top of page

Poove Unn Punnagayil -11

அத்தியாயம்-11

கீழே, நீல நிறத்தால் ஆன ஜரிகை வேலைப்பாட்டுடன் கூடிய பேண்ட் மேலே அதே துணியால் தைக்கப்பட்ட, ஷார்ட் டாப் என்றும் சொல்ல முடியாமல் பிரின்சஸ் கட் பிளௌஸ் என்றும் சொல்ல முடியாமல் ஏதோ ஒன்று முக்கால் கையுடன், அதனைச்சுற்றி குட்டி குட்டி வெண்மணிகள் கோர்க்கப்பட்ட தங்க நிற பூத்தையலுடன் கூடிய அடர் ரோஜா நிறமும் நீலமும் கலந்த தாவணியை அணிந்து, தோகையென விரித்த கூந்தலும் முகத்தில் முழு ஒப்பனையுமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றும் ஒரு தொகுப்பாளினியைப்போல நின்ற மகளைப் பார்த்து தலையில் அடித்துக்கொள்ளலாம் போல இருந்தது தாமரைக்கு.


அவளுடைய கல்லூரி தோழர்களுடன் பிறந்தநாள்பார்ட்டி திருமண வரவேற்பு என செல்லும்பொழுது வழக்கமாக அவள் செய்யும் அலங்காரங்கள்தான். சிக்கென்று இன்னும் அவளை ஒல்லியாக வேறு காட்டித்தொலைக்க, அந்த உடையில் அவளைப் பார்க்கவே சகிக்கவில்லை அவருக்கு.


இதெல்லாம் கோமாளித்தனமாக இருக்கிறது என அவர் எவ்வளவோ முறை அவளிடம் சொல்லிவிட்டார். 'லேட்டஸ்ட் ட்ரெண்ட் - ஃபேஷன்' என்கிறபெயரில் இதேபோல் தாங்களும் உடை அணிந்து இவளையும் ஊக்கப்படுத்த ஒரு கூட்டமே இவளை சுற்றி உண்டு. அதுவும் அந்த பாலா இருக்கிறாளே! அவளை பற்றி சொல்லவே தேவையில்லை. ஷ்... அப்பா... தலையைப் பிடித்துக்கொண்டார் தாமரை.


"என்ன ஹசி இது, தலை விரி கோலமா, அதுவும் என்ன கன்றாவி டிரஸ்ஸிங் இது. ஆயிரம் ஆயிரமா செலவு பண்ணி, பியூட்டி பார்லர் போய் இதைத்தான் செஞ்சிட்டு வந்தியா? உன்னோட ட்ரெஸ்ஸும் மேக்கப்பும் இந்த அகேஷனுக்கு கொஞ்சம் கூட செட்டே ஆகலயே" என அவர் கவலையுடன் சொல்ல,


"ம்மா... போம்மா, அது சரியில்ல இது சரியில்ல, இதை செய்யாத அதை செய்யாதன்னு எதுக்கெடுத்தாலும் ஆயிரம் நொட்டை சொல்லிட்டு" என அலட்சியத்துடன் சிடுசிடுத்தாள் மகள்.


தான் செய்வது கொஞ்சம் அதிகப்படி என்று தெரிந்தாலும், அப்பா தன்னிடம் மனவருத்தத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்தாலும், கொஞ்சம் கூட குற்றக் குறுகுறுப்பே இல்லாமல், யாரைப் பற்றியும் அக்கரை கொள்ளாமல் தன் காரியம் நடந்தால் சரி என்கிற மனோபாவத்தில் வெகு இயல்பாகத் தான் செய்வதையே செய்துகொண்டிருக்கும் மகளைப் பார்த்ததும் அப்படி ஒரு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது தாமரைக்கு.


"ஆமாண்டி... அப்படிதான் சொல்லுவேன். என் வீட்டுல இருக்கற வரைக்கும் நீ நான் சொல்றதைத்தான் கேட்கணும். ஏற்கனவே தாத்தா பாட்டி ரொம்பவே மனசு கஷ்டப்பட்டுக்கறாங்க. இத்தனைக்கும் அவங்களுக்கு முழுசா எதுவும் தெரியாது. நீ வேற இப்படி வந்து நின்னன்னு வெச்சுக்கோ, இதுக்கு வேற நான் வண்டி வண்டியா வாங்கி கட்டிக்கணும். சரி பரவாயில்ல சுடிதார் போட்டுக்கோன்னுதான் சொல்லலாம்னு நினைச்சேன். நீ இப்படி எடுத்தெறிஞ்சு பேசற இல்ல, மரியாதையா கீர்த்தனா கல்யாணத்துக்கு உங்க அத்தை எடுத்து கொடுத்தாங்க இல்ல, அந்த பட்டுப்புடவையை கட்டிட்டு ரெடியா இரு, நான் வந்து ஜடை பின்னி பூ வெக்கறேன். ஏதாவது மறுத்துப் பேசின, இப்படியே சத்யாவை கூட்டிட்டு ஊருக்கு போயிட்டே இருப்பேன், கல்யாணமாவது ஒண்ணாவது... ச்சை" என ஒரு ஆதங்கத்தில் அவர் பட்டாசாய் பொரிய, 'திக்' என்று ஆனது ஹாசினிக்கு.


அம்மா எப்பொழுதும் பேசும் பேச்சுதான். ஆனாலும், எப்பொழுதும் அவள் பக்கம் பொங்கி பிரவாகிக்கும் அவளுடைய அப்பாவின் தயவுதான் இப்பொழுது சுத்தமாக கிட்டுவதில்லையே! அம்மாவையும் பகைத்துக்கொண்டால் வேலைக்கே ஆகாது என்பது உரைக்க, அதுவும் அவர் அழுத்தந்திருத்தமாக சொன்ன 'என் வீடு' என்கிற வார்த்தை அவளைத் தொலைதூரத்தில் தள்ளி நிறுத்துவது போல் தோன்றவும், கண்களில் நீர் கோர்த்தது அவளுக்கு.


அதற்கும், 'அதுதான் எல்லாமே உன் இஷ்டத்துக்கு நடக்குதே, அப்பறம் எதுக்கு இப்படி கண்ணை கசக்கிட்டு இருக்க? நீலிக்கு நெத்தியில கண்ணீர்னு சும்மாவா சொன்னாங்க' என அடுத்த அதட்டல் விழும் என்பது புரிந்து கண்ணீரை உள்ளிழுத்தவள், மறு பேச்சு பேசாமல் தன் வார்ட்-ரோப் நோக்கிச் சென்றாள் புடவையை எடுக்க.


ஒருவாறாக கௌசிக் தன் குடும்பத்துடன் முறைப்படி அவளை பெண் பார்க்க வருவது என்று ஏற்பாடாகியிருக்க, அந்த பொன் அந்தி மாலைப்பொழுதில் வெகு வெகு பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது கருணாகரன் - தாமரையின் இல்லம்.


ஒரு பக்கம் சிறப்புச் சமையல், மறுபக்கம் பெண்ணின் அலங்காரம், மற்றுமொருபக்கம், மூத்த மகள் மற்றும் இளைய மகன் குடும்பத்தை அன்றைய முக்கிய நிகழ்வில் கலந்துகொள்ளும்படி அவர்களுக்கு நடுவில் பிறந்தவன் அழைக்கவில்லை என முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டிருக்கும் மாமியார் மாமனாரை சமாளிப்பது என பம்பரமாகச் சுழன்றுகொண்டிருந்தார் தாமரை.


அதற்கு நேர்மாறாக சுரத்தே இல்லாமல் வரவேற்பறையை சோபாவில் அமர்ந்திருந்தார் கருணாகரன். புதிதாக அவர்களுடைய வாழ்க்கையில் பங்குகொள்ளப்போகும் குடும்பத்தை, குறிப்பாகத் தான் பெற்ற மக்களுக்கு இணையான முக்கியத்துவத்தைக் கொடுத்தாகவேண்டிய அதுவும் அவரது செல்வ மகளே தன்னிச்சையாகத் தேர்ந்தெடுத்திருக்கும் நபரை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்கிற தயக்கம், ஏன் ஒருவிதமான பயம் என்றும் கூட அதை சொல்லலாம், அப்படிப்பட்ட ஏதோ ஒன்று அபரிமிதமாக அவரது மனதை அழுத்திக்கொண்டிருந்தது.


ஒரு மினி ஹால் போல பிரம்மாண்டமான வரவேற்பறையைக் கொண்டது அவர்களுடைய வீடு.


ஒரே நேரத்தில் கருணாகரனுடைய அக்காவின் குடும்பம் தம்பியின் குடும்பம் என எல்லோரும் ஒன்றுகூடும்போது அனைவரும் ஒருசேர அமர்ந்து பேச ஏதுவாக பெரிய பெரிய சோஃபாக்கள் போடப்பட்டிருக்கும் அங்கே.


ஒருவருக்கொருவர் சந்தித்துப் பேசி அன்றே ஒரு முடிவுக்கு வரும்பட்சத்தில் உடனுக்குடன் ஒப்புத்தாம்பூலம் செய்து திருமணத்திற்கு நாளும் குறித்துவிடலாம் என்ற ஏற்பாட்டுடன் கௌசிக்கின் வீட்டினர், அவனுடைய தாய்மாமா அத்தை பெரியப்பா குடும்பங்கள் என அவர்களுடைய நெருங்கிய உறவினர்களை உடன் அழைத்தே வருவதால், அனைவரும் அமர்வதற்கு வசதியாக வாடகைக்கு கொஞ்சம் நெகிழியால் ஆன நாற்காலிகளை வரவழைத்திருந்தான் சத்யா.


சந்தோஷ் அவற்றைப் பிரித்து வரிசையாகப் போட்டுக்கொண்டிருக்க, இரண்டு கைகளிலும் கட்டைப்பைகளுடன் உள்ளே நுழைந்த சத்யா, "சந்து, உள்ள போய் அம்மா கிட்ட ரெண்டு மூணு டிரே வாங்கிட்டு வா" என்று சொல்ல உள்ளே சென்றவன் சில தாம்பாள தட்டுகளுடன் திரும்ப வர, அவன் வாங்கி வந்திருந்த வெற்றிலை பாக்கு வாழைப்பழம் பூ என அனைத்தையும் எடுத்து அதில் அடுக்கி அங்கே போடப்பட்டிருந்த தேநீர் மேசை மேல் வைத்தான் சத்யா.


இதையெல்லாம் ஒரு உணர்வற்ற பார்வை பார்த்துக்கொண்டிருந்த கருணாவிடம் அவனது கவனம் செல்ல, 'இவ்வளவு தூரம் வந்த பிறகு இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இவர் இப்படியே இருக்கப்போகிறாரோ?' என்கிற ஆயாசத்தில் அவனுடைய நெற்றி சுருங்கியது.


அவன் கௌசிக்கை நேரில் சந்தித்து ஒரு வாரம் கடந்திருந்தது.


அவனுடைய அலுவலகம் இருந்த பகுதியிலேயே ஒரு காஃபீ ஷாப்பில் சத்யாவை வந்து சந்திக்குமாறு, நாள் நேரம் என அதையும் தானே முடிவு செய்து ஹாசினியிடம் சொல்லியிருந்தான் கௌசிக்.


சரியாக அவன் சொன்ன நேரத்திற்கு சத்யா அங்கே வந்து காத்திருக்க, அவன் இரண்டு மூன்று காஃபியை பருகி முடித்து, சில நிமிடங்கள் கடந்த பிறகே வெகு தாமதமாக அங்கே வந்து சேர்ந்தான் அவன்.


தொழில் நிமித்தம், முன்பே ஒருவருக்கு ஒருவர் பரிச்சயமானவர்களாக இருக்க, அறிமுகப்படலம் எதுவும் தேவை இருக்கவில்லை இருவருக்குள்ளும்.


வயதில் மூத்தவனாக இருந்தாலும், "ஹாய்... எப்படி இருக்கீங்க கௌசிக்" என மரியாதையுடனேயே அவனை எதிர்கொண்டான் சத்யா.


"ம்ம்... யா... யா... ஃபைன்" என அவன் பதில் சொன்ன விதத்திலேயே இந்த சந்திப்பில் கொஞ்சமும் அவனுக்கு விருப்பமில்லை என்பது நன்றாகவே புரிந்தது சத்யாவுக்கு. ஆனாலும் வேறு வழி இல்லை. தன் அக்கா - அத்தானின் மன நிம்மதிக்காக இதை அவன் எதிர்கொண்டே ஆகவேண்டும். ஆயிரம் தவறிழைத்தாலும் அவர்களுடைய கண்ணின் மணியானவளின் எதிர்காலமும் இதில் அடங்கியே இருக்க, அவ்வளவு சுலபமாகப் பின்வாங்க விரும்பவில்லை அவன்.


பின் அவனுக்கான காஃபியை சத்யாவே போய் வாங்கி வந்தான்.


அதை எடுத்து பருகியவாறு, "என்னவோ என்னை மீட் பண்ணனும்னு ஹாசினிகிட்ட சொன்னீங்களாமே" என என்னவோ அவனுக்கு இதிலெல்லாம் சம்பந்தமே இல்லாததுபோல் அவன் கேள்வி கேட்க, 'பெரிய தொரன்னு நினைப்பு மனசுல' என உள்ளுக்குள்ளே கடுப்பானவன், "ஏன்... என்ன விஷயம்னு ஹாசினி உங்ககிட்ட சொல்லலியா? எனக் கேட்டான் சத்யா நக்கலாக.


"நான்தான் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு அவ கிட்ட சொல்லிட்டேனே. இதுல நாம டிஸ்கஸ் பண்ண என்ன இருக்கு"


திருமணம் என்கிற வார்த்தையே வெளிப்படாமல் மிக சாதுரியமாக அவன் பதில் கொடுக்க,


"என்ன மிஸ்டர் கௌசிக், நீங்க இந்த விஷயத்துல சீரியஸா இல்லையா? பிக் அப், ட்ராப், எஸ்கேப்ன்னு சும்மா டைம்-ப்பாஸ்தானா. இது எங்க ஹசிக்கு இன்னும் புரியல போலிருக்கே? உங்கள அந்த அளவுக்கு நம்பிட்டு இருக்கா"


இப்பொழுது காதல் என்கிற வார்த்தையை வேண்டுமென்றே தவிர்த்து அவனை வாரினான் சத்யா.


கவுசிக்கின் முகம் இறுகிப்போனது. "என்ன இப்படி பேசறீங்க. ஹாசினிதான் என் லைஃப். அதுல எந்தவித செகண்ட் தாட்டும் இல்ல. ஆனா என் தங்கைக்கு கல்யாணம் செய்யாம என் கல்யாணத்தை பத்தி யோசிக்க முடியாது"


"கல்யாணத்தை பத்தி யோசிக்க முடியாது, ஆனா காதலிக்கலாமா?"


"காதலெல்லாம் பிளான் பண்ணியா செய்வாங்க?"


"அதே மாதிரி இந்த கல்யாணமும் எந்தவித பிளானும் இல்லாம நடக்கட்டுமே. அதுக்கு மட்டும் ஏன் 'நோ' சொல்றீங்க? உங்க தங்கை இன்னும் கல்யாணத்துக்கே ரெடி ஆகல. அதுக்குள்ள அதை பத்தி ஆயிரம் கவலை இருக்கில்ல உங்களுக்கு. அப்படிதான் எங்களுக்கும். அண்ட் உங்க தங்கையோட கல்யாணம்தான் பிரச்சனைன்னா, முதல்ல அவங்க படிப்பை முடிக்கட்டும். அதுக்குள்ள ஒரு நல்ல வரனா பாருங்க. நாம எல்லாரும் சேர்ந்து அவங்க கல்யாணத்தை சிறப்பா நடத்தலாம்"


'நீ யார் என் தங்கையின் திருமணத்தைப் பற்றி பேச?' என்பதுபோல் சீற்றமாக அவனை ஒரு பார்வை பார்த்தவன், "ப்ச்... சொன்னா ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க. எனக்கு மினிமம் டூ இயர்ஸ் டைம் வேணும். ப்ளீஸ் கம்பல் பண்ணாதீங்க" என்றான் கௌசிக் கொஞ்சம் குரலை உயர்த்தி.


அவனுடைய தங்கையின் திருமண விவகாரம் மட்டுமல்லாமல் அவனுடைய மாதாந்திர வரவுசெலவு பிரச்சினைகளைப் பற்றியும் ஹாசினி சத்யாவிடம் சொல்லியிருந்தாலும், அவன் அதைத் தெரிந்ததாக காட்டிக்கொள்ளவில்லை.


அதற்கேற்றாற்போல், கௌசிக் தப்பித்தவறிக்கூட அதுபற்றி அவனிடம் எதுவும் வாய் திறக்கவில்லை என்பதால் அவனுடைய தன்மானத்தைச் சீண்டும் விதமாக எதுவும் பேசக்கூடாது என்பது உரைக்க, "உங்களுக்குத்தான் புரியல கௌசிக். உங்க லவ் மேட்டர் அத்தானுக்கு தெரிஞ்சு போச்சு. அதனால, ஹாசினிக்கு உடனே கல்யாணத்தை முடிக்கணும்னு வீட்டுல ஒரு ப்ரெஷர் பில்ட் ஆயிடுச்சு. எப்படியோ அத்தான் ஒத்துக்கிட்டு இந்த அளவுக்கு இறங்கிவந்ததே பெருசு. எதையெதையோ கரணம் காட்டி நீங்க இப்படி தள்ளிபோடறதுல எந்த வித நியாயமும் இல்ல"


நிதானத்தை இழுத்துப்பிடித்து அவனுக்குப் புரியவைக்க முயன்றான் சத்யா.


"ப்ச்... என் சைட்ல என்னவோ அதை ஆல்ரெடி சொல்லிட்டேன். நீங்கதான் உங்க அத்தான் கிட்ட சொல்லி புரியவைக்கணும். நான் ஒண்ணும் உங்க வீட்டு பெண்ணை கை விட்டுட மாட்டேன். நீங்க கவலையே படவேண்டாம்"


என்ன பேசுகிறான் என்று தெரிந்துதான் இப்படிப் பேசுகிறானா என்றே புரியவில்லை சத்யாவுக்கு. என்னவோ இவனை விட்டால் அவர்களுக்கு வேறு மாற்றே இல்லை என்கிற ரீதியில் அவன் இப்படி அளவுக்கு மீறி வார்த்தையை விட, அவனுடைய மொத்த பொறுமையும் அறுந்து போனது சத்யாவிற்கு.


அதுவும் அவ்வளவு மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அவனுடைய அத்தானை அவன் துச்சமாகப் பேசவும் அப்படியே பொங்கிவிட்டான் அவன்.


"என்னவோ எங்க பொண்ணுக்கு உன்னை விட்டா வேற விதி இல்லன்னு வாழ்க்கை பிச்சை கேட்டு உன்கிட்ட கெஞ்ச வந்தேன்னு நினைச்சியா. எடுத்து சொல்லி நிலைமையை புரியவைக்கலாம்னு பாத்தேன். இதெல்லம் வேலைக்கே ஆகாது போலிருக்கே. என்ன இப்படி அந்த காலத்து ஹீரோ மாதிரி கையை விட மாட்டேன் காலை விடமாட்டேன்னு டயலாக் பேசற? ம்ம்...


காதல்னு பேர் சொல்லிட்டு பப்ளிக் ப்ளேஸ்னு கூட பார்க்காம அவ கிட்ட அளவு கடந்து இன்டிமேட்டா நடந்துட்டு இருக்க. எந்த அளவுக்கு உன் மேல நம்பிக்கை இருந்தா அவ இதுக்கெல்லாம் உன்னை அலவ் பண்ணியிருப்பா? அது எப்படி கௌசிக், உனக்கு உரிமையே இல்லாத ஒரு பெண்ணை தொட இவ்வளவு துணிச்சல் வந்துது உனக்கு. உனக்கும் ஒரு தங்கை இருக்கா இல்ல? அவளை இப்படி ஒருத்தன் தொட்டா வேடிக்கை பார்த்துட்டு இருப்பியா? அன்னைக்கு அந்த இடத்துல அத்தான் இருந்ததால, அதுவும் பொண்ணுன்னு வரும்போது அவர் ரொம்ப எமோஷனல் ஆகிட்டதாலதான் நீ தப்பிச்ச? நான் மட்டும் அன்னைக்கு அங்க இருந்திருந்திருந்தேன் வை, உன் கையை உடைச்சிருப்பேன். அவ கன்னம் பழுத்திருக்கும்" என அவன் அடிக்குரலில் உக்கிரமாக உறுமிக்கொண்டே போக, பேச்சே வரவில்லை கௌசிக்கிற்கு.


அன்று அந்த மாலில் வைத்து இவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்துவிட்டு சத்யாதான் இவ்வளவு தூரம் இழுத்துவிட்டிருக்கிறான் என்று அவன் ஏக கடுப்பிலிருக்க, கருணாகரன்தான் இவர்கள் இருவரையும் ஒன்றாக, நெருக்கமாகப் பார்த்திருக்கிறார் என்று கேள்விப்படவும் உண்மையிலேயே பதறித்தான்போனான் கௌசிக்.


என்று எங்கே வைத்து என்றே புரியவில்லை அவனுக்கு. இது என்றோ ஒருநாள் நடந்திருந்தால் தெரிந்திருக்கும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இப்படி சந்தித்துப் பேசுவது என்பது சமீப காலமாகக் கொஞ்சம் அதிகரிதல்லவா போய்விட்டது!


"இதோ பார் கௌசிக், அத்தான் அவளுக்கு வேற இடம் பார்த்துட்டாங்க. ஏதோ ஹாசினிக்கு உடம்பு சரியில்லாம போகவும் லேசா மனசு மாறியிருக்காங்க அவ்வளவுதான். நீ இப்படி ஓவர் ஸீன் போட்டேன்னு வை, அவங்க பார்த்து வெச்சிருக்கிற பையனுக்கே அவளை கட்டிவெச்சிடுவாங்க. அப்பறம் யாராலயும் தடுக்க முடியாது. இப்போதைக்கு நான் ஹசிக்காக பார்க்கறேன். அதான் இவ்ளவுதூரம் வந்து பேசிட்டு இருக்கேன். நீ இப்படி செஞ்சு, கடுப்பாகிப்போய் மாமா மட்டும் வேற முடிவு எடுத்துட்டாங்கன்னா நான் அவங்க பக்கம்தான் நிப்பேன். அதுக்கு அப்பறம் ஹாசினிகிட்ட உன்னால இல்ல, வேற எவனாலயும் நெருங்க முடியாது? அவ்வளவுதான், நான் சொல்ல வந்ததைச் சொல்லி முடிச்சிட்டேன்.


உண்மையிலேயே உனக்கு ஹசி வேணும்னு நினைச்சன்னா மரியாதையா உங்க வீட்டுல சொல்லி, பொண்ணு கேட்டு வா" என்று அதிரடியாக சத்யா கௌசிக்கை கிட்டத்தட்ட மிரட்ட, அவனுடைய முகம் பேய் அறைந்ததுபோல் ஆனது.


அதுவே சொன்னது ஹாசினி அவனுக்கு எவ்வளவு முக்கியம் என்று. அவன் சர்வ நிச்சயமாக பெண் கேட்டு வருவான் என்று.


அதை மனதில் குறித்தவாறே இருக்கையிலிருந்து எழுந்து நின்றவன் மேசைமேலிருந்த கைப்பேசியை எடுத்து தன் சட்டைப் பைக்குள் திணித்துவிட்டு, தன்னுடைய தலைக் கவசம், வாகன சாவி, அனைத்தையும் கையில் எடுத்துக்கொண்டு, அங்கிருந்து கிளம்பிச்சென்றான் சத்யா.


கொடுத்த அழுத்தத்தில் அவன் காலதாமதம் செய்யாமல் வீட்டில் சென்று பேசியிருக்க, முன்னமே தகவல் சொல்லிவிட்டு இதோ இன்று ஹாசினியை பெண் பார்க்க வருகிறார்கள்.


கைப்பாட்டிற்கு வேலையைச் செய்துகொண்டிருக்க, அவன் எண்ணம் மொத்தமும் நடந்த நிகழ்வுகளை நோக்கிப் போயிருக்க, வீட்டின் வாயிலில் அரவம் கேட்கவும் மாப்பிள்ளை வீட்டினர் வந்து இறங்குவது புரிய, "அக்கா, அவங்கல்லாம் வந்துட்டாங்க" எனக் குரல் கொடுத்தவாறு வெளியில் சென்றான் சத்யா.


"வாங்க... வாங்க" என அவன் பொதுவாக அனைவரையும் வரவேற்க, அதற்குள் தாமரையும் வந்து அவனுடன் இணைந்துகொள்ள, வீட்டின் தலைவர் என்கிற முறையில் கருணாகரனும் அங்கே வந்து நின்றார் ஒரு விரைப்புடன்.


அப்பொழுது பின்னால் வந்துகொண்டிருந்த கௌசிக்கை பார்த்தவன், "வாங்க கௌசிக்" என அவனுக்கான தனிப்பட்ட கவனிப்பைக் கொடுக்க, ஒருவன் தன்னை மதித்து வரவேற்கிறான் என்கிற உணர்வே இல்லாதவன் போல சிறிதும் கண்டுகொள்ளாமல் அவனைக் கடந்துபோனான் கௌசிக். வேண்டுமென்றே அவன் செய்த அவமரியாதையில் கொஞ்சம் சுருக்கென்று தைத்தது சத்யாவுக்கு. அப்பொழுதுதான் கவனித்தான் அவன், கௌசிக்கிடம் மட்டுமல்ல அங்கே வந்திருந்த அனைவரிடமுமே ஒரு இறுக்கம் தெரிந்தது.


****************


0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page