Poove Unn Punnagayil - 7
அத்தியாயம்-7
“மாமா... படம் முடிஞ்சு வெளியில வந்துட்டோம். நீங்க எங்க இருக்கீங்க” என மூச்சை இழுத்துப்பிடித்து, வெகுவாக முயன்று இயல்பாக ஹாசினி கேட்க,
"ஹ்ம்ம்... வந்துட்டேன். இன்னும் ஃபைவ் மினிட்ஸ்ல காஃபி ஷாப்ல இருப்பேன். நீ அங்க வந்துடு" என வேண்டுமென்றே அவளை பதட்டப்படுத்தும்விதமாக சொன்னான் சத்யா.
"அங்கதான் இருக்கேன்" என பட்டென அழைப்பைத் துண்டித்து அவள் ஜாடை செய்யவும், அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பினான் கௌசிக்.
அவன் வெளியேறிச் செல்லும்வரை பொறுத்திருந்தவன், "என்ன, உன் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் உன்னை தனியா விட்டுட்டு கிளம்பி போயிட்டாங்களா என்ன" எனக் கேட்டுக்கொண்டே ஹாசினியின் அருகில் வந்து அமர்ந்தான் சத்யா.
அங்கே பாதி பருகிவிட்டு கௌசிக் வைத்துவிட்டுப்போயிருந்த காஃபி கோப்பையில் பார்வையைப் பதித்து அவன் அவளை ஏறிட, வெலவெலத்துப்போனாள் ஹாசினி.
"அது, அது வந்து" என அவள் தடுமாற, "இந்த மால், &&&கம்பெனிக்காக கன்ஸ்ட்ரக்ட் பண்ணதே நாமதான் தெரியுமா? இப்ப இவங்களோட ஃபுல் மெயின்ட்டனன்ஸும் நம்மதான் பார்க்கறோம்ங்கறதாவது தெரியுமா?” என அவன் கேள்விகளை அடுக்க, 'தெரியாது' என்பதுபோல் ஒரு பார்வை பார்த்துவைத்தாள் அவள்.
ப்ச்… என ஆதங்கப்பட மட்டுமே முடிந்தது அவனால். "ஒரு பிசினஸ் பண்ற குடும்பத்துல பிறந்துட்டு, இதுவரைக்கும் அடிப்படை கூட கத்துக்காம இருக்கறது தப்பாவே தெரியலையா ஹசி, உனக்கு? இது சம்பந்தமாதான படிச்சிருக்க?" என அவன் அவளைக் கடிய, "மாமா, ப்ளீஸ்... உங்க அட்வைஸ நிறுத்திட்டு சொல்ல வந்த விஷயத்தை சொல்லுங்க" என அவள் சலித்துக்கொள்ள, "சொல்ல வந்த விஷயத்தை சொல்லட்டுமா" என மிரட்டும் தொனியில் கேட்டவன், அவள் அரண்டு விழிக்கவும், "நம்ம காம்படிட்டர்ஸ் ஜீவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்ல வேலை செய்யறானே அந்த பையன், அவன் உனக்கு எப்படி பழக்கம்?" என அவன் நேரடியாகக் கேட்க ஆடித்தான் போனாள் ஹாசினி.
பயத்தில் அவளுக்குப் பேச்சே வராமல் போக, "பதில் சொல்லு ஹாசினி" என அடிக்குரலில் உறுமினான் அவன்.
“கௌசிக்கையா கேக்கறீங்க?”
“ஸ்ஸ்... எஸ் எஸ், அவன் பேர் கௌசிக் இல்ல. இப்பதான் ஞாபகத்துக்கு வருது! அவனைத்தான் கேட்டேன்"
"அவன், அவன் என்னோட சீனியர், மாமா"
"என்ன, சீனியர்னா, காலேஜ்லயா"
"ஆமாம், சூப்பர் சீனியர்"
"ஓஹ்" என வியந்தவன், "என்ன தெய்வீக காதலா" என வெகு தீவிரமாகக் கேட்க, 'ஆமாம்' என்பதுபோல் மௌனம் காத்தாள் அவள்.
"எவ்வளவு நாளா?"
"த்ரீ இயர்ஸா"
அலுப்புடன் நெற்றியை தேய்த்துவிட்டுக்கொண்டான் அவன்.
"மாம்ஸ்... மாம்ஸ்... நெகட்டிவா எதையும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்! அவன் ரொம்ப நல்லவன். அவனோட தங்கை பீ.ஈ பைனல் இயர் படிக்கறா. அவளுக்கு உடனே கல்யாணம் செய்யற பிளான்ல இருக்காங்க. அது முடிஞ்சதும் எங்க கல்யாணத்தை பத்தி ரெண்டுபேர் வீட்டுலயும் பேசலாம்னு இருந்தோம், அதுக்குள்ள" என அவள் இழுக்க, "அவ்வளவு அறிவு இருக்கறவங்கதான் பப்ளிக்ல இப்படி நடந்துப்பீங்களா. இத்தனைக்கும் அவனுக்கும் கல்யாண வயசுல ஒரு தங்கை இருக்கா இல்ல. நீங்கலாம் அறிவை மொத்தமா கழட்டி வெச்சுடுவீங்களா?" என அவன் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப, மவுனமாகத் தலை குனிந்தாள் அவள்.
"சரி கிளம்பு" என்றபடி அவன் எழுந்துகொள்ள, அலறி அடித்துக்கொண்டு அவனுடன் இணைத்து அவள் வெளியில் வர, அங்கே கோபால் காருடன் தயாராக இருக்கவும், அவளுடைய இருசக்கர வாகனத்தின் சாவி பார்க்கிங் டோக்கன் இரண்டையும் வாங்கி அவனிடம் கொடுத்தவன், "வண்டியை வீட்டுல கொண்டுவந்து விட்டுட்டு போயிடு” என்று சொல்லிவிட்டுத் தானே காரை கிளப்பினான்.