top of page

Poove Unn Punnagayil - 29

அத்தியாயம்-29

பிரசவ சமயத்தில் மட்டும் இல்லை, சடங்கு செய்து குழந்தையைத் தொட்டிலில் இட்டு பெயர் சூட்டும் விழா நடந்து முடியும் வரையிலும் கூட ஒன்று தொட்டு ஒன்று ஒரே இழுபறி நிலைதான் இரு குடும்பத்துக்குள்ளும்.


உரலுக்கு ஒரு பக்கம் இடி. மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி என, தாமரையின் நிலைதான் கேலிக்கூத்தாக இருந்தது.


எதையும் வெளியில் சொல்ல முடியாமல் மயிலம் ஒரு பக்கம் மருகி கொண்டிருக்க அவளுடைய புகுந்த வீட்டினர் செய்யும் அக்கப்போருக்கெல்லாம் இவளைத்தான் பிலுபிலுவென பிடுங்கினார் கோதை.


அவரை சொல்லியும் குற்றமில்லை. பணப் பற்றாக்குறை ஒரு பக்கம், வேலைச் சுமை மறுபக்கம் என அவர் திண்டாடிக்கொண்டிருக்க, கருணாகரன் குடும்பத்தினரால் ஏற்படும் மனச்சுமையை அவர் எங்கே போய் இறக்கிவைப்பார்? தாமரை மட்டுமே வடிகாலாகிப்போனாள்.


கருணாகரன் என்னவென்றால், "ஒரு மாப்பிள்ளைக்கு எப்படி மரியாதை கொடுக்கணும்னு உங்க வீட்டு ஆளுங்களுக்கு தெரியவே தெரியாதா?" என ஒவ்வொன்றுக்கும் முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு பாடாய் படுத்தியெடுத்தான்.


பிள்ளையைத் தொட்டிலில் போடும் நாளன்று அவனும் அவனைச் சார்ந்தவர்களும் வருவார்களோ மாட்டார்களோ என்ற அளவுக்கு மன உளைச்சலை கொடுத்து கடைசி நிமிடத்தில் போனால் போகிறது என்பது போல் அவர்கள் வந்து விட்டுப் போக, யாருக்காக யாரிடம் பேசி எதை புரியவைப்பது என்பது விளங்காமல் 'ஏன்தான் பெண் ஜென்மமாய் பிறந்து தொலைத்தோமோ?!' என தன்னைத்தானே நொந்துகொள்ளத்தான் முடிந்தது தாமரையால்.


மகளைப் பிரிந்து தன்னால் இருக்க முடியாது என்கிற ஒரே காரணத்தால் பிள்ளை பெற்று ஒரு ஐந்து மாதம் கூட அவளை பிறந்தவீட்டில் ஓய்வாக இருக்க விட்டுவைக்கவில்லை கருணாகரன்.


மூன்றாம் மாதமே நாள் பார்த்துக் கொண்டுவந்து விட்டுவிடுமாறு பாபுவை கொண்டு கடிதம் எழுதவைத்தான் அவன்.


மூன்று மாதம் என்பதெல்லாம் வெறும் பெயருக்குத்தான். நாள் கணக்கு என்று பார்க்கும்போது முழுவதுமாக இரண்டு மாதங்கள் கூட நிரம்பியிருக்கவில்லை. சீர் மற்றும் பலகாரங்களுடன் குழந்தையையும் தாமரையையும் அழைத்துவந்து காட்டுக்கோவிலூர் வீட்டில் விட்டுவிட்டுப்போனார்கள் கோதையும் மயிலமும்.


ஹாசினியை பார்த்ததும் அவர்களை மகனுடன் அனுப்பிவைக்க மனம் வரவில்லை மோகனாவுக்கும் பாபுவுக்கும். சில தினங்களாவது குழந்தையுடன் செலவிடவேண்டும் என்று சொல்லி ஒரு மாதம் கழித்து வந்து அவர்களை அழைத்துப்போகச்சொல்லிவிட்டார் மோகனா.


அங்கே என்னடாவென்றால் ரூபா கருவுற்று, வாந்தியும் மசக்கையுமாகக் கட்டிலை விட்டு இறங்காமல் ஓய்விலிருக்க, மோகனாவோ வாராமல் வந்த செல்வமான பேத்தியை விட்டு அங்கே இங்கே நகராமல் உட்கார்ந்துவிட்டார்.


முன்னிருப்பாக வீட்டுவேலைகளை அனைத்தும் தாமரையின் தலையில் விழுந்தது.


மற்ற வேலைகளைச் செய்துகொண்டே இடையிடையே குழந்தை அழும்போதெல்லாம் பசியாற்றுவது, குழந்தையின் ஒன்று இரண்டு எல்லாம் சுத்தம் செய்வது, இரவெல்லாம் உறங்காமல் அழும் குழந்தையுடன் விழித்தே உட்கார்ந்திருப்பது என கொஞ்சம் கூட ஓய்வே இல்லாமல் அப்படி ஒரு எரிச்சல் உண்டாகும் தாமரைக்கு.


அனைத்திற்கும் சிகரம் வைத்தால் போன்று, 'நாம மாசமா இருந்த போது எல்லா வேலையும் நாமதான செஞ்சிட்டு இருந்தோம், கூடவே கல்யாண வேலையும் சேர்ந்து எவ்வளவு அலைச்சல். ஆனா இந்த பொண்ணு மட்டும் உட்கார்ந்த இடத்தை விட்டு அசையவே மாட்டேங்குதே? பச்சை உடம்பு காரி, நாம இவ்வளவு வேலை செய்யறோம், இவங்களுக்கு அந்த உணர்வே இல்லையே? தம்பி மகன்னு சொல்லி இவ்வளவு சலுகையா?' என்கிற எண்ணம் தாக்க, கண்கள் குளமாகும். ஆனாலும் எதையும் வெளியே சொல்லவும் முடியாது.


இரவில் அவளுடன் மோகனா படுத்துக்கொள்வதால், இடையில் கருணாகரன் வந்த பொழுதுகூட அவனிடம் எதையும் சொல்லி சண்டை பிடிக்கக்கூட இயலவில்லை. சொன்னாலும், 'நீதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும் தாமர, என்னால அவங்க கிட்ட இதையெல்லாம் போய் சொல்லிட்டு இருக்க முடியாது' என்கிற பதில்தானே அவனிடமிருந்து வரப்போகிறது?


பல்லைக் கடித்துக்கொண்டு அவள் பொறுத்திருக்க, ஒரு மாதம் முடிந்ததும் முடியாததுமான அவளை தன்னுடன் அழைத்துச்சென்றான் கருணாகரன்.


இடையிடையே சிற்சில சச்சரவுகள் மூண்டாலும், ஹாசினியின் முதல் பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட வழக்கமான சலசலப்பைத் தவிர்த்துப்பார்த்தால் முதல் வார்த்தைகளாக அவள் 'த்தை... தாத்தா' சொன்னது, தொடர்ந்து 'அப்பா' சொன்னது, 'அம்மா' சொன்னது, குழந்தைக்குக் கதை சொல்லி அவர்கள் சோறு ஊட்டியது, 'நிலா நிலா ஓடி வா' 'அம்மா இங்கே வா வா' 'பா பா ப்ளாக் ஷீப்' என மழலையுடன் மழலையாக மாறிப்போய் 'அஆ' சொல்லு 'ஏபீசிடி' சொல்லு எனக் கொஞ்சி குழைந்ததாகக் குதூகலத்துடன் அடுத்து வந்த இரண்டரை வருடங்கள் குழந்தையின் வளர்ச்சி கொடுக்கும் இயல்பான சிறு சிறு சந்தோஷங்களை அள்ளித்தெளித்து கணவன் மனைவிக்குள் ஓரளவுக்குச் சுமுகமானதாகவே சென்றன.


தன் தோள்களையே பல்லக்காக்கி தன் மகள் என்கிற பேரரசியை அதில் அமரவைத்து, அவனுடைய பெரும்பான்மையான நேரத்தை அவளுடனானதாகவே மாற்றி அமைத்துக்கொண்டான் கருணாகரன்.


கருணாகரன் தாமரை இருவரின் வாழ்க்கையின் மையப்புள்ளி ஹாசினி என்றாகிப்போனாள்.


நாட்கள் சலனமற்ற ஒரு நீரோடை போன்று சீரான வேகத்தில் ஓடிக்கொண்டிருக்க, ஒரு நாள் மகளையும் பேத்தியையும் பார்த்துவிட்டுப் போகும் ஆசையில் மருமகனுடைய வீடு தேடி வந்தார் மயிலம்.


தாமரையை தன்னில் பாதியாக மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடிந்த கருணாகரனால் அவளுடைய உறவுகளை தன் உறவாக ஏற்கவே இயலவில்லை, குறிப்பாக மயிலத்தை.


***


அந்த மாலை நேரத்தில் கையில் ஒரு கட்டை பையுடன் உள்ளே நுழைத்த தந்தையைப் பார்த்ததும் ஆச்சரியம் தாளவில்லை தாமரைக்கு.


திருமணமான நாள் தொட்டு எந்த ஒரு விசேஷமும் இல்லாமல் அதுவும் அவர் மட்டும் தனியாக மகளை பார்க்க வருவது இதுதான் முதன்முறை என்பதால் வியப்பும் மகிழ்ச்சியுமாக, "அப்ப்பா, வாங்க... வாங்க... என்ன இது உலக அதிசயம்" என வாயார அவரை வரவேற்றவளிடம், "இங்க இருந்து நாளைக்கு ராத்திரி ஒரு லோடு ஏத்திட்டு ஒரிசா வரைக்கும் போகணும் கண்ணு. ஊருல இருந்து கிளம்பி ஒரு மாசம் ஆகப்போகுது. இந்த ஓனர் என்னடான்னா இங்க மாத்தி அங்கன்னு ஓடவெக்கறாரு" என ஒரு பெரு மூச்சோடு சொன்னவர், "நடுவுல ஒரு நாள் டைம் இருக்கவும் உன்னை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்' என்று சொல்லிக்கொண்டே அருகில் தொங்கிய தூளியை விரித்து அதில் குவளை விழிகளை மூடி மலர்ச்செண்டு போல உறங்கிக்கொண்டிருந்த தன் பேத்தியைக் கண்களை இமைக்காமல் பார்த்தவர் மறுபடியும் மூடி விட்டு, "பாப்பா நல்லா தூங்குது இல்ல. எப்ப முழிச்சிக்கும்" என்றார் அவளை அள்ளிக்கொள்ளும் ஆசையுடன்.


"ஒரு அரைமணி ஆகும்பா, நீங்க போய் கை கால் கழுவிட்டு வாங்க. டீ போடறேன்" என்று சமையலறைக்குள் புகுந்துகொண்டாள் தாமரை.


அவர் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வரவும், தாமரை தேநீர் குவளையை அவருடைய கைகளில் கொடுக்க, அதற்குள் தூளியில் துயில் கொண்டிருந்த அவர்கள் வீட்டு ராஜகுமாரி ஒரு சிணுங்கலுடன் அசையவும், கையில் வைத்திருந்த கோப்பையை ஓரமாக வைத்துவிட்டு, 'ச்சுச்சு' என்றவாறு தூளியை அவர் ஆட்ட, "வேணாம்ப்பா, அவ இனிமேல் தூங்க மாட்டா" என்றவாறு மகளைத் தூக்கியவள், "குட்டிம்மா, யார் வந்திருக்காங்க பாரு... நம்ம மாயி தாத்தா வந்திருக்காங்க' என ரகமாகச் சொல்ல, கண்களைச் சிமிட்டி அந்த பாட்டனைப் பார்த்தவளுக்கு உறக்கமெல்லாம் பறந்துபோக 'மாயி தாத்தா' எனக் கூவிக்கொண்டே அப்படியே அவரிடம் தாவியது குழந்தை.


ஆசைதீர அவளை அள்ளிக்கொண்டவர், குழந்தையின் கன்னத்தில் இதழ் பதிக்க அதைப் பார்த்துக்கொண்டேதான் வீட்டிற்குள் நுழைத்தான் கருணாகரன்.


"எப்ப வந்தீங்க மாமா, எப்படி இருக்கீங்க?" என்ற சம்பிரதாயமாக அவரை நலம் விசாரித்தவனின் பார்வை அவளிடம் திரும்ப, அதில் தெறித்த பேதம் வயிற்றுக்குள் அமிலத்தைக் கரைத்தது தாமரைக்கு.


வழக்கமாக அவர் லோட் ஏற்றிச் செல்லும்போது அணியும் அழுக்கேறிய உடையிலேயேதான் அங்கே வந்திருந்தார் மயிலம். ஊருக்குப் போகாமல் நேராக இங்கே வந்ததனால் மாற்றுடை இல்லாத காரணம் என்பது புரிய வித்தியாசமாக ஏதும் தெரியவில்லை அவளுக்கு. ஆனால் அது அவன் கண்களை உறுதியிருக்கிறது போலும். மேலும் அவரிடம் நிரந்தரமாகத் தங்கிவிட்ட பீடியின் வாடையும் மதுவின் நெடியும் எப்பொழுதுமே அவன் ஏளனத்துடன் சொல்லிக்காட்டும் ஒரு விஷயம். அவற்றுடனேயே அவனுடைய செல்வ மகளை அவர் அணைத்துக் கொஞ்சலாமா என்ன? அது உலக மகா குற்றமல்லவா? அதைத்தான் சொன்னது அவனுடைய பார்வை. மகளுக்காகப் புகைபிடிக்கும் பழக்கத்தையே விட்டொழித்தவனாயிற்றே அவன்.


அதற்குள் இயல்பாகச் செய்வது போல் குழந்தையை நோக்கி அவன் கைகளை நீட்ட, அதுவும் தாவிக்கொண்டு அவனிடம் வந்தது.


மனதிற்குள் சுருக்கென ஒரு வலி எழ முகம் சுண்டிப்போனது தாமரைக்கு. 'இந்த கெட்டப் பழக்கத்தையெல்லாம் விட்டுடுங்கப்பா' என எத்தனையோ முறை சொல்லியிருக்கிறாள், மனிதர் கேட்டால்தானே. அப்படி ஒரு நல்லெண்ணம் இருந்தாலும் அதை கடைப்பிடிக்கும் சூழ்நிலையிலும் அவர் இல்லையே. அவருடைய பிழைப்பு அப்படி.


"வேற நல்ல டிரஸ் கொண்டுவந்திருந்தா மாத்திட்டு வாங்கப்பா" என அவள் சொல்ல, "இல்லம்மா, கேரளால ஒரு லோடு இறக்கிட்டு அப்படியே வந்துட்டோமா, நல்ல துணி எதுவும் எடுத்துட்டு வரல. ஒரு நாள் கூத்துக்காக இப்ப புதுசு வாங்கவும் மனசு வரல" என்ற விளக்கத்துடன், "ப்ச்... பாரு, குட்டிம்மாவை பார்த்ததும் எல்லாமே மறந்து போச்சு" என்றவர், தான் கொண்டுவந்த கட்டை பையிலிருந்து ஒரு சிறு மஞ்சள் பையை எடுத்துக்கொண்டு அதை அப்படியே அவளிடம் நீட்ட, "என்னப்பா இதெல்லாம்" என்றவாறு அதை வாங்கிக்கொண்டாள் தாமரை.


"அடுத்த வாரம் உனக்கு பிறந்தநாள் வருதில்ல செல்லம். அதனால , நீ வேலை செஞ்ச கடைக்குப் போய் ஒரு சேலை வாங்கினேன். மாப்பிளைக்கு பிடிக்கும்னு சொல்லி" என ஒரு பிரபல கடையின் பெயரைச் குறிப்பிட்டவர், "கொஞ்சம் ஸ்வீட் காரம் வாங்கிட்டு வந்தேன். பாப்பாவுக்கும் டிரஸ் வாங்கணும்னு ஆசைதான். ஆனா சைஸ் தெரியல, அதனால அவளுக்கு வாங்கல" என்றவர் தன் சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்து எண்ணி, "ஐநூறு இருக்கு. நீ கடைக்கு போகும்போது குட்டிக்கு ஏதாவது வாங்கிக்கோ" என்று மகளிடம் நீட்ட, கண்களில் கண்ணீரே வந்துவிட்டது அவளுக்கு.


"சரி, பேசிட்டு இருங்க, நான் போய் ரெண்டு பேருக்கும் டிபன் ரெடி பண்றேன்" எனச் சொல்லிவிட்டு அவள் சமையல் அறை நோக்கிப் போக, மகளைத் தன் தோளை விட்டு இறக்காமல் அவளைப் பின்தொடர்ந்து வந்தவன், "இன்னைக்கு நைட் உங்க அப்பா இங்கதான் தங்கப்போறாரா?" என்றான் ஒரு அவசர தொனியில்.


"தெரியல, ஆனா நீங்க தங்க சொன்னா தாங்குவாரு. அவருக்கு மெரினா பீச், அண்ணா சமாதி எம்.ஜி.ஆர் சமாதி எல்லாம் சுத்தி பார்க்கணும்னு ரொம்ப நாளா ஆசை. இன்னும் ஒரு தடவ கூட சந்தர்ப்பம் அமையல. முடிஞ்சா நாளைக்கு காலைல கூட்டிட்டு போய் காமிக்கலாம்னு நினைச்சேன்" என அவள் சொல்லிக்கொண்டே போக, "அதெல்லாம் வேற ஒரு சந்தர்ப்பத்துல பார்த்துக்கலாம். வேணா உங்க அம்மா தம்பி எல்லாரையும் கூட கூட்டிட்டுவந்து சுத்தி காமி. ஆனா இப்ப வேணாம். நாளைக்கு காலைல யாரோ ஃப்ரெண்டுக்கு கல்யாணமாம். ஜனாவும் ரூபாவும் குழந்தையோட வரப்போறாங்க. அவன் இப்பதான் போன் பண்ணி சொன்னான். நைட்டுக்கு ஏதாவது சமச்சுவைன்னு சொல்லத்தான் சீக்கிரம் வந்தேன். இருக்கற ஒரு ரூமையும் அவங்களுக்கு கொடுத்துட்டு நாமளே ஹால்லதான் படுக்கணும். இதுல உங்க அப்பா இங்க இருந்தா அவருக்குத்தான் சங்கடம். நீ எதையும் கமிட் பண்ணாத" என அவன் நிர்தாட்சண்யமாக சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல, இந்த அழுக்கு உடையுடன் அவனது மாமனாரை தம்பிக்கு முன் நிறுத்த அவனுக்கு மனமில்லை என்பது நன்றாகப் புரிய, அப்படி ஒரு அழுகை வந்துவிட்டது தாமரைக்கு.


தொலைக்காட்சியில் எதையோ அவன் ஓடவிட்டிருக்க, அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து மயிலம் அதைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு சாதாரணமான பேச்சுவார்த்தை கூட இல்லை இருவருக்குள்ளும். என்ன பேசிக்கொள்வது என்பது இருவருக்குமே புரியவில்லை என்பதுதான் காரணம்.


மிக மிகக் கூச்ச சுபாவம் கொண்டவர் மயிலம். மருமகன் ஒரு வார்த்தை செல்லாமல் அவர் நிச்சயம் அங்கே தங்கமாட்டார். அப்படிச் சொன்னால் கூட அந்த இரவு அவர் அங்கே தங்குவாரா என்பதும் சந்தேகம்தான். அவர் துடைத்து சுத்தமாகப் பராமரிக்கும் லாரி போதும் அவர் படுத்துறங்க. ஆனாலும் 'இங்கேயே தங்கிட்டு போங்க மாமா' என மருமகன் சொல்லும் வார்த்தை அவரை பெருமைப்படுத்திவிடும்தானே? சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போகமாட்டாரோ மனிதர்? இதையெல்லாம் கேட்டா வாங்க முடியும்?


அவள் செய்து கொடுத்த சிற்றுண்டியைச் சாப்பிட்டுவிட்டு, மகளின் உச்சியை மென்மையாக வருடியபடி, "போய்ட்டு வரேன் தங்கம். வரேன் மாப்பிள்ளை" என்றபடி பேத்தியின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டு, "தாத்தாக்கு டாட்டா சொல்லு பட்டு" என அங்கிருந்து அகன்றார் மனிதர்.


மறந்துபோய் அவருடைய மஞ்சைப்பையை அங்கேயே விட்டுவிட்டு அவர் போயிருக்க, அதிலிருந்த அவருடைய ஒரு செட் உடையே சொல்லாமல் சொன்னது அன்று இரவு அவர் அங்கேயே தங்கும் எண்ணத்துடன்தான் வந்தார் என்பதை. தாங்கவே முடியவில்லை தாமரையால்.


அடுத்த நொடி ஒரு ஆவேசத்துடன் தாமரை தன் மன ஆதங்கம் மொத்தத்தையும் கொட்டிவிட, "சூழ்நிலை சந்தர்ப்பம் புரியாம ஒரு தகவல் கூட சொல்லாம வந்தது உங்க அப்பாவோட தப்பு" என வாக்குவாதம் வளர, "உங்க தம்பி மட்டும் ரெண்டு நாள் முன்னால சொல்லிட்டா பொண்டாட்டி பிள்ளையை கூட்டிட்டு வராரு" என அவள் எகிற, "உன் அம்மா மாதிரியே உனக்கு வாய், திமிர், உங்க வீட்டு ஆளுங்க யாருக்குமே மரியாதைனா என்னன்னே தெரியாது" என வழக்கமான அவனது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து வழக்கமான அவளுடைய அழுகையுடன் ஒரு போர் நடந்து முடிந்தது.


அந்த நிலையிலும் அவனுடைய தம்பி குடும்பத்தை வரவேற்று அவர்களுக்கு வாய்க்கு வக்கணையாக சமைத்துப்போட்டு, துவைத்த படுக்கை விரிப்புகளை மாற்றி அவர்களுடைய அறையை ஜனாவும் ரூபாவும் தங்குவதற்காகக் கொடுத்துவிட்டு வரவேற்பறையில் படுத்து உறங்கினர் கருணாவும் தாமரையும்.


தன் வீட்டில் தன் சொந்த தகப்பனை ஒரு நாள் தங்கிவிட்டு போகுமாறு ஒரு வார்த்தை சொல்லக்கூட ஒரு உரிமையில்லாமல் இப்படி ஒரு வாழ்க்கை தேவைதானா என சலித்துத்தான் போனது தாமரைக்கு.


இந்த மன வருத்தங்கள் அடங்கி மீண்டும் இயல்புநிலைக்கு வர நான்கு நாட்கள் பிடித்தது இருவருக்கும்.


வார்த்தைகள் உண்டாக்கும் காயங்களும் அதனால் நிரந்தரமாகத் தங்கிப்போகும் வடுக்களும் மீண்டும் மீண்டும் ஏன்தான் தோன்றிக்கொண்டே இருக்கிறதோ?


****************

0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page