே வயது வரம்பைத் தொட்டிருக்க மதுவுக்கும் அனுமதி இருக்கவே ஹாசினி, சவிதா என அவர்கள் குழுவில் சிலரைத் தவிர்த்து மற்றவர் அனைவரும் புகுந்து விளையாட, அவர்களுடைய குதூகலம் களைகட்டியது.
ஆட்டம் பட்டம் என நேரம் கழியவும் ஹாசினையை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக அங்கே வந்தான் சத்யா.
அந்த நேரம் பார்த்து போதை தலைக்கு ஏறிப்போய், செல்ஃபீ எடுக்கும் சாக்கில் ஹாசினியின் தோளில் கை போட்டு தன்னுடன் நெருக்கிக்கொண்ட தருண் படங்களாக எடுத்துத்தள்ளிக்கொண்டிருக்க அவள் கவனம் முழுவதும் எடுத்த படங்களிலெல்லாம் தான் அழகாக இருக்கிறோமா என்பதை சரிபார்ப்பதில் மட்டுமே இருக்க, அவள் ஸ்லீவ்லஸ் டாப் வேறு அணிந்திருக்கவும் அது வசதியாகிப்போய் அவளுடைய தோளை வளைத்திருந்த அவனுடையக் கையை இன்னும் கொஞ்சம் சுதந்திரமாகப் படரவிட்டு எல்லை மீறிக்கொண்டிருந்தான்.
உள்ளே நுழைந்த சத்யாவின் பார்வையில் தப்பாமல் அந்த காட்சி பட, கண்மண் தெரியாத ஆத்திரத்தில் கொதித்தே போனான் அவன். அடுத்த நொடி தருணுடைய கைப்பேசி தரையில் தெறித்து நொறுங்கிச் சிதறியிருந்தது.
"ஏன்டீ, வாய் கிழிய குட் டச் பேட் டச் பத்தியெல்லாம் மணிக்கணக்கா பேசறீங்க இல்ல, அது உங்களுக்கு நடக்கும்போது அதை புரிஞ்சிக்கற அறிவு மட்டும் ஏன் உங்களுக்கு இல்லாம போகுது?" என அவன் உச்சபட்ச கோபத்தில் உருமும்போதே ஹாசினியின் கன்னமும் நன்றாகப் பழுத்தது.
அவள் என்னவென்று உணருவதற்குள் தருணின் கையை அவனுடைய பின்பக்கமாக வளைத்து நன்றாக முறுக்கியிருந்தான் அவளுடைய தாய்மாமன்.
"தாய்மாமன், பாட்டன், சித்தப்பன், பெரியப்பன்னு யாரா இருந்தாலும் எவ்வளவு உரிமை இருந்தாலும் எங்க குடும்பத்துலயெல்லாம் பொம்பள பிள்ளைகளை தொட்டு பேசறது, செல்லமா மடியில உட்கார வைக்கிறது, ஆசையா கட்டிபிடிக்கறது இதையெல்லாம் செய்ய மாட்டோம். ஒரு வயசுக்கு மேல அந்த ஒதுக்கம் தானா வந்துடும் தெரியுமாடா உனக்கு. ஆனா ஃப்ரெண்ஷிப் சோஷியல் பிஹேவியர் அது இதுன்னு சொல்லிட்டு உனக்குக் கொஞ்சம் கூட உரிமையே இல்லாத ஒரு பெண்ணை இப்படித் தொட்டு தடவறியே, இதெல்லாம் கேடு கெட்ட பொரம்போக்குத்தனம்னு உங்க அம்மா அப்பா உனக்கு சொல்லிக்கொடுக்கல?" என அவன் உறும, இப்படி அப்படி அசையக்கூட முடியாமல் வலியில் கத்திக்கொண்டிருந்த