top of page

Poove Unn Punnagayil - 10

அத்தியாயம்-10

மகள் நலமாகத்தான் இருக்கிறாள் என்பது உறுதியாகத் தெரிந்துபோனதில் அப்படி ஒரு நிம்மதி வந்து சேர்ந்தது கருணாகரனுக்கு.


அவளை ஒரு நோயாளி போல் காண சகிக்காமல், "நீயே தாமரை கூட இருந்து, இவளை டிஸ்சார்ஜ் பண்ணி பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடு சத்யா" என மைத்துனனிடம் சொன்னவர், "அடுத்து என்ன செய்யணுமோ அதுக்கும் ஏற்பாடு பண்ணிடு. நான் பெத்த கடனை முடிச்சிடறேன்" என்று அங்கே வைத்தே அவனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு விட்டேற்றியாக அங்கிருந்து அகன்றார் அவர், அருகிலேயே நினறிருந்த தாமரையிடம் ஒரு வார்த்தைக்கூட பேசத்தோன்றாமல், அவருடைய மனநிலையை கணிக்க தவறியவராக.


இது அனைத்தையும் ஒரு பார்வையாளராக மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தார் தாமரை.


மகள் விஷயத்தில் ஒரு முக்கியமான முடிவெடுக்கும் தருணத்தில் கணவரும் அவரை கலக்கவில்லை, மகளும் அந்த தாயின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கவில்லை.


உண்மையில் ஹாசினி அவரது கருவில் உதித்தபொழுதே அவளுக்கான உரிமை தனக்கு பறிபோய்விட்டதாகத்தான் நினைத்தார் அவர். கூடவே தன் தனிப்பட்ட உரிமைகளும்.


ஆனால் இப்பொழுது, அப்படிப்பட்ட உரிமை கருணாகரனுக்கே மகளிடம் இல்லையோ என்றுதான் தோன்றியது அவருக்கு. எது எப்படியோ எந்த பிரச்சனையும் இல்லாமல் அப்பாவும் மகளும் சுமுகமாகவும், நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருந்தால் அதுவே போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டதால், இந்த காதல்-திருமணம் என்பதொன்றும் அப்படிப்பட்ட மாபாதக செயலோ நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்றோ இல்லை என தெளிவாக எண்ணியதால், இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் எல்லாம் தேவையற்ற ஒன்றாகவும் போய்விட்டது தாமரைக்கு.


அடுத்து நடக்கவேண்டியவற்றைப் பற்றி எதார்த்தத்துடன் திட்டமிடத் தொடங்கிவிட்டார் அவர்.


"ம்ம்... தலையும் புரியல வாலும் புரியல, இப்ப இத எங்க இருந்து ஆரம்பிக்கறது சத்யா" என ஒரு பெருமூச்சுடன் அவர் கேட்க, "அதான் உன் பொண்ணுதான் எல்லாத்தையும் ஏற்கனவே ஆரம்பிச்சு வெச்சுட்டாளே, அதே ரூட்லயே நாமளும் ப்ரொசீட் பண்ணுவோம்" என்றவன், ஹாசினி அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்குள் சென்றான் சத்யா.


அவனுடைய பின்னாலேயே வந்த தாமரை, ஹாசினி எழுந்து அமர்ந்திருப்பதை கவனித்து, ஏதோ ஒரு பழரசம் அடங்கிய குவளையை அவளுடைய கைகளில் கொண்டுவந்து கொடுக்க, அன்னையின் யோசனை படிந்த முகத்தை ஒரு பீதியுடன் பார்த்துக்கொண்டே அதை வாங்கி பருகத்தொட்ங்கினாள் அவள்.


"பார்க்கற பார்வையை பாரு, அப்படியே ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி” என நக்கலாக சொன்னவன், "வீட்டுக்கு போய் மறுபடியும் பட்டினி போராட்டமெல்லாம் நடத்தித் தொலைக்காத. ஒழுங்கா சாப்பிட்டு உடம்பை தேத்தற வழியை பாரு. உங்க அப்பா, நீ ஆசை பட்ட மாதிரியே உனக்கு கல்யாணம் செஞ்சி கொடுக்க முடிவு பண்ணிட்டார். அதனால, நீயே அந்த பையனைக் கூப்பிட்டு அவங்க அம்மா அப்பாவோட நம்ம வீட்டுல வந்து பேச சொல்லு" என்று சொல்லி அவளுடைய குதூகலத்தை மீட்டெடுத்தான் சத்யா.


அப்படியே காற்றில் மிதக்காத குறைதான் ஹாசினிக்கு. ஒரு ஆனந்த படபடப்புடன், "நிஜமாவா சொல்றீங்க மாம்ஸ், அப்பா கிட்ட கௌசிக் பத்தி சொல்லிடீங்களா?" என வியந்தவாறு அவள் கேட்க, அவளுடைய அப்பாவே அவளையும் கௌசிக்கையும் நெருக்கமாகப் பார்த்துவிட்டார், அதன் பிறகுதான் தனக்கே தெரியும் என்பதை அவளிடம் சொல்லி தகப்பன் மகள் இருவருக்கும் தருமசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம், அப்படியே அவளிடம் சொல்வதானாலும் அவரே சொல்லிக் கொள்ளட்டும் என தனக்குள்ளேயே அவன் யோசித்துக்கொண்டிருக்க, அதற்குள் கொதிப்புடன் தாமரை அவளுக்குப் பதில் கொடுக்க வருவதை உணர்ந்து அவரை பார்வையால் தடுத்தவன், 'ஆமாம்' என்பதாக தலையை ஆட்டிவைத்தான்.


"அப்பான்னா அப்பாத்தான்... எனக்குத் தெரியும் என் விருப்பத்துக்கு குறுக்க அப்பா எப்பவுமே நிக்க மாட்டாங்க" என, அப்படிப்பட்ட ஒரு தகப்பனின் விருப்பத்துக்குதான் கொஞ்சம் கூட மதிப்புகொடுக்காமல் நடந்துகொண்டிருக்கிறோம் என்பதைக் கூட உணராமல் பெருமையாகச் சொன்னவள், "தேங்க்யூ மாம்ஸ்" என்றவாறு சுற்றும் முற்றும் தன் பார்வையை சுழற்றி, "மா, என் போன் எங்க" என்று கேட்க, இருந்த பரபரப்பிற்கு அவளுடைய போனை பற்றிய நினைவெல்லாம் எங்கே இருந்தது தாமரைக்கு? அவர் யோசனையுடன் ஸ்தம்பிக்கவும், "கிடந்த கிடப்புக்கு உன்னை இங்க தூக்கிட்டு வந்ததே பெரிசு, இதுல உன் போனை வேற தேடி எடுத்துட்டு வந்து அதையும் உன் கூட சேர்த்து அட்மிட் பண்ணுவாங்களா' என சத்யா கடுப்புடனேயே சொல்ல, தாமரைக்கே சிரிப்பு வந்துவிட்டது.


"வீட்டுக்கு போய் பொறுமையா அவன்கிட்ட பேசிக்கலாம், இப்பவே ஒண்ணும் அவசரம் இல்ல" எனக் கண்டிப்புடன் சொல்லிவிட்டு பணம் கட்ட சென்றான் சத்யா.


அதன்பின் அங்கிருந்து அவளை டிஸ்சார்ஜ் செய்து, அவர்கள் வீடு வந்துசேரவே சில மணி நேரங்கள் ஆகிப்போனது.


தாமரை, முன்கூட்டி சொல்லியே அழைத்துவந்ததால் வீட்டிற்குள் நுழைந்தவுடன் நேராகப் போய் தாத்தா பாட்டியைப் பார்த்து சில நிமிடங்கள் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில்சொல்லி, பேத்தியின் காதல் கதை எதையும் அறியாமல் அக்கறையும் வருத்தமுமாக அவர்கள் கொடுத்த புத்திமதிகளை வாங்கிக்கொண்டு அதன்பின் தன் அறைக்குள் வந்தவள் அவளுடைய கட்டில்மீதே கிடந்த அவளுடைய கைப்பேசியை எடுத்துப்பார்க்க, மொத்தமாக சார்ஜ் தீர்ந்துபோய் அணைந்துகிடந்தது அது.


அதை சார்ஜில் போட்டுவிட்டு அவள் போய் குளித்து வேறு உடைக்கு மாறி வர, "ஹசி, சாப்பிட வா" எனத் தாமரையின் குரல் ஒலிக்கவும், இந்த சமயத்தில் மெத்தனமாக நடந்துகொண்டால் என்ன ஆகும் என்பது நன்றாகவே புரிந்ததால், அடுத்த நொடி சாப்பாடு அறையில் நின்றாள் ஹாசினி.


தாத்தா பாட்டி அறையிலேயே சாப்பிட்டு முடித்திருக்க, சந்தோஷும் சத்யாவும் வெகு அமைதியாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்க, அவர்களுக்கு உணவைப் பரிமாறிக்கொண்டிருந்தார் தாமரை.


அதே நேரம் அங்கே கருணாகரனும் வரவும், உற்சாகத்துடன் "தேங்க்ஸ்பா” என அவரை பார்த்து அவள் பெரிதாக புன்னகைக்க, கோபமா, வருத்தமா, விரக்தியா அல்லது ஒருவித தோல்வி மனப்பான்மையா என வரையறுக்க இயலாவண்ணம் அவர் முகம் ஏதோ ஒரு உணர்ச்சியைத் தாங்கியிருக்க, அவளிடமிருந்து தன் பார்வையைத் திருப்பிக்கொண்டார் கருணா.


தன் விருப்பத்துக்கு மதிப்பளித்து அவர் மனதாரத்தான் இந்த திருமணத்துக்குச் சம்மதத்தைச் சொல்லியிருக்கிறார். நிச்சயம் கௌசிக்கை பற்றி விசாரிப்பார். அவனைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டால் அவர் நிச்சயம் முழு மனதுடன் அவனை ஏற்றுக்கொள்வர் என்ற அதீத நம்பிக்கையில் அவள் இருக்க, அவரது இந்த முகத்திருப்பலில் சுருக்கென்று ஏதோ ஒன்று மனதைத் தைக்க, இருவருக்கு இடையிலும் உருவாகியிருந்த இடைவெளி லேசாக புரியவும், அவளுடைய கண்களில் நீர் கோர்த்தது.


தந்தையும் மகளும் ஒரு இடத்தில் இருந்தார்கள் என்றால் கருணாகரனின் பார்வை அடிக்கடி மகளை வருடிக்கொண்டே இருக்கும். அவளுடைய மகிழ்ச்சியில் இயல்பாக அவர் பூரிப்பதும் அவளது கண்ணீரில் கரைந்துபோவதும் வாடிக்கையாக நடப்பதுதான். ஆனால் இன்று அவருடைய பார்வை மகள் புறம் திரும்பாமலேயே போக, அந்த கண்ணீர் அவரை பாதிக்காமலேயே போனது.


சத்யா சந்தோஷ் இருவருமே எதையும் பேசி வம்பை விலைக்கு வாங்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க, ஒரு அபரிமிதமான அமைதி அங்கே ஆட்சி செய்துகொண்டிருந்தது. மறுபடியும் பட்டினி கிடந்து எதையும் இழுத்து வைக்கக் கூடாது என்கிற பயத்தில், வலுக்கட்டாயமாக வயிற்றுக்குக் கொஞ்சம் திணித்தவள், அமைதியாக எழுத்து சென்றாள் ஹாசினி. அதைக் கண்டும் காணாமலும் பெயருக்கு எதையோ கொரித்துவிட்டு அங்கிருந்து அகன்றார் கருணாகரன்.


'இதை எப்படி சமாளிக்கப்போகிறமோ?!' என்பதுபோல் தாமரையும் சத்யாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள, "அப்பா பாவம் இல்லம்மா? எங்க மேல ரொம்ப நம்பிக்கை வெச்சிருக்கார் இல்ல. நான் இந்த மாதிரியெல்லாம் செய்ய மாட்டேன். என் கல்யாணம் நிச்சயம் அப்பாவோட விருப்பப்படிதான் நடக்கும்" என்று சொல்லி அவர்களை அதிரச்செய்துவிட்டு எழுந்துபோனான் சந்தோஷ்.


அறைக்குள் நுழைந்தவள் தன் கைப்பேசியை உயிர்ப்பித்து பார்க்க, ஏகப்பட்ட மிஸ்ட் கால்களும் விதவிதமான ஸ்டிக்கர் - ஸ்மைலி சகிதம் 'ஏன்... என்ன ஆச்சு?' 'ஏன் கால்ஸ் அட்டண்ட் பண்ணல?' 'என் மேல கோபமா ரசகுல்லா?' 'உண்மையிலேயே ரொம்பே பிசி பப்பிம்மா' என கொஞ்சலும் கெஞ்சலுமாக குறுந்தகவல்களும் கௌசிக்கிடமிருந்து வந்து குவிந்திருந்தன.


முந்தைய மாலை தந்தையின் விசித்திர நடவடிக்கையால் மிரண்டுபோனவள் தன் அறைக்குள் புகுந்து கதவை தாளிட்டுக்கொண்டாள் ஹாஸினி.


'என் விருப்பம் இல்லாமல் எனக்கு கல்யாணம் செஞ்சு வெச்சிடுவாரா இந்த அப்பா' என்கிற அகங்காரமும் பிடிவாதமும் மேலோங்க யார் வந்து அழைத்தும் கதவைத் திறக்கவில்லை அவள்.


எப்படியும் சில நிமிடங்களில் அப்பா இறங்கி வந்து கூப்பிடுவர் என அவள் ஒரு இறுமாப்பில் இருக்க, அதைப் பொய்யாக்கினார் கருணாகரன்.


ஒருவேளை அவர் வந்து அழைத்திருந்தாலாவது ஏதாவது சமாதான உடன்படிக்கை செய்ய எதுவாக இருந்திருக்கும். அப்படி நடக்காமல் போக, மனதிற்குள் எட்டிப்பார்த்த பயம் பூதாகரமாக விஸ்வரூபம் எடுக்க, இந்த இக்கட்டான சூழலைச் சொல்வதற்காக கௌசிக்கை அழைக்க, அவனுடைய கைப்பேசி 'ஸ்விட்ச்ட் ஃஆப்' என்று வந்தது.


உறக்கமே வராமல் புரண்டுகொண்டிருந்தவள், நள்ளிரவில் மறுபடியும் ஒருமுறை முயன்று பார்க்க, மீண்டும் அப்படியே வரவும், ஏதாவது கன்ஸ்ட்ரக்ஷன் சைட்டில் பிசியாக இருப்பானாக இருக்கும், அங்கே சார்ஜ் செய்ய முடியாமல் போயிருக்கலாம் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொண்டவள் ஃஆப் லைனில் 'முக்கியமாக பேசவேண்டும்' என ஒரு குறுந்தகவலை அனுப்பிவிட்டு, அவனுடைய பதிலுக்காகக் காத்திருந்தாள்.


அடுத்தநாள் காலை அவளுடைய அப்பா அலுவலகம் சென்ற பிறகுதான், 'சாரி பப்பிம்மா. அவசர வேலையாக பாஸ் கூட பெங்களூரு வந்திருக்கேன், மதியத்துக்கு மேல் உன்கிட்ட பேசறேன்' என சில முத்தங்களையும் இதயங்களையும் தாங்கிய ஈமோஜிக்களுடன் பதிலே அவனிடமிருந்து வந்தது.


அவன் பேசுவதற்குள் ஏதேதோ நடந்து முடிந்திருக்க, ஒருவாறாக அவனை அழைத்தாள் ஹாசினி.


எடுத்த எடுப்பிலேயே, "சாரி ஹசி, உண்மையிலேயே பிசி" என்றவாறுதான் அவளது அழைப்பை ஏற்றான் கௌசிக்.


"ஐயோ கௌசி" என அலுத்தவள், "அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல, நீ முதல்ல உங்க அம்மா அப்பா கிட்ட பேசி என்னை பொண்ணு கேட்டு எங்க வீட்டுக்கு வா!” என நேரடியாக அவள் விஷயத்துக்கு வரவும், "என்ன சொல்ற நீ!" எனக் கேட்ட விதத்தில் அவன் அதிர்வது அப்பட்டமாகப் புரிந்தது அவளுக்கு.


"என்ன இப்படி ஜெர்க் ஆகற கௌசி. என்னைக்கு இருந்தாலும் இதை நாம ஃபேஸ் பண்ணித்தானே ஆகணும். அதை இப்பவே செய்யப்போறோம் அவ்வளவுதான?" என வெகு இயல்பாக கேட்டுவிட்டு, "அப்பாவே ஓகே சொல்லிட்டாங்க. அதனால என் சைட் லைன் க்ளியர்" என்றாள் பெருமை பொங்க.


அவனுக்குத்தான் 'ஐயோ' என்றிருந்தது. "புரிஞ்சுதான் பேசரியா ஹசி நீ. பூஜாவோட கல்யாணம் முடியாம என்னால கல்யாணம் செஞ்சுக்க முடியாது. அது உனக்கு நல்லாவே தெரியும் இல்ல. அதுவும் நம்மளோடது லவ் அண்ட் இன்டர்கேஸ்ட் மேரேஜ்னும்போது அது அவளோட மேரேஜை இன்னும் காம்ப்ளிகேட் பண்ணும். அதோட அவ கல்யாண எக்ஸ்பென்ஸஸ் நான்தான் பார்க்கணும். மோர் ஓவர் வீட்டோட ஈ.எம்.ஐ, கார் டியூ அது இதுன்னு எனக்கு எவ்வளவு கமிட்மென்ட் இருக்குன்னு உனக்கு தெரியாதா என்ன? இன்னும் மூணுவருஷம் கழிச்சுத்தான் நம்ம கல்யாணத்த பத்தி வீட்டுல பேசணும்னு நாம ஏற்கனவே முடிவு செஞ்சதுதான?" என்று அவளுடைய வீட்டில் இவர்கள் விஷயம் வேறு தெரிந்துவிட்டதே என அவன் பதைபதைக்கவும்,


"என்ன பெரிய புடலங்காய் கமிட்மென்ட், நமக்கு கல்யாணம் நடந்தா உன் ட்யூஸ் எல்லாத்தையும் எங்க அப்பாவே செட்டில் பண்ணிடுவார்" என அவன் அவனுடைய தங்கையைக் காரணம் காண்பித்து திருமணத்தை தள்ளிபோடுகிறான் என்கிற எரிச்சலில், கூடவே இது எங்காவது நடக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்கிற ஒரு பாதுகாப்பின்மையும் சேர்ந்துகொள்ள, அவள் இங்கே இருக்கும் நிலைமை புரியாமல் இப்படி பின்வாங்குகிறானே என்ற ஆதங்கத்தில் அவளுடைய வழக்கமான பிடிவாத குணமும் தலைதூக்க, திமிராக வார்த்தையை விட்டாள் ஹாசினி.


அதில் அவனது தன்மானம் அடிவாங்கி ஆண்களுக்கே உரித்தான அகங்காரம் தலைதூக்க, அவன் கோபத்தில் கொந்தளிப்பதையும் அதை அவளிடம் அப்படியே வெளிப்படுத்தக்கூட இயலாமல் அஞ்சுவதையும் கூட புரிந்துகொள்ளாமல், இரண்டு நாட்களாக அங்கே நடந்த அனைத்தையும் அவனிடம் விளக்கத்தொடங்கினாள் ஹாசினி அவன் அதை காதுகொடுத்துக் கேட்கிறானா இல்லையா என்பதைக் கூட அறியாமல்.


அதனால் அவன் அதற்கும் பிடிகொடுத்துப் பேசாமல் போக, ஒரு முடிவுக்கு வர இயலாமல் ஓய்ந்துபோய் அப்போதைக்கு விட்டுவிட்டாலும், கிடைத்த நேரத்திலெல்லாம் அவரவர் நிலையில் அவரவர் வாக்குவாதம் செய்தவாறு இருக்க, இப்படியே மூன்று தினங்கள் கடந்துபோனது.


பொறுமை இழந்து கருணாகரன் சத்யாவை துளைக்கத் தொடங்கவும் அவன் “என்ன ஆச்சு, மூணு நாலு நாளா என்ன பண்ணிட்டு இருக்க? கல்யாணத்தை பத்தி கௌசிக்கிட்ட பேசினியா இல்லையா?” என ஹாசினியிடம் கேட்கப்போக, வேறு வழி இல்லாமல் கௌசிக்கின் சூழ்நிலையை அவனிடம் விளக்கினாள் ஹாசினி.


"இதெல்லாம் வேலைக்கே ஆகாது, நேரடியா நானே அவன் கிட்ட பேசிக்கறேன், அவனை மீட் பண்ண ஏற்பாடு பண்ணு, ஐ மீன்... நான் மட்டும்" என ‘நீ உடன் வரத் தேவையில்லை’ என்கிற மறைமுக நிபந்தனையுடன் அவன் சொல்லி முடிக்க, ஒருவாறு அதற்கு ஒப்புக்கொண்டாள் ஹாஸினி. ஆனால் அதற்கும் கூட கௌசிக்கிடம் வெகுவாக மன்றாடிதான் அவனை சம்மதிக்கவைக்கவேண்டியதாக இருந்தது அவளுக்கு.


ஆக கௌசிக் ஹாசினி இருவருமே ஒரே ரகம், அதாவது கெஞ்சினால் மிஞ்சுவதும் மிஞ்சினால் கெஞ்சுவதும் என்கிற ரகம் என்பதுதான் உண்மை!


அப்படியென்றால் இவர்களுடைய திருமணமும் நடந்து முடிந்து, அந்த திருமணவாழ்க்கையில் இருவருமே விட்டுக்கொடுக்காமல் ஒரேயடியாக மிஞ்சும் நிலை வந்தால்? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!


****************

0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page