top of page

Poove Unn Punnagayil - 32

அத்தியாயம்-32


காவேரி இங்கு ஓடோடி வந்து

காதல் சங்கமம் ஆகாதோ

பூவோடு தென்றல் தாலாட்டுச் சொல்ல

ஆசை தோன்றுது ஏதேதோ

நீயின்றிப் பூந்தென்றல் வீசாது

நீயின்றி என் ஜீவன் வாழாது

நான் என்றும் நீ என்றும் வேறேது

என் ஆசை எப்போதும் மாறாது

அன்பே அன்பே என் வாழ்வே நீயே

பூங்காற்றே ஹேய் ஹே ஹே

ஹேய் ஹே ஹே

பூங்காற்றே இது போதும்

என் உடல் தீண்டாதே

போராடும் இளம் பூவை

என் மனம் தாங்காதே

இன்பத்தை எண்ணித் தவிக்க

எப்போதும் உன்னை நினைக்க

எண்ணத்தைக் கிள்ளிக்

கிள்ளிப் போகாதே

என் தாபம் தீராதே


'அப்பறமா எனக்கு கால் பண்ணுங்க. என்ன பண்ணலாம்னு சொல்றேன்' என சக்தி அவனிடம் சொல்லியிருந்த காரணத்தால், இரவு நேரம் என்பதால் 'நீங்க இப்ப ஃப்ரீயா? கால் பண்ணலாமா?' என சக்திக்கு ஒரு குறுந்தகவலை அனுப்பிவிட்டு கைப்பேசியில் பாடல்களை ஓடவிட்டவாறு அவளுடைய பதிலுக்காகக் காத்திருந்தான் சத்யா.


உறக்கம் வேறு கண்களைச் சுழற்ற, 'பேசாம நாமளே கால் பண்ணி பேசிடலாமா' என அவன் யோசித்துக்கொண்டிருக்கும்போதே பாடல் தடைப்பட்டது அவளிடமிருந்து அழைப்பு வந்த காரணத்தால்.


ஒரு நொடி அவனுடைய மனம் துள்ளி குதிக்க அவன் அழைப்பை ஏற்கவும், "சொல்லுங்க சத்யா, இன்னைக்கு உங்க வீட்டுல பூகம்பம் ஏதாவது வெடிச்சுதா" என அவள் மெல்லிய சிரிப்புடன் கேட்க, "பூகம்பமெல்லாம் எதுவும் வெடிக்கல. ஆனா நாங்க வீட்டுக்கு வரும்போது வீடே ஒரு புயல் அடிச்சு ஓய்ஞ்சது போல இருந்துது. அமைதியோ அமைதி" என இலகுவாக அவளுக்கு பதில் கொடுக்கும்போது அவனுக்குமே சிரிப்பு வந்தது.


"சொல்லுங்க என்ன முடிவு செஞ்சீங்க. கௌசிக் சொன்ன மாதிரி டைவர்ஸா" என அவள் ஒரு மாதிரி கேட்கவும், 'ச்ச...ச்ச... அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல. இன்னைக்கு அக்காவும் அத்தானும் சேர்ந்து அவளுக்கு சரியா பேய் ஓட்டியிருக்காங்கன்னு நினைக்கறேன். மேடம் ஒரே டல்லு" என்றவன், "நீங்க ஏதோ ஷாக் ட்ரீட்மெண்ட்ன்னு மெசேஜ் பண்ணியிருந்தீங்க? அவளுக்கு யோசிக்கவே டைம் கொடுக்காம சட்டுன்னு அதை ட்ரை பண்ணிடுவோமா" எனக் கேட்டான் அவன்.


"அதுதான் ஒர்க் அவுட் ஆகும்னா அதையே செஞ்சிட்டா போச்சு" என அவள் இலகுவாகச் சொல்ல, "ஷாக் ட்ரீட்மெண்ட் ஹசிக்கு மட்டும் கொடுத்தா போறாது சக்தி, அவ ஃப்ரெண்டுன்னு சொல்லி குட்டிச்சாத்தான் ஒண்ணு சுத்திட்டு இருக்கு. அதுக்கும் சேர்த்து குடுக்கணும்" என அவன் சொல்ல எதிர் முனையில் அப்படி ஒரு சிரிப்பொலி கேட்கவும் எழுந்து ஆடாத குறைதான் சத்யா.


"அவங்க டீடைல்ஸ் அனுப்புங்க. செஞ்சிடுவோம். ஒன் ஆர் டூ டேஸ்ல எல்லாத்தையும் அரேஞ் பண்ணிட்டு சொல்றேன்" என அவள் சொல்ல, "தேங்க்ஸ்ங்க சக்தி. கட் பண்ணட்டுமா” என அவன் கேட்கவும், 'ஆங்... சத்யா ஒரு நிமிஷம்" என்றவள், "டுவென்டி லேக்ஸ் பட்ஜட்ல நான் சிங்கிள் பெட் ரூம் பிளாட் ஒண்ணு பார்த்துட்டு இருக்கேன். உங்க கன்ஸ்ட்ரக்ஷன்ல ஏதாவது இருக்கா" என அவள் கேட்க, "செக் பண்ணிட்டு நாளைக்கு சொல்லட்டுமா?" என்ற அவனுடைய பதிலுக்கு, "ஸ்யூர் சத்யா. என் கிட்ட ஒரு எய்ட் லேக்ஸ் இருக்கு. மீதி பேங்க் லோன் போற மாதிரி இருக்கும். அதை பத்தின டீடைல்ஸும் கொஞ்சம் குடுங்க" என கேட்டுவிட்டு, "குட் நைட்" என அழைப்பைத் துண்டித்தாள் அவள்.


சிறு வயதில், உடல்நிலை சரியில்லாமல் போகும் சமயங்களில் வலுக்கட்டாயமாக ஒரு குவளை கசப்பான கஷாயத்தை மூக்கை பிடித்துக்கொண்டு அவனைப் பருகவைத்த பிறகு ஒரு தேக்கரண்டி சர்க்கரையை அவனுக்குக் கொடுப்பார் கோதை. அதேபோன்று ஒரு உணர்வு உண்டானது அவனுக்கு.


'இந்த சர்க்கரையால் அவன் வாழ்வில் படிந்திருக்கும் கசப்பைப் போக்கி எதிர்காலத்தில் நிரந்தரமாக ஒரு இனிமையைத் தக்கவைக்க முடியுமா?' என்ற கேள்வி எழுந்தது அவனுடைய மனதிற்குள்.


'முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார், சத்யா... ஆல் தி பெஸ்ட்' என அவனை ஊக்குவித்தது அவனுடைய மனசாட்சி.


***


"ஏரியா ரொம்ப பீஸ்ஃபுல்லா இருக்கு. லிப்ட் இருக்கறதால எய்ட்த் ப்ளோர் கூட ஓகே தான். ஆனா கிச்சன்தான் ரொம்ப சின்னதா இருக்கு" என்று இழுத்தாள் சக்தி.


அவள் கேட்டாளே என்பதற்காக இல்லை, அவளை நேரில் சந்திக்க ஒரு வாய்ப்பாக இருக்குமே என்பதனால் மட்டுமே இருக்கும் வேலையெல்லாம் விட்டுவிட்டு இந்த பிளாட்டை காண்பிப்பது போல அங்கே அவளை வரவழைத்திருந்தான் சத்யா.


அவள் அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையையும் ஆராய்ந்துகொண்டிருக்கப் பட்டும் படாமல் அவளை சைட் அடித்துக்கொண்டிருந்தான் அவன்.


"கிச்சனுக்கு இவ்வளவு இம்பார்ட்டன்ஸ் கொடுக்கறீங்க. சமையல்னா அவ்வளவு இன்ட்ரெஸ்ட்டா சக்தி உங்களுக்கு" எனக் கேட்டான் அவன் ஒரு வியப்புடன்.


"நீங்க வேற சத்யா, சாம்பார், ரசம் மாதிரி ரொம்ப பேசிக்கான ஒண்ணு ரெண்டு ஐட்டம் தவிர வேற எதுவும் எனக்கு செய்யத் தெரியாது. அதுவும் ரொம்ப வருஷமா ஹாஸ்டல் பீஜின்னு இருந்துட்டேனா, நல்லா சாப்பிட கூட தெரியாது" எனக் குறைபட்டுக்கொண்டவள், "கவனிச்சுக்க சரியான ஆள் இல்லாம அம்மா ஊர்ல இருக்கறதால இப்பதான் கொஞ்ச நாளா எனக்குன்னு ஒரு வீடு வாங்கணும்ங்கற எண்ணமே வந்திருக்கு. அவங்க இங்க வந்ததும் கொஞ்சம் கொஞ்சமா சமைக்க கத்துக்கணும். கை கால் நீட்டி தூங்க இடம் இருந்தா போதும். பெட் ரூம் கொஞ்சம் சின்னதா இருந்த கூட பரவாயில்ல. ஆனா கிச்சன் இப்படி திரும்பினா சுவத்துல முட்டிக்காற மாதிரி இல்லாம கொஞ்சம் ஸ்பேசியஸ்ஸா இருக்கணும். அப்பதான் ரிலாக்ஸ்டா வேலை செய்ய முடியும். அந்த மாதிரி கிடைக்குமா?" என அவள் கேட்க அவளுடைய குரலில் தொனித்த ஏக்கத்தில் 'இவளும் தன்னைப்போலத்தானோ?' என்கிற கேள்வி எழ அவன் மனதை ஏதோ செய்தது. கூடவே சமையலறை பற்றி அவள் கொடுத்த விளக்கத்தில் வியக்கவும் செய்தான் அவன்.


மனதில் ஏதேதோ எண்ணங்கள் தோன்ற அவன் அப்படியே அசைவற்று நிற்கவும், "சத்யா" என்ற அவளது அழைப்பில் உணர்வுக்கு வந்தவன், "ஆங்... இதெல்லாம் ரெடிமேட் பீஸ்ங்க சக்தி. இப்படித்தான் இருக்கும். ஆனா புது ப்ராஜெக்ட்ல நீங்க புக் பண்ணா நீங்க கேட்கற மாதிரி டிசைன்ல ஆல்டர் பண்ணி கொடுப்போம்' என அவன் சொல்ல, "ஐயோ, அப்படினா ரொம்ப லேட் ஆகும் இல்ல?" என சுணங்கினாள் அவள்.


தாடையைத் தடவிக்கொண்டே, உங்களுக்கு உடனே வேணும்னா, நீங்க கேட்கற ஸ்பெசிஃபிகேஷன்ஸோட ஒரு வீடு இருக்கு. ஆனா இலவச இணைப்பா கூடவே ஒரு தொல்லையை நீங்க பொருத்துக்கவேண்டியிருக்கும்" என அவன் சிரித்துக்கொண்டே சொல்ல, "அது என்ன சத்யா அப்படிப்பட்ட தொல்லை" என அவள் வியக்கவும், "ஹசி பிரச்சனை முடியட்டும். உங்கள அந்த வீட்டுக்கு கூட்டிட்டு போய் காண்பிக்கிறேன். உங்களுக்கே என்ன தொல்லைன்னு புரியும்" எனப் புதிராக பதில் சொன்னானவன்.


"அதை சீக்கிரமே முடிச்சிடலாம்" என்றவள், 'ஆமாம் நேத்து ஏதோ குட்டிச்சாத்தான் அது இதுன்னு சொல்லிட்டிருந்தீங்க, யார் அது" என அவள் ராகம்போட்டுக் கேட்க, இருவருக்குமே சிரிப்பு வந்துவிட்டது.


"பாலான்னு அவளுக்கு ஒரு ஃப்ரெண்டு. தெரியாம செய்யுதா இல்ல வேணும்னு பிளான் பண்ணி செய்யுதான்னே புரியல, அந்த பொண்ணுதான் குட்டையை குழப்பிட்டு திரியுது" என்றவன், வருணை பற்றியும் சொல்லிவிட்டு அன்று அவனுடைய பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்று திரும்பிய தினம் நடந்த குளறுபடிகளையும் அவளுக்கு நினைவு படுத்த, "ஓஹ்... ஓகே... ஓகே... இப்ப புரியுது, அவங்களை பத்தி தெரிஞ்சுக்க வேண்டிய விதத்துல தெரிஞ்சிப்போம்" என்றவள், "கௌசிக் கையை நீட்டற அளவுக்கு அன்னைக்கு உங்க ஹசி என்ன பேசினான்னு உங்களுக்கு ஏதாவது தெரியுமா?" எனக் கேட்க, உட்கார்ந்து பேச நேரமில்லாத காரணத்தால் உண்மையில் அதைப் பற்றி தாமரை அவனிடம் இதுவரை சொல்லவில்லை. "தெரியாதே" என உதடு பிதுக்கினான் அவன்.


"இப்ப மோஸ்ட் ஆஃப் த கேஸஸ்ல 'அவன் ஆம்பளையே இல்ல. அவன் ஒரு இம்போடென்ட்'னு பொண்ணுங்க கூசாம பொய் சொல்றாங்க சத்யா. கௌசிக் சொல்லவே தயங்கறத வெச்சு பார்க்கும்போது அப்படி ஏதாவது ஒரு வார்த்தையைத்தான் உங்க பொண்ணு சொல்லியிருக்கணும்' என சக்தி சொல்ல, 'திக்' என்றானது சத்யாவுக்கு.


"ச்சச்ச... அப்படியெல்லாம் அவ சொல்லியிருக்கமாட்டா" என அவன் உள்ளே போன குரலில் சொல்ல, “ப்ச்... சொல்லாம இருந்திருந்தால் ரொம்ப நல்லது" என்று சொல்லிவிட்டு, “உங்களுக்கு தெரியுமா சத்யா, ரீசன்ட்டா நான் எடுத்துட்ட ஒரு கேஸ்ல ஒரு பொண்ணு இப்படித்தான் சொன்னா. ஆனா அந்த பையன டெஸ்ட் பண்ணா, அவன் அப்சல்யூட்லி நார்மல். அவளுக்கு எங்களால கொஞ்சம் கூட லீகல் சப்போர்ட் கொடுக்க முடியல. அதனால அந்த பொண்ணு உச்சபட்ச மென்டல் டார்ச்சருக்கு ஆளாகி சூசைட் அட்டெம்ப்ட் பண்ணி தென் சைக்யாட்ரிக் ட்ரீட்மெண்ட் எடுக்கறவரைக்கும் போனா. அதுக்கு பிறகுதான் அவனுக்கே தெரியாம அவனை க்ளோசா பாலோ பண்ணோம். அப்பதான் தெரிஞ்சுது அவன் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்ன்னு. அதைத்தான் இப்ப நம்ம சட்டமே அங்கீகரிக்குது இல்ல. ஆனாலும் அதை ஓப்பனா சொல்ல இவனுக்கு பயம். தேவையில்லாம ஓரு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்திருக்கான். இந்த அளவுக்கு இறங்கி இன்வெஸ்டிகேட் பண்ணி பார்க்காம இதெல்லாம் வெளியிலேயே தெரிஞ்சு தொலைக்க மாட்டேங்குது" என வெடித்தவள், "அதனாலதான் இந்த மாதிரி கேஸஸ்ல நாங்க ரொம்ப கேர் புல்லா இருக்க வேண்டியதா இருக்கு" என ஒரு விளக்கமும் கொடுத்தாள் சக்தி.


ஆயாசத்தில் தலையைப் பிடித்துக்கொண்டான் சத்யா.


"ஹா...ஹா... கவலைப்படாதீங்க சத்யா, இவங்க விஷயத்துல அப்படியெல்லாம் இருக்காது" என்றவள் கைப்பேசியை இயக்கிய படி தனியாகப் போய் பேசிவிட்டு வந்தாள்.


"உங்க ஹசிக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்க ஏற்பாடு பண்ணிட்டேன். அவங்கள மட்டும் கூட்டிட்டு நாளைக்கு மார்னிங் ஒரு பத்து மணிக்கு உங்க ஏரியா அனைத்து மகளிர் காவல்நிலையம் வாங்க" என்றவள், பாலாவின் கைப்பேசி எண்ணை தாமரையிடம் கேட்டு வாங்கித்தரச்சொல்லிக் குறித்துக்கொண்டாள்.


இருந்தாலும் ஒரு தயக்கத்துடன் அவன் அவளை ஏறிட, "அட, பயப்படாதீங்க சத்யா, அங்க ட்யூட்டில இருக்கிற எஸ்.ஐ தமிழ்ச்செல்வி என்னோட க்ளாஸ் மெட். இதெல்லாம் எங்களுக்கு சகஜம்தான்" என்று அவனுக்கு தைரியம் சொல்லிவிட்டு அவள் கிளம்ப, "பஸ்லதான போகணும் சக்தி, பரவாயில்லன்னா என் கூட வாங்க, உங்களை உங்க பீஜில ட்ராப் பண்றேன்" என அவன் சொல்லவும், அவள் கிணடலுடன் அவனை குறுகுறுவென பார்க்க, "ப்ச்... பாருங்க நீங்க என்னை பத்தி தப்பா ஏதோ நினைக்கறீங்கன்னு தோணுது. நான் ஒண்ணும் சான்ஸ் எடுத்துட்டு உங்க கிட்ட ப்ளர்ட் பண்ணல. எதிர் கட்சி வக்கீலா இருந்தாலும் எனக்காக இவ்வளவு செய்யற உங்கள அலைய விட கூடாதுங்கற அக்கறைதான் புரிஞ்சிக்கோங்க" என அவன் வெகு சாதுரியமாக விளக்கம் கொடுக்க, "நம்பிட்டேன்" என்றவள் அதற்குமேல் மறுக்கத்தோன்றாமல் ஒரு சிரிப்புடன் அதை ஏற்றுக்கொள்ளவும், அவளை பின்னால் உட்காரவைத்துக்கொண்டு சாலையில் அவன் ஓட்டிச் சென்ற அவனுடைய புல்லட் அன்று பெட்ரோலில் ஓடவில்லை, மதுவுண்ட மயக்கத்தில் மிதக்கவே செய்தது.


****************

0 comments

Bình luận

Đã xếp hạng 0/5 sao.
Chưa có xếp hạng

Thêm điểm xếp hạng
© KPN NOVELS COPY PROTECT
bottom of page