Poove Unn Punnagayil -31
அத்தியாயம்-31
ஊருக்குக் கிளம்புவதற்காகத் தாமரை துணிமணிகளை எடுத்துவைத்துக்கொண்டிருக்க மகளை மடியில் இருத்திக்கொண்டு வாயிற் திண்ணையில் உட்கார்ந்திருந்தான் கருணாகரன். அவனுடைய சட்டைப் பையை குடைந்து ரூபாய் தாள்கள் பேனா என அனைத்தையும் எடுத்து கீழே வீசிக்கொண்டிருந்தது குழந்தை.
தேன்மொழிக்குத் துணையாக வந்த மல்லிகா அவனைக் கண்டு அதிர்ந்து அப்படியே தேங்கி நின்றுவிட, அதிலெல்லாம் கவனமே இன்றி சுயநினைவே இல்லாதவள் போல மின்னலென வீட்டிற்குள் ஓடினாள் தேன்மொழி.
முந்தைய தினம் கருணாகரன் காட்டுக்கோவிலூரில் அவர்கள் வீட்டில் இருக்கும்போதுதான் அங்கே வந்து லோகு மகளின் திருமண பத்திரிகை வைத்து அழைத்துவிட்டுப் போயிருந்தார். அப்படியிருக்க 'இந்த பெண் ஏன் இந்த நேரத்தில் இங்கே வந்திருக்கிறாள்' என்கிற கேள்வியுடன் கருணா மல்லிகாவைப் பார்த்துக்கொண்டே வீட்டிற்குள் போக, முற்றத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தன் இருசக்கர வாகனத்தைப் பழுது பார்த்துக்கொண்டிருந்த சத்யாவின் அருகில் போய் தேன்மொழி நிற்கவும் அருகில் நிழலாடுவதை உணர்ந்து அவளை நிமிர்ந்து பார்த்தான் அவன்.
"சத்யா, வா இப்பவே போய் நாம ஏதாவது கோவில்ல வெச்சு கல்யாணம் செஞ்சுக்கலாம்" என அவள் அழுத்தமாகச் சொல்ல, வெலவெலத்துப்போனான் அவன்.
'இது என்ன புது கூத்து, இந்த பொண்ணுக்கு பைத்தியம் பிடிச்சு போச்சா' என்பதாக கருணா பார்த்திருக்க, பதைபதைத்துப்போய் அங்கே வந்தனர் தாமரையும் கோதையும்.
நடந்துமுடிந்த கலவரங்களில் கோதைக்கு இதெல்லாம் மறந்தே போயிருந்தது. மகளிடம் இதுபற்றி எதுவுமே சொல்லவில்லை அவர்.
அவளை நச்சரித்து அங்கே அழைத்துவந்ததால் ஒரு பீதியுடன் மல்லிகாவும் அங்கே வந்து நிற்க, நல்லவேளையாக வீட்டு மனிதர்கள் தவிர அயலார் யாரும் அங்கே இல்லை.
அதற்குள் தன்னை நிலைப்படுத்திக்கொண்ட சத்யா, "இதோ பாரு தேனு, இதெல்லாம் நம்ம வாழ்க்கைக்கு ஒத்து வாராது. உங்க அம்மாவுக்கு வேற உடம்பு சரி இல்ல. இந்த நேரத்துல நாம யாரையும் துன்பப்படுத்தக்கூடாது. அதனால நீ ஒழுங்கா ஊர் போய் சேரு" என உணர்வற்ற குரலில் சொல்ல,
"அதெல்லாம் முடியாது. அம்மா இப்ப நல்லாத்தான் இருக்காங்க. என்னாலதான் நீ இல்லாம வாழ முடியாது. செத்துருவேன் சத்யா" என அவள் தன் பிடியிலேயே நிற்க,
"லூசு மாதிரி உளராத தேனு, எங்க அப்பான்னா எங்க ரெண்டு பேருக்கும் அவ்வளவு பிடிக்கும். லோடு அடிச்சிட்டு ஊருக்கு வரும்போது காராசேவை பக்கோடா ஸ்வீஎட்டுன்னு ஏதாவது பொட்டலம் வாங்கிட்டு வந்து பாதி ராத்திரியா இருந்தா கூட எங்களை எழுப்பி சாப்பிட வெப்பாரு. இப்ப, போன மாசம் வரைக்கும்" எனப் பெருமையாகச் சொன்னவன், "அவரோட சாராய நெடிதான் எங்களை எழுப்பும். அதனால அந்த நாத்தம் கூட எங்க அப்பாவோட அடையாளமா அவரோட வாசனையாதான் எங்களுக்கு பழகிப்போயிக்கு. சொல்லாம கொள்ளாம திடீர்னு ஒரு நாள் அவரே இல்லாம போயிட்டாரு. அவரோடவேவா எங்க வாழ்க்கை முடிஞ்சு போச்சு. இதோ வாழ்ந்துட்டுதான இருக்கோம். அதனால எந்த உறவும் நிரந்தரமில்லை தேனு. அதை முதல்ல புரிஞ்சிக்கோ. சினிமாவுல வர மாதிரி நீயும் நானும் கட்டிப்பிடிச்சு டூயட் பாடினோமா என்ன, நீ இல்லாம நான் இல்லனு பெனாத்திட்டு திரிய. போ, போய் நல்லபடியா பிழைக்கற வழியை பாரு" என்றான் கடினமான குரலில்.
"ப்ளீஸ் புரிஞ்சிக்கோ சத்யா, என்னால உன்னை மறந்துட்டு வேற வாழக்கை வாழ முடியாது. அட்லீஸ்ட் எங்க அப்பா கிட்ட வந்து மறுபடியும் ஒரு தடவ பேசிப்பாரு. அவரு எனக்காக சம்மதிச்சாலும் சம்மதிப்பாரு" என அவள் கெஞ்சிக்கொண்டே போக,
"இல்ல தேனு, உங்க அப்பா எனக்கு ஒரு சான்ஸ் கொடுத்தாரு. ஆனா என்னாலதான் அதை பயன்படுத்திக்க முடியல. நான் பைனல் இயர் எக்ஸாம் கூட எழுதல. எனக்கு இப்ப சரியான வேலையும் கிடைக்காது. உனக்கு பார்த்திருக்கற மாப்பிளை அளவுக்கு நான் செட்டில் ஆகணும்னு சொன்னா அதுக்கு குறைஞ்சது இன்னும் அஞ்சு ஆறு வருஷமாவது ஆகும். நான் பேச்சு மாற மாட்டேன். ஒழுங்கா போய் உங்க அப்பா பார்த்திருக்கற பையன கட்டிட்டு நீ நல்லபடியா இரு" என அவன் முடிவுடன் சொல்ல,
"என்ன சத்யா இப்படி சொல்ற, உனக்கு இன்டர்வ்யூக்கு கூட வந்துதாமே, மல்லி சொல்லிச்சு, உங்க அப்பாவுக்கு மட்டும் இப்படி ஆகலன்னா எல்லாமே நீ சொன்னபடிதான நடந்திருக்கும்" என அவள் ஆயாசத்துடன் சொல்ல, "அதுதான் நடக்கல இல்ல, இதுதான் நம்ம விதின்னா இதை நாம ஏத்துட்டுதான் ஆகணும். உங்க அப்பா நினைச்சிருந்தா அன்னைக்கு என்னை கழுத்தை பிடிச்சி வெளியில தள்ளி இருக்கலாம். ஆனா அவர் நல்ல மனசு அதை செய்ய விடல. அவருக்கு கொடுத்த வார்த்தையை என்னால மீற முடியாது. உன் வாழ்க்கை நல்லபடியா அமையணும்னு அவர் ஆசை படறதுல எந்த தப்பும் இல்ல. அதுக்கு குறுக்க நிக்க நான் தயாரா இல்ல" எனக் கண்களில் நீர் திரள ஆவேசத்துடன் முடித்தவன், கருணாகரனை நோக்கி, "சாரி அத்தான் ஒரு மாசமா எங்களுக்காக என்னென்னவோ செஞ்சீங்க. லூசுத்தனமா இந்த பொண்ணு இப்படி வீட்டை விட்டு வந்திருக்கு. இவங்க அப்பா வேற ஊர் முழுக்க பத்திரிகை வெச்சிட்டு இருக்காரு. இந்த நேரத்துல இது ஊருக்குள்ள தெரிஞ்சுப்போனா பெரிய பிரச்சனை ஆயிடும். யாருக்கும் தெரியாம நீங்க வந்த கார