Poove Unn Punnagayil - 30
அத்தியாயம்-30
பரபரப்பாகக் காலை சிற்றுண்டியைத் தயார் செய்துகொண்டிருந்தவளுக்கு நேராக, "சத்யா" என்றவாறு தன் அலைப்பேசியைக் கொண்டுவந்து நீட்டினான் கருணாகரன்.
'ஐயோ, என்ன இந்த பையன் பொழுது விடிய கால் பண்ணியிருக்கான். இது காலேஜ் போற நேரம் கூட இல்லையே?' என யாருக்கு என்னவோ என்பதாக மனதிற்குள்ளேயே பதறியபடி, “சொல்லுடா” என்றாள் தாமரை படபடப்புடன்.
"ஹாப்பி பர்த் டே அக்கா" என உற்சாகமாக சத்யாவின் குரல் ஒலிக்கவும் ‘ஷ்... அப்பாடா!’ என்கிற ஆசுவாசத்துடன், "தேங்க்ஸ் டா தங்கம்!" என்றவள், "இதை சொல்லத்தான் இவ்வளவு சீக்கிரம் எஸ்.டி.டீ பூத் தேடி வந்து கால் பண்ணியா?" எனக் கேட்டாள் அவள் பெருமை பொங்க.
"இல்லையா பின்ன, அதுக்குதான் ஆறரை மணி பஸ் பிடிச்சி கிளம்பி வந்தேன்க்கா" என்றவன், "அப்பா ஊருக்கு வர முடியலன்னு சொல்லி மெட்ராஸ்ல இருந்து கொஞ்சம் பணம் மணி ஆர்டர் பண்ணியிருந்தாங்க. கூடவே உன் வீட்டுக்கு வந்தது பத்தி எழுதியிருந்தாங்கக்கா. உனக்கு பர்த்டேன்னு ஞாபகம் வெச்சிருக்காங்க பாரேன்" என அதிசயித்தவன், "இன்னும் ஒரு முக்கியமான விஷயம்க்கா" என இழுக்க, "என்னடா சொல்லு" என அவள் ஊக்குவிக்கவும், "ஒன்னும் இல்லக்கா, ஒரு சீனியர் அண்ணா மூலமா தரமணில ஒரு கம்பெனில வேலைக்கு அப்ளை பண்ணியிருந்தேன். இன்டர்வ்யூக்கு வந்திருக்கு. ரிட்டன் டெஸ்ட்டு, பர்சனல் இன்டர்வ்யூன்னு ரெண்டு மூணு நாள் நான் அங்க தங்க வேண்டி இருக்கும்க்கா. உன் வீட்டுல தங்கி போயிட்டு வரட்டுமா?" என அவன் தயங்கியபடியே கேட்க, என்ன சொல்வதென்றே புரியவில்லை தாமரைக்கு. "இதை நீ அத்தான் கிட்டயே கேட்டிருக்கலாமே" என்றவள், "இரு போன அவர்கிட்ட கொடுக்கறேன், நீயே கேளு" என்று சொல்லிவிட்டு கைப்பேசியைக் கருணாகரனிடம் கொடுக்க, கேள்வியுடன் அதை வாங்கினான் அவன்.
தமக்கையிடம் சொன்ன அதே விஷயத்தை சத்யா அவனிடமும் விவரிக்க, "இதையெல்லாம் என் கிட்ட கேட்கணுமா என்ன? இது உன் அக்கா வீடுப்பா. நீ எப்ப வேணா வரலாம். எப்ப வேணா போகலாம்" என்றான் சில தினங்களுக்கு முன் மாமனாரிடம் அவன் நடந்துகொண்ட விதத்தை முற்றிலும் மறந்துபோனவனாக.
தாமரையின் உதடுகள் இகழ்ச்சியுடன் வளையவும், அதைப் பார்த்ததும் வழக்கமாக வரும் கோபத்திற்கு பதிலாக சிரிப்புதான் வந்தது கருணாகரனுக்கு.
அதற்குள், 'தேங்க்ஸ் அத்தான், இன்டர்வ்யூக்கு இன்னும் நாலு நாள்தான் இருக்கு. வியாழக்கிழமை பர்ஸ்ட் பஸ்ஸ பிடிச்சு வந்துடறேன். மத்ததை நேர்லயே பேசிக்கலாம்" என குதூகலமாக சொல்லியபடி அழைப்பைத் துண்டித்தான் சத்யா.
"அன்னைக்கு சூழ்நிலை உங்க அப்பா கிட்ட அப்படி நடந்துக்க வேண்டியதா போச்சு. இவன் இப்ப முறைப்படி சொல்லிட்டுதான வரப்போறன். உனக்கு என்னை பார்த்தா அவர்கள் பட ரஜினி மாதிரி தோணுதா? வாய் ரொம்ப கோணுது" எனே சிரிப்பினூடே தன் செய்கைக்கு நியாயம் கற்பித்தவன், “ஹாப்பி பர்த்டே” என சமாளிப்பாக சொல்லிவிட்டு, 'மஹாராணி இதெல்லாம் முன்னாலையே சொல்ல மாட்டாங்க. வேலைல நாம மறந்துபோனா மட்டும் நாலு நாளைக்கு மூஞ்சியை தூக்கி வெச்சிட்டு சுத்த வேண்டியது' என தனக்குத்தானே புலம்பியபடி மகள் உறக்கம் கலைந்து குரல் கொடுக்கவும் அவளைத் தூக்குவது போல வேகமாக அங்கிருந்து அகன்றான் கருணாகரன், மனைவி சமையல் செய்யும் நேரங்களில் மகளுடைய பொறுப்பு மொத்தம் அவனுடையதாக இருப்பதால்.
அவனுடைய செய்கையில் ஒரு புன்னகை அரும்பினாலும் எதற்கு முறைப்பான் எதற்கு சிரிப்பான் என்பது புரியாமல் அவனுக்குத் தகுந்தபடி நடந்துகொள்ளவும் முடியாமல் பாடாய் பட்டுக்கொண்டிருக்கிறோமே என ஆயாசமாக இருந்தது அவளுக்கு.
அன்று மாலை சீக்கிரமே வீட்டுக்கு வந்தவன் வாழை இலையில் சுற்றப்பட்ட மல்லிகைச்சரத்துடன் ஒரு ஜோடி கொலுசையும் அவளுக்குப் பிடித்த சிவப்பு நிற கண்ணாடி வளையல்களையும் அவளுக்குப் பரிசளிக்க, அவன் செய்யும் இடக்குகள் அத்தனையும் மறந்துபோய் அந்த நொடியின் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்து போனது தாமரையின் மனதில்.
பரிசு கொடுத்தால்தான் பெண்கள் மனம் மகிழ்ந்துபோவார்கள் என இதற்கு அர்த்தமில்லை. பெண்கள், அதிலும் குறிப்பாக வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டாமல் பொருளாதார சுதந்திரம் இல்லாமல் கணவனை மட்டுமே சார்ந்து வாழும் பெண்கள், அவனுக்குப் பிடித்தபடி சமையல் செய்வது அவனுக்கான பிரத்தியேக வேலைகளைச் செய்வது என அனைத்தையும் கவனித்துக்கொள்கிறாள். இங்கே அவன் அந்த வீட்டின் அரசனாக/எஜமானனாகத் திகழ்கிறான். ஆனால் மனைவி என்னும் பெண்ணுக்கான அங்கீகாரம், அவள் தன்னை ஒரு தலைவியாக உணரும் தருணம், தான் அங்கே ஒரு பணிப்பெண் இல்லை அந்த இல்லத்தின் அரசி எனக் கணவன் தன்னை அங்கீகரிக்கிறான் என்பதற்கான அன்பின் அடையாளமல்லவா இதுபோன்ற வாழ்த்துகளும் பரிசுகளும்.
குடும்ப செலவுகளுக்குப் பணம் சம்பாதித்து வந்து போட்டுவிட்டால் மட்டும் கணவன் அவளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறான் என்று அவளால் உணர்ந்துவிட முடியுமா என்ன? பிறந்தநாள் திருமணநாள் போன்ற ஓரிரு சிறப்பான நாட்களை நினைவில் வைத்திருந்து அவளுக்கு வாழ்த்து சொல்வது, சிறு சிறு அன்பளிப்புகள் கொடுப்பது என்பது அவளைச் சிறப்பிக்கும் ஒரு சிறு செய்கை அல்லவா. இது ஒரு குழந்தைத்தனமான எதிர்பார்ப்புதானே? எனவேதான் இவற்றை அதிகம் எதிர்பார்க்கிறார்கள், இதிலேயே அவர்கள் மனம் குளிர்ந்தும் போகிறார்கள்.