top of page

Poove Unn Punnagayil - 27

அத்தியாயம்-27

தாமரையை நேரில் சந்தித்து பேசிவிட்டு வந்திருப்பதைப் பற்றிச் சொல்லாமல் அப்பாவிடம் இந்தப் பேச்சை எப்படித் தொடங்குவது என்கிற யோசனையுடனேயே குளித்துவிட்டுச் சாப்பிட உட்கார்ந்தவனை வகையாக பிடித்துக்கொண்டார் பாபு.


"நம்ம நிம்மி வீட்டுக்கார் வழி சொந்தத்துல கொஞ்சம் பெரிய இடமாவே வந்திருக்கு. நிறைய நகை நட்டு சீர் செனத்தியோட கூட உன் பிஸினஸுக்கும் பணம் கொடுக்கிறதா சொல்றாங்க" என அவனுக்கு நேராக நீட்டப்பட்ட ஒரு பெண்ணின் புகைப்படத்தை பார்த்து ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது அவனுக்கு.


ஏற்கனவே கொஞ்சம் பணநெருக்கடியிலிருந்தவன் தாமரையை இவர்கள் வேண்டாம் என்று சொன்னதிலும் முக்கியமாக அதில் இவன் பெயரை இழுத்துவிட்டிருந்ததிலும் ஏகப்பட்ட கடுப்பிலிருந்தான்.


"ஏன், முந்திரிதோப்புல போய் பார்த்துட்டு வந்தோமே அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு?" என இழுத்துப்பிடித்த நிதானத்துடன் அவன் கேட்க, "ப்ச்... அது நம்ம குடும்பத்துக்கு ஒத்துவராத சம்பந்தம். பொண்ணோட அப்பன்காரன் ஏதோ கொஞ்சமாவது சொல்லிக்கிற மாதிரி இருந்தாலும் பரவாயில்ல. அவன் சரியான குடிகாரனாம் இல்ல?" என அவர் எகத்தாளமாக கேட்க, "நான் அந்த பொண்ணைத்தான கட்டிக்க போறேன். அவ அப்பனை இல்லல்ல? எனக்கு அவளைத்தான் பிடிச்சிருக்கு. அதை நான் ஓப்பனா சொன்ன பிறகும் நீங்க இப்படி மாத்தி பேசறது சரியில்லை?" என அவன் தீர்மானமாக சொல்ல, வார்த்தைகள் தடித்தது.


அவர் மட்டும் கொஞ்சம் அவனை புரிந்து கொண்டு தொழில் செய்ய பண உதவி செய்திருந்தார் என்றால், அவனுடைய வளர்ச்சி இன்னும் கொஞ்சம் சீக்கிரம் ஏற்பட்டிருக்கும். பணத்திற்காக இப்படி நாயாய் பேயாய் அலையவேண்டியதாக இருந்திருக்காதே.


இவனுடைய தாய்மாமன் தன் மகளை இவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னதற்கு கூட நியாயத்திற்கு அவர் மேல் வந்திருக்கவேண்டிய கோபம் இவன் மீதல்லவா வந்து தொலைத்தது இவனைப் பெற்றவர்களுக்கு. இவன் சரியில்லை என இவர்களே நம்புவதுதானே அதற்கு காரணம்.


அதோடாவது நிறுத்திக்கொண்டர்களா? அந்த பெண்ணை இவனுடைய தம்பிக்கே அல்லவா பேசி முடித்திருக்கிறார்கள். அதை கொண்டே இவனுடைய கல்யாணமும் இவன்மீது திணிக்கப்படுகிறதே!


வாய்ப்பே கொடுக்காமல், எல்லா விஷயத்திலும் அவர்கள் போக்கிலேயே அவனை இழுக்க முயலவும் அவனுடைய பொறுமை மொத்தமாக பறந்துவிட்டிருந்தது.


இனி தாமரைதான் அவனுடைய வாழ்க்கைத்துணை என்பது அழுத்தமாக அவன் மனதில் பதிந்துபோயிருக்க, அதை வார்தைகளாக்கி அவளுக்கு நம்பிக்கை கொடுத்திவிட்டுவேறு அவன் வந்திருக்க, அவனுடைய விருப்பத்திற்கு மாறாக யாரோ ஒருத்தியை காண்பித்தால் அப்படியே ஏற்றுக்கொண்டுவிடுவானா அவன்?


திருணம் என ஒன்று நடந்தால் அது தாமரையுடன்தான்! இல்லையென்றால் காலம் முழுமைக்கும் தனியாகவே இருந்துவிடுவதாகவும், அவர்கள் விருப்பப்படி ஜனார்தனனுடைய திருமணத்தை நடத்திக்கொள்ளுமாறும் கருணா தீர்மானமாக சொல்லிவிட என்ன செய்வதென்றே புரியவில்லை பாபுவுக்கும் மோகனாவுக்கும்.


மயிலத்தை தன் சம்பந்தி என்று சொல்லிக்கொள்ள பாபுவுக்கு அவ்வளவு அசூயை என்றால் வேறுவிதமான மன உளைச்சல் மோகனாவுக்கு.


தொழில் விவாகரத்தில் அவனுடைய அப்பாவின் விருப்பத்திற்கு மாறாக அவன் ஏறுக்கு மாறாக நடப்பதினால் ஏற்கனவே அவன் மனதளவில் கொஞ்சம் விலகிப்போயிருக்க, பிழைப்புக்காக அவன் ஊர் விட்டு ஊர் சென்றதில் அவர்களுடைய இடைவெளி கொஞ்சம் அதிகமாகவே இருப்பது போன்ற ஒரு உணர்வு அவருக்கு.


விருப்பமே இல்லாமல் அவர்களுடைய வற்புறுத்தலால் பெண் பார்க்க வந்தவன் தாமரையை பார்த்த அடுத்த நொடி அவளுடைய தோற்றத்தில் மயங்கிப்போய் அப்படியே தலைகீழாக மாறியிருக்கவும், எங்கே அவள் மகனை மணந்துகொண்டு வந்தாள் என்றால் தங்கள் மூத்த மகன் தங்களுக்கு இல்லாமலேயே போய்விடுவானோ என்று வெகுவாக பயந்துபோயிருந்தார் அவர்.


இந்த அப்பா-பிள்ளையின் வாக்குவாதத்தை பார்த்து மிரண்டுபோய், எது எப்படியோ கல்யாணம் என்ற ஒன்று நடந்து அவன் பிள்ளை குட்டியுடன் சந்தோஷமாக இருந்தால் போதும் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டவர், நடுவில் புகுந்து கொஞ்சம் சமாளித்து இருவரையும் அமைதிபடுத்தினார்.


வெருட்டென கிளம்பி வெளியில் வந்தவன், கண்ணில் படும் சொந்தங்கள், நண்பர்கள் என பொதுப்படையாக பேசிக்கொண்டே ஒரு முறை அந்த பட்டிக்காடு முழுவதையும் சுற்றிவிட்டு, அவ்வப்பொழுது சிலபல சிகரெட்களை ஆத்திரம் தீர புகைத்துவிட்டு மாலைதான் வீடுவந்து சேர்ந்தான்.