top of page
Writer's pictureKrishnapriya Narayan

Poove Unn Punnagayil - 28

அத்தியாயம்-28

மருமகளாகக் கருணாகரனுடைய பூர்விக வீட்டில் அடியெடுத்து வைத்ததுதான் தெரியும், அதன்பின் அந்த வீடுதான் அவளுடைய மொத்த உலகமே என்றதாக ஆகிப்போனது தாமரைக்கு.


அந்த வீட்டைத் தாண்டி வெளி உலகத்தை அவள் பார்ப்பதற்குள் எட்டு மாதங்கள் முடிந்துவிட்டது மின்னல் வேகத்தில்.


திருமணம் முடிந்ததும் தொடர்ந்த சடங்குகள், மருவீட்டு முறை, நெருங்கிய உறவினர் வீட்டில் விருந்து என சிந்திக்க நேரமில்லாமல் ஒரு மாதம் ஓடியிருக்க, நேரம் கிட்டும்போது சென்னைக்குப் போய் தொழிலை கவனித்துவந்தவன், நிரந்தரமாக அங்கேயே அவளை அழைத்துச் செல்வதைப் பற்றிய பேச்சையே அதன்பிறகுதான் எடுத்தான் கருணாகரன்.


திருமணம் முடிவாகும்வரை அவனுடைய அலுவலகத்திலேயே தங்கியிருந்தவன், சென்னையில் ஒற்றை படுக்கையறை கொண்ட பிளாட் ஒன்றை வாடகைக்கு எடுத்து, போகும் போதும் வரும்போதும், அவளுக்கு பிறந்த வீட்டில் சீதனமாகக் கொடுத்த வீட்டு உபயோகப் பொருட்களையும் பாத்திரப் பண்டங்களையும் சிறுகச்சிறுக அங்கே கொண்டுபோய் வீட்டைத் தயார்செய்தும் இருந்தான்.


தாமரையின் அருகாமைக்காக அவன் ஏங்கிக்கொண்டிருப்பது ஒரு காரணமென்றால், நீண்ட வருடங்களாக அவன் அவதிப்பட்டுக்கொண்டிருந்த ஹோட்டல் சாப்பாட்டிலிருந்தும் தனிமையிலிருந்தும் ஒரு நிரந்தர விடுதலை கிடைக்குமே என்கிற மிகப்பெரிய ஆசுவாசம்மும் அவனுக்கு.


இதெல்லாம் தெரிந்தே இருந்தாலும் கூட தாமரையை அவனுடன் அனுப்பக் கொஞ்சமும் மனம்வரவில்லை மோகனாவுக்கு.


வீட்டு வேலையுடன் திருமண வேலைகளும் சேர்ந்துகொள்ளக் கருணாகரன் கல்யாணம் முடிவதற்குள் உதவிக்கு ஆளில்லாமல் ஒரு வழி ஆகியிருந்தார் மோகனா.


தாமரை அங்கே வந்தது முதல் அந்த சில நாட்களுக்குள்ளாகவே கச்சிதமாக அவள் வேலை செய்யும் விதத்தில் அவர் கொஞ்சம் சொகுசுக்குப் பழகிப்போயிருக்க, அதை இழக்க மனமில்லை. அதையும் தாண்டி, அவர்களைத் தனிக்குடித்தனம் வைக்கக் கொஞ்சம் கூட விருப்பமே இல்லை அவருக்கு.


சின்னவன் திருமணத்திற்குப் பிறகு இங்கேதான் இருக்கப்போகிறான் என்பது உறுதிப்படத் தெரிந்தாலும் இவர்களைப் பார்த்து அவனுடைய மனமும் மாறிப்போனால் என்ன செய்வது என்கிற பதற்றமும் சேர்ந்துகொள்ள இதைத் தள்ளிப்போடவே முயன்றார் என்றுதான் சொல்லவேண்டும்.


அடுத்து அவனுடைய திருமண வேலைகள் வேறு தயார் நிலையிலிருக்க, அவருக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது எனலாம். அதையே காரணம் காட்டி, "அதான் நீ அப்பப்ப வந்துட்டு போயிட்டு இருக்கல்ல, கொஞ்ச நாளைக்கு அவ இங்கயே இருக்கட்டும். ஜனா கல்யாணம் முடிஞ்சதும் கூட்டிட்டு போ, எனக்கு வேற முட்டி வலி உயிர் போகுது. எப்படியோ இதோடவே உன் கல்யாணத்தை நடத்தி முடிச்சிட்டேன். ஆனா இப்ப முடியல" என அவர் முக்கலும் முனகலுமாகச் சொல்ல, இதற்கும் மறுக்க வழியில்லாமல் போனது கருணாகரனுக்கு.


அவனுடைய வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி அங்கே வந்துபோனாலும் அதுவும் பேச்சுக்கு இடம் கொடுக்கும். மனைவியின் அருகாமையும் உடலின் தேவைகளும் வராமலும் இருக்கவிடாது. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் சென்னையிலும் அவர்கள் ஊரான காட்டுக்கோவிலூரிலுமாக அல்லல் பட்டுக்கொண்டிருந்தான் அவன்.


அப்படியே வந்தான் என்றாலும் கூட அந்த இரண்டு கட்டு வீட்டில், அவன் ஒரு கோடியிலிருந்தான் என்றால் மற்றொரு கோடியில் இருப்பாள் அவள். இன்னும் சொல்லப்போனால் அடுக்களைக்குள்ளாகவே பகல் முழுவதும் கழிந்துவிடும் தாமரைக்கு.


அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்குள் பகல் நேரத்தில் அவளால் எட்டி கூட பார்க்க இயலாது. அந்த கூட்டுக்குடும்பத்திற்குள் அது ஒரு விபரீதமான சங்கடத்திற்குள்ளாகும் செயலும் கூட.


எனவே திருமணத்திற்குப் பின் இயல்பாக நடக்கும் சின்னசின்ன கொஞ்சல்களுக்கெல்லாம் அவர்களுக்குச் சந்தர்ப்பமே அமையாமல் போனது.


வீட்டில் எல்லோரும் உண்டு முடித்ததும் அனைத்தையும் கழுவிக் கவிழ்த்து அவள் அறைக்குள் நுழைந்தாள் என்றால் இருவருக்கும் அங்கே வாய்ப்பேச்சிற்கே இடமிருக்காது. இதழ் முத்தங்களில் தொடங்கித் தீண்டல்களைக் கடந்து கூடலில் முடியும் இரு உடல்களின் நிசப்த உரையாடல் மட்டுமே நிகழும் அந்த இருட்டறைக்குள். உடல்களைத் தாண்டி உள்ளங்களின் சங்கமம் என்பதே இல்லாமல் போனது அவர்களுடைய அந்த தாம்பத்தியத்திற்குள்.


நெருக்கம் என்பது மனதளவிலும் ஏற்படவேண்டும் என்பது தாம்பத்தியத்தை பொறுத்தவரை அத்தியாவசியம் இல்லையா? இந்த ஆரம்பக்கால இடைவெளி சமயத்தில் ஆயுட்காலம் முழுவதும் முயன்றாலும் கூட இட்டு நிரப்ப இயலாமல் போனாலும் போகலாம். பார்க்க முழுமையாகத் தென்பட்டாலும் செல்லரித்த குடை போல ஊசி முனை ஓட்டைகள் மனதிற்குள் இருக்கவே செய்யும்தானே?


தப்பித்தவறி மனத்தைத் திறந்து தன் எதிர்பார்ப்பைச் சொல்ல அவள் எத்தனித்தாலும், "இன்னும் ரெண்டு மூணு மாசம்தான. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ தாமரை. அதுக்குள்ள தனிகுடித்தனத்துக்கு ஏன் அவசரப்படற" என்பதாக ஒரு குத்தலான பதில்தான் வரும் அவனிடமிருந்து.


அவனுடன் தனிமையிலிருக்கும் நேரங்களுக்காக அவள் ஏங்குகிறாள் என்பதைக்கூட அறியாத முட்டாளா அவன்? அதே போல் அவனுடைய பக்கமிருக்கும் இயலாமையையோ அல்லது ஒரு குறையையோ மூடி மறைக்கவே இப்படி ஒரு குத்தல் பேச்சு என்பதைக்கூட உணரமுடியாத அளவுக்கு அவளும்தான் பேதையா?


ஆரம்பத்தில் இதெல்லாம் வித்தியாசமாகத் தெரியாமல் போனாலும், நாட்கள் செல்லச்செல்ல, ஏதோ ஒரு வெற்றிடம் உருவாகிவிட்டது தாமரையின் மனதிற்குள்.


தான் வாழ்ந்த வாழ்க்கைமுறை முற்றிலும் மாறிப்போய், தன் ஊனோடும் உயிரோடும் கலந்த தாய் தந்தை உடன்பிறந்தவன் என அனைவரையும் விட்டுவிட்டு, தனக்குக் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத ஒரு புதிய சூழ்நிலைக்குள் எந்த வித ரத்த சம்பந்தமும் இல்லாத புதிய அன்னிய மனிதர்களுடனான பழக்கவழக்கத்துக்குத் தன்னை பொருத்திக்கொண்டு அவள்தான் அங்கே வாழ வந்திருக்கிறாள் என்பதால் இப்படிப்பட்ட மன பாதிப்புகள் இயற்கையாக அவளுக்குத்தானே ஏற்படும்?


யாராகினும், இதுபோன்ற சூழ்நிலையிலிருந்து பிய்த்துக்கொண்டு ஓடவேண்டும் என்ற எண்ணம் ஒருவருக்கு ஏற்படுவது இயல்புதானே? சமூக கட்டுப்பாடு காரணமாக அதற்கும் வழி இல்லாமல், மன உளைச்சல் அதிகமாகிப்போய் அவள் ஏறுக்கு மாறாக நடக்கப்போக, 'வீட்டிற்கு மருமகள் என்ற ஒருத்தி வந்தால் குடும்பத்தை உடைத்து பிள்ளையைப் பிரித்துக்கொண்டு போய்விடுவாள். புகுந்த வீட்டுச் சொந்தம் என்றால் பெண்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது' என்பதான குற்றச்சாட்டுக்கள் பெண்களின் மீது முத்திரை குத்தப்படுகிறது. நம் சமூகத்தில் பரவலாக நகைச்சுவை என்ற பெயரில் மனைவியின் கொடுமைகளாகச் சித்தரித்து கேலிக்கூத்தாக்குவதும் இந்த உணர்வுகளைத்தானே.


இதில் கருணாகரனுக்கோ அவனுடைய குடும்பத்தினருக்கோ என்ன பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கும்? இதையெல்லாம் சரிசெய்து அவளுக்கான ஒரு இனிமையான சூழலை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டியது அவனுடைய முக்கிய கடமையல்லவா? இதைக் கருணாகரன் என்றில்லை எந்த ஒரு ஆணும் உணருவதில்லை. அவர்களால் உணரவும் முடியாது. ஏனென்றால், கண்டோ கேட்டோ அனுபவித்தோ அவர்களுக்கு இது பற்றிய எந்த ஒரு அனுபவமும் ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லையே! பிரசவ வலி எப்படி இருக்கும் என வெறும் வார்த்தைகளால் சொல்லி ஒரு ஆணுக்கு அதை உணரவைக்க முடியுமா? அதுபோலத்தான் இதுவும்.


ஆனால் இது ஒரு பெரும் பிரச்சனையாக மாறிப்போய் அடுத்த கட்டத்தை எட்டுவதற்குள் அந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்து, தாமரை கருணாகரன் இருவருக்கும் பாலமாக, எதிர்பாலின ஈர்ப்பு என்னும் கட்டத்தைக்கூட தாண்டாமல் இருவருக்குள்ளும் ஒரு அன்போ அல்லது காதலோ எதுவாகினும் ஒரு மென் உணர்வும் மலராமல் அவர்களுடைய உடல்களில் உரையாடலின் பயனாக மட்டுமே அவளுடைய கருவில் உருவானானள் ஹாசினி.


ரத்தமும் சதையுமாகக் கண் முன் நடமாடிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் மென் உணர்வுகளை உள்வாங்க முடியாமல் போனாலும், கண்ணுக்கே தெரியாமல் இன்னும் உடல் உறுப்புகள் கூட வளர்ச்சி அடையாமல், கைகளால் தீண்டிப்பார்த்துக் கூட உணரமுடியாத வடிவில் ஆணோ பெண்ணோ என்று கூட தெரிந்துகொள்ள முடியாத நிலையில் அவனுடைய மனைவியின் கருவில் உருக்கொண்டிருக்கும் சிசு அவனை மொத்தமாக அப்படியே தனக்குள் சுருட்டி சிறைப்படுத்திக்கொண்டது, அதன்பின்னான அவனது வாழ்க்கையின் குறிக்கோள் மொத்தமும் அதுவாக... அவனாக... அவளாக... மாறிப்போனது என்றால் இதுவும் இயற்கையின் ஒரு நியதிதான் போலும்.


***


குடும்பத்தின் மூத்த பேரக்குழந்தை – மகன் வழி வாரிசு என இரண்டு பக்க தாத்தா-பாட்டிகளுக்குமே அளவிட முடியாத சந்தோஷம்தான்.


நான்கு முனையிலும் மஞ்சள் தடவி, தாமரையின் அப்பாவுக்குக் கடிதம் மூலம் தகவல் அனுப்பினார் பாபு. அதைப் பிரித்துப் படித்ததும் கோதைக்கும் சத்யாவுக்கும் இருப்பே கொள்ளவில்லை. லோட் இறக்கிவிட்டு மயிலம் ஊருக்கு வந்ததும் வராததுமாக பலகாரங்கள் செய்து எடுத்துக்கொண்டு மூவருமாக வந்து மகளைப் பார்த்துவிட்டுச் சென்றனர். கூடவே அவளை அழைத்துச்செல்லும் ஆசை பெற்றவர்களுக்கு இருக்க அடுத்த மாதம் ஜனா-ரூபா திருணம் இருக்கவும் அதைக் காரணம் காட்டி அனுப்ப மறுத்துவிட்டார் மோகனா.


மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், 'இதெல்லாம் என்ன உலக அதிசயமா? நானெல்லாம் மூன்று பிள்ளைகளைப் பெற்று வளர்க்கவில்லையா? என் மகளுக்குமே இரண்டு பிரசவங்கள் பார்த்திருக்கிறேன் நான்!' என்பதான ஒரு அலட்சியம்தான் இருந்தது மோகனாவிடம்.


மெய்யோ பொய்யோ என்பதாக வெறும் நாட்கள் தள்ளிப்போனதை வைத்தே தாமரை கருவுற்றிருக்கிறாள் என்று அவர்கள் சொல்லிக்கொண்டிருக்க, முறையாக அதைத் தெரிந்துகொள்ளும் ஆவலில் அவளை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துப்போகவேண்டும் என கருணா சொன்னதுக்குக் கூட, "இது என்ன புது வழக்கம். உங்க மூணு போரையும் முழுகாம இருக்கும்போது நான் எந்த டாக்டர பார்த்தேன்? அந்த காலத்துல வீட்டில வெச்சுதான் எனக்கு பிரசவமே பார்த்தாங்க. நம்ம நிம்மியை கூட வலி எடுத்த பிறகுதான ஆஸ்பத்திரிக்கே கூட்டிட்டு போனோம்? இப்பதான மூணு மாசம் ஆகுது. முதல்ல தம்பி கல்யாணம் முடியட்டும். அப்பறம் பார்த்துக்கலாம்” என்று வெகு சாதாரணமாகச் சொல்லிவிட்டார் அவர்.


திருமணத்தை நெருக்கத்தில் வைத்துக் கொண்டு எந்த ஒரு வாக்குவாதத்திலும் ஈடுபட வேண்டாமென அப்போதைக்கு அதை ஏற்றுக் கொண்டாலும் அப்படி அலட்சியமாக இருக்க முடியவில்லை கருணாகரனால்.


மனைவியை பிரிந்து என்னால் இருக்க இயலாது என்று சொல்லத்தான் அவனுக்குக் கவுரவ குறைச்சலாக இருந்ததே தவிர, பிள்ளைக்காக அவளை அழைத்துச் செல்வதில் எந்த தடையும் இல்லை என்பதால் திருமணம் முடிந்த கையோடு மனைவியை தன்னுடன் சென்னைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனத் தீர்மானமான ஒரு முடிவுக்கு வந்துவிட்டான் கருணா.


தானே அவளை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும், ஸ்கேனிங்கில் குழந்தையை பார்க்க வேண்டும் இதுபோன்ற ஆசை எல்லாம் துளிர்த்திருந்தது அவனுக்கு.


விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து அப்படி ஒரு சந்தோஷம், அப்படி ஒரு படபடப்பு அவனுக்கு. இன்னுமொரு ஏழெட்டு மாதங்கள் எப்படித்தான் பொறுக்கப் போகிறோமோ என்று இருந்தது. அந்த குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியையும் உடனிருந்து அனுபவிக்க வேண்டும் என்ற துடிப்பும் அதிகமாக இருந்தது.


தாமரை கொஞ்சம் வேகமாக நடந்தால் கூட அப்படியே உடல் பதறும் கருணாகரனுக்கு. ஒன்றும் சொல்லாமல் அதை வேடிக்கை பார்க்க முடியாமல் தவியாய் தவித்துக் கொண்டிருந்தான். பிறகு எப்படி அவளை அங்கே விட்டு வைப்பான்?


அதற்கேற்றாற்போல ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து வீடுவீடாக வந்து கணக்கெடுப்பு நடத்திக்கொண்டிருந்த செவிலியர் தாமரை பற்றிய தகவல் அறிந்து 'எப்படி இவ்வளவு அஜாக்கிரதையாக இருக்கலாம்' என மோகனாவை காய்ச்சு காய்ச்சென்று காய்ச்சிவிட, அவருக்கும் ஒரு சிறு உதறல் ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாக ஜனாவின் கல்யாணம் முடிந்த கையுடன் கருணாகரனுடன் சென்னை வந்துசேர்ந்தாள் தாமரை.


என்னதான் மருத்துவ பரிசோதனைக்கு முட்டுக்கட்டை போட்டாலும் மருமகள் மருத்துவரிடம் செல்லும் போது தானும் உடன் செல்லவேண்டும் என்ற ஆவலும் இருக்கத்தான் செய்தது மோகனாவுக்கு.


ஆனால் இளையவன் திருமணம் முடிந்து மற்ற சடங்குகள் வரிசை கட்டி நிற்க, தாமரை குடும்பத்தினரிடம் நடந்துகொண்டதுபோல் விட்டேற்றியாக தன் பிறந்த வீட்டுச் சொந்தங்களிடம் நடக்க முடியாத காரணத்தினால் கைகால்களைக் கட்டிப்போட்ட நிலை அவருக்கு.


இன்னும் ஒரு மாதம் பொறுத்து தாமரையை அழைத்துச் செல்லுமாறு அவர் மகனிடம் கோரிக்கை வைக்க, கொஞ்சம் கூட செவிசாய்க்கவில்லை அவன். அதனால் அவருக்கு உண்டான கோபம் கூட தாமரையை நோக்கித்தான் திரும்பியது, 'நான் இபபோழுது உன்னுடன் வரமாட்டேன்' என அவள் கணவனிடம் சொல்லியிருக்கவேண்டும் என்கிற விதத்தில்.


அது குறித்து அவர் சாடைமாடையாக சொன்ன எதுவும் தாமரைக்குக் கொஞ்சம் கூட புரியவேயில்லை.


எது எப்படியோ கருணாகரனுடன் கிளம்பிவந்ததும்தான் நீண்ட நாட்களுக்குப் பிறகு சுதந்திர காற்றை சுவாசித்தாள் அவள்.


பிறந்தவீட்டில் இருந்தவரை பதார்த்தங்கள் வாங்க வார சந்தைக்குச் சென்றுவர, வீட்டு மளிகை பொருட்கள் வாங்கிப்போட, தம்பியின் பள்ளி விவகாரங்களுக்கு என அனைத்திற்கும் அவள்தான் சென்றுவருவாள்.


வேலைக்குப் போக ஆரம்பித்தபிறகு அவளுடைய வானம் இன்னும் விரிந்தது. சென்னை சென்றுவரக்கூட அவள் யாருடைய துணையையும் எதிர்பார்த்ததில்லை.


அங்கே நகை சீட்டுக் கட்டுவது, பண்டிகைகளுக்கு அனைவருக்கும் ஜவுளிகள் வாங்குவது, உறவினர் வீட்டு விசேஷங்களுக்குப் பரிசுப்பொருட்களைத் தேர்ந்தெடுத்து வாங்குவது என்பதைக் கூட அவள்தான் பார்த்துக்கொண்டாள். சீட்டு முடிந்து நகை வாங்கும்போது மட்டும் கோதையை அழைத்துச்செல்வாள்.


நேரம் கிடைக்கும்போதெல்லாம் கன்னிமாரா நூலகம் போய் புத்தகங்கள் கொண்டுவந்து வாசிப்பாள். சமயத்தில் கடையில் உடன் வேலை செய்யும் தோழிமாருடன் போய் புதிதாக வந்திருக்கும் திரைப்படங்கள் பார்ப்பதும் உண்டு.


உள்ளது உள்ளபடி சொல்லவேண்டும் என்றால் அந்த வீட்டின் அரசியாகத்தான் இருந்தாள் தாமரை. அவளுடைய அப்பா வைத்திருந்த பழைய டீ.வீ.எஸ் ஃபிஃப்டிதான் அவளுடைய தங்கரதம் எனலாம்.


இப்படியாக இருந்த வாழ்க்கை நாலே சுவற்றுக்குள் சுருங்கிப்போயிருக்க, பைத்தியம் பிடிக்காதது ஒன்றுதான் பாக்கி.


அவனுடன் தனிக்குடித்தனம் என்று ஆன பிறகு வாழ்க்கை கொஞ்சம் உற்சாகமாகவே இருந்தது.


செய்வதைத் திருந்தச் செய்யும் குணம் கொண்டவன் என்பதால், அவள் வந்து செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பதாக வீட்டை அருமையாகத் தயார் செய்துவைத்திருந்தான் கருணாகரன்.


அங்கே வந்ததும் முதல் காரியமாக அவன் குடி இருக்கும் சைதாப்பேட்டையிலேயே பிரபலமாக இருக்கும் பெண் மருத்துவர் ஒருவரிடம் பரிசோதனைக்காக அவளை அழைத்துச்சென்றான் அவன். அவருடைய பரிந்துரைப் படி ஸ்கேனிங் செய்து குழந்தையைப் பார்த்துப் பூரித்துப்போனான்.


ஒருவிதத்தில் இதெல்லாம், 'ஊரிலிருந்த சமயங்களில் அப்படிக் கண்டும் காணாமலும் நடந்துகொண்டவனா இவன்?!' என்பதாக தாமரைக்கே கூட கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது.


திருமணமான நண்பர்கள் பலர் அவனுக்கு இருக்கவும் இந்த விஷயத்தில் அவர்களுடைய வழிகாட்டுதல் அவனுக்கு உதவியாக இருந்தது.


மசக்கை வாந்தி போன்ற பிரச்சனைகள் இல்லாமல் போகவே வீட்டு வேலைகள் செய்வதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை தாமரைக்கு. இருவருக்கு மட்டுமே என்பதால், ஊரில் அவள் செய்த வேலைகளில் பத்தில் ஒரு மடங்கு கூட இல்லை இங்கே.


இருவருக்கும் பிடித்த விதத்தில் சமையல் செய்வது, அவளுடைய அப்பா வாங்கிக்கொடுத்த பைக்கில் அவனுடன் சோர்ந்துபோய் தேவையான பொருட்களைத் தேர்ந்தெடுத்து வாங்கிவருவது. அவனுடைய நண்பர்கள் வீடுகளுக்கு விருந்துக்குச் சென்றுவருவது, நாள் கிழமைகளில் இடையிடையே ஊருக்கும் சென்று வருவது, அவ்வப்பொழுது ஹோட்டல் சினிமா என நாட்கள் வசந்தமாகச் சென்றன.


இயல்பாக முட்டிக்கொள்ளும் சிறு சிறு உராய்வுகள் இருந்தாலும் ஊடலும் கூடலுமாக இணைத்தே இருக்க உடலின் தேடல்களையும் கடந்து அவர்களையும் அறியாமல் ஒரு அன்பும் நெருக்கமும் உரிமை உணர்வும் தானாக உருவாகிவிட்டிருந்தது.


ஆனாலும் கூட, தாமரையின் உறவினர் சம்பந்தப்பட்ட எந்த ஒரு நல்லது கெட்டதுக்குச் செல்லவேண்டும் என்றாலும் அது பல சங்கடங்களையும் சச்சரவுகளையும் கடந்து மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு நிம்மதியே இல்லாமல் ஒரு மனக்குறையுடன் சென்று வருவதாகத்தான் அமையும். அது, செல்வதற்கு முன்பும் சென்று வந்த பின்பும் அப்படி ஒரு மன உளைச்சலை ஏற்படுத்தும். இருவரும் ஒரு இயல்பு நிலைக்குத் திரும்பவே சில நாட்கள் பிடிக்கும்.


அதேபோல்தான் அவளுடைய வளைகாப்பு நிகழ்ச்சியும் கூட சண்டையும் சச்சரவுமாக அவளுடைய கண்ணீருடன்தான் நடந்து முடிந்தது. காரணம் அந்த நேரத்தில் ரூபாவும் கருவுற்றிருக்க, இருவருக்குமான ஒப்பீடுகள் இருக்கவும், ஆதங்கத்தில் தாமரை கருணாகரனிடம் சூடாக வார்த்தைகளை விட, அவன்தான் உலகமாக நியாயவான் ஆயிற்றே! யார் என்ன தவறு இழைத்திருந்தாலும் அவனுடைய நியாயத் தராசு மனைவியின் பக்கம் தாழுமா என்ன? ஒன்று தொட்டு ஒன்று பிரச்சனை பெரிதாகிப்போனது.


உலக நியதிப்படி பெண்ணை பெற்றவர்கள் தழைந்து போக, பெரிய மனது செய்து நடந்ததை மறந்து அவளை பிரசவத்திற்குப் பிறந்த வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.


சரியான மருத்துவ வசதி இல்லாத அந்த பட்டிக்காட்டிற்கு மனைவியை அனுப்ப கருணாகரனுக்கு மனமே வரவில்லை என்றாலும் ஊர் வாய்க்கு முக்கியமாக குடும்பத்தினரின் வாய்க்கு பயந்து அவளைப் போக அனுமதித்தான்.


பிரசவ நேரத்தில் எங்கும் போகாமல் மயிலம் ஊரிலேயே இருக்க, அவளுக்கு வலி எடுத்ததும் டாக்சிக்கு ஏற்பாடு செய்து திண்டிவனத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து, தங்கள் நிலைக்கு மீறி பணத்தைத் தண்ணீராக செலவு செய்து, குறை சொல்ல இடமில்லாமல் அவளுடைய பிரசவத்தைப் பார்த்தனர் அவளைப் பெற்றவர்கள்..


அப்படி ஒரு சந்தர்ப்பம் பார்த்து கருணாகரன் கைப்பேசி வாங்கியிருந்தால், அவனிடம் மட்டுமே போன் என்ற ஒன்று இருந்ததால், அவர்கள் டவுனில் இருந்த காரணத்தினால் போன் வசதியும் இருக்கப்போக, சத்யா கருணாகரனிடம் நேரடியாக அவனுக்கு மகள் பிறந்திருக்கும் செய்தியைச் சொல்லிவிட, அதுவும் பேச்சுக்கு இடமாகிப்போனது.


அந்த நேரம் பார்த்து கருணா ஊரில் இருக்கவும், அவன் எதார்த்தமாகத் தகவலை வீட்டில் சொல்லப்போக, மகிழ்ச்சிக்கு பதிலாக அங்கே பிரச்சனைதான் வெடித்தது.


"அவங்களுக்கு மருமகன் மட்டும் போதும். பெண்ணை கொண்டு உன்னை வளைச்சு போட்டுக்கலாம்னு எண்ணமோ? முறையா இந்த தகவலை அந்த வீட்டு பெரியவங்க நம்ம அப்பாக்கிட்டதான சொல்லியிருக்கணும். அப்பறம் எங்களுக்கு என்ன மரியாதை?" என மோகனா ஆட்டமாக ஆட, பாபுவும் அதற்கு ஒத்து ஊதவும் உண்மையிலேயே சீச்சீ என்றுதான் ஆனது கருணாவுக்கு.


விகற்பம் இல்லாமல் சத்யா உண்மையான மகிழ்ச்சியுடன் அந்த செய்தியைச் சொல்லியிருக்க, அதுவும் பிறந்திருப்பது மகள் என்றதும் அப்படியே பூரித்துத்தான் போனான் அவன்.


"உங்க தம்பி வீட்டுல எல்லாமே முறையாத்தான் செய்யறாங்களா? என் விஷயத்துல ஏன் எப்பவுமே நீங்க இப்பட ஓர வஞ்சனையாவே நடந்துக்கறீங்க" என சூடாகவே கேட்டுவிட்டான்.


வழக்கம் போல அது சலசலப்பை ஏற்படுத்தியிருக்க, ஒருவாறு இருவரையும் சமாளித்து மருத்துவமனைக்கு அழைத்துவந்தான் அவன். ஆனாலும் கூட யார் வாயையும் அடைக்க இயலவில்லை அவனால்.


குழந்தையை கூட பார்க்கவில்லை அவர்கள், அங்கே தாமரை அனுமதிக்கப்பட்டிருந்த தனிப்பட்ட அறைக்குள் நுழைந்ததும் நுழையாததுமாக தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டும் வேகத்துடன் மகனிடம் சொன்ன அதே வார்த்தைகளை பொதுப்படையாக மோகனா சொல்ல, பாபுவும் சேர்ந்துகொண்டார்.


"ஐயோ அப்படி இல்லைங்க சம்மந்தி, எனக்கு பீ.சி.ஓ போய் போன் போடவெல்லாம் வராதுங்க. அதனாலதான் தம்பிய விட்டுச் சொல்லச் சொன்னேன்" என பரிதாபமாக விளக்கம் கொடுத்தார் மயிலம். கோதைக்கோ அப்படி ஒரு ஆத்திரம் வந்துவிட்டது. ஆனாலும் அதைக்கூட வெளிக்காண்பிக்க முடியாத இயலாமையுடன் முகம் சிவக்க நின்றார் அவர்.


வார்த்தைகளைக் கொட்டியது அவனுடைய அம்மாவும் அப்பாவும் என்பதனால் அவர்களை மற்றவர் முன் விட்டுக்கொடுக்க இயலவில்லை கருணாகரனால். உண்மையில், கலங்கிப்போய் நின்ற மயிலத்தையும் கோதையையும் குறிப்பாக சத்யாவைத் தலை நிமிர்ந்து பார்க்கக்கூட அசூயையாக இருந்தது அவனுக்கு.


இவனுக்கே இப்படி இருந்ததென்றால் தன் உடலின் மொத்த சக்தியையும் செலவு செய்து உத்திரம் சிந்தி, உயிர் போய் உயிர் வர ஒரு மகவைப் பெற்றெடுத்துத் துவண்டுபோய் கிடக்கும் பெண்ணுக்கு எப்படி இருக்கும்? இதற்குப் பிறகு அவளுடைய மனதில் இந்த மனிதர்களுக்கு எந்த மாதிரியான இடம்தான் கிடைக்கும்?


வாழ்நாள் முழுவதும் ரசித்து ரசித்து மகிழ்ச்சியுடன் நினைத்துப்பார்க்கவேண்டிய தருணங்கள் எல்லாம் இப்படித்தான் கசந்த நினைவுகளையும் கூடவே இழுத்துவந்துவிடுகின்றன மனிதர்களின் பக்குவமற்ற அணுகுமுறை காரணமாக, போலியான வறட்டு ஜம்பம் காரணமாக, 'தான்' என்கிற அர்த்தமற்ற அகங்காரம் காரணமாக.


தாமரையின் விழிகளிலிருந்து கண்ணீர் பெறுக, அவளுடைய உடல் குலுங்கவும் பதறிப்போன மயிலம்தான் , "தெரியாம செஞ்சிட்டோம். மன்னிச்சிருங்க சம்மந்தி. போய் உங்க பேத்தியை பாருங்க" என தவறேதும் செய்யாவிட்டாலும் கூட தழைந்துபோய் மன்னிப்பு கேட்டு வைக்க, இந்த ஆர்ப்பாட்டங்களெல்லாம் அடங்கியபிறகுதான் அருகில் சென்று குழந்தையையே பார்த்தனர் மூவரும்.


இந்த உலகத்தையே தன் வசப்படுத்திவிட்டது போன்ற ஒரு பூரிப்புடன், ரோஜாப்பூ குவியலாக இருந்த மகளை கைகளில் ஏந்தியவன், தன்னை மறந்த நிலையில் அந்த சிசுவின் உச்சியில் இதழ் பதிக்க எத்தனிக்க அவனையும் மீறி கருணாகரனின் பார்வை மயிலத்திடம் சென்றது.


ஒரு சமயம் ஆசையுடன் அவன் தாமரையை நெருங்கும்போது சட்டென அவள் முகம் சுளிக்கவும் எரிச்சலாகிப்போனது அவனுக்கு.'என்ன?' என்பதாக அவன் ஜாடை செய்ய, "சிகரட் ஸ்மெல் குமட்டுது" என அவள் முணுமுணுக்க, அதற்கு நக்கலாக சிரித்தவன், "நானாவது பரவாயில்ல பில்டர் சிகரெட்தான் பிடிக்கறேன். உங்க அப்பா பீடி இல்ல இழுக்கறாரு. அதோட லோக்கல் சரக்கு வேற. அப்படியேதான உன்னையும் உன் தம்பியையும் கொஞ்சியிருப்பாரு. என்னவோ இதெல்லாம் பழக்கமே இல்லாத மாதிரி பெருசா என் கிட்ட மட்டும் ஸீன் போடற?" எனக் கேட்டுவிட்டு முகத்திலடித்தாற்போல அவளை விட்டு விலகியும் போனான் அவன்.


அந்த நிகழ்வு நினைவில் வரவும், தன் மூச்சுக்காற்று தீண்டாவண்ணம் குழந்தையை தள்ளிப்பிடித்தவன், இந்த நிமிடத்துடன் புகை பிடிக்கும் பழக்கத்தை அறவே நிறுத்துவது என்ற தீர்மானமான ஒரு முடிவுக்கு வந்தவனாக, அன்றே தன் மகளுக்கு அடிமையாக மாறிப்போனான் 'என்றென்றும் அவள் சிரிப்புக்கு மட்டுமே சொந்தக்காரியாக இருக்கவேண்டும்' என்கிற வேட்கையில் 'ஹாசினி' என அங்கேயே அப்பொழுதே அவளுக்கு பெயரிட்ட அவளுடைய தகப்பன்.


அதன்பின்தான் மனைவி என்ற ஒருத்தி அவனுடைய கண்களுக்கே தெரிந்தாள் எனலாம்.


வாடி வதங்கிக் கிடந்தவளைப் பார்த்ததும் இப்படி ஒரு மகளை தனக்குப் பெற்றுக் கொடுத்ததற்காகவே இந்த உலகத்தையே வேண்டுமானாலும் கொண்டுவந்து அவளுடைய காலடியில் வைக்கலாம் என்றுதான் தோன்றியது அவனுக்கு. அதை வார்த்தைகளால் வடிக்கும் கலையை அவன் அறியாமல் போனதுதான் இருவரின் துரதிருஷ்டமுமே.


வெகு சுலபமாகக் குற்றம் சாட்டி குத்தலான அமில வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து வகை வகையாகச் சண்டையெல்லாம் போடத்தெரிந்த இந்த ஆண்களுக்கு சமயத்தில் மனது முழுவதும் ததும்பி வழியும் அன்பை நன்றியை ஆறுதலான வார்த்தைகளை மனையிடம் சொல்ல மட்டும் நாவே எழாது. காரணம் அதுவும் கூட அவர்களுடைய கவுரவத்தைக் குறைக்கும் செயல் என வழிவழியாக இந்த சமுதாயத்தால் நம்பவைக்கப்பட்டிருக்கிறதே!


****************

0 comments

コメント

5つ星のうち0と評価されています。
まだ評価がありません

評価を追加
© KPN NOVELS COPY PROTECT
bottom of page