அத்தியாயம்-21
மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை22
சொன்னால் என்ன?
அத்தை மகளோ மாமன் மகளோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ…
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட…
அம்மாடி நீதான் இல்லாத நானும்…
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்…
தாங்காத ஏக்கம் போதும் போதும்!
ராசாத்தி உன்ன காணாத
நெஞ்சு காத்தாடி போலாடுது..
பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத் தேடுது…
இரைந்து ஒலித்த பாடலில், அதன் காட்சிகள் வேறு நினைவுக்கு வந்துதொலைக்கவும் ஒரு கையால் காதை பொத்திக்கொண்டவன், "ப்ச்... அண்ணா, கால வேளைல எதுக்கு இந்த மாதிரி சோக பாட்டை போட்டு மூட் அவுட் பண்றீங்க... முதல்வன் கேசட் வெச்சிருக்கீங்க இல்ல, அத போட்டு விடுங்க முதல்ல" என சிடுசிடுத்தான் சத்யா, மற்றொரு கையில் வைத்திருந்த தேநீர் குவளையை வெறித்தவாறே.
அவளின் தரிசனத்திற்காகப் பார்த்துப் பார்த்து அவனது கண்கள் பூத்துப்போயிருக்க, கல்லூரிக்கு வருவதற்காகக் காலை அவர்கள் வழக்கமாக ஏறும் பேருந்தில் அன்று ஏறவில்லை தேன்மொழி.
கூட்டத்தில் முட்டி மோதி பேருந்தினுள் ஏறி மல்லிகா மட்டுமே உள்ளே செல்ல, புட்-போர்டில் தொங்கிக்கொண்டே 'அவள் எங்கே?' என சத்யா ஜாடை செய்யவும், 'தெரியல' என்பதாக கை அசைத்தாள் அவள்.
அந்தக் கணம் முதல் ஏதோ இனம் புரியாத ஒரு பயம் வந்து அடைத்துக்கொண்டது அவனுடைய மனதிற்குள்.
கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவன், 'நான் ஒரு பத்து நிமிஷத்துல வரேன், நீங்க போங்க" என அவனுடைய தோழர்களிடம் சொல்லிவிட்டு அவர்களின் கிண்டலான குறுகுறு பார்வைகளையெல்லாம் புறந்தள்ளி, கல்லூரிக்கு எதிர்புறமிருந்த இந்த தேநீர் விடுதியில் வந்து நின்றுகொண்டான், ஒரு வேளை அவள் அடுத்த பேருந்தில் வந்து இறங்கினாள் என்றால் அவளுடைய தரிசனம் கிடைக்குமே என்கிற நப்பாசையில்.
அவன் மனநிலை புரியாமல் இங்கே என்னடாவென்றால் சோக கீதம் வாசிக்கிறார்கள். அந்த கடுப்பில் அவன் அப்படி எரிந்துவிழவும், "அதான, நல்ல பாட்டா போடுண்ணா" என அவனுக்கு அருகில் நின்று புகைத்துக்கொண்டிருந்த யாரோ ஒருவனும் எதிர் பட்டுப் பாட, அவர்களைக் கடுப்புடன் பார்த்துக்கொண்டே அவன் சொன்ன கேசட்டை மாற்றினார் அந்த டீ-கடைக்காரர்.
'தேன்மொழியே
லலலல லைலை லலலல லைலை
லலலல லைலை லலலல லைலை
உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு'
என குதூகல இசையுடன் பாடல் தொடங்கவும், அதுவும் அதில் அவனுடைய மனதிற்கு இனியவளின் பெயர் வேறு இனிந்தொலிக்க, அப்படியே அவனுடைய மனதிற்குள் தேன் மழை பொழிந்தது.
இப்படியே இன்னும் சில குவளை தேநீருடன் மேலும் சில நிமிடங்கள் விரயமாக, அவன் எதிர்பார்த்ததுபோலவே அடுத்த பேருந்தில் வந்து இறங்கினாள் தேன்மொழி.
அவன் அவளையே பார்த்துக்கொண்டிருக்க, அதை உணர்ந்தோ என்னவோ அவளுடைய பார்வையும் அவன் பக்கம் திரும்பிய நொடி அவளுடைய முகம் பூவாக மலர்ந்தது.
அங்கே இருந்தபடியே அவனை வருமாறு அவள் ஜாடை செய்ய, ஒரே வியப்பாகிப் போனது சத்யாவுக்கு.
‘இப்படியெல்லாம் செய்கிறவள் அல்லவே அவள்!?’ என்கிற ஆராய்ச்சியுடன் வேகவேகமாக சாலையைக் கடந்து அவன் அவளை நெருங்கவும், அறிந்தவர் தெரிந்தவர் யாராவது தங்களைப் பார்க்கிறார்களா என ஒரு முன்னெச்சரிக்கை மேலோங்க அவளுடைய பார்வை நாலா பக்கமும் சுழன்றது.
"நம்ம ஊர் ஆளுங்க யாரும் இல்ல, பயப்படாத" என அவன் தைரியம் கொடுக்க, "உன் கிட்ட முக்கியமா ஒரு விஷயம் சொல்லணும் சத்யா, அதுதான் இன்னைக்கு அடிச்சி பிடிச்சி ஓடி வந்தேன்" என மூச்சை இழுத்துப் பிடித்துச் சொன்னவள் பேருந்து நிறுத்தத்தின் நிழற்குடைக்கு அடியில் போய் புகுந்துகொண்டாள்.
கல்லூரி தொடங்கிவிட்டதால், அதிக கூட்டமில்லாமல் வெறிச்சோடி இருந்தது அந்த சாலை. அதில் கொஞ்சம் துணிவு வரப்பெற்றவனாக அவனும் வந்து அவளுக்கு அருகில் நிற்க, "சத்யா, அப்பா எனக்கு மாப்பிளை பார்த்துட்டாங்க சத்யா" என அழுகுரலில் அவள் நேரடியாக விஷயத்துக்கு வர, அப்படியே தலையில் இடி இறங்கியது போலிருந்தது அவனுக்கு.
ஆண் என்றும் பெண்ணென்றும் எதிர் பாலின வேற்றுமை புரியத்தொடங்கிய காலந்தொட்டு ஒருவர் மீது ஒருவருக்கு ஏற்பட்ட ஈர்ப்பு, கண்ணொடு கண் நோக்கி, முகம் சிவந்து, ஒருவர் பார்வைக்காக மற்றவர் ஏங்கி, மனதின் ஆசையை குறிப்பால் உணர்த்தி, தானும் உணர்ந்து, ஒருவர் இல்லையென்றால் மற்றவர் இல்லை என நம்பும் அளவுக்கு நெஞ்சம் முட்டும் காதல் என்று வளர்ந்திருந்தாலும், இதுவரை இப்படி நேருக்கு நேர் முகத்தைப் பார்த்துப் பேசியதே இல்லை. எல்லாமே மல்லிகாவை நடுவில் வைத்துத்தான். அதுவும் இலைமறைகாயாகத்தான்.
பக்கத்துப் பக்கத்து ஊர், உறவுமுறை என இருந்தாலும், விசேஷ வீடுகள் கோவில் திருவிழாக்கள் என அடிக்கடி சந்தித்துக்கொண்டாலும் அவ்வளவு சுலபமாகவெல்லாம் இப்படிப் பேசிவிட முடியாது அவர்களால். கண் காது மூக்கு வைத்து திரித்து, இல்லாத கதையெல்லாம் கட்டிவிடுவார்கள் ஊருக்குள்.
அவள் இதே கல்லூரியில் சேரவும், இந்த இரண்டு வருடங்களுக்கு இடையிலான காலகட்டத்தில்தான் அவனுடைய முகத்தையாவது நிமிர்ந்து பார்த்திருக்கிறாள் தேன்மொழி.
முதன்முதலாக நேரடியாக அவனிடம் அவள் பேசும் வார்த்தைகள் இப்படியா இருக்கவேண்டும்?
"இப்பதான செகண்ட் இயர் படிக்கற? அதுக்குள்ள எதுக்கு இந்த ஏற்பாடு" என அவன் தயங்கிக் கேட்க, "கொஞ்சநாளா அடிக்கடி அம்மாவுக்கு ஏதாவது உடம்பு சரியில்லாம போயிட்டே இருக்கு, அதனால பயந்துபோய் அப்பாவை அவசர படுத்த ஆரம்பிசிட்டாங்க. அம்மாவோட சொந்தத்துல இருந்து அவங்களாவே பொண்ணு வேற கேட்டு வந்துட்டாங்க. அதான்" என்றவள், "ப்ளீஸ் சத்யா, உங்க அம்மாவை விட்டு அப்பா கிட்ட பொண்ணு கேக்க சொல்லு, நான் கொஞ்சம் பிடிவாதம் பிடிச்சா அப்பா உடனே சம்மதிச்சிடுவாங்க" என அவள் கெஞ்சலாகக் கேட்க, "இதெல்லாம் நடைமுறைக்குச் சரிப்பட்டு வருமா தேனு?" எனக் கேட்டான் அவன் கலங்கிய குரலில்.
"எல்லாம் வரும், ப்ளீஸ் சத்யா, இப்ப இதை செய்யலன்னா எப்பவுமே நீ எனக்கு இல்லாமயே போயிடுவ. அப்படி மட்டும் நடந்தா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் தெரிஞ்சிக்க" என அவள் கண்களில் நீர் திரையிடச் சொல்லவும், "சீச்சி... லூசு மாதிரி இப்படியெல்லாம் பேசாத" என அவளைக் கடிந்தவன், " பேசாம நீ இப்ப காலேஜுக்கு போ, நான் அம்மா கிட்ட கேட்டு பார்க்கறேன்" என்று சொல்லிவிட்டு, தயக்கத்துடன் அவள் அவனைத் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே கல்லூரி வளாகத்துக்குள் சென்று மறையும் வரை அங்கேயே அசைவின்றி நின்றவன், அடுத்த பேருந்தைப் பிடித்து வீடு நோக்கிப் போனான்.
***
கல்லூரிக்குக் கிளம்பிச் சென்றவன் சிறிது நேரத்திலேயே திரும்பியிருக்க, "என்ன ஆச்சு சத்யா, அதுக்குள்ள வந்துட்ட” என வியப்புடன் கேட்ட கோதையிடம் ஒருவாறு தட்டுத் தடுமாறி அவன் விஷயத்தைப் போட்டுடைக்க, ஆடிப்போய்விட்டார் அவர்.
"அவங்க வசதி என்ன... நம்ம வசதி என்ன? இந்த நினைப்பே தப்பு சத்யா, நம்ம லோகு மாமா தேனு பொண்ண ஒரு ராஜகுமாரி மாதிரி பார்த்துக்கறாரு. நம்மால அவளை அந்த அளவுக்கு வெச்சு பார்த்துக்க முடியுமா சொல்லு? நம்ம அக்காவுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்த நல்ல மனுஷன் அவரு, அவருக்கு மனசால கூட நாம கெடுதல் நினைக்கக் கூடாது சத்யா, என்னால அவர்கிட்ட போய் பொண்ணு கொடுங்கன்னு நிக்க முடியாது. நீ உன் படிப்ப முடிச்சு ஒரு நல்ல வேலைல இருந்தா கூட போய்க் கேட்க நமக்கு ஒரு முகம் இருக்கும். ஆனா நாம இப்ப இருக்கற இந்த நிலைமைல இது பெரிய தப்பு” என அவர் முற்றிலுமாக மறுக்க, அவருடைய கையில் காலில் விழுந்து கெஞ்சி அரைமனதாக அவரை சம்மதிக்க வைத்து அன்று மாலையே அவருடைய ஒன்றுவிட்ட அண்ணன் லோகநாதனின் வீட்டிற்கு கோதையை அழைத்துச் சென்றான் சத்யா.
அதுகூட, ஒரு வார்த்தை கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் மட்டுமே. மற்றபடி முறைப்படி பெண் கேட்டெல்லாம் இல்லை.
"வாம்மா கோதை, வாப்பா" என அவர் இயல்பாக அவர்களை வரவேற்க, அவருடைய மனைவி இருவருக்கும் தேநீர் கொண்டுவந்துவந்து கொடுத்தார் இன்முகமாகவே.
"பாவம் அண்ணி, ஏற்கனவே உங்களுக்கு உடம்பு சரியில்ல, எதுக்கு இதெல்லாம்" என்றவாறு அதை வாங்கிக்கொண்டவருக்கு அதன் ஒரு மிடறு கூட தொண்டைக்குள்ளே இறங்கவில்லை.
அவருடைய முகக்குறிப்பை உணர்ந்தவராக, "ஏன் கோத ஒரு மாதிரி இருக்க, உன் வீட்டுக்காரு, நம்ம தாமரை பொண்ணு, மாப்பிள்ளை, பேத்தி எல்லாரும் சொகம்தான?" என அவர் விகற்பம் இல்லாமல் அக்கரையுடன் நலம் விசாரிக்க, தட்டுத் தடுமாறி தான் வந்த காரணத்தைச் சொன்னார் கோதை.
அவருடைய அண்ணியின் முகம் நொடிக்குள் இறுகிப்போக, ஏதோ நகைச்சுவையை கேட்டது போல இடி இடி என சிரித்தார் லோகு. அதில் சத்யாவுக்கு ஒரு மாதிரி ஆகிப்போனது.
கோதை சங்கடத்துடன் அண்ணனின் முகத்தை ஏறிட, "ஒண்ணும் இல்லம்மா, கண்ணு பார்த்துட்டே இருக்கும்போதே இதெல்லாம் எப்படி நடந்ததுன்னு யோசிச்சேன், சிரிப்பு வந்துடுச்சு" என்றவர், "இதெல்லாம் வயசு கோளாரும்மா, வேற ஒண்ணும் இல்ல" என்று இலகுவாக சொல்லிவிட்டு ஒரு நெடிய மூச்சை இழுத்து விட்டார்.
சில நொடிகள் தங்கையின் முகத்தையே பார்த்திருந்தவர், "நம்ம தாமரைக்கு எவ்வளவு பிரச்சனைக்கு நடுவுல இந்த கல்யாணத்தை செஞ்சு முடிச்சோம் ஞாபகம் இருக்கா? ம்ம்... இப்ப பொம்மை மாதிரி அழகா ஒரு குழந்தையும் பிறந்துடுச்சு. உன் பொண்ண பத்தின கவலை இல்லாம நீ நிம்மதியா இருக்க இல்ல? அதே மாதிரி ஒரு நிம்மதி எனக்கும் வேணும் கோத. எனக்கு தேனோட சந்தோஷம் ரொம்ப ரொம்ப முக்கியம். அதை யார் கொடுத்தாலும் எனக்கு சரிதான்" என்றார் லோகு.
வாஸ்தவம்தான், அவர் மட்டும் நடுவில் இல்லை என்றால் தாமரையின் திருமணம் கருணாகரனுடன் நடந்தே இருக்காது. எத்தனையோ குறை நிறைகள் இருந்தாலும் அவர்கள் நிலைமைக்கு இந்த சம்பந்தம் ஒரு எட்டாக்கனிதானே? அனைத்திற்கும் மேல் பண உதவி வேறு செய்திருக்கிறாரே!
கோதை மௌனம் காக்கவும், அவர் சொல்ல வரும் விஷயத்தின் அடிப்படை புரிந்ததால், "எனக்கு ஒரு நாலு வருஷம் டைம் கொடுத்தீங்கன்னா நீங்க சொல்ற மாதிரி ஒரு நல்ல நிலைமைக்கு வந்துடுவேன் மாமா. அப்பறம் தேனை எனக்கு கட்டி கொடுத்தா போதும். அவளும் இப்பதான செகண்ட் இயர் படிக்கறா? எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க மாமா" என அவன் தயக்கத்தையெல்லாம் உடைத்து அவரிடம் நேரடியாகக் கேட்க, அவருடைய முகமே மாறிவிட்டது.
"உனக்கு தெரியாது சத்யா. ஏன் தேனுக்கு கூட இன்னும் நாங்க சொல்லல. உங்க அத்தைக்கு மார்பக புத்துநோய்னு சொல்லிட்டாங்க. அதுக்கு ஆபரேஷன் செய்ய போறோம். பயப்பட தேவை இல்லைனுதான் சொல்றாங்க. ஆனா அப்படி இருக்க முடியாது இல்ல. ரெண்டுபேருமே உசுர கைல பிடிச்சிட்டுதான் இருக்கோம் தெரியுமா”
சொல்லும்பொழுதே உடைந்தார் லோகு.
அவர் அப்படிச் சொல்லவும் பேரதிர்ச்சியாகிப்போனது அம்மா பிள்ளை இருவருக்கும். கோதையின் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. மயிலத்தின் தமக்கை கூட இவர்களைத் தள்ளியே நிறுத்துவார். ஆனால் லோகுவும் சரி அவருடைய மனைவியும் சரி அப்படிப்பட்டவர்கள் இல்லை.
கண்களைத் துடைத்துக்கொண்டு, கோதை அவருடைய அண்ணியை அணைத்துக்கொள்ள அவரும் கண் கலங்கவும், தன்னை சமாளித்துக்கொண்டு தொடர்ந்தார் லோகு.
“அதனாலதான் தேனுக்கு சீக்கிரம் முடிக்கணும்னு மும்முரமா இருக்கோம். சமயம் பார்த்து தோதா சம்பந்தம் வரவும் முடிச்சிடலாம்னுதான், வேற ஒண்ணும் இல்ல.
பையனுக்கு நல்ல படிப்பு. கவர்மன்ட் வேலைல இருக்கான். பெரிய போஸ்ட். ஊர்ல கொஞ்சம் சொத்தும் இருக்கு. பார்க்கவும் நல்லாவே இருப்பான். இவளுக்கு ஆபரேஷன் முடிஞ்சு, அடுத்து வர முகூர்த்தத்துல கல்யாணம் வெச்சுக்கலாம்னு இருக்கோம். இன்னும் பதினஞ்சு நாள்ல ஆப்பரேஷனுக்கு டேட் குடுத்திருக்காங்க. அதனால வருஷ கணக்குல எல்லாம் எங்களால காத்திருக்க முடியாது" என திட்டவட்டமாகச் சொன்னவர், "முகத்துல அடிச்ச மாதிரி, 'எவ்வளவு திமிர் இருந்தா இப்படி என் கிட்டயே பொண்ணு கேட்டு வந்திருப்ப, வெளியில போடா'ன்னு சுலபமா சொல்லிடலாம். ஆனா, என்ன இருந்தாலும் நான் பார்த்து வளர்ந்த பிள்ளை நீ. அதனால உனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்னுதான் நானும் நினைக்கறேன். இது நிச்சயமா தேனுக்காக இல்லங்கறத நீ புரிஞ்சிக்கணும்.
இன்னும் ஒரு மாசம் உனக்கு டைம் கொடுக்கறேன். அதுக்குள்ள குறைஞ்சது அஞ்சாயிரம் சம்பளத்துல ஒரு நல்ல வேலையோ இல்ல தோதா உனக்குன்னு ஒரு தொழிலையோ நீ ரெடி பண்ணிட்டு வா, என் பெண்ணை உனக்கு கொடுக்கறேன். இல்லனா நீயே ஒதுங்கிக்கனும். நீ எந்த பிரச்னையும் பண்ண மாட்டன்னு நம்பிதான் இந்த வாய்ப்பை உனக்கு கொடுக்கறேன் சத்யா, எக்காரணம் கொண்டும் அதை நீ கெடுத்துக்காத" என்றார் அவர் கட்டளை தொனிக்க.
உண்மையில் மனதாரத்தான் அப்படிச் சொன்னாரோ அல்லது இவ்வளவு குறுகிய காலகட்டத்திற்குள் அவனால் நிச்சயம் இதை செயல்படுத்த முடியாது என்ற எண்ணத்தில் அப்படிச் சொன்னாரோ, பேச்சு மாறுகிறவர் இல்லை அவர் என்பதால், அசைக்கமுடியாத ஒரு நம்பிக்கை உண்டானது சத்யாவுக்கு.
அவருடைய வாய் வார்த்தையே அவனுக்கு போதுமானதாக இருக்க அளப்பரிய நிம்மதியும் தெளிவும் உண்டானது அவனுடைய மனதிற்குள். "நன்றி மாமா, இன்னும் ஒரே மாசத்துல என் படிப்பு முடிஞ்சுடும். இது வரைக்கும் அரியர்ஸ் எதுவும் இல்லாமதான் பாஸ் பண்ணியிருக்கேன். கடைசி வருஷமும் நல்லபடியா முடிச்சிடுவேன். எங்க சீனியர் பசங்க சிலபேர் மெட்ராஸ்ல இருக்காங்க. அவங்க மூலமா இப்போதைக்கு டெம்பரரியா ஒரு வேலை தேடிட்டு, ரிசல்ட் வந்த பிறகு நல்ல வேலைக்கு முயற்சி செய்யறேன்" என நம்பிக்கையுடன் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் சத்யா அவனுடைய அன்னையுடன்.
அவன் வீட்டை விட்டு வெளியில் வரவும் எதிரே வந்துகொண்டிருந்தாள் தேன்மொழி. அவர்கள் இருவரையும் அங்கே கண்டதும் முதலில் அவள் முகத்தில் பய ரேகைகள் படர்ந்தாலும் நிம்மதியும் ஆசுவாசமும் சட்டென வந்து குடிகொண்டது அவளது கண்களில்.
பேச்சே வராமல் போக, கோதையைப் பார்த்து தயக்கத்துடன் புன்னகைத்துவிட்டு தலையைக் குனிந்தவாறு வீட்டிற்குள் சென்று மறைந்தாள் அவள்.
அவளை மனம் முழுவதும் நிரப்பிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான் சத்யா ஆயிரம் கனவுகளுடனும் கற்பனைகளுடனும்.
ஆனால் அடுத்தடுத்து அவன் வாழ்வில் நடந்த அனர்த்த சம்பவங்களில் அவனுடைய அந்த கற்பனைக் கோட்டைகள் அனைத்தும் அப்படியே துகள்களாக நொறுங்கிப்போயின, காலத்திற்கும் புனரமைக்கவே முடியாவண்ணம்.
நடந்தேறிய அசம்பாவிதங்கள் சத்யாவின் வாழக்கையை மட்டுமல்ல தாமரையின் வாழ்க்கையையும் ஆட்டம் காண வைத்தது என்றால் அது மிகையில்லை.
அதிலிருந்து இருவரும் மீண்டு ஒரு இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குள் தேன்மொழிக்குத் திருமணமும் முடிந்து அவள் ஒரு பிள்ளைக்கும் தாயாகியிருந்தாள்.
கடந்து போன அந்த ஓரிரு மாதங்களை மறுபடி ஒருமுறை நினைத்துப் பார்க்கக்கூட அவன் தயாராக இல்லை என்கிற அளவிற்கு கசந்த காலம் அது.
எல்லாம் கொஞ்சம் சீராகி மனதைத் தேற்றிக்கொண்டு அவர்கள் வாழ்க்கை ஒரு சகஜ நிலைக்கு வந்த பிறகு கோதையும் தாமரையும் சேர்ந்து அவனுக்காகப் பெண் தேடினார்கள்தான். நாட்கள் மட்டும் உருண்டோடிக்கொண்டே இருந்ததே தவிர அவ்வளவு சுலபமாக அது கைகூடவில்லை.
நீண்ட எட்டு வருடங்கள் கடந்த பிறகு அவர்கள் வசதிக்கு ஏற்றாற்போல எப்படியோ ஒருவழியாக ஒரு பெண்ணை தேடிப்பிடித்து, ஜாதகமும் பொருந்திப்போய், பெண் பார்த்து அவனுக்கு அவளைப் பிடித்துப்போய், அவளுக்கும் அவனைப் பிடித்துப்போய், தனிமையில் பேசி, நிச்சயமும் நடந்து முடிந்தது.
இனி அவள்தான் தன் வாழ்க்கை என மனதில் பதியவைத்து, அவன் நாட்களை தள்ளிக்கொண்டிருக்க, திருமணத்திற்கு சில தினங்களே இருக்கும் நிலையில் அவனைத் தனியே சந்திக்கவேண்டும் என அழைத்திருந்தாள் அந்த பெண் சுஜாதா.
திருமணக் கனவில் மிதந்துகொண்டே ஆவலுடன் அவன் அவளைக் காணச்செல்ல, அவளுக்கு அந்த திருமணத்தில் விருப்பமேயில்லை என்றாள் அவள்.
எப்படி இருந்திருக்கும் அவனுக்கு?
"இதை நீ முன்னாலயே சொல்லியிருக்கலாமே?" என அவன் எரிச்சலுடன் கேட்டதற்கு, பார்வைக்குப் பிடித்துப் போனதால் சரி என்று ஒப்புக்கொண்டதாகச் சொன்னவள், அவன் பார்க்கும் வேலை அவளுக்குத் திருப்தியில்லை என்றாள். அவன் படிப்பிற்கு வேறு ஏதாவது ஒரு நல்ல நிறுவனத்தில் வேலைக்குச் சென்றிருக்கலாம் என்றாள். வாழ வசதியாக சென்னைக்குள்ளேயே சொந்த வீடு இல்லை என்றாள். விலை அதிகம் உள்ள இருசக்கர வாகனம் கூட அவனிடம் இல்லை என்றாள். அவசரப்பட்டுவிட்டதாகத் தோழிகள் எல்லாம் அவளை ஏளனம் செய்வதாகச் சொன்னாள். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை பாவம் தொனித்தது அவளுடைய பேச்சில். வீட்டில் சொன்னால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவனே திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் பரவாயில்லை என்றும் அவள் சொல்ல, கெஞ்சியோ மிரட்டியோ சமாதானம் செய்து ஒரு குடும்ப வாழ்க்கைக்குள் நுழைய அவனுக்குத் துளியும் விருப்பமில்லாமல் போக, அப்படியே நிச்சயதார்த்த மோதிரத்தைக் கழற்றி அவளுடைய கையில் திணித்தவன், "என்னால கல்யாணத்த நிறுத்த முடியாது. என்ன வேணா சொல்லி நீயே நிறுத்திக்கோ" என்று சொல்லிவிட்டு அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசாமல் வீடு வந்து சேர்ந்தான்.
அவளுடைய வீட்டில் போய் என்ன சொன்னாளோ, இன்றுவரை அவனுக்குத் தெரியாது! ஆனால் திருமணம் நின்றது.
தாமரையும் கோதையும் துடித்துப்போனார்கள். சத்யாவுக்கோ வாழ்க்கையே வெறுத்துப்போனது.
உறக்கம் பிடிக்காமல் பழைய நினைவுகளில் உழன்றவனுக்கு இந்தப் பெண்ணும் அதே செயலைத்தானே செய்கிறாள் என்று ஆயாசமாக இருந்தது. அவளாவது திருமணம் எனும் ஒரு உறவு ஏற்படுவதற்குள் அதை உடைத்தாள், ஆனால் ஹாசினி? இதில் சிறிதளவேனும் நியாயம் இருக்கிறதா?
இவளுக்கு நடந்ததுபோல் எல்லோருடைய காதலும் அவ்வளவு சுலபமாக கைகூடி திருமணத்தில் முடிகிறதா என்ன? கொஞ்சம் கூட முதிர்ச்சியே இல்லாமல் ஒரு அழகான வாழ்க்கையை அவசரப்பட்டு சிதைப்பதா?
'எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு' இல்லையா? என்ற கேள்விகள் மண்டையை குடைந்தது அவனுக்கு.
****************
Comments