top of page

Poove Unn Punnagayil - 15

அத்தியாயம்-15

பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா


ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா


வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞனில்லையா


நான் காத்திருந்தால் காதலின்னும் நீளுமில்லையா…


கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்


உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்


மின்னலே நீ வந்ததேனடி


என் கண்ணிலே ஒரு காயமென்னடி


என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி


சில நாழிகை நீ வந்து போனது


என் மாளிகை அது வெந்து போனது


மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே…


ஜன்னல் வழியாகக் கசிந்துவந்த பாடலில் செவிகளைக் கொடுத்து, எதையும் யோசிக்காமல் நிச்சிந்தையாக கல்மேடையில் உட்கார்ந்திருந்தார் தாமரை.


அடுத்து ஒலிக்கவிருக்கும் பாட்டுக்காக அவர் காத்திருக்க, உள்ளே அமைதி நீடிக்கவும், 'என்ன இன்னைக்கு ஒரே பாட்டோட நிறுத்திட்டான்?' என்ற கேள்வி எழுந்து ஜன்னல் புறமாக அவர் திரும்பிப் பார்க்க, சத்யாவின் அறையில் விளக்கு அணைக்கப்பட்டது.


'பாவம், டயர்ட்ல தூக்கம் வந்துடுச்சு போலிருக்கு. அதான் பாட்டை நிறுத்திட்டான். ம்ம்... இன்னும் எத்தனை வருஷத்துக்கு அந்த பொண்ணையே நினைச்சிட்டு இப்படியே இருக்கபோறானோ?' என்ற எண்ணம் தோன்ற, பெருமூச்சு எழுந்தது அவருக்கு.


ஆனால், விளக்கை அணைத்துவிட்டு அவரை தேடித்தான் அங்கே வந்துகொண்டிருந்தான் சத்யா.


"உன் ரூம் லைட்ட ஆஃப் பண்ணவும், நேரத்தோட படுதுட்டியோன்னு நினைச்சேன்" எனப் புன்னகைத்தார் தாமரை.


"உன் பொண்ணு கல்யாணம் முடியற வரைக்கும் எங்க இருந்து எனக்கு தூக்கம் வரும் ம்..." என அவன் இயல்பாகச் சொல்ல, 'ப்ச்...’ என அலுத்துக்கொண்டவர், "புதுசு புதுசா எதையாவது கிளப்பி விட்டுட்டே இருக்காளேடா இவ... என்னதான் செய்யறது" என்றார் அவர் இயலாமையுடன்.


"ஏன்கா, புதுசா இப்ப என்ன?" என அவன் கூர்மையாக கேட்க, "ப்ச், ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்டாம், அதுவும் எங்கயாவது வெளி நாட்டுல பண்ணணுமாம். இன்னைக்கு கோட்டாக்கு இழுத்துவிட்டிருக்கா" என அவர் அங்கலாய்க்க,


"இதுல என்ன இருக்கு? இப்ப எல்லாரும் செய்யறதுதான. இதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷன்" எனக் கேட்டான் அவன்.


"தனியா இருக்கும்போது இதைப் பத்தி சொல்லியிருந்தா..தான் பிரச்சனையே இல்லையே. அவங்க அத்தை பாட்டி ரெண்டுபேரையும் வெச்சிட்டே இல்ல சொல்லி முடிச்சிட்டா. போறாத குறைக்கு மெஹெந்தி, சங்கீத் லொட்டு லொசுக்குன்னு. 'இதெல்லாம் நம்ம வழக்கத்துல உண்டா? சடங்கு சம்பிரதாயதெல்லாம் புது புதுசா மாத்தலாமா? கல்யாணத்துக்கு முன்னால இப்படி சினிமா ஷூட்டிங் மாதிரி கன்றாவியெல்லாம் நமக்கு தேவையா?'ன்னு அவங்க பங்குக்கு ஆடி தீர்த்துட்டாங்க" என அவர் வருந்த,


"இதெல்லாம் நமக்கு புதுசா என்ன? விடுக்கா பார்த்துக்கலாம். தெரிஞ்ச வெட்டிங் போட்டோ ஏஜன்ஸில பேசி வெச்சிருக்கேன். அவங்களும் ப்ரீ வெட்டிங் ஷூட் பத்தி கேட்டாங்க. நேர்ல வந்து பேசறதா சொல்லியிருக்கேன். அத்தானையும் வெச்சிட்டு பேசி முடிவெடுக்கலாம்" என அவன் சொல்லிக்கொண்டிருக்கவும், கருணாகரனின் வாகனம் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.


"சரி... அத்தான் வந்துட்டாங்க. சாப்பாடு போடணும். நீ போய் தூங்கு, மத்தத காலைல பேசிக்கலாம்" என்றவாறு அங்கிருந்து எழுந்துச் சென்றார் தாமரை.


***


தாமரை உணவு மேசை மேல் சாப்பாட்டை எடுத்துவைக்க, சுத்தப்படுத்திக்கொண்டு இலகு உடைக்கு மாறி அங்கே வந்தார் கருணா.