top of page

Poove Unn Punnagayil - 24

அத்தியாயம்-24

வீட்டு வரவேற்பறை சோஃபாவில் உட்கார்ந்து ஏதோ பத்திரங்களைப் படித்து சரி பார்த்துக் கொண்டிருந்தார் கருணாகரன். இரத்தக் கொதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க அவர் எடுத்துக்கொள்ள வேண்டிய மாத்திரையை அவருக்குக் கொண்டு வந்து கொடுத்தார் தாமரை, தண்ணீருடன். அதை வாங்கி உட்கொண்டவர் கையிலிருந்த காகிதங்களை பத்திரமாக அதன் உறைக்குள் போட்டு ஓரமாக வைத்துவிட்டு தன் கரத்தை மனைவியை நோக்கி நீட்ட, என்னவென்று புரியாமல் தயக்கத்துடன் தாமரையும் கையை கொடுக்கவும் அப்படியே பற்றி இழுத்து தனது அருகில் மனைவியை உட்கார வைத்தார் அவர்.


காவலாளி ஓட்டுநர் இருவரும் மட்டும் வெளியிலிருக்க, ஒரு ஈ காக்கை இல்லை வீட்டிற்குள். பாபுவும் மோகனாவும் ஊரிலிருக்க, பிள்ளைகள் கூட சாப்பாட்டுக்கு வெளியே சென்றுவிட, வீட்டில் இவர்கள் இருவருக்கு மட்டுமே சமையல் என்பதால் வேலை முடிந்து சாவித்திரி கூட சீக்கிரம் கிளம்பியிருந்தார்.


இருவருக்கும் இப்படி ஒரு தனிமை வாய்ப்பதென்பது அபூர்வம்தான். அப்படிப்பட்ட சமயங்களில் கட்டுப்பாடில்லாமல் உள்ளே இருக்கும் காதல் மன்னன் 'ரெமோ'வை கட்டவிழ்த்துவிட்டுவிடுவார் கருணாகரன்.


அந்த நினைப்பில், "ஐயோ என்னங்க இது" என தாமரை தவிப்புடன் நெளிய, "ஷ்.. ப்பா... இதுக்கேவா? நான் என்ன உன்னை ரொமான்ஸ் பண்ணவா கூப்பிட்டேன், சும்மா ஒரு அன்புலதான" என அங்கலாய்த்தவர், "அவ ஆசைப்படி கல்யாணம் பண்ணிகொடுத்தும், நல்ல படியா வாழாம நம்ம குட்டிம்மா இப்படி வந்து, இங்க விரக்தியா உட்கார்ந்திருக்கும்போது இப்படிப்பட்ட எண்ணமெல்லாம் தோணுமா சொல்லு" என ஆதங்கத்துடன் சொல்லிவிட்டு, "ஆனா, அன்னைக்கு நான் உங்க அப்பா கிட்ட நடந்துகிட்ட விதம் எவ்வளவு தப்பு இல்ல. அவர் இறந்து உன் தம்பியோட நிலைமையும் சரியில்லாம நீ ரொம்ப மனவேதனைல இருந்த சமயத்துல கூட வீம்பா கொஞ்சமும் விட்டுக்கொடுக்காம உன் மனச எவ்வளவு நோகடிச்சிருக்கேன். அதுக்குத்தான் எனக்கு இப்படி ஒரு தண்டனை போலிருக்கு" என உண்மையிலேயே மனதார வருந்த, "ப்ச்... எதுக்கிப்ப தண்டனை அது இதுன்னு தத்துபித்துன்னு பேசிட்டு? அதுதான் எல்லாம் சரியாப்போய் சுமுகமா நல்லபடியாதான குடும்பம் நடத்திட்டு இருக்கோம், விடுங்க. இதெல்லாம் எல்லா குடும்பத்துலையும் நடக்கறதுதான். ஒண்ணும் புதுசில்ல. சீக்கிரமே சரியாயிடும்" என்றார் தாமரை கண்டனமாக.


"என்னதான் நீ இப்படி பூசி மொழுகினாலும், அந்த சம்பவங்களோடு தாக்கம் இன்னும் கூட உன் கிட்ட ஒட்டிட்டு இருக்கறமாதிரியே இப்பல்லாம் எனக்கு தோணுது தாமரை. அவ்வளவு அன்பும் காதலும் அன்னியோன்னியமும் நெருக்கமும் இருந்தாலும் கூட சில விஷயங்கள்ல நீ தாமரை இலை தண்ணி மாதிரி ஒட்டாம நிக்கறயோன்னு தோணுது. கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதேங்கற மாதிரி. என்னோட சம்பாத்தியத்துல உனக்கு பாத்தியதையே இல்லனு நீ நடந்துக்கற மாதிரி. உன்னோட இந்த மினிமலிச கொள்கையே அதனால வந்ததுதானோன்னு தோணுது" என அவர் சொல்லிக்கொண்டே போக, ‘இந்த அளவுக்குக் கணவர் தன்னை பற்றி யோசிக்கிறாரே’ எனக் கொஞ்சம் நிம்மதியாகத்தான் இருந்தது தாமரைக்கு.


"நீங்க சொன்னதுல பாதி மட்டும்தான் உண்மை. ஆரம்பத்துல உங்ககிட்ட அதீத எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனா அது நாளாவட்டத்துல காணாம போச்சு. அதுக்குக் காரணம் வயசும் மெச்யூரிட்டியம் தானே தவிர உங்க சம்பாத்தியத்துல எனக்கு எந்த பாத்தியதையும் இல்லனு அதுக்கு அர்த்தம் இல்ல. நமக்காக அப்பா செலவு செய்யணும், அண்ணன் தம்பிங்க செய்யணும், கணவர் செய்யணும் அப்பறம் பிள்ளைங்க செய்யணும்ங்கற மாதிரி எதையும் வாங்கற இடத்துலயே பெண்கள் நிற்கறது, இப்ப இல்ல எப்பவுமே எனக்கு பிடிக்காது. அதனாலதான் எனக்குன்னு சொந்தமா ஒரு மினிமம் இன்கம் வேணும்னு நினைக்கறேன். மத்தபடி மினிமலிச கொள்கைங்கறதெல்லாம் நான் சின்ன வயசுல இருந்து வாழ்ந்த வாழ்க்கை எனக்கு கத்துக்கொடுத்த பாடம்" என தாமரை சொல்லிக்கொண்டிருக்க, வாயிற்புறம் தடால் புடால் என சத்தம் கேட்கவும் பதறி வெளியில் வந்து பார்த்தார் அவர்.


கருணாவும் பின்னாலேயே வர, ஓட்டி வந்த ஸ்கூட்டியை அப்படியே ஓரமாகக் கிடத்திவிட்டு, தலைக்கவசத்தைக் கழற்றி வீசி எறிந்து விட்டு அது ஒரு பக்கமாக உருளவும், ஒரு நிதானமின்றி முகத்தை மூடியிருந்த துணியைப் பிடித்து இழுத்து அவிழ்த்தாள் ஹாசினி.


முகம் சிவந்து, நீர் நிரம்பி கண்களும் சிவந்திருக்க ஆவேசம் வந்தவள் போல உடல் நடுங்க உள்ளே நுழைந்தாள் அவள் அங்கே நின்றிருக்கும் பெற்றோரைக் கூட கண்டுகொள்ளாமல்.


"என்ன ஆச்சு ஹசி? ஏன் இப்படி இருக்க? தம்பி எங்க? ரெண்டுபேரும் ஒண்ணாதான கிளம்பி போனீங்க" என தாமரை பதறிக் கேட்க, திரும்பி தாமரையை அலட்சியமாகப் பார்த்தவள், "அவன் உன் தம்பி கூட வருவான்" என்றாள் எகத்தாளமாக.


"அவன் கூட எப்படி, சத்யாவும் ஹோட்டலுக்கு வந்தானா? அங்க என்ன பிரச்சனை" என தாமரை கலக்கத்துடன் கேட்க, நேராகப் போய் சோஃபாவில் அமர்ந்தவள், "உலகத்துலயே இல்லாத உன் தொம்பி இருக்கார் இல்ல, அவர்தான் பிரச்சனை. நான் கேட்டனா என்னையும் கௌசிக்கையும் சேர்த்துவைனு. ஏன் அந்த ஆளுக்கு இந்த வேண்டாத வேலை. யாரோட முகத்துலயே முழிக்கக்கூடாதுன்னு நினைச்சேனோ, பிளான் பண்ணி அவனை மீட் பண்ண வெச்சிட்டர். அதுக்கு உன் பிள்ளையும் உடந்தை. ச்ச அவருக்கு எதுக்கு இந்த தேவையில்லாத ஆணியெல்லாம். அனாவசியமா இப்படி அடுதவங்க விஷயத்துல மூக்கை நுழைக்கறத விட்டுட்டு அவங்க வேலையை மட்டும் பார்திருந்தாங்கன்னா அவங்களுக்கு உருப்படியா ஒரு லைப் செட்டில் ஆகியிருக்கும். இப்படி ஒண்டிக்கட்டையா நின்னிருக்கமாட்டாங்க. என் விஷயத்துல தலையிட அவங்களுக்கு நேரமும் இருந்திருக்காது”


‘விவாகரத்து’ என்கிற ஆயுதத்தைக் கையில் எடுத்தால் பதறிப்போய் மன்னிப்பு கேட்டு கௌசிக் தன்னை தேடிவருவன் என்று அவள் எண்ணியிருக்க, நிலைமையே தலைகீழாக அல்லவா மாறிப்போய்விட்டது. அதுவும் இந்த சத்யா மாமாவால். அதுவும் அவன் செய்து வைத்த வேலையால் நிர்ப்பந்தமாக கௌசிக்கை நேரில் சந்திக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிப்போய் இவளுடைய குட்டு வெளிப்பட்டதனால் உண்டான தடுமாற்றம், அவளிடம் கெஞ்சிக்கொண்டு நிற்காமல், ‘விவாகரத்து’ என்ற முடிவுடன் அவன் பேசிவிட்டுப் போன விதத்தால் ஏற்பட்ட ஆத்திரம், அவனைப் பிரிந்து தன்னால் வாழ முடியுமா என்கிற கேள்வியால் விஸ்வரூபமேடுத்த பயம் என எல்லாம் சேர்ந்து நிதானம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்த அவளை அடியோடு சுயக்கட்டுப்பாட்டை இழக்க வைக்க, யாரிடம் என்ன பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதையே உணராமல் அவள் பேசிக்கொண்டே போக, மகள் எடுத்தெறிந்து பேசிய விதத்தில், அதிலும் சத்யாவை வேறு அவள் இழிவாக பேசியிருக்க, உடைந்து அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டார் தாமரை. அதிர்ந்தேபோனார் கருணாகரன்.


மகள் ஆடும் ஆட்டத்தைப் பார்க்கவே கேவலமாக இருந்தது அவருக்கு. அப்படியே இழுத்து ஒரு அறை விடலாமா என்று பொங்கிய ஆத்திரத்தை அடக்கி, மனைவியைத் தூக்கி சோஃபாவில் அமரவைத்து, அவரை தண்ணீர் பருகவைத்தவர் மகளைப் பார்க்க, ஒரு பிடிவாதத்துடன், 'என் மேல் என்ன தவறு இருக்கிறது?' என்பதாக அப்படியே உட்கார்ந்திருந்தாள் அவள்.


நேரம் காலம் இல்லாமல் கைப்பேசியைக் குடைந்துகொண்டு உட்கார்ந்திருக்கும்போது, பரீட்சை சமயங்களில் படிக்காமல் ஏய்க்கும்போது, அதன் விளைவால் குறைவான மதிப்பெண்களுடன் வரும்போது, நேரம் கழித்து வீடு திரும்பும்போது, கண்டபடி செலவு செய்யும்போது, வீட்டில் உள்ளவர்களிடம் அக்கறையின்றி நடந்துகொள்ளும்போது என சிறு சிறு தவறுகள் செய்யும்போதெல்லாம் தாமரை மகளைக் கண்டிக்கும் சமயங்களிலெல்லாம், 'எல்லா பிள்ளைகளும் செய்வதுதானே' என்பதாக மனைவியை அடக்கி மகளுக்கு அரணாக நின்றது எவ்வளவு தவறாகிப்போனது? வயது கூடக்கூட முதிர்ச்சி வரும், அவள் தன்னைத்தானே சரிசெய்துகொள்வாள் என பாசத்தில் கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருக்க, அது எப்பேர்ப்பட்ட அனர்த்தத்திற்கு வழிவகுத்துவிட்டது.


இன்று தாயிடம் பேசியதுபோல்தான் இவள் கணவனிடமும் எதையோ விபரீதமாகப் பேசியிருக்கிறாள், அதனால்தான் கட்டுப்பாட்டை இழந்து அவளை அடிக்கும் அளவுக்கு போயிருக்கிறான் அவன் என்பது உச்சந்தலையில் ஆணி அடித்தாற்போல அவருக்கு விளங்க, தவறு அவளிடம் இருக்கும்பட்சத்தில் அதை அவளுக்கு உணர்த்தியே தீரவேண்டும் என ஒரு முடிவுக்கு வந்தவராக, "ஹாசினி, உள்ள வா. உங்கிட்ட முக்கியமா சில விஷயங்கள் பேசணும்" என்று அழுத்தமாக சொல்லவிட்டு அவருடைய அறை நோக்கிப் போனார் கருணாகரன், அந்த சோஃபாவிலேயே சுருண்டிருந்த தாமரையை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே.


வீம்புடன் வெளியில் காண்பித்துக்கொள்ளவில்லையே தவிர, அம்மாவின் நிலை அவளைக் குற்றவுணர்ச்சிக்குள் தள்ளியிருக்க, அப்பாவின் குரலிலிருந்த தீவிரம் அவளை அவருக்கு பின்னால் பயத்துடன் ஓட வைத்தது.


நேராக அவர்கள் அறையின் பால்கனியில் போடப்பட்டிருந்த சோஃபாவில் போய் அமர்ந்தவர், வந்து நின்ற மகளைப் பார்த்து உட்காருமாறு ஜாடை செய்ய, அவருக்கு எதிரில் போடப்பட்டிருந்த இருக்கையில் போய் அமர்ந்தாள் ஹாசினி.


"உனக்கு கல்யாணம்னு ஒண்ணு நடந்தபிறகும் கூட உன்னை ஒரு சின்ன குழந்தைன்னுதான் நினைச்சிட்டு இருந்தேன் ஹாசினி. ஆனா அந்த நினைப்பே தப்புனு இன்னைக்குத்தான் எனக்கு புரிஞ்சுது. உன் வயசுக்கு தகுந்த நடவடிக்கை வேண்டாமா?" எனக் கூர்மையாக கேட்டாரவர்.


வேறு யாராக இருந்திருந்தாலும் வெடுக்கென்று ஏதாவது ஒரு பதிலைச் சொல்லியிருப்பாள் அவளும். ஆனால் அது அவளுடைய அப்பாவாக இருக்க, அதுவும் அவர் முகத்தில் குடிகொண்டிருந்த கடுமையில் மௌனமாக அவள் தலை குனியவும், "கோபத்துல தலைகால் புரியாம, என்னை முன்னால வெச்சிட்டே அம்மா கிட்ட கொஞ்சம் கூட மரியாதை இல்லாம நீ உன் மாமாவையே தப்பா பேசியிருக்கன்னா கௌசிக்கை என்னதான் சொல்லியிருக்க மாட்ட? கண்ணுல தண்ணியும் நெத்தியில காயமுமா வந்து நின்னு அன்னைக்கு நீ சொன்னதையெல்லாம் நம்பி நானும் கண்மூடித்தனமான டான்ஸ் ஆடிட்டு இருந்திருக்கேன் இல்ல? இப்ப நீ என் கிட்ட சொல்லியே ஆகணும், அன்னைக்கு கௌசிக்கை என்ன சொன்ன?"


அவர் குரலில் தொனித்த கட்டளை அவளை அச்சப்படுத்த தடுமாறினாள் ஹாசினி.


"அது வந்துப்பா, அன்னைக்கு நான் குடிச்சிட்டு வந்திருக்கேன்னு நினைச்சு அவன்தான் பா என்னை நம்பாம தப்பா பேசினான்"


சொல்லும்போதே கண்ணீர் மணிகள் உருண்டு கன்னத்தை நனைத்தது.


"ப்ச், இப்படி அழறதுன்னா, இனிமேல் நீ என் கூட பேசவே வேண்டாம்"


அவர் கடுமையாகச் சொல்லவும் அவள் கன்னத்தைத் துடைத்துக்கொள்ள,


"அப்படி என்ன சொன்னான்?"


"நான் அங்க ஆல்கஹால் ட்ரிங்க் பண்ணல ப்ரெஷ் ஜூஸ்தான் குடிச்சேன்னு சொன்னதுக்கு, 'அப்ப நீ தெரிஞ்சு ட்ரிங்க் பண்ணலன்னா, நீ குடிச்ச ஜூஸ்ல வேணும்னேதான் எவனோ எதையோ கலந்திருக்கான், தனியா பார்ட்டின்னு எங்கயோ போய், உன்னை சுத்தி என்ன நடக்குதுங்கற அறிவு கூட இல்லாம எதையோ குடிச்சிட்டு இப்படி போதைல வந்திருக்க, இந்த நிலைமையில உன்னை எவனாவது ஏதாவது செஞ்சிருந்தா உங்க வீட்டுல என்னைத்தான கேள்வி கேட்பாங்கன்னு சொன்னான்"


"இப்ப இந்த மாதிரி விஷயங்கள் நிறைய நடக்குது இல்ல? அவன் கேட்டதுல என்ன தப்பு?"


"அது ஒண்ணும் யாரோ முன்ன பின்ன தெரியாதவங்க பார்ட்டி இல்லல்ல. என் ஃப்ரெண்ட் பர்த்டே பார்ட்டிதான, தெரிஞ்சே என் ஃப்ரெண்ட்ஸ அவன் எப்படி கேவலமா பேசலாம்?”


"மண்ணாங்கட்டி, பிரெண்டாம் பிரெண்டு... அது இருக்கட்டும் அதுக்கு நீ என்ன சொன்ன"


"அவ்வளவு அக்கறை இருக்கறவன் என் கூட பார்ட்டிக்கு வந்திருக்கணும்னு சொன்னேன். ‘உனக்கு வாரத்துல நாலு பார்ட்டி இருக்கும், நான் எல்லாத்துக்கும் உன் கூட வரணும்னா சோத்துக்கு என்ன பண்றதுன்னு கேட்டான். வேலையை விட்டுட்டு எங்க அப்பா கம்பெனில ஜாயின் பண்ணுன்னு சொன்னேன்"


கேட்ட கருணாகரனுக்கே எரிச்சலாகிப்போனது.


"ப்ச், அதுக்காகத்தான் அடிச்சானா?"


"இல்ல, 'உனக்குக் கொஞ்சம் கூட அறிவே இல்லையா? என்ன பேசறோம்னு யோசிக்கவே மாட்டியான்னு? திட்டினான். வழக்கமா சொல்ற மாதிரி அவனோட வேலையை பத்தி கதை கதையா சொன்னான்” என அதை விவரித்தவள், “எனக்கு இரிடேட் ஆகிப்போச்சு. உனக்கு உன் கம்பெனிதான் முக்கியம்னா, உனக்கு நான் எதுக்கு, பேசாம என்னை டைவர்ஸ் பண்ணிடு, நாம பிரிஞ்சுடலாம்னு சொன்னேன். 'என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல, வாழ்க்கை அவ்வளவு ஈஸியா போச்சா உனக்கு? நீ வந்து, வா கல்யாணம் பண்ணிக்கலாம்னு கூப்பிட்டா உடனே உன்னை கல்யாணம் பண்ணிக்கணும். டைவர்ஸ் பண்ணலாம்னு சொன்னா டைவர்ஸ் கொடுக்கணுமா? முடியாது போடி? எல்லாம் தெரிஞ்சேதான கல்யாணம் பண்ணிட்டு வந்த. இதுதான் நம்ம வாழ்க்கை. இப்படித்தான் வாழ்ந்தாகணும். இதுக்கு நீ பழகிக்கோ? இனிமேல் இந்த பார்ட்டி அது இதுன்னு சுத்தினா பிச்சிடுவேன் பிச்சு' அப்படினு திமிரா மிரட்டினான். அதுல கோபம் அதிகமாகிப்போய், 'நீ என்ன எனக்கு டைவர்ஸ் கொடுக்கறது, உன் கிட்ட இருந்து எப்படி டைவர்ஸ் வாங்கணும்னு எனக்கு தெரியும்'னு சொன்னேன். அதோட விட்டிருந்தா கூட நான் கொஞ்சம் அமைதியா போயிருப்பேன். ஆனா விட்டுக்கொடுக்காம, 'என்னடி பண்ணுவ'ன்னு திமிரா கேட்டானா, என்னால கோபத்தை கண்ட்ரோல் பண்ணவே முடியல, அதனால" என அவள் திரு திருவென விழிக்க, அதிலேயே அவள் பேசத்தகாத எதையோ பேசி வைத்திருக்கிறாள் அது அவளுக்கும் புரிந்தே இருக்கிறது என்பது விளங்க,


"என்ன சொல்லி தொலைச்ச" என அவர் இழுத்துப்பிடித்த நிதானத்துடன் கேட்க,


பயத்தில் தொண்டை வறண்டு போக, மிடறு விழுங்கியவள், தயங்கித்தயங்கி "நீ ஆம்பளையே இல்லனு எல்லார்கிட்டயும் சொல்லிடுவேன்னு" என அவள் சொல்லிமுடிக்கவில்லை, அதுவரை கட்டிக்காப்பாற்றிய பெருமையெல்லாம் காற்றில் கரைந்து காணாமல் போக, அந்த தந்தையின் கை அருகிலிருந்த கண்ணாடி தேநீர் மேசையை உடைத்து நொறுக்கியிருந்தது மகளை காயப்படுத்த இயலாமல்.


அவர் கைகளில் வழிந்த குருதியைப் பார்த்து கண்ணீருடன், "அப்பா' என அலறிய மகளைக் கண்டு நெஞ்சில் ரத்தம்தான் வழிந்தது அவருக்கு.


காலசக்கரம் வேகமாகத்தான் சுழல்கிறது.


'நீ பெற்ற மகளென்று வரும்போது, அவள் தவறே செய்தாள் என்றாலும் அவளை நோக்கி ஒரு சுண்டுவிரலைக் கூட அசைக்க மனம் வரவில்லையே உன்னால்! இதுவே யாரோ பெற்று உனக்குத் தாரைவார்த்தவள் என்றால்? ஆண் என்கிற அகங்காரத்தில் உன் அதிகார எல்லை சுலபமாக நீண்டுவிடுகிறது இல்லையா?'


மனசாட்சி அவரை குத்திக்கிழிக்க, மகளின் குரல் கேட்டு அங்கே ஓடி வந்த தாமரையின் முகத்தையே பார்த்திருந்தார் கருணாகரன் வேதனையுடன், குற்ற உணர்ச்சியும் மேலோங்க.


****************

0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page