அத்தியாயம்-16
குறித்த நாளில் பிரம்ம முகூர்த்தத்தில் மூத்தோர் ஆசியுடன் சீரும் சிறப்புமாக நடந்துமுடிந்தது ஹாசினி-கௌசிக் திருமணம்.
மாலை வரவேற்புக்காக மக்களெல்லாம் வந்தவண்ணம் இருந்தனர்.
திருமண மண்டபம் அமைந்திருக்கும் வீதியின் முகப்பிலேயே, இரு பக்கமும் தங்க நிற தூண்களில் அமைந்த 'கருணா ஃபௌண்டேஷன்ஸ் லிமிடெட் - கருணாகரன் - தாமரை ஃபேமிலி வெல்கம்ஸ் யூ' என்ற அலங்கார வளைவு அனைவரையும் வரவேற்க, 'ஹாசினி-பீ.ஈ வெட்ஸ் கௌசிக் பீ.ஈ' எனப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மிகப்பெரிய பதாகை மண்டபத்தின் வாயிலில் ஆர்ப்பாட்டமாக நின்றது. அந்த வீதி முழுவதுமே மணமக்கள் இருவரின் விதவிதமான படங்களுடன் ப்ளெக்ஸ் போர்ட்கள் வைக்கப்பட்டிருந்தன.
முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட அந்த மண்டபத்தின் உள்ளே நுழைந்து பார்த்தால், மலர்கள், பழங்கள், பன்னீர், சந்தனம் என கொடுத்து அனைவரையும் உபசரிக்க சீருடை அணிந்த பெண்கள் தயாராக நின்றிருந்தனர்.
குழந்தைகளைக் கவரும் விதமாக பலூன்கள், முகமூடிகள் பாப்கார்ன், பஞ்சுமிட்டாய் போன்றவை ஒரு பக்கம் தாராளமாக விநியோகிக்கப்பட, மற்றொருபுறம் சில பெண்கள் உட்கார்ந்துகொண்டு, நீட்டுபவர் கரங்களிலெல்லாம் மெஹந்தியை வரைந்துதள்ளிக்கொண்டிருந்தார்கள்.
பலவித பழ ரசங்கள், காஃபி, டீ, ஹார்லிக்ஸ், பூஸ்ட் என ஒவ்வொருவரின் தேவையையும் கேட்டுக் கேட்டுக் கொடுத்துக்கொண்டிருந்தனர்.
போதும் போதும் என அனைவரும் சலிக்கும் அளவுக்கு எண்ணிக்கையில் அடங்காத வகையில் உணவு வகைகள் தயாராக இருக்க, உள்ளே நுழையும் ஒவ்வொருவரையும் தனித்தனியாக கவனித்து சாப்பிட அழைத்துச் சென்று உபசரிக்கவென பிரத்தியேக ஆட்கள் நியமிக்கப்பட்டிருக்க, சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்தனர் அனைவரும். ஐஸ் கட்டியில், சர்க்கரை பாகில். காய்-கனிவகைகளில் என விதவிதமான சிற்பங்கள் அலங்காரமாக அடுக்கப்பட்டிருந்தன.
கோவில் திருவிழாக்களே தோற்றுப்போகும் என்கிற அளவுக்கு எந்த பக்கம் திரும்பினாலும் அப்படி ஒரு ஆடம்பரம் ததும்பி வழிந்தது. அந்த அளவுக்கு, மகளின் திருமணம் எந்த ஒரு குறையுமின்றி நடந்தேற பணத்தை தண்ணீராக செலவு செய்திருந்தார் கருணாகரன்.
வண்ணமிகு மணிகளும் கற்களும் பதித்த அடர் நீலமும் பிங்க்கும் கலந்த கௌனில், அதற்குத் தோதாக வைரம் பதித்த மெல்லிய ஆரமும் மிகப்பெரிய காதணியும் அணிந்து, தூக்கிப் போடப்பட்ட அலங்கார கொண்டையும், இரு கைகள் முழுவதுமாக வரையப்பட்ட மெஹெந்தியும், பொருத்தமான ஒப்பனையுமாகத் தாரகையென ஜொலித்தாள் ஹாசினி. அன்று காலை கௌசிக் அணிவித்திருந்த பொன் மஞ்சள் தாலி அவளுக்கு ஒரு புதுவித சோபையைக் கொடுக்க, எடை அதிகமில்லாமல் அவளுடைய உடைக்குத் தகுந்தாற்போல பிங்க் நிற ரோஜா இதழ்களில் தொடுத்த மெல்லிய மாலையைக் கழுத்தில் சூடி, அடர் நீல கோட் சூட்டில் மாலையும் கழுத்துமாகக் கம்பீர தோற்றத்துடன் அவளுக்குப் பொருத்தமாகத் திகழும் கணவனுடைய கையை பற்றியவாறு மேடைமேல் ஏறி வந்து நின்ற மகளைக் காணக்காணத் திகட்டவில்லை கருணாகரனுக்கு.
அந்த நொடி தன் மகள் தன்னை மீறி அவளாகவே ஒரு வாழ்க்கைதுணையைத் தேர்ந்தெடுத்துவிட்டாள் என்கிற எண்ணம் கூட மறந்து போயிருந்தது அவருக்கு.
அவருடைய புது மாப்பிள்ளைக்கு டப் கொடுப்பது போல் அவர் அணிந்திருந்த கோட் சூட்டில் அத்தனை மிடுக்காய் இருந்தார் கருணா.
எளிமையான காஞ்சி பட்டில் எளிய ஒப்பனையுடனிருந்தாலும் கணவருக்கு நிகராக கம்பீரமாக தோற்றமளித்தார் தாமரை.
பிரபல இசைக்குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்க, நாற்காலிகளில் உட்கார்ந்து ஒரு கூட்டம் அதை ரசிக்க, சுற்றமும் நட்புமாக மணமக்களை வாழ்த்திச்செல்ல குழந்தைகளையும் உடன் வைத்துக்கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்தனர் ஆண்களும் பெண்களும்.
நெருங்கிய உறவினரெல்லாம் காலை முகூர்த்தத்திற்கே வந்துவிட்டுப் போயிருக்க, அவருடைய தம்பி மற்றும் தமக்கை குடும்பங்களைத் தவிர வேறு யாரும் இல்லை அங்கே. மற்றபடி, அவருடைய தொழில் வட்டத்தினரும் நண்பர்களும் அருகில் வசிப்பவருமாகப் பலரும் வந்து வாழ்த்திச் சென்றவண்ணம இருக்க, அனைவருக்கும் மகள் மற்றும் மருமகனை அறிமுகம் செய்தே களைத்துப் போனார்கள் தம்பதியர்.
கௌசிக்கின் கல்லூரி நண்பர்கள் அலுவலக நண்பர்கள் என இடையிடையே வந்து சென்றவண்ணம் இருந்தனர்.
தொழிற்சாலையில் சிவநேசனுடன் வேலை செய்யும் நண்பர்கள் ஒரே குழுவாக வந்து வாழ்த்திவிட்டுச் சென்றிருக்க, அவர்களை சாப்பிட அழைத்துப்போனவர் திரும்ப மேடை ஏறவே இல்லை. சங்கரிக்கும் அந்த ஆடம்பர கூட்டம் ஒட்டாமல் போக, அவருடைய குடும்பத்தினருடன் ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்துகொண்டார். பூஜா மட்டும் அண்ணனுக்கு அருகில் மேடையில் இருப்பதும் கீழே சென்று அம்மாவுடன் அமருவதுமாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தாள்.
அப்பொழுது ஆண்களும் பெண்களுமாக ஹாசினியின் கல்லூரி நண்பர்கள் குழாம் மொத்தமாக மேடை ஏறியது.
அதில் சவிதா, மேகலா, ப்ரீத்தி இன்னும் சில தோழிகளும் மூன்று நாட்களாக அவளுடனேயே மண்டபத்தில் தங்கி, மெஹந்தி, சங்கீத், நலங்கு, மணமகன் அழைப்பு, காலையில் நடந்தேறிய திருமண முகூர்த்தம் என அனைத்திலும் கலந்துகொண்டு, ஹாசினி-கௌசிக்கின் குடும்ப வட்டத்திலிருக்கும் இளசுகளுடன் சேர்ந்து கேலியும் கிண்டலுமாக ஆடிப்பாடி செல்பிகளாக எடுத்துத் தள்ளி, இந்த திருமண நிகழ்வையே மறக்க முடியாத கலகலப்பான ஒரு வைபவமாக மாற்றியிருந்தனர்.
பாலா மட்டும் அப்பொழுதுதான் வந்திருந்தாள். அந்த மேடையிலேயே ஹாசினி அவளை பிடி பிடியென்று பிடிக்க, பலவாறான காரணங்களைச் சொல்லி ஒருவாறு அவளை சமாதானம் செய்தாள் பாலா.
பலரை கௌசிக்கிற்கு முன்பே தெரிந்திருக்க, சிலரை மட்டும் அவனுக்கு அறிமுகம் செய்துவைத்தாள் ஹாசினி.
அடுத்து இருப்பவர்கள் வேறு வரிசையில் காத்திருக்க, ஒரு குதூகலத்துடன் மேடையை அடைத்துக்கொண்டு அவர்கள் நகராமல் நின்று பேசிக்கொண்டே இருக்கவும் புகைப்படக்கலைஞர்கள் வேறு மறைக்காமலிருக்குமாறு ஜாடை செய்ய, எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது கௌசிக்கிற்கு.
ஹாசினிக்கு நேராக நின்று எதையோ சொல்லிக்கொண்டிருந்த தருணை கையை பிடித்து இழுத்து தன் பக்கத்தில் நிறுத்திக்கொண்டவன், "போட்டோக்கு போஸ் கொடுங்க ப்ரோ" என்றான் தன் எரிச்சலைப் புன்னகைக்குள் மறைத்தவாறு.
கௌசிக்கின் அருகில் நெருக்கமாக நின்ற தருணின் கரம் அவனுடைய தோளில் படர்ந்து அத்தனையும் கடந்து அவனுடன் ஒட்டிக்கொண்டு நின்ற ஹாசினியின் கழுத்துவரை நீள, அந்த நேரம் பார்த்து சத்யா எதார்த்தமாக போட்டோகிராஃபருக்கு அருகில் வந்து நிற்கவும் ஒரு கட்டுப்பாடின்றி தன்னிச்சையாக நீண்ட அந்த கரம், ஒரே நொடிக்குள் பவ்வியமான ஒரு நிலைக்குப் போனது, ஆசிரியரின் எதிரில் நிற்கும் தவறிழைத்த ஒரு மாணவனுடையதைப் போல.
சில நிமிடங்களில் அனைவரும் கீழே இறங்கி விட, "என்ன பாலா இப்படி பண்ணிட்ட. நம்ம ஃப்ரெண்ட்ஸ் மேரேஜ் எதுலயும் இதுவரைக்கும் நீ இப்படி மிஸ் ஆனதே இல்லையே” என குறைபாடுகொண்ட மேகலாவுக்கு, "ப்ச்... என் சிச்சுவேஷன் அப்படி. என்ன பண்ண சொல்ற" என வருத்தத்துடன் அவள் பதில் கொடுக்கவும், "சரி விடு, ஸ்ட்ரெஸ் ஆகாத" என்ற சவிதா, "நம்ம ஹாசினிய பாரு, ஏஞ்சல் மாதிரி இருக்கா" என்றவாறு தன் கைப்பேசியில் ஒரு காணொலியை ஓடவிட்டுக் காண்பிக்க, சற்று முன் இந்த வரவேற்பில் தொடக்கத்தில் எடுத்ததாக இருந்தது அது.
மூத்தவர்கள் எல்லோரும் ஒரு பார்வையாளராக ஒதுங்கி நிற்க, இளைமையின் துள்ளலுடன் அந்த திருமண மண்டபமே களைக்கட்டியிருந்தது.
ஆஹா கல்யாணம் ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம் ஆச நூறு...
ஆஹா கல்யாணம் ஆ ஆ கல்யாணம்
ஆஹா கல்யாணம் கூத்த பாரே...
பொண்ணு மாப்பிள்ள ஜோரு
ஒண்ணா சேருது ஊரு
மைக்கு செட்டுல பாரு
சேருது மனசு மாலைய போட்டு
மைய பூசுன கண்ணு
வெட்கம் பேசுது நின்னு
பையன் பாக்குற பார்வை
https://youtu.be/X7pKphVK_ZU (Video song)
உள்ள இருக்கு ஏதோ ஒண்ணு... ஆஹா கல்யாணம் ஆஹா கல்யாணம்…
இசையுடன் பாடல் அதிர, அந்த நீண்ட கூடத்தின் ஒரு முனையிலிருந்து பெண்களெல்லாம் நடனமாடிக்கொண்டே அவள் நடக்கும் பாதையில் ரோஜா இதழ்களைத் தூவிக்கொண்டு வர தானும் அவர்களுக்கு இணையாக ஆடிக்கொண்டே நடந்துவந்தாள் ஹாசினி. அதேபோன்று எதிர் முனையிலிருந்து ஆண்களெல்லாம் குழுவாக அடிவார, ஆடுவதாக பெயர்பண்ணியவாறு, ஒரு துள்ளல் நடையுடன் அவளை நோக்கி வந்துகொண்டிருந்தான் கௌசிக். சரியாக மத்தியில் இருவரும் நேருக்குநேர் வந்து நிற்க, அவளுக்கு எதிரில் முட்டி மடக்கி மண்டியிட்டு, "ஐ லவ் யூ!" என்றவாறு அருகில் நின்று பூஜா எடுத்துக் கொடுத்த மோதிரத்தை அவளுடைய விரலில் அணிவித்து அதன்மீதே பட்டும் படாமலும் இதழ் ஒற்றினான் கௌசிக். உடனே மற்றொரு மோதிரத்தை எடுத்து சந்தோஷ் ஹாசினியிடம் நீட்ட, முகம் சிவக்க அவள் அதனை கௌசிக்கின் விரலில் அணிவித்து இதழ் பதிக்க, இளசுகள் எழுப்பிய 'ஓ' என்கிற ஆர்ப்பரிப்பு அந்த மண்டபத்தையே அதிரவைத்தது.
மணமக்கள் இருவர் முகத்திலும் அவ்வளவு பொலிவு, பேதமின்றி இருவருக்குள்ளும் வெட்கம், அதீத மகிழ்ச்சி என முடிந்தது அந்த காணொலி.
"பார்த்தியா பாலா, ஹசியோட அத்தை பொண்ணு சங்கீதா தெரியும் இல்ல, அவளும் அவ ஹப்பியும் சேர்ந்து பண்ண ஏற்பாடு இது. அவங்க வெட்டிங்க்ல ஹாசினிதான் அடம்பிடிச்சு இதையெல்லாம் செஞ்சாளாம். அதுக்கு பதில் மரியாதையாம்.
நேத்து மாப்பிளை அழைப்புக்கு சண்டை மேளம் சும்மா அதிர, ரெண்டு குதிரை பூட்டின சாரட் வண்டில கௌசிக்கும் ஹசியும் வந்து இறங்கினாங்க. என்ன மாஸா இருந்துது தெரியுமாடி?” என சிறு பொறாமை எட்டிப் பார்க்க சவிதா சொல்ல, "செம்ம லக்கி இல்ல சவி, நம்ம ஹாசினி" என புன்னகைத்தாள் பாலா. அவளுடைய பார்வை மட்டும் மேடை மீதே இருக்க, அங்கே கௌசிக்கின் காதோடு பேசிக்கொண்டிருந்தாள் பூஜா.
"கௌசி, தூர இருந்து பார்க்க நீ அண்ணியைவிட கொஞ்சம் ஷார்ட்டா தெரியரியாம். அம்மா வருத்தப்படறாங்க. அவங்க ஹீல்ஸை கழட்டிட்டா இப்படி அகவர்டா இருக்காது. நீயே சொல்லிடு என்ன" அவள் சொல்லவிட்டு இறங்கிவிட, "ஹசி, ப்ளீஸ், நீ இந்த ஹீல்ஸை கழட்ட முடியுமா? என்ன இருந்தாலும் நீ ஏஞ்சல் மாதிரி இருக்க. என்ன விட நீ ஹைட்டா தெரிஞ்சா எனக்கு அக்கா மாதிரி, பார்க்க நல்லா இருக்காதுல்ல" என அவன் கொஞ்சலாக சர்வ ஜாக்கிரதையாகவே சொல்ல, கொஞ்சமும் யோசிக்காமல் மேடையின் அலங்கார தடுப்புக்குப் பின்னால் சென்றவள் தான் அணிந்திருந்த காலணியைக் கழற்றிவிட்டு அவனருகில் வந்து நின்றுகொண்டாள். அவளுடைய அப்பா அம்மா இருவரும் வந்திருந்தவர்களிடம் பேசுவதில் மும்முரமாக இருக்க, நடந்த எதையும் அவர்கள் கவனிக்கவில்லை.
ஆனால், அவளுடைய உடை தரையில் புரண்டதிலேயே ஒரே பார்வையில் அதனைக் கண்டுகொண்டாள் பாலா.
அவளுடைய நெற்றி யோசனையில் சுருங்கியது. நடந்ததை ஓரளவுக்கு யூகித்தவள், கொஞ்சமும் யோசிக்காமல், ஹாசினியை நோக்கி வந்து அவளுக்கு அருகில் நின்றுகொண்டாள் அவளுடைய மேக்கப்பை சரி செய்வது போல.
வந்திருந்த ஒரு பெரியவர் கேள்விகளாகக் கேட்டுத்தள்ள, கௌசிக் தீவிரமாக அவருக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தான். சரியாக அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டவள், "ஏன் ஹசி, ஹை ஹீல்ஸை கழட்டின. இந்த ட்ரெஸ்க்கு அவ்வளவு ஆப்டா இருந்துது. இப்ப பாரு பாட்டம் டிசைன் தெரியவே இல்ல" என்றாள் பாலா குறையாக.
"ப்ச்... போனா போகுது விடு பாலா. எல்லாம் என் ஹப்பிக்காகத்தான்" என எதையும் யோசிக்காமல் அவள் கௌசிக் சொன்னதை அப்படியே அவளிடம் சொல்லிவிட, "போ ஹசி, உனக்கு சூட்சுமமே பத்தல. அந்த பொண்ணு வந்து அவன் கிட்ட சொல்லிட்டு போச்சு. அதான் அவன் ஹீல்ஸை கழட்டச்சொல்லி உன்கிட்ட சொல்லியிருக்கான். ஏன் நீ அவனை விட ஹைட்டா இருந்தா அவன் குறைஞ்சு போயிடுவானாமா? என்னா ஒரு மேல் சாவனிஸ்ட் புத்தி பாரு. நீதான் கௌசிக் அப்படி இல்ல, இப்படி இல்லன்னு சொல்லி அவனுக்கு முட்டுகொடுத்துட்டு இருக்க. ஆனா அவன் முதல்நாளே உன்னை நல்லா டாமினேட் பண்ண ஆரம்பிச்சுட்டான். அதை புரிஞ்சிக்காம நீ இப்படியே அவன் சொல்றதுக்கெல்லாம் தலையை தலையை ஆடினேன்னு வை, அவ்வளவுதான்... உன்னை டிபிகல் ஹவ்ஸ் வைஃப் ஆக்கி அவங்க வீட்டுக்கு சம்பளமில்லாத வேலைக்காரி ஆக்கிடுவான்" என அவள் ஆத்திரத்தில் பொருமித்தள்ள ஹாசினியின் முகமே களையிழந்து போனது. ஆவேசம் வந்தவள்போல உடனே போய் மறுபடியும் அந்த ஹீல்ஸை அணிந்துவந்தாள் அவள். அதை பார்த்ததும் கௌசிக்கின் முகம் சுருங்கிப்போனது.
பாலா, அவர்கள் நண்பர்களுடன் கீழே அமர்ந்திருந்த தருணை பார்க்க, அவனுடைய பார்வையும் அவளிடமே வெறித்திருந்தது.
***
ஒரு வழியாக வந்திருந்த விருந்தினரெல்லாம் சாப்பிட்டு முடித்து, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, இனிப்பு காரம், மற்றும் பரிசுப்பொருட்கள் அனைத்தும் அடங்கிய தாம்பூல பையை பெற்றுக்கொண்டு கிளம்பியவண்ணமிருக்க, மண்டபம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகிக்கொண்டிருந்தது.
இறுதியாக மிகப்பெரிய கேக் ஒன்றை வெட்டி ஒருவர் மீது ஒருவர் பூசிக்கொண்டு, பாட்டும் நடனமுமாக அந்த வைபோகம் உச்சத்தைத் தொட்டது. சில முக்கிய நபர்களைத் தவிர மேடைக்கு அருகில் யாருமே இல்லை எனலாம்.
"ரொம்ப லேட் ஆயிடுச்சு. கொஞ்சம் இன்டிமேட் போட்டோஸ் எடுக்கணும், எல்லாரும் இருந்தா எம்பராஸிங்கா இருக்கும், ப்ளீஸ்" என அங்கே தங்கள் கடமையை ஆற்றிக்கொண்டிருந்த போட்டோக்ராபர்களுள் ஒருவர் சொல்ல, இங்கித்துடன் தாமரை கருணா இருவரும் அங்கிருந்து அகன்றுவிட, சங்கரியின் முகத்தில் ஈ ஆடவில்லை. ஏற்கனவே பீதியில் உறைந்துபோயிருந்தவருக்கு, இப்படி ஒன்று வேறு இருக்கிறதா என அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
ப்ரீ வெட்டிங் ஷூட் சமயத்திலே இப்படிப் பட்ட படங்கள் எதுவும் எடுக்க வேண்டாம் என சத்யா முன்கூட்டியே சொல்லியிருந்ததால், இது பற்றி அவருக்குத் தெரியாமலேயே போனது.
சூழ்நிலை உணர்ந்து சிவநேசன்தான் மனைவியையும் மகளையும் மற்ற உறவினர்களையும் அங்கிருந்து கிளப்பிக்கொண்டு சென்றார்.
மருமகளுக்கும் அவளுடைய கணவனுக்கும் பத்து பவுன் நகையுடன் பட்டுப்புடவை பட்டு வேட்டியுமாகத் தாய்மாமன் சீர் செய்திருந்தான் சத்யா. அதிகாலை கண் விழித்தது முதல் இந்த நொடி வரை உட்காரக் கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தவன், அங்கே நடக்கும் எதையும் கண்டும் காணாமல் அப்பொழுதுதான் போய் ஓரமாக உட்கார்ந்தான்.
ஆடிப்பாடி கூத்தடித்ததில் சோர்ந்துபோயிருந்த சந்தோஷ் ஏற்கனவே அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றிருந்தான்.
ஹாசினியின் தோழியர் மட்டும் அங்கே இருந்தனர், மேக்கப் அது இது என அவளுக்கு உதவி செய்ய. ஒரு வழியாக கிண்டல் கேலியுடன் சினிமா காதல் காட்சிகளே தோற்றுப்போகும் அளவுக்கு அந்த புகைப்படங்களும் எடுத்துமுடிக்கப்பட, அங்கிருந்து கலைந்து சென்றனர் அனைவரும்.
அடுத்த கட்டமாக, புதிதாக மணமுடித்த தம்பதியரின் ஏகாந்த இரவுக்கான ஏற்பாடுகள் கருணாகரனுடைய இல்லத்தில் ஹாசினியின் அறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க அங்கே செல்வதற்காக அவரவர் அறைகளுக்குப் போய் தயாரானார்கள் இருவரும்.
அழகு நிலையத்திலிருந்து வரவழைக்கப்பட்ட பெண்கள் கிளம்பிச் சென்றிருக்க, சவிதா, பாலா, ப்ரீத்தி, மேகலா நான்குபேரும் ஹாசினியுடன் இருந்து அவளுக்கு அலங்காரம் செய்தனர். அவளுடைய அலங்கார கொண்டையைக் களையவே நான்குபேர் தேவையாக இருந்தது அவளுக்கு.
வீட்டிற்குச் செல்வதற்கு முன் செய்யப்படவேண்டிய சிறுசிறு சடங்குகள் செய்துமுடிக்கப்பட, அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து உணவருந்திமுடித்தனர்.
அடுத்தநாள் மருவிருந்துக்கு அங்கே ஏற்பாடுசெய்யப்பட்டிருக்க, மற்ற அனைவரும் அங்கேயே தங்கவேண்டியதாக இருந்தது.
ஹாசினியின் அத்தை நிர்மலாவும், மாமா மணிகண்டனும் முறைப்படி அவர்களை அங்கே அழைத்துச் செல்வதற்காகத் தயாராகி வந்தனர்.
இருவரின் பெற்றோரும், அவர்களை வழி அனுப்ப வாசல் வரை வர, ரிப்பன் கூட பிரிக்கப்படாமல், அங்கங்கே ரோஜா பூக்கள் ஒட்டப்பட்டு, 'ஃபார் ரெஜிஸ்ட்ரேஷன்' என்கிற சிறப்புத் தகுதியுடன் அவர்களை ஏற்றிச் செல்வதற்காகக் காத்திருந்தது ஷோ-ரூமிலிருந்து நேராக அங்கே வரவழைக்கப்பட்டிருந்த புதிய கார்.
"ஹேய், ஹசி... உண்மையிலேயே நீ ரொம்ப லக்கிடி" என சொல்லி அவளை அணைத்துக்கொண்டாள் ப்ரீத்தி. இதையெல்லாம் பார்த்து மகிழ்ச்சி அடைவதற்கு பதில் அச்சம்தான் உண்டானது சங்கரிக்கு.
சத்யா போய் காரின் பின்பக்க கதவைத் திறந்து அவர்களை உட்காருமாறு ஜாடை செய்ய, எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு இருவரும் போய் உட்கார்ந்தனர்.
அத்தை ஹாசினியின் அருகில் உட்கார, முன்னால் போய் உட்கார்ந்துகொண்டார் மாமா. சத்யா சுற்றிவந்து ஓட்டுநர் இருக்கையில் அமர எத்தனிக்க, "என்னப்பா, நீயா இவங்க கூட போகப்போற" என இழுத்தார் சங்கரி.
அனைவரும் கேள்வியாக அவரை பார்க்க, "இல்ல, நல்ல விஷயம் நடந்து குடும்பம் தழைக்க வேண்டாமா?, இப்படி கட்ட பிரம்மச்சாரி கூட போனா அது நல்லாவா இருக்கு" என அவர் கசப்பை உமிழ, கண்களே கலங்கிவிட்டது சத்யாவுக்கு. அடுத்து என்ன செய்வது என்பது கூட விளங்காமல் அவன் அசைவற்று நிற்க, "இதோ பாருங்க அண்ணி, நீங்க சொல்ற இந்த ஒண்டி கட்டைதான், இந்த கல்யாண வேலை ஒவ்வொண்ணையும் பார்த்து பார்த்து செஞ்சான். காலைல அவன் உங்க பிள்ளைக்கு வைரத்துல மோதிரம் போடும்போது இது உங்களுக்கு தெரியலையா" எனத் தாமரை தன்னிலை மறந்து குரலை உயர்த்த, தம்பி என்று வந்தால் தாமரைக்கு தானே அன்னியம்தான் என்பதை உணர்ந்தவராதலால், கருணாகரன் மனைவி பேசியதைக் கண்டுகொள்ளாமல் அடக்கப்பட்ட சிரிப்புடன் நிற்க, காரின் உள்ளே உட்கார்ந்திருந்த கௌசிக்தான் அரண்டுபோனான் 'இந்த நேரத்துல இதெல்லாம் தேவையா? இந்த அம்மா வாயை வெச்சட்டு சும்மாவே இருக்கமாட்டாங்களா?' என்பதாக.
அடுத்து சங்கரி வாய் திறப்பதற்குள், "உன் தம்பி பெண்டாட்டியோட மெட்டி எங்கயோ கழண்டு விழுந்துடுச்சாம், உள்ள புலம்பி அழுதுட்டு இருக்கா, இந்த நேரத்துல இங்க வந்து ஒப்பாரி வெச்சான்னு வை, அபசகுனம்னு இந்த விசேஷத்தை தள்ளி போட்டுட்டு போறாங்க. அப்பறம் நம்ம பிள்ளை மருமக இப்போதைக்கு நம்ம வீட்டுக்கு வரமாட்டாங்க அவ்வளவுதான். முதல்ல உள்ள போய் என்னனு பாரு" என கிசுகிசுப்பான குரலில் சொல்லி சிவநேசன் அவருக்கு பீதியை கிளப்பவும்தான், இங்கே நடப்பதை மறந்து அலறியடித்துக்கொண்டு உள்ளே ஓடினர் சங்கரி.
"பரவாயில்லைக்கா, எனக்கும் டயர்டா இருக்கு. இதை இப்படியே விட்டுடு" என்றவன் கோபாலை அழைத்து வண்டியை எடுக்கச் சொல்லி அவர்களை அனுப்பிவிட்டு, உள்ளே சென்றான் சத்யா.
தாமரையின் விழிகளில் கண்ணீர் பெருக்கெடுக்க, கருணாகரனுக்கே என்னவோ போல் ஆகிவிட்டது. 'முதல் காரியமாக இவனுக்கு ஒரு பெண்ணை பார்த்து ஏற்பாடு பண்ணனும்' என சமீபமாக அடிக்கடி தோன்றிக்கொண்டிருக்கும் எண்ணம் தீவிரமாக வலுப்பெற்றது அவருக்கு.
***
வீட்டின் வாயிலில் வாழைமர முகப்பு கட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கருணாகரன்-தாமரையின் வீடே ஒரு புது மணப்பெண்போல ஜொலிஜொலித்தது.
ஆரத்தி தட்டுடன் சாவித்ரி வாயிலிலேயே அவர்களுக்காகக் காத்திருக்க, அதை வாங்கி ஆலம் சுற்றி மணமக்களை உள்ளே அழைத்துச்சென்று பாலும் பழமும் கொடுத்து அவர்களை அறைக்குள் அனுப்பிவைத்தார் நிர்மலா.
திரைப்படங்களில் வருவது போல வாசமிகு மலர்களால் அமர்க்களமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது ஹாசினியின் அறை.
நிர்மலா அத்தையின் மகள் சங்கீதாவின் திருமணத்தின்போது அவளுடைய புகுந்த வீட்டின் நிர்ப்பந்தத்தால் ஒரு பிரபல நட்சத்திர விடுதியின் தேனிலவு சிறப்பு அறையை அவர்களுடைய முதலிரவுக்காக ஏற்பாடு செய்தனர்.
ஹாசினிக்கும் அதுபோல எதிர்பார்ப்புகள் இருக்க, எங்கோ ஒரு நட்சத்திர விடுதியின் ஹனிமூன் சூட்டில் அவர்களுடைய இல்லறத்தைத் தொடங்குவதை விட, அவர்கள் வீட்டில் அவளுடைய அறையில் இது நடந்தேறவேண்டும் எனத் தாமரை திட்டவட்டமாக சொல்லிவிட, கௌசிக்கின் அம்மா அப்பாவுக்கும் இதுதான் சரியென்று பட, இதுவரைக்கும் நடந்தேறியதே சிறப்பு என்ற மனநிலைக்கு இருவரும் வந்திருக்கவே, மறுப்பு கூற வழியின்றி ஒப்புக்கொண்டனர் சம்பந்தப்பட்ட இருவருமே.
ஹாசினியின் மனதில் சிறு குறை கூட இருக்கக்கூடாது என்கிற எண்ணத்தில் அதற்கான ஆட்களைக் கொண்டு சத்யாதான் இதையும் ஏற்பாடு செய்திருந்தான்.
எல்லா பரபரப்பும் அடங்கி, ஒருவழியாக அறையின் உள்ளே நுழைந்ததும் அந்த சூழ்நிலை கொடுத்த மயக்கம் ஹாசினி - கௌசிக் இருவரையும் மொத்தமாக ஆட்கொள்ள, இதுவரை அணைப்புகள், முத்தங்கள் என சத்தமில்லாமல் எழுதப்பட்டிருந்த அவர்களுடைய காதல் அத்தியாயத்தின் மீதமிருந்த அவர்கள் இதுவரை உணராத சிறு பகுதியும் அங்கே இட்டு நிரப்பப்பட, ஒரு திருமணம் அதன் பரிபூரணத்தை அடைந்தது அங்கே. அவர்களுடைய வாழ்க்கையின் பிரிக்கப்படாத புத்தம்புதிய பக்கங்களும் திறந்துகொண்டன, இருவருமாக இணைத்து எழுதிமுடிக்க. அது கவிதையாக இருக்குமா அல்லது கலவரமாக இருக்குமா? இனி இவர்கள் வாழப்போகும் வாழ்க்கைதான் இதற்கான பதிலைச் சொல்லவேண்டும்!
****************
Comments