Poove Unn Punnagayil - 13
அத்தியாயம்-13
ஒரு சுப நிகழ்ச்சி நடந்து முடிந்ததற்கு அடையாளமாக மலர்களும் அட்சதையும் கூடம் முழுதும் இரைந்திருக்க, மூலைக்கு ஒரு பக்கமாக நாற்காலிகள் அங்கும் இங்கும் சிதறிக்கிடந்தன. பாயசம், காஃபி என ஆங்காங்கே கொட்டி வழிந்திருக்க, உணவுப் பண்டங்களும் சிந்தியிருந்தன. ஆட்களைக் கொண்டு அனைத்தையும் சுத்தம் செய்து, வாடகைக்கு எடுத்திருந்த நாற்காலிகளை அடுக்கி மூலையில் வைத்து, மீதமிருந்த உணவு பொருட்களை முறையாக பத்திரப்படுத்தி அருகிலிருக்கும் ஒரு தொண்டு இல்லத்திற்கு அனுப்பிவிட்டு என அனைத்தையும் முடித்து நிமிர இரவு பத்தை கடந்துவிட்டது தாமரைக்கு.
போட்டிருந்த ஒரு சில நகைகளைக் கழற்றி, பட்டுப்புடவையைக் களைந்து சில்லென்ற நீரில் குளித்து நைட்டிக்குள் புகுந்தபிறகுதான் 'அப்பாடா' என்றிருந்தது அவருக்கு. திருமணத்தை நினைத்து வேறு மலைப்பாக இருந்தது.
ஒரு மூன்று மாத அவகாசம் இருந்தால் கூட கொஞ்சம் ஆற அமர வேலை பார்க்கலாம். ஒரே மாதத்தில் அல்லவா நாளை குறித்துவிட்டார் இந்த மனிதர். 'தான் பிடித்த முயலுக்கு மூணே கால்' என்றிருக்கும் கணவரை நினைத்து கோபம்தான் வந்தது. இன்னும் மகள் வேறு எப்படியெல்லாம் ஆட்டி வைக்கப் போகிறாளோ? ஒரு பெருமூச்சோடு அவர் குளியல் அறையிலிருந்து வெளியில் வர, வாகன ஒலிப்பானின் சத்தம் கேட்டது. உடனே காவலாளி கேட்டை திறக்க, தொடர்ந்து அந்த ஒலியும் கேட்டது. ஊரிலிருந்து வந்திருந்த கௌசிக்கின் பெரிய மாமா குடும்பத்தை பேருந்தில் ஏற்றிவிடச் சென்றிருந்த சத்யாவும் சந்தோஷும் திரும்ப வந்திருக்கக் கூடும் என்பதால் உடனே வெளியில் வந்தார் தாமரை.
வாகனத்தை நிறுத்திவிட்டு இருவரும் வந்துசேர, அவர்களுக்குச் சாப்பாடு போட்டு, எல்லோரும் அறைக்குள் சென்று முடங்கியதும் மகளைச் சென்று பார்க்க, நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தாள் அவள்.
ஒரு ஆசுவாச பெருமூச்சு எழ, தங்கள் அறைக்கு வந்தார் தாமரை. நெற்றியின் குறுக்கே கையை போட்டுக்கொண்டு சலனமின்றி படுத்திருந்தார் கருணாகரன்.
விளக்கை அணைத்துவிட்டு அவருடைய இடத்தில் வந்து தாமரை படுக்கவும் அரவம் உணர்ந்து தலையைத் திருப்பி பார்த்தவர், என்ன நினைத்தாரோ தாமரையின் வலது கையை பற்றி தன் நெஞ்சின் மீது வைத்து அழுத்திக்கொண்டார்.
அவருடைய வேகமான இதயத்துடிப்பை உணர்ந்தவர், "ஏங்க, தூக்கம் வரலியா? கல்யாணத்தை நினைச்சு டென்ஷனா இருக்கா?" எனக் கரிசனத்துடன் கேட்க, இல்லை எனத் தலை அசைத்தவரின் கண்கள் கண்ணீரில் பளபளப்பது விடிவிளக்கின் வெளிச்சத்தில் நன்றாகவே தெரிந்தது. மனதில் எதையோ எண்ணி அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருப்பது புரிந்தது.
அதிர்ந்தவராக, என்ன சொல்வது எனப் புரியாமல் தாமரை அசைவற்று அவரைப் பார்த்திருக்க, கருணா உச்சரித்த "சாரி தாமரை" என்கிற வார்த்தைகள் அவரது செவிகளைத் தீண்டியது கிசுகிசுப்பாக. அடுத்த நொடி ஏதோ அதிசயம் நிகழ்ந்துவிட்டதைப் போல அவருடைய உடல் சிலிர்த்தது.
'இப்பொழுது எதற்கு இந்த சாரி?' எனக் கேட்க முடியாவண்ணம் நெஞ்சுக்கூட்டுக்குள்ளிருந்து ஏதோ ஒன்று பந்தாக உருண்டுவந்து தொண்டைக்குழிக்குள் அடைந்துகொள்ள, தாமரையின் கண்களும் கலங்கிப்போனது.
தன் சுயத்தை அவரது கட்டுப்பாட்டுக்குள் வைத்து அவர் தன்னை வதைத்ததை எண்ணியே காலம் கடந்துபோய் இந்த மனிதர் வருந்துகிறார் என்பதை மிக நன்றாகவே உணர்ந்தார் தாமரை.
எந்த வித ரத்த சம்பந்தம் இல்லாமல் ஒரு பந்தத்தில் இணைந்த இருவர், ஒருவரை ஒருவர் உணருவது என்பது அவ்வளவு சுலபத்தில் நிகழ்ந்திடாது. பெண்களுக்கு அந்த நுண்ணுணர்வு இயல்பிலேயே வெகு விரைவாகக் கைகூடிவிடும். ஆனால் ஆண்களுக்கோ தன் பெண்ணை உணர அதிக கால அவகாசம் தேவைப்படும். அப்படியே உணர்ந்தாலும் பெண்ணின் உள்ளம் இரங்கும் வேகத்துக்கு ஆண்களின் உள்ளம் அவ்வளவு சீக்கிரம் மற்றவருக்காக இரங்கிவிடுவதில்லை. பரிணாம வளர்ச்சியில் அவர்களுடைய அடிப்படை வடிவமைப்பே அப்படித்தான். இயல்பிலேயே பெண்ணுக்குள் பொருந்தியிருக்கும் அப்படிப்பட்ட உணர்தலும் இரக்கமும் ஒன்றுசேர்ந்துதான் தாய்மை என வழங்கப்படுகிறது. இதில் சில விதிவிலக்குகள் இருந்தாலும் விதிகள் என்றுமே விலகுவதில்லை.
இப்பொழுதும் கணவருக்காக இரங்கினார் தாமரை.
அனிச்சையாக அவருடைய கரம் கணவரின் நெஞ்சை இதமாக நீவிவிட்டது அவரை ஆசுவாசப் படுத்துவதுபோல். கூடவே தாமரையின் மென்மையான அணைப்பிற்குள் வந்திருந்தவரின் இதயத்துடிப்பு சில நிமிடங்களில் சீராகி, அவரிடமிருந்து கிளம்பிய குறட்டை ஒலி அவர் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டார் என்பதை சொல்லாமல் சொல்ல, கருணாகரன் அவரை பெண் பார்க்க வந்த தினத்தை நோக்கி தாமரையின் நினைவலைகள் பயணப்பட்டன.
கோதையின் ஒன்றுவிட்ட அண்ணன் லோகு மூலம் வந்த சம்பந்தம் அது.
விழுப்புரம் அருகிலிருக்கும் முந்திரித்தோப்பு என்கிற கிராமம் தாமரையுடையது. விவசாயக்குட