top of page

Poove Un Punngayil - 3

Episode - 3


அனிச்சையாக சைட் ஸ்டாண்ட் போட்டு சத்யா அவனது வாகனத்தை அப்படியே நிறுத்தவும், முன்னாலும் போக முடியாமல் பின்னாலும் நகர முடியாமல் அவனை இடித்த கார் எக்குத்தப்பாகச் சிக்கிக் கொண்டது.


ஒரு மிரட்சியுடன் அந்த காரிலிருந்து இறங்கிய அதன் ஓட்டுநர் அதன் பின் பகுதியையும், இடிபட்ட வாகனத்தையும் மாற்றி மாற்றிப் பார்த்து 'ஏதேனும் சேதாரம் நேர்ந்துவிட்டதா' என ஆராய, அவர் ஓட்டி வந்த வாகனத்தில் சிறு கீறல் மட்டுமே உண்டாகியிருக்க சத்யாவின் இரு சக்கர வாகனத்தின் பின்புற ஹெட் லைட் நொறுங்கிப் போயிருந்தது.


இருவருமே ஒரே நேரத்தில் அதை உணர, அவ்வளவுதான் அந்த நொடியே தன்வசமிழந்தவன், அவரது வயதையும் பொருட்படுத்தாமல், கொத்தாக அந்த ஓட்டுநரின் சட்டையைப் பிடித்து, அவர் 'சார்.. சார்... சார்' எனக் கெஞ்சுவதைக் கூட காதில் வாங்காமல், பல கண்கள் அவர்களையே மொய்ப்பதையும் கண்டுகொள்ளாமல் வசை மாரி பொழியத் தொடங்கிவிட்டான். இவ்வளவும் நடந்து முடிந்த பிறகுதான் அந்த காரின் பின் கதவைத் திறந்து கொண்டு இறங்கி வந்த அந்த அழகே வடிவானவளையே பார்க்க நேர, சத்யாவின் கை அனிச்சையாய் தளர்ந்தது.


"ண்ணா... நான் பேசிக்கறேன், நீங்கப் போய் பின்னால உட்காருங்க" என கொஞ்சம் கூட பதட்டமே இல்லாமல் அவள் சொல்லிக்கொண்டிருக்க, 'பீ...ஜீ...எம் போடு பீ...ஜீ...எம் போடு டான் டான் டான்' என பின்னணி இசை அவனது மனதிற்குள் ஒலித்தாலும், 'ஏய்... ச்சீ... அடங்கு... ஓவரா சைட் அடிச்சு தொலையாத' என அதட்டி அதன் வால்யூமை குறைத்து, "என்ன... என்ன... நீங்க பார்த்துக்குவீங்களா? நீங்கதான் இந்த வண்டியோட ஓனரா?" என அவன் தன் கெத்தை விட்டுக்கொடுக்காமல் ஆனாலும் கொஞ்சம் பிசுறு தட்டிய குரலில் கேட்க, அதைக் காதிலேயே வாங்காதவள் போல, "சாரிங்க... லஞ்ச் டைம் தாண்டி போய் அவருக்கு சுகர் லோ ஆயிடுச்சுன்னு நினைக்கறேன். அதான் கான்சட்ரேஷன் மிஸ் ஆயிடுச்சு. நான் உங்ககிட்ட சாரி கேட்டுக்கறேன். உங்க டேமேஜுக்கு நான் பே பண்ணிடறேன்" என அந்த அழகி சற்று தணிவாகவே சமாதானக் கொடியைப் பறக்க விட, அவனுக்கே அந்த ஓட்டுநரைப் பார்த்து பரிதாபமாகிப்போனது.


ஆத்திரத்தில் புத்தி கெட்டு ஒரு பிள்ளைப் பூச்சியிடம் தன் வீரத்தைக் காண்பித்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் உண்மையிலேயே பேச்சற்றுதான் போனான் சத்யா.


அதற்குள், "அண்ணா... நான் சொன்னேன் இல்ல. உள்ள போய் உட்காருங்கன்னு" என அவள் அந்த ஒட்டுநரை ஒரு அதட்டல் போட, அதிலும்கூட அன்பும் அக்கறையும் இழையோடவே சத்யாவின் மனதிற்குள் போய் 'பச்சக்' என ஒட்டிக்கொண்டாள் அவள்.


உண்மை புரிந்துவிட்ட காரணத்தால் கொஞ்சம் தணிந்தவன், "சாரிங்க" என அதையும் கெத்தாகவே அந்த ஓட்டுநரைப் பார்த்து மொழிய, அதே நேரம் அந்த பெண் பணத்தை எடுக்க தன் ஹாண்ட் பேகை திறக்கவும், "வேணாம் விடுங்க, சின்ன டேமேஜ்தான் பரவாயில்ல" என்று நானும் நல்லவன்தான் என்பதாகச் சொல்லிவிட்டு, தன் வாகனத்தைக் கிளப்பிய சத்யா "ஸ்ஸ்" என தன்னையும் மீறி அனற்றினான் வலி தாங்காமல்.


அவனை பார்த்துக்கொண்டே இருந்ததாலோ என்னவோ அது தப்பாமல் அவளது பார்வையில் பட்டுவிட, "ஐயோ, ஏதாவது அடி பட்டுடுச்சா?" என்று பதறினாள் அவள்.


உண்மையில் காலை அசைக்கக் கூட முடியவில்லை அவனால். வண்டியைச் செலுத்திக்கொண்டு போக முடியுமா என்றுகூடத் தெரியவில்லை அவனுக்கு. "ப்ச்... என்னவோ ஆமாம்னு சொன்னா, ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போற மாதிரி ஃபீல் கொடுக்கறீங்க" என்றான் எரிச்சல் மேலோங்க.


ஒரு நொடி சிந்தித்தவள், "வொய் நாட்? வாங்க, கூட்டிட்டு போறேன். எப்படியும் டிரைவர் அண்ணாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டுதான் போகப்போறேன்" என்றாள் அவள் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்.


ஒரு கடுப்பில்தான் அப்படி கேட்டான் அவன். ஆனால் உண்மையாகவே அவனுக்கு அடி பட்டிருக்க, அதுவும் அவனது வலியின் அளவு முகத்திலேயே எழுதி ஒட்டியிருக்க, வேண்டாமென்று மறுத்தவனை வற்புறுத்தி விடாப்பிடியாக தன் வாகனத்தில் ஏற வைத்தாள் அவள்.


அவளுடைய ஓட்டுநர் முன்னமே பின்பக்க இருக்கையில் போய் உட்கார்ந்திருக்க, அவள் வாகனத்தை கிளப்பவும், வெகு சுவாதீனமாக அவளுக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்தான் சத்யா, அதுவும் மிக முயன்று தன் வாயை அடக்கியவாறு.


"சக்தியம்மா, முள்ளு கீழ போயிடிச்சு பாருங்க, ஏதாவது பெட்ரோல் பங்க்ல நிறுத்தி டீசல் ஃபில் பண்ணிட்டு போயிடலாம்" என கடமையே கண்ணாக அவளுடைய ஓட்டுநர் பின்னாலிருந்து குரல் கொடுக்க, 'விலுக்' என நிமிர்த்து அவளைப் பார்த்தவன், "என்னாதூ... உங்க பேரும் சத்யாவா?!" என்றான் ஒரு புல்லரிப்புடன்.


"சத்யாவா? சத்யா இல்லங்க சக்தி, சக்தியம்மான்னு சொன்னது உங்களுக்கு அப்படி கேட்டிருக்கும்" என பின்னாலிருந்து பதில் வந்தது.


இறங்கிய சுருதியில், “ஓ...” என்றவன், "அப்படின்னா உங்க பேரு நிச்சயம் கோபாலாதான் இருக்கணும், கரெக்டா" என கிண்டல் தொனிக்க சத்யா அந்த ஓட்டுனரை கேட்டுவைக்க, அதில் அடங்கியிருந்த உள்குத்து புரியாமல், "இல்லங்களே, என் பேரு ஞானம்" என அதற்கு அவர் வெள்ளந்தியாக பதில் கொடுக்கவும், "இது என்னங்க இது, அவங்கள கேள்வி கேட்டாலும் நீங்களே பதில் சொல்றீங்க, உங்களை கேள்வி கேட்டாலும் நீங்களே பதில் சொல்றீங்க, கோர்ட்ல கூட அவங்களுக்கு பதில் நீங்கதான் ஆஜர் ஆவீங்களா" என சத்யா தன் நக்கலை தொடர, இதழ் கடையில் அழகிய சிரிப்பு ஒன்று உதயமானது சக்திக்கு.


"அய்யய்யோ, அதெல்லாம் எப்படிங்க செய்ய முடியும். நான் வக்கீல் இல்லீங்களே" என அதற்கும் அப்பாவியாக பதில் சொன்னவர், "ஆமாம் எங்கம்மா வக்கீலுன்னு நீங்க எப்படி கண்டுபிடிசீங்க" என அவர் வியப்பு மேலிட கேட்கவும், "ஐயோ அண்ணா, அவரு ஏற்கனவே உங்கள நல்லா ஓட்டிட்டு இருக்காரு, நீங்க வேற" என்று சொல்லி சிரித்தவள், "கார் பின்னால ஸ்டிக்கரை பார்த்துட்டு சொல்றாருண்ணா" என தெளிவாக விளக்கினாள் சக்தி.


"ம்மா... முதல்ல இது உங்க காரே இல்லையே! நம்ம அய்யாவோடதுதான. அதுவும் இல்லாம இந்த கார்ல ஏறுறவங்க எல்லாரும் வக்கீலதான் இருக்கணுமா" என தன்னையும் அறியாமல் ஒரு அறிவுப்பூர்வமான கேள்வியை அவர் அடுத்ததாக கேட்டுவிட, அவளுடைய சிரிப்பு இன்னும் கூடிப்போய் 'பல்பு' என்ற ரீதியில் சத்யாவை ஏறிட்டாள் அவள்.


ஞானம், 'நம்ம அய்யாவோட வண்டி' என்று சொன்னதில், 'அந்த அய்யா யாராக இருக்கும்? ஒருவேளை இந்த சக்தியின் கணவரோ? அவரும் வழக்குரைஞரோ?" என தறிகெட்டபடி கேள்விகள் முளைக்க, சில நிமிடங்கள் கூட நிலைக்காத மகிழ்ச்சியில் அவளுடைய சிரிப்புக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பதுகூட புரியாமல், தயக்கத்துடன் போனால் போகிறது என செயற்கைத்தனமாக ஒரு புன்னகையை உதிர்த்துவைத்தான். சில நிமிடங்கள் அமைதியிலேயே கழிய, எதார்த்தமாக திரும்புவது போல் அவள் புறமாக தன் பார்வையை திருப்பினான் அவன் சிறு ஆராய்ச்சியுடன்.


அவளுக்கு முப்பத்தியிரண்டில் தொடங்கி ஒரு முப்பத்தைந்து வயது வரை இருக்கலாம். குண்டாகவும் இல்லை, ஒல்லி குச்சி உடம்புக்காரி போன்ற தோற்றத்திலும் இல்லை.


தன் கூந்தலை சுருட்டி ஒரு கேட்ச் கிளிப்பில் மொத்தமாக அடக்கியிருந்தாள். 'அண்டங்காக்கா கொண்டைக்காரி மாதிரி அங்க அங்க பிய்ஞ்சு தொங்கிட்டு ஒரு கொண்டையை போட்டு வெச்சிருக்கா, இதுக்கு மெஸ்ஸி பன்னுன்னு ஒரு ஸ்டயிலான பேரு வேற. ஆனாலும் அழகத்தான் இருக்கு' என்று எண்ணியவாறு வகிட்டை ஆழ்ந்து பார்க்க, அதில் குங்குமத்தின் தடயம் இல்லை.


பின் நம் நாட்டு பெண்களின் மொத்த சென்டிமெண்ட் அனைத்தையும் ஏகபோக குத்தகைக்கு எடுத்துவைத்திருக்கும் 'தாலி' என்கிற சக்திவாய்ந்த மந்திர கயிறு இருக்கிறதா என பார்க்கலாம் என்றால், அவள் அணிந்திருந்த காலர் வைத்த குர்த்தி அவளுடைய கழுத்தையும் சேர்த்து மூடி மறைத்திருந்தது.


கடைசி நம்பிக்கையாக க்ளட்சையும் பிரேக்கையும் அவன் கள்ளத்தனமாக பார்வையிட, திருமணத்தின் கடைசி அடையாளமான மெட்டி இருக்கிறதா இல்லையா என்பதை அறிய முடியாவண்ணம் அவளுடைய விறல் நுனிகளை மட்டுமே கண்களுக்கு புலப்படும்படியாக விட்டுவைத்திருந்தது அவள் அணிந்திருந்த காலனி. கடுப்பாகிப்போனான் சத்யநாராயணன்.


அதற்குள் ஒரு பிரபல மருத்துவமனைக்குள் நுழைந்தது அவளது வாகனம். "உள்ளே செல்ல ஏதுவான இடத்தில் வாகனத்தை நிறுத்தியவள், வீல் சேர் என அங்கே பணியிலிருத்தவருக்கு ஜாடை செய்ய, சில நிமிடங்களில் ஒரு பெண் சக்கர நாற்காலியுடன் வரவும், உண்மையில் அந்த நேரம் அது அவனுக்கு தேவையாக இருக்க, சங்கடமாக இருந்தாலும் அதில் போய் உட்கார்ந்தான் சத்யா. அந்த நேரம் அவனது தேவை அறிந்து அவனுக்காக ஒரு சிறு அக்கறையான செயலை செய்த அந்தப்பெண் இன்னும் ஆழமாக அவனது மனதிற்குள் வேரூன்றினாள் என்றால் அது மிகையில்லை.


"ட்ரைவர்..ண்ணா உங்களுக்கு தலைசுத்தல் பரவாயில்லதான, நடக்கமுடியுமா, இல்ல உங்களுக்கும் வீல் சேர் சொல்லவா" என அவரிடம் கேட்டவள், "வேணாம்மா, நடந்தே போயிடுவேன்" என அவர் சொன்ன பதிலில், "வண்டிய பார்க்கிங்க்ல விட்டுட்டு வரேன்" என்று இருவருக்கும் பொதுவாக சொல்லிவிட்டு வாகனத்தை செலுத்திச் சென்றாள்.


அதன் பின் இருவருக்கும் மருத்துவம் பார்க்கப்பட்டு, ஞானத்திற்கு மருந்துகளுடன் முடிந்துவிட, சத்யாவுக்கு எக்ஸ்-ரே எடுக்கவேண்டியதாக இருந்ததால், அவரை பத்திரமாக ஆட்டோவில் ஏற்றி அவருடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டு மறுபடியும் சத்யாவை தேடி வந்தாள் அவள்.


அவன் வேண்டம் என்று மறுத்தும் கூட அவனுடன் இருந்து எக்ஸ்-ரே எடுத்து, அதில் ஹேர் லைன் ஃப்ராக்ச்சர் என்பது கண்டறியப்பட, மாவு கட்டு போட்ட பின்பு மருத்துவமனையிலிருந்து அவர்கள் கிளம்பவே மாலை ஆகிவிட்டது.


வரும் வழியிலேயே அவன் தாமரையை கைப்பேசியில் அழைத்து, விவரத்தை சொல்லியிருக்க, வீட்டின் வாயிலியேயே தயாராக காத்திருந்தார் அவர், கூடவே கருணாகரனின் ஓட்டுநரும்.


சக்தியின் கார் வந்து நிற்கவும், "ரொம்ப தேங்ஸ் மா... ரொம்ப ஹெல்ப் பண்ணியிருக்க, உள்ள வா" என அவளிடம் சொல்லிவிட்டு தாமரை, ஓட்டுநருடன் இணைந்து, வாகனத்திலிருந்து இறங்க சத்யாவுக்கு உதவ, பின் அப்படியே கைத்தாங்கலாக அவனை அழைத்துவந்து வரவேற்பறை சோபாவில் உட்கார வைத்தனர்.


சொல்லாமல் கொள்ளாமல் அங்கிருந்து செல்ல இயலாமல், வாகனத்தை நிறுத்திவிட்டு சக்தியும் உள்ளே வரவேண்டியதாக ஆகிப்போனது.


"என்னடா இப்படி பண்ணி வெச்சிருக்க" என தாமரை வருந்த, சலிப்புடன், "விடுக்கா" என்றவன், "கோபால், தம்பிய கூட்டிட்டு வந்துட்டியா?" என்றான் அக்கறையுடன்.


"கூட்டிட்டு வந்துட்டேன் சார், நம்ம பெரிய சார் சைட்லதான் இருக்காரு. ஏழு மணிக்கா அங்க வந்து பிக் அப் பண்ணிக்கசொல்லி சொன்னாரு" என அவன் கேட்காத கேள்விக்கும் சேர்த்து பதில் சொல்லிவிட்டு போனான் அவன்.


அதற்குள் சந்தோஷும் ஹாசினியும் அங்கே வர, எல்லோருக்கும் சக்தியை அறிமுகப்படுத்திவைத்தான் சத்யா.


அதன் பின் அவள் அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க, "காஃபி குடிச்சிட்டுதான் போகணும்" என தாமரை அவளுக்கு கட்டளை பிறப்பிக்க, "கா, அவங்க இன்னும் லஞ்ச் கூட சாப்பிடல. ஏதவது டிபன் சாப்பிட சொல்லு" என்றான் சத்யா அவளது செல்கையை கொஞ்சம் தள்ளிப்போடும் நோக்கத்தில்.


"ஜஸ்ட் டென் மினிட்ஸ்ல ரெடி பண்றேன்" என அவளுடைய ஒப்புதலை கூட கேட்காமல் தாமரை அடுக்களை நோக்கி சென்றுவிட, வேறு வழி இல்லாமல் சத்யாவுக்கு எதிரில் போடப்பட்டிருந்த சோபாவில் போய் உட்கார்ந்தாள் சக்தி.


கைப்பேசியில் அழைப்பு வர, பேசிக்கொண்டே வெளியில் சென்றாள் ஹாசினி சக்தியைப் பார்த்து சிநேகமாய் புன்னகைத்தவாறே.


வீட்டின் வாயிலில் அவன் வயது ஒற்ற பிள்ளைகளின் தலைகள் தெரிய, சக்திக்கு பின்னால் நின்றவாறு, அவளறியாவண்ணம், 'நடக்கட்டும், நடக்கட்டும்' எனத் தலைவர் வடிவேலுவின் உடல் மொழியுடன் மாமனிடம் ஜாடை செய்து அவனை நன்றாக வம்பிழுத்து, பதிலுக்கு சத்யா அவனை ஒன்றுமே செய்யமுடியாமல் திணறுவதைப் பார்த்து குதூகத்துடன் ஒரு சிறு குத்தாட்டம் போட்டுவிட்டு அங்கிருந்து ஓடி மறைந்தான் சந்தோஷ், .


அதன்பின் மற்ற இருவர் மட்டுமே தனித்து விடப்பட, ஒரு அசாத்திய மௌனம் குடிகொண்டது அங்கே. அந்த சில நிமிடங்களில், 'நாற்பதை நெருங்கிக்கொண்டிருக்கும் முரட்டு சிங்கிள் மாரிமுத்து அவன்' என்பதை நன்றாகவே புரிந்துகொண்டாள் சக்தி.


அவளுடைய பார்வை அவனை அளவெடுக்கத்தொடங்க, சராசரி உயரத்திலிருந்தான். அதிகம் வெயிலில் நின்று வேலை செய்பவன் என்பதால் மாநிறத்தை காட்டிலும் சற்று கருத்து தெரிந்தான். அவனுடைய சுருள் கேசம் அவனது இஷ்டப்பட்டபடி வளைந்துகொடுக்க, நன்கு படிய தலை சீவியிருந்தான். 'அந்நியன்-ரெமோ' என சிரிப்பும் கடுகடுப்பும் மாறி மாறி வந்துபோகும் களையான முகத்தில் அடர்ந்த மீசை வைத்திருந்தான்.


'எயிட் ஆன் டென்' என மனதிற்குள் அவள் அவனுக்கு மதிப்பெண் வழங்கிக்கொண்டிருக்க, அவனுடைய பார்வை அவளுடைய பாதத்தை நோக்கி சென்றதையும் கவனிக்க நேர்ந்தது.


சட்டென காலை பின்னுக்கு இழுத்தவள், நானும் நீங்க கார்ல உட்கார்ந்ததுல இருந்து கவனிச்சிட்டுதான் இருக்கேன். ஆனாலும் அநியாயம் செய்யறீங்க. அடி பட்டு நடக்க முடியாம கஷ்டப்படறீங்களே, பாவம்னு ஹெல்ப் பண்ண வந்தா, எனக்கு கல்யாணம் ஆயிடுச்சான்னு உச்சில இருந்து உள்ளங்கால் வரைக்கும் எட்டி எட்டி பாக்கறீங்க!? அட்ராஷியஸ்" எனப் பொங்கிவிட்டாள் அவள்.


அவனது செயலை அவள் கண்டுகொண்டாள் என்பது விளங்க, ஜெர்க்கானவன், "ஐயையோ, அப்படிலாம் எதுவும் இல்லங்க" என்று பதறினான் சத்யா.


ஆனாலும் கூட, அந்த ரணகளத்திலும் குதூகலமாக அவளுடைய கால் விரல்களில் மெட்டி இல்லாததை கண்டுகொண்டவனின் மனம் குத்தாட்டம் போட்டது என்னவோ உண்மை.


நல்ல வேளையாக, அவள் கோப தீயால் அவனை சுடுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்காமல், தாமரை இருவருக்கும் சிற்றுண்டியை எடுத்துவந்து அங்கேயே கொடுக்க, அவசரகதியில் சாப்பிட்டு முடித்து சத்யாவிடம் “டேக் கேர்” என்று மட்டும் சொல்லிவிட்டு, தாமரையிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டாள் அவள், மேற்கொண்டு அவன் சமாளிப்பாக விளக்கங்கள் எதையும் கொடுக்கவும் இடம் கொடுக்காமல்.


அவன் அங்கிருந்து எழுந்து செல்ல உதவ வேண்டியதாக இருந்ததால் அவளை வாயில் வரை சென்று வழி அனுப்பவில்லை தாமரை.


சக்தி பேசிய விதத்தில் அரண்டுபோயிருந்தவன், "என்னடா, சாப்பிடாம அப்படியே வெச்சிருக்க" என தாமரை அவனைக் கடியவும்தான் சுயநினைவுக்கே வந்தான் சத்யா. அதற்குள் வாயிலைக் கடந்திருந்தாள் சக்தி.


அப்பொழுதுதான் அவளுக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லை என்பது அவனுக்கு உரைக்க, அவளது தொடர்பு எண்ணைக்கூட வாங்கி வைக்காத தன் அதிபுத்திசாலிதனத்தை நினைத்து நொந்துகொண்டவன், சரியாக அப்பொழுது சந்தோஷ் உள்ளே நுழையவும், "டேய்... டேய்... அந்த அக்கா போயிட்டாங்களா பாரு" என அவனை ஏவினான் சத்யா.


வேகமாக வெளியில் சென்றவன், சில நிமிடங்களில் திரும்ப வந்து, "நான் போகறதுக்குள்ள, நம்ம ஸ்ட்ரீட் எண்ட் க்ராஸ் பண்ணிட்டாங்க மாமா, அவங்க கிட்ட ஏதாவது சொல்லனுமா" என்று கேட்டான் சந்தோஷ்.


"ப்ச்... அவங்க போன் நம்பர் கூட வங்கலடா. ப்ச்... ப்ச்... பை எனி சான்ஸ் அந்த கார் நம்பர நோட் பண்ண" என்று வேறு கொஞ்சமும் யோசிக்காமல் வார்த்தையை விட, மாமனை ஓட்டி எடுக்க நல்ல வாய்ப்பு கிடைக்கவும், கள் குடித்த குரங்காக ஆகிப்போனான் சந்தோஷ்.


'தில் வாலே புச் தே நே சா... (நீ என்னை காதலிக்கிறாயா இல்லையா)


இக் வாரி தஸ் தே சரா... (அதை நீ சொல்லுவாயா மாட்டாயா)


ஓ... ஓ.. ஓஓஓ... எனக் கத்தி பாடத்தொடங்கினான் அவன்.


அதில் கடுப்பில் உச்சத்திற்கே சென்றவன், கொல காண்டாகிப்போனான் அவனுடைய முரட்டு சிங்கிள் தாய்மாமன்.


அந்த இருவருக்கும் பஞ்சாயத்து செய்து முடிப்பதற்குள் தாமரைக்குதான் நாக்கு தள்ளிப்போனது. ஒரு வழியாக இருவரையும் சமாதானம் செய்து, சந்தோஷ் உதவியுடன் சத்யாவை அவனுடைய அறைக்குள் அழைத்துவந்து விட்டுவிட்டு, தன் வேலையைப் பார்க்கப்போனார் தாமரை.


இரவு வீடு திரும்பிய கருணாகரன், நேராக சத்யாவைதான் பார்க்கப்போனார். அவனது காலில் போடப்பட்டிருந்த கட்டை பார்த்து முதலில் அதிர்ந்து, வருந்தி, பின் அவனை நன்றாக கடிந்துக்கொண்டார் அவர். கோவிலுக்குச் சென்று திரும்பியிருந்த அவருடைய அப்பா பாபுவும் அம்மா மோகனாவும் வேறு வந்து அவருடன் இணைந்துகொள்ள, மூவரும் சேர்ந்து ஆற்றிய சொற்பொழிவினால் எழுந்த சலலப்பு அடங்கி முடிய சில நிமிடங்கள் பிடித்தன.


அதன் பிறகு அனைவரும் இரவு உணவை உண்டு முடித்து அவரவர் அறைக்குள் சென்று அடைய ஒரு வழியாக அந்த நாள் முடிவுக்கு வந்தது.


***


இரவு எல்லா வேலைகளையும் முடித்த பிறகு, வியர்வை அடங்கும் வரை அவர் பராமரிக்கும் தோட்டத்தில், சிலநிமிடங்கள் அமர்ந்திருப்பார் தாமரை. அதன் பிறகு அறைக்குச் சென்று தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு இரவு உடைக்கு மாறிய பின் போய் படுத்தால்தான் உறக்கமே வரும் அவருக்கு.


தினசரி வழக்கம் மாறாமல் அன்றும் அவரது நர்சரியில் இருக்கும் கல் மேடையில் வந்து அமர்ந்தார் அவர்.


காணும் போதே கண்ணால் என்னை கட்டி போட்டாள்


காயம் இன்றி வெட்டி போட்டாள்


உயிரை ஏதோ செய்தாள்.மெளனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்


அங்கே வந்து ஒட்டு கேட்டாள்,


கனவில் கூச்சல் போட்டாள்


அழகாய் மனதை பறித்து விட்டாளேசெல் செல் அவளுடன் செல்


என்றே கால்கள் சொல்லுதடா


சொல் சொல் ஆவலுடன் சொல்


என்றே நெஞ்சம் கொல்லுதடாதுளி துளி துளி மழையாய் வந்தாளே


சுட சுட சுட மறைந்தே போனாளே


துளி துளி துளி மழையாய் வந்தாளே


சுட சுட சுட மறைந்தே போனாளே.தம்பியின் அறைக்குள்ளிருந்து துள்ளலுடன் மிதந்து வந்த பாட்டு அவனுடைய குதூகலத்தை அப்படியே பிரதிபலித்தது. தன்னையும் மீறி மாலை வீட்டிற்கு வந்த பெண்ணின் பூமுகம் மனதில் பளிச்சிட, சத்யாவுக்கு அருகில் அவளை நிறுத்தி அழகு பார்த்தது மனம்.


மகளுக்குத் திருமணம் முடிக்கும் முன் தம்பிக்கு ஒரு பெண்ணை பார்த்து முடித்தே தீரவேண்டும் என்ற எண்ணம் அழுத்தமாகத் தோன்ற, மென்மையாக அவரை தீண்டிச் சென்ற தென்றலால் மனதிற்குள் ஒரு இதம் பரவியது.

0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page