top of page

Poove Unn Punnagayil -17

Writer's picture: Krishnapriya NarayanKrishnapriya Narayan

அத்தியாயம்-17

திருமணத்திற்காக வந்திருந்த உறவினரெல்லாம் கிளம்பிப்போய், தினமும் ஒவ்வொருவராக, திருமணம் விசாரிக்க வந்தவர்களிடமெல்லாம் கல்யாண ஆல்பம், வீடியோ என போட்டுக் காண்பித்து, நடந்து முடிந்த திருமண நிகழ்வுகளைப் பற்றிச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்து களித்து, எல்லா ஆரவாரமும் அடங்கி ஒரு வழியாக அவர்களுடைய வாழ்க்கை இயல்புக்குத் திரும்பவே ஒரு மாதத்திற்கும் மேலானது.


ஹாசினியின் திருமணம் மருவிருந்து அந்த சடங்கு இந்த சம்பிரதாயம் என எல்லாம் முடிந்து, முன்கூட்டியே அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவைத்து தேனிலவுக்காக மகள் மற்றும் மருமகனை விமானநிலையம் வரை சென்று கனடாவுக்கு வழியனுப்பி வைத்து, அவர்கள் திரும்ப வந்ததும், கௌசிக்கின் வீட்டிற்கே சென்று மகிழ்ச்சியும் பொலிவுமாகப் பூரிப்புடன் திகழ்ந்த மகளை மனநிறைவுடன் பார்த்துவிட்டு வந்து, மூன்று மாதங்கள் கடந்திருந்தன.


இதற்கிடையில் நாள் பார்த்து அவர்கள் வீட்டிலேயே ஹாசினிக்கு தாலி பிரித்துக் கோர்க்கும் சடங்குக்கு ஏற்பாடு செய்து சங்கரி இவர்களை அழைத்திருக்க, தாத்தா பாட்டி, அத்தை, சித்தி என் சில முக்கியமான குடும்பத்தினரை மட்டும் அழைத்துக்கொண்டு, அதற்குத் தேவையானவற்றை வாங்கிச்சென்று முறை செய்துவிட்டு வந்தனர்.


வெண்ணிலவில்லாத அமாவாசை வானம்போலான மகளில்லாத வீட்டினில் கொஞ்சம் கொஞ்சமாக வாழப்பழகிக்கொண்டிருந்தனர் அந்த அன்னையும் தந்தையும்.


மகளுடன் பழையபடி இழையவில்லையே தவிர, எதற்கும் விட்டுக்கொடுக்காமல் அவளுடைய புகுந்தவீட்டிற்கு வந்துபோய்க்கொண்டுதானிருந்தார் கருணாகரன்.


உலக வழக்கப்படி தானும் தன் அன்னை தந்தையைப் பிரிந்துவந்த ஒரு சராசரி மகள்தான் என்பதால், பெண் குழந்தையைப் பெற்றெடுத்த தினத்திலிருந்தே இப்படி ஒரு பிரிவுக்கு மனம் பழக்கப்பட்டுப் போயிருக்க, தாமரை அதிகம் பாதிக்கப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.


சந்தோஷ் எம்.ஐ.டியில் இடம் கிடைத்து பொறியியல் படிப்பில் சேர்ந்திருக்க, கல்லூரி வாழ்க்கை கொடுத்த புதிய அனுபவத்தில் தமக்கையின் பிரிவைப் பெரிதும் உணரவில்லை.


பெரியவர்களுக்கிருக்கும் தளைகளேதும் இல்லாத காரணத்தால் அவனுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவளை நேரில் சென்று பார்த்துவிட்டு வேறு வந்துவிடுவதால், அவன் எப்பொழுதும் போலவே இருந்தான்.


தாமரை ஹாசினியை கருவில் சுமக்கத் தொடங்கியதுமுதல் இன்று வரை அவளை மனதினில் சுமப்பவர், அக்கருவைப் பிரித்தெடுத்து தன் வயிற்றில் பொத்தி சுமக்க ஒரு வாய்ப்பு மட்டும் கிட்டியிருந்தால் அதையும் கூட செய்திருப்பார் அவர். அப்படி ஒரு பேரன்பும் அக்கறையும் தன் மகவின்மேல் கொண்டவர் என்பதால், அதுவும் அவளது திருமணத்திற்கு மனதளவில் கொஞ்சம் கூட தயாராகியிருக்காத நிலையில் கண்ணிமைக்கும் நேரத்திற்கும் எல்லாம் நடந்து முடிந்திருக்கவே கருணாகரன்தான் தவியாய் தவித்துப்போனார்.


காலை செய்தித்தாளை படித்துக்கொண்டே காஃபி அருந்தும் சமயங்களில், வழக்கம் போல சந்தோஷ் அங்கே வந்து உட்கார்ந்தவுடன், "என்ன சந்து, அக்கா இன்னும் எழுந்து வரல?" என தன்னை மறந்து கேட்டுவிட்டு, தாமரையும் அவனுமாக கிண்டலாகவோ அல்லது பரிதாபமாகவோ அவரை பார்க்கும் பார்வையில் செய்தித்தாள்களுக்குள் தன் உணர்வுகளை மறைத்துக்கொள்வர் அவர். திருமணம் முடிந்த சில தினங்களுக்குள் பல முறை இப்படி நடந்திருக்கிறது.


அவர் சாப்பிட உட்காரும் சமயத்தில் மகளுக்கு பிடித்தமான உணவு ஏதாவது மேசை மேல் இடம்பெற்றிருந்தால், "குழந்தைக்கு கொடுத்து அனுப்பினியா தாமரை?" என்ற கேள்வி தன்னையறியாமல் அவர் இதழ்களிலிருந்து உதிர்ந்துவிடும். அதற்கு முன்னதாகவே அவர்கள் வீட்டில் வேலை செய்பவர் யாராவது ஒருவர் மூலமாக அவளுடைய புகுந்த வீட்டிற்குப் போய்ச் சேர்ந்திருக்கும் அது.


"அவங்க வீட்டுல சாப்பாடு ஒரே காரம்மா, மொத நாள் செஞ்சத ஃப்ரிட்ஜ்ல வைத்து சூடு பண்ணி வேற சாப்பிடறாங்க. எனக்கு பிடிக்கவே மாட்டேங்குது" எனப் பேச்சுவாக்கில் சொல்லி மகள் கண் கலங்கியிருக்க, அவளுடைய உடல் வேறு சற்று இளைத்தமாதிரி தோன்றவும், இப்படிச் செய்ய ஆரம்பித்திருந்தார் தாமரை, ஒரு அதீத பாசத்தில்.


தொடக்கத்தில் ஓரிருமுறை கௌசிக்குடன் வந்து சென்றவள், தொடர்ந்த நாட்களில் தன் காரை எடுத்துக்கொண்டு தனியாக வந்து செல்லத்தொடங்கிவிட்டாள் ஹாசினி அவனுக்கு நேரமே கிடைப்பதில்லை என்று குறைபட்டுக்கொண்டே.


காலை வந்தாள் என்றால், இரவு கௌசிக் வீடு திரும்பும் நேரத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றாற்போல்தான் திரும்பச்செல்வாள் அவள்.


பெரும்பாலும் அவள் அங்கே வரும் நேரங்களில் கருணாகரனோ சத்யாவோ இருக்கமாட்டார்கள்.


சந்தோஷ் கல்லூரியிலிருந்து திரும்பிவரும் நேரத்தில் அவனைப் பார்த்துவிட்டு உடனே கிளம்பிவிடுவாள்.


"அத்த மாமா கிட்ட பர்மிஷன் வாங்கிட்டுதான கிளம்பி வர" என தாமரை கேட்டார் என்றால், "கௌசிக் கிட்ட சொல்லிட்டுதான் வந்திருக்கேன். அவங்க கிட்ட அவன் சொல்லிப்பான்" என இடக்காகப் பதில் சொல்பவள், "இதெல்லாம் நல்லா கேளு, அங்க நான் படுற பாடு உனக்கு தெரியுமா" எனத்தொடங்கி,


'மா... அவங்க குக்கிங் மட்டும் செஞ்சு வெச்சிட்டு, மத்த எல்லா வேலையையும் என்னையே செய்ய வெக்கறாங்கம்மா. பாவம் காலேஜ் போற பொண்ணுன்னு பூஜாவ மட்டும் எதையும் செய்ய சொல்லமாட்டாங்க. மெய்ட் போட்டுக்கலாம்னா, 'மூணு பொம்பளைங்க வீட்டுல இருக்கோம், அப்பறம் எதுக்கு வேலைக்கு ஆளு'ன்னு அதுக்கும் சம்மதிக்க மாட்டேங்கறாங்க’


'நான் ப்ரெண்ட்ஸ் கூட போன்ல பேசினா, என்னை ஒரு மாதிரியா முறைச்சு பாக்கறாங்க'


'கௌசிகூட எங்கயாவது வெளியில போகலாம்னா, அவன் தங்கையையும் கூட கூட்டிட்டுதான் கிளம்பறான். சண்டே மட்டும்தான் அவனுக்கு லீவு. அவன் கூட தனியா டைம் ஸ்பென்ட் பண்ணவே முடியல. மாமா கூட இதை பத்தி ஒரு வார்த்தை கேக்கறதில்ல'


'கொஞ்சம் கூட மேனர்ஸே இல்லாம என் ட்ரெஸ்ஸ எடுத்து போட்டுட்டு காலேஜ் போறாம்மா அந்த பூஜா. கௌசிகிட்ட சொன்னா என்னைத்தான் அட்ஜஸ்ட் பண்ணிக்க சொல்றான். ப்ரெண்ட்ஸ் கூட போன்ல பேசினாகூட பொஸசிவ் ஆகி, என்கிட்ட சண்டை போடறான். அவன் முன்னால இருந்த மாதிரி இல்லம்மா. கல்யாணத்துக்கு அப்பறம் ரொம்ப மாறிட்டான். எனக்கு அங்க இருக்கவே பிடிக்கல' என அடுக்கடுக்காக அனைவரைப் பற்றிய குற்றப்பத்திரிகைகளையும் வாசித்துமுடிப்பாள் அவள்.


"குடும்பம்னா அப்படி இப்படித்தான் இருக்கும். அதுக்காக இப்படியெல்லாம் குறை படக்கூடாது'


'சந்து வந்தா உங்க கூட கூட்டிட்டு போக மாட்டியா? மாப்பிள்ளையோட தங்கை வேற உன் தம்பி வேறன்னு பிரிச்செல்லாம் பார்க்கக்கூடாது ஹசி'


'உன் பாட்டியோட புடவையெல்லாம் நான் கட்டி பார்த்ததில்லையா நீ? இதுல என்ன தப்பிருக்கு, கூட்டுக்குடும்பத்துக்குள்ள பிரிவினை கூடாது. வேணா அவ கேக்கற ட்ரெஸ்ஸை அவளுக்கே கொடுத்துடு'


மாப்பிளை கூட இருக்கும்போது அவர் கூடத்தான் டைம் ஸ்பென்ட் பண்ணனும் ஹசி. நீ கல்யாணம் ஆன பொண்ணு. அதுக்கு ஏத்த ரெஸ்பான்சிபிலிட்டியை நீ எடுத்துதான் ஆகணும். இன்னும் என்ன ப்ரெண்ட்ஸ் கூட போன்ல அரட்டை. அதையெல்லாம் குறைச்சுக்கோ.


புது சூழ்நிலைக்கு பழக்கப்படற வரைக்கும் நீதான் கொஞ்சம் பொறுமையா அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகணும்' என மகளிடம் பொறுமையாகவே எடுத்துச்சொல்வர் தாமரை ஒரு சில விஷயங்களில் அவருக்கே உடன்பாடில்லை என்றால் கூட. தப்பித்தவறி அவர் அவளுக்கு ஆதரவாக ஒரு வார்த்தையை விட்டுவிட்டார் என்றால் கூட மகள் அதையே பிடித்துக்கொண்டு ஆட்டமாய் ஆடி தீர்த்துவிடுவாளோ என்கிற பயம்தான் அவருக்கு.


ஒவ்வொருமுறை அவள் கிளம்பிச்செல்லும்போதும் அங்கே செல்ல மனமே இல்லாததுபோல ஒரு ஏக்கம் புலப்படும் அவளிடம். 'திருமணம் முடிந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை. இவள் இப்படி நடந்துகொண்டால் இது நன்மைக்கே இல்லையே' என அடி வயிறு கலங்கிப்போகும் தாமரைக்கு.


இது அடிக்கடி தொடர, ஒரு நாள் மகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கே வந்துவிட்டார் சங்கரி, அவருடைய மருமகளுக்குத் தெரியாமல்.


'இவங்க என்ன இப்படி சொல்லாம கொள்ளாம, அதுவும் தனியா வந்திருக்காங்க?' என சற்று அதிர்ந்தவர், தன்னை சமாளித்துக்கொண்டு, "வாங்க அண்ணி, வாங்க... வாங்க... வாம்மா பூஜா" என இன்முகமாக அவரைகளை வரவேற்றவர், "சாவிம்மா... தண்ணி கொண்டு வா" என உள்ளே குரல் கொடுத்துவிட்டு, "சில்லுனு மாதுளை ஜூஸ் போட சொல்லட்டுமா, இல்ல காஃபி குடிக்கறீங்களா?" என உபசரிக்க, "நாங்க ஒண்ணும், நிதானமா உட்கார்ந்து விருந்து சாப்பிட வரல" என முகத்தில் அடித்தாற்போல் பதில் சொன்னவர்,


"இப்படி அடிக்கடி பிறந்த வீட்டுக்கு கிளம்பி வந்துட்டே இருக்காளே உங்க பொண்ணு என்ன ஏதுன்னு கேட்கவே மாட்டீங்களா? இப்படியே இருந்தான்னா உங்க பொண்ணுக்கு எங்க குடும்பத்தோட எங்கயாவது ஒட்டுமா?


உங்க வீட்டுல இருந்து வேற அடிக்கடி எதையாவது செஞ்சு கொடுத்தனுப்பிடறீங்க. எங்க வீட்டு சமையல் கூட பிடிக்க மாட்டேங்குது அவளுக்கு?


போறாத குறைக்கு காரை வேற வாங்கி கொடுத்துட்டீங்க. எப்பப்பாரு ஊரை சுத்திட்டு இருக்கா. பெட்ரோல் போட்டே நாங்க திவால் ஆயிடுவோம் போலிருக்கு.


வீட்டுல இருந்தாலும் எப்பவும் போனும் கையுமா, யார் கூடவாவது பேசிட்டே இருக்கறது. ஏதாவது வேலை செய்யச்சொன்னா முகத்தை தூக்கி வெச்சுக்கறா. கௌசிக்கு சாப்பாடு கூட பரிமாறமாட்டேங்கறா. வேலைக்கு போனா கூட பரவாயில்ல, வீட்டுலதான இருக்கா.


எனக்கு இதையெல்லாம் அவ கிட்ட நேரடியா கேக்கவே பயமா இருக்கு. ஏதாவது பெருசாகிப்போய் தனி குடித்தனம் அது இதுன்னா, அது எங்க பையன் வாங்கியிருக்கற வீடு வேற, நாங்கதான் வயசு பொண்ண வெச்சிட்டு நடுத்தெருவுல நிக்கணும்.


ஜாடை மாடையா கௌசி கிட்ட சொன்னாலும், அவனும் பேச யோசிக்கிறான். ஏன்னா அவனையும் கொஞ்சமும் மதிக்கறதில்ல. எங்க முன்னாலையே அவனை வாடா போடான்னு பேசறா. பெத்தவங்களுக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க?


ஃப்ரெண்ட்ஸ் கூட பார்ட்டி அது இதுன்னு நினைச்சா கிளம்பி போறது, நேரங்கெட்ட நேரத்துல திரும்ப வரதுன்னு இவ இஷ்டப்படி நடக்கறதால, அவனே சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம தவிக்கிறான்.


பாவம், எங்க பிள்ளை, ஏற்கனவே வேலை வேலைனு ஓய்வு ஒழிச்சல் இல்லாம ஓடிட்டு இருக்கான். அவன் வீட்டுல இருக்கிறதே சண்டே ஒரு நாள் மட்டும்தான். அன்னைக்கும் எதையாவது பேசி சண்டை போட்டு அவன் நிம்மதிய கெடுக்கறா. இன்னைக்குக்கூட ஏதோ பார்ட்டிக்கு போறதவெச்சு ரெண்டுபேருக்கும் அப்படி ஒரு சண்ட. கோவத்துல ப்ரேக் ஃபாஸ்ட் கூட சாப்பிடாம பட்டினியா கிளம்பி போயிட்டான் அவன். அதுக்கு கொஞ்சம் கூட அலட்டிக்கலங்க உங்க பொண்ணு. இதுக்காகவா லவ் பண்ணி அவசர அவசரமா கல்யாணம் கட்டிக்கிட்டாங்க? இதையெல்லாம் உங்களுக்கு தெரியப்படுத்தணும்னுதான் நேர்லயே வந்தேன்.


வண்டி வண்டியா சீர் செனத்தி செஞ்சு கல்யாணம் செஞ்சுகொடுத்தா மட்டும் பெருமை இல்ல. போற இடத்துல எப்படி நல்லபடியா நடந்துக்கணும்னும் பொண்ணுக்கு சொல்லிக்கொடுத்திருக்கணும்.


இப்பவாவது, பெரியவங்களா லட்சணமா உங்க பொண்ணை கூப்பிட்டு நாலு நல்ல வார்த்தை சொல்லி அனுப்புவீங்களா இல்ல கொஞ்சம் கொஞ்சமா எங்க பிள்ளையை உங்க பக்கம் இழுத்து வீட்டோட வெச்சுக்கலாம்னு ஏதாவது எண்ணம் இருக்கா? எங்களுக்கு இருக்கறது வேற அவன் ஒரே ஒரு பிள்ளை மட்டும்தான்" என ஒரு அவர் பாட்டம் அழுது புலம்பித் தீர்க்க, விட்டால் போதும் ஓடிவிடலாம் என்பதாக முள்மேல் அமர்ந்திப்பவள் போல் உட்கார்ந்திருந்தாள் பூஜா, மௌனமாக அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு. அவளுடைய அம்மாவை சமாதானப்படுத்தக்கூட முனையவில்லை அவள்.


அவரது இயல்பே இதுதான் என்பது புரிந்தாலும், கைகால் வெலவெலத்து போனது தாமரைக்கு. "எங்களை பார்த்தால் அப்படியெல்லாம் தோணுதா உங்களுக்கு. அப்படி ஒரு எண்ணம் இருந்தா கல்யாணத்துக்கு முன்னாலேயே வெளிப்படையா சொல்லியிருப்போம். ரொம்ப செல்லமா வளர்ந்துட்டதால ஏதோ விவரம்கெட்ட தனமா நடந்துக்கறா ஹாசினி, அவ்வளவுதான். நான் அவகிட்ட பேசறேன். நீங்க கவலை படாதீங்க" என வாயில் வந்த பதிலை அவருக்குக் கொடுத்து அவரை அமைதிப்படுத்தியவர், விதவிதமாக சாப்பிடக் கொடுத்து உபசரித்தே அவர்கள் இருவரையும் அனுப்பிவைத்தார்.


இதைக் கணவரிடம் சொன்னால் சிக்கல் மேலும் அதிகமாகும் என்று தோன்றவே, இதை எப்படிப் பக்குவமாக அவரிடம் சொல்வது, மகள் வந்தால் எப்படிச் சொல்லி அவளுக்குப் புரியவைப்பது என தவித்துதான் போனார் தாமரை.


நல்லவேளையாக பாபுவும் மோகனாவும் ஊருக்கு சென்றுவிட்டனர். இல்லையென்றால் அவர்களை வேறு சமாளிக்க வேண்டியதாகியிருக்கும்.


மகனுடன் உட்கார்ந்து இரவு உணவைச் சாப்பிட்டு முடித்து அவன் அறைக்குள் சென்றுவிடவே, வேலையெல்லாம் முடித்துவிட்டு, கல்மேடைமேல் வந்து உட்கார்ந்து கணவர், தம்பி இருவருக்காகவும் காத்திருந்தார் தாமரை கணவரிடம் சொல்லவேண்டியவற்றை மனதிற்குள் ஒத்திகை பார்த்தவாறே.


சில நிமிடங்களிலெல்லாம் மாமன் மச்சான் இருவரும் ஒன்றாக வந்திறங்க, அவர்களுடனேயே வீட்டிற்குள் வந்தவர், சத்யாவுக்கும் கருணாவுக்கு சாப்பாட்டை சூடு செய்து உணவு மேசை மேல் எடுத்துவைத்துவிட்டு, அங்கேயே உட்கார, இருவருமே சுத்தம் செய்துகொண்டு சாப்பிட வந்தனர்.


"சந்து சாப்டானா?" எனக் கேட்டுக்கொண்டே வந்து உட்கார்ந்த கருணா, பாத்திரத்தைத் திறந்துபார்த்துவிட்டு, "வாவ்... இடியப்பம் குருமாவா... சூப்பர்... இது நம்ம குட்டிம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் இல்ல. இன்னைக்கு குட்டிமா இங்க வந்தாளா?" எனத் தான் பாட்டிற்கு மகளைப் பற்றியே பேசிக்கொண்டிருக்க, தாமரையின் சிந்தனை முழுவதும் சங்கரி பேசிவிட்டுப் போனதிலேயே உழன்றது.


அப்பொழுதென்று பார்த்து, நிற்காமல் அடித்துக்கொண்டே இருக்கும் கார் ஹாரனின் சத்தம் செவிகளைக் கிழிக்க, "அக்கா, கோபமா இருந்தான்னா ஹாசினிதான இப்படியெல்லாம் பண்ணுவா? இந்த நேரத்துல அவ எப்படி இங்க?" எனப் பதறியவாறு, கையை கூட அலம்பாமல் சத்யா எழுந்து வாயிற்புறமாக ஓட, கருணாவும் தாமரையும் அவனைத் தொடர்ந்தனர்.


அதற்குள் ஹாசினியின் வாகனம் உள்ளே நுழைந்திருந்தது. அதை அப்படியே நிறுத்திவிட்டு வேகமாக இறங்கிவந்தவள், நேராக வந்து அவளுடைய அப்பாவை அணைத்துக்கொள்ள, அவளுடைய உடல் அழுகையில் குலுங்கியது.


அதுவும் அவள் வழக்கமாக அணியும் இரவு உடையிலேயே கிளம்பி வந்திருந்தாள் ஹாசினி.


"என்ன ஆச்சு ஹசிம்மா..." எனக் கேட்டுக்கொண்டே தாமரை மகளை அவரிடமிருந்து பிரிக்க முயல அவளுடைய பிடி உடும்புப்பிடியாக இருந்தது.


"அவன் நான் நினைச்ச மாதிரி இல்லப்பா.அவன் என்ன ரொம்ப டாமினேட் பண்ணப்பாக்கறான். அவன் எனக்கு வேண்டாம்ப்பா" என அவள் அனற்ற, பதறித்தான்போனார்கள் மூன்றுபேரும்.


ஒருவாறாக சத்யா அவளை இழுத்து தனியாக நிற்கவைக்க, அவளுடைய கன்னம் சிவந்து தடித்து, அதில் விரல்களில் தடம் நன்றாகத் தெரிந்தது. ஒரு நெல்லிக்காய் அளவில் உருண்டு திரண்டு ஒரு பக்க நெற்றி புடைத்து வீங்கியிருக்க அங்கே லேசாக ரத்தமும் கசிந்தது.


நிற்க கூட முடியாமல் தள்ளாடிக்கொண்டிருந்தாள் ஹாசினி.


மகளை அந்த கோலத்தில் பார்க்கவும் ஆத்திரத்தில் மீசை துடிக்க, கண்கள் சிவந்துபோனது கருணாவுக்கு.


கைதாங்கலாக மகளை அழைத்துவந்து வரவேற்பறை சோபாவில் உட்காரவைத்தவர், "கண்ணா, என்ன ஆச்சு? அவனா உன்னை இப்படி அடிச்சிருக்கான்? சொல்லு, அவன் கைய ஒடிக்கறேன்" என அவர் ஆக்ரோஷமாகச் சீற,


"ஆமாம்ப்பா... அவன்தான் என்ன அடிச்சிட்டான். நான் சொன்னத நம்பாம என்னை அடிச்சிட்டான்" என அவள் அதையே திரும்பத் திரும்ப சொல்ல, லுங்கி மட்டும் அணிந்திருந்தவர் நேராக அவருடைய அறைக்குள் சென்று அதன் மேலே ஒரு டிஷார்ட் அணிந்துவந்தவராக, "கிளம்பு சத்யா, மகளிர் காவல்நிலையம் போய் அவங்க பேர்ல கம்பளைண்ட் பண்ணிடலாம்" என அவர் சொல்ல, ஹாசினி அதிர்ந்து அவரை பார்க்க, "என்ன பேசறீங்க நீங்க. முதல்ல அவங்க வீட்டுல போய் என்ன நடந்ததுன்னு விசாரிப்போம்" என்றார் தாமரை தன் வேதனையைக் கட்டுப்படுத்துக்கொண்டு.


"என்ன சமாதானமா போக சொல்றியா. அடிச்சு மண்டையை உடைச்சு வெச்சிருக்கான், இன்னும் என்ன" என கருணாகரன் சீற, "அக்கா சொல்றதுதான் சரி மாமா, உணர்ச்சிவசப்படாதீங்க" என சத்யா அவருடைய படபடப்பைத் தணிக்க முயல, அவர் ஏதோ பதில் சொல்ல முனையவும், வாயிலில் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்க அனைவரின் கவனமும் அதில் சென்றது.


"ஐயோ... என்ன பொண்ணும்மா நீ. இந்த நிலைமையில நீ இப்படி தனியா டிரைவ் பண்ணிட்டு வந்திருக்கக்கூடாதும்மா, என்னை கூப்பிட்டிருந்தால் நானே உன் கூட வந்திருப்பேனே" என மருமகளிடம் சொல்லிக்கொண்டே, பதைபதைக்க உள்ளே நுழைந்தார் சிவநேசன்.


அவரது குரலில் தொனித்த அதீத எரிச்சல், கருணாகரனை மேலும் எரிச்சல் மூட்ட, "ப்ச்... அடிக்கறதையும் அடிச்சு என் பெண்ணை டார்ச்சர் பண்ணிட்டு, நீங்க இப்படியும் பேசுவீங்களா? உங்க எல்லாரையும் குடும்பத்தோட உள்ள வைக்கல, நான் கருணாகரன் இல்ல" என அவர் தன் கோபம் அனைத்தையும் அப்படியே கொட்டித்தீர்க்க, என்ன சொல்வதென்றே புரியவில்லை அவருக்கு. துவண்டு போய் அப்படியே உட்கார்ந்தார் சிவநேசன். தன்னை கொஞ்சம் நிலைப்படுத்திக்கொண்டவர், "தேவையில்லாத மிஸ் அன்டர்ஸ்டான்டிங்தான் சம்பந்தி. பொறுமையா பேசியிருந்தா இவ்வளவு தூரம் வந்திருக்காது. உணர்ச்சிவசப்பட்டு இந்த அளவுக்கு மோசமா போறவன் இல்ல எங்க கௌசிக். மருமகளும் கொஞ்சம் அதிகப்படியாதான் நடந்துக்கிச்சு” என ஏதோ சொல்ல வந்து சட்டென அதை விழுங்கியவர், “அதான் அவன் தன்னை கட்டுப்படுத்திக்க முடியாம கையை நீட்டிட்டான். நீங்களும் இதை பெருசுபடுத்தாதீங்க. உங்களைக் கெஞ்சி கேட்டுக்கறேன்" என அவர் மிகவும் மன்றாடுதலுடன் கேட்க, அவருடைய குரலில் அடக்கப்பட்ட கோபமும் ஆதங்கமும் கலந்திருக்க, கொஞ்சமும் இறங்கி வருவதாக இல்லை கருணாகரன்.


மகளின் இந்த கோலம் அவருடைய சிந்திக்கும் திறனையே அழித்துவிட்டது எனலாம். இல்லையென்றால் மகளிடம் மறைந்திருக்கும் மிகப்பெரிய தவறொன்று அவருக்குப் புரிந்திருக்கும்.


"எதுவா இருந்தாலும் ஸ்டேஷன்ல வெச்சு பேசிக்கலாம், நீங்க இப்ப கிளம்புங்க" என அவர் தன் பிடியிலேயே நிற்க, ஆயாசமாக இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார் தாமரை, சத்யாவுமே.


"கோவிச்சிட்டு போறாடா, இந்த நிலைமைல அவ டிரைவிங் பண்ண கூடாது. போடா, போய் அவள தடுத்து நிறுத்து" என அவர் மகனிடம் கெஞ்சிய கெஞ்சல்களுக்கெல்லாம் பலனே இல்லை. கல்லை போல இறுகிப்போய் உட்கார்ந்திருந்தான் அவன். சங்கரி என்னடாவென்றால் அவர் பங்குக்கு எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவதுபோல் பிள்ளையின் கோபத்தை கிளறிவிட்டுக்கொண்டிருந்தார். நிலைமையை சொல்லிப் புரியவைத்து யாரையும் சமாதானப்படுத்த இயலாமல், எதையும் தடுத்துநிறுத்த திராணியின்றி ஒரு தளர்ந்த நடையுடன் அங்கிருந்து கிளம்பி இங்கே வந்திருந்தார் சிவநேசன்.


இங்கும் நிலைமை கைமீறி போய்க்கொண்டிருக்க, ஒரு இயலாமையுடன் அங்கிருந்து அகன்றார் அவர்.


அப்படியே தாமரையின் மடியில் சுருண்டு படுத்துக்கொண்டாள் ஹாசினி. அவளுடைய உடல் லேசாக சுடுவது போல் தோன்ற, நெற்றியைத் தொட்டு பார்த்தவரின் விரல்கள் அனிச்சையாக மகளுடைய கூந்தலை வருட, அது ஈரமாக இருந்தது. என்ன நடந்திருக்கக் கூடும் என ஊகிக்க முடியாவண்ணம் ஒரே புரியாத புதிராக இருந்தது அவருக்கு.


அதற்குள் ஒரு அரை மயக்க நிலைக்கு அவள் சென்றுகொண்டிருக்க, பசியாக இருக்கும் என எண்ணியவர், சத்யாவிடம் அவளுக்குச் சாப்பிட எடுத்துவரச் சொல்லி, பாராசிட்டமல் மாத்திரை ஒன்றையும் கொடுத்து அவளை உட்கொள்ள வைத்து அவர்களுடைய அறையிலேயே அவளை படுக்கவைத்தார் தாமரை.


அதுவரை உட்கார்ந்த இடத்தை விட்டு அசையவில்லை கருணாகரன்.


****************


0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page